ஆட்டிஸம் – பகுதி 4
ஆட்டிஸத்துடனே வாழ்வை நடத்திச் செல்வது என்பது நிரந்தரமாகிவிட்டது எங்களுக்கு. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தினசரி வாழ்வை நடத்திச் செல்வது, எங்களைச் சுற்றியுள்ள உலகுடன் ஒட்டி வாழ்வது என்பதற்காகப் பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றறிய வேண்டிய சூழல். எங்களைப் போலவே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுடன் பழகுவதன் மூலம் இதனைக் கற்றறிவது எளிதாகும் என்று கண்டோம். எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கமான இடங்களான மருத்துவமனை, சிறப்புப் பள்ளிகள் ஆகிய இடங்களில் மற்ற குடும்பங்களைச் சந்திப்பது எளிதாக இருந்தது. இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் இதுபோன்ற குடும்பங்களைச் சந்திப்பதும், பழக்கமேற்படுத்திக் கொள்வதும் சற்று எளிதாக இருந்தது.
ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோம். இப்பொழுது திரும்பிப் பார்க்கையில், மற்ற குடும்பங்களின் பழக்கத்தைச் சற்று முன்னரே ஏற்படுத்திக் கொண்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. பெற்றோர்களின் சில கேள்விகளையோ, பகிர்வுகளையோ கவனிக்கையில் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒன்றோ இரண்டோ அவ்வப்போது புலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மற்ற குடும்பங்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை, இதுபோன்ற உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே. இதனைத் தாமதப்படுத்துவதால் நலம் ஏற்படுவதை விட பல நல்ல விஷயங்கள் கிடைக்காமல் போகும் என்பதே எங்கள் கருத்து.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் கூற ஆசைப்படுகிறேன். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு முறை ABA சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் இன்னொரு பெற்றோர் என் மகன் மலச்சிக்கலால் அவதிப்படுகிறான, இல்லை சரியாகப் போகிறானா என்று கேட்டனர். அவர்களின் பிள்ளைக்கு அந்த உபாதை இருப்பதாக அவர்கள் சொல்ல, அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு எங்களுக்கு அதுபோன்ற தொல்லை இல்லை என்பதையும் தெரிவித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகன்றோம். மனதிற்குள், சற்று தினங்களுக்கு முன்னரே அறிமுகமான இவர்கள் இதுபோல இங்கிதம் இல்லாமல் கேட்கின்றனரே என்று தோன்றிற்று. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு எங்கள் பையனுக்கு அதேநிலை தோன்ற என்ன செய்வதென்று தவிக்க ஆரம்பித்தோம். அதிர்ஷ்ட வசமாக அந்தப் பெற்றோர் இன்னும் அதே சிகிச்சைக்கு வந்துகொண்டிருக்க, எங்களால் அவர்களைச் சந்தித்து பரிந்துரை கேட்க முடிந்தது. அப்படித்தான் எங்களுக்கு GFCF (Gluten Free Casein Free) உணவு முறை அறிமுகமானது. அந்தக் குடும்பம் எங்களுக்குப் பலவகையிலும் உதவிகரமாக இருந்தது. எங்கள் மகனின் அந்தநிலையும் மாறி குணமடைந்தான். GFCF உணவு வகையின் மூலம் அவனுக்கு நல்ல ஜீரண சக்தியும், நோய் தடுப்பு சக்தியும் உருவானது. இந்த நிகழ்விலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம் என்னவென்றால், எவரையும் உதாசீனப்படுத்தவோ விலக்கவோ கூடாது என்பதுதான். ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என்பது மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்தோம், அதையே மற்றவருக்கும் தெரிவிக்கிறோம்.
தொடர்ந்து மற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் இருவேறு பயன்கள் உள்ளன என்றுணர்ந்தோம்;
- ஒருவருக்கொருவர் கற்றுக்
கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் முடியும். ஒருவரின் அனுபவம் மற்றவரின் பாடம். - நாம் மட்டும் இந்தப் பிரச்சனையில் தனியாளாக இல்லை என்ற உணர்வு
வரவும் இது உதவும். இந்த உணர்வு ஒருவிதமான தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வல்லது.
எல்லா மனிதனும், குடும்பங்களும் ஏதோ ஒருவகையில் இன்னொருவரைச் சார்ந்து உள்ளன என்பதுதான் நிதர்சனம். இது சாதாரணக் குடும்பங்களும் பொருந்தும். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது மேலும் அதிக அளவில் பொருத்தமுடைய கருத்தாக இருக்கிறது. அவர்களுக்கு மற்றவருடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அடிப்படைத் தேவையாகவே உள்ளது எனக் கூறலாம்.
நாங்கள் எங்கள் கூட்டை உடைத்துக் கொண்டு மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்த பொழுது எங்களுக்குப் பல பயனுள்ள அனுபவங்கள் கிடைத்தன. அதிர்ஷ்டவசமாக எங்களால் விரைவிலேயே கூட்டை விட்டு வர முடிந்தது. அதிலும் குறிப்பாக, வேறுநாட்டில் பிறந்து வேறொரு கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த அனுபவங்கள் இன்னும் புதுமையாகவே இருந்தன. வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தது எனலாம்.
வேறொருவரின் மூலமாக அறிமுகமான பெண்மணி ஒருவர் ஒருமுறை கூறினார் ”குறைபாடு என்பது வாழ்வைக் குறையுள்ளதாகவே ஆக்கும், அந்தக் குறைபாட்டை ஒதுக்கி, அதனுடனே வாழ்வில் நிறைவைக் காணாத வரையில்”. இந்தப் பெண்மணி, “சிறப்புக் குழந்தை” ஒன்றை அந்தக் குழந்தையின் நான்கு அல்லது ஐந்து வயதில் தத்தெடுத்து இருபது வருடங்களுக்கு மேலாக வளர்த்து வருபவர் என்று பின்னர் அறிந்து கொண்டோம். இதை அறிந்த பொழுது, அவர் முன் தலைவணங்கி, நீங்கள் கடவுள் போன்றவர் என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது. பதிலுக்கு அவர் சிரித்துக் கொண்டே, ”சென்று வாருங்கள், அடுத்த வாரம் சந்திக்கலாம்” என்றார் சலனமேயில்லாமல்.
ஆட்டிஸ வாழ்வு என்பது மற்றவர்களின் வாழ்வுகளைப் போலவே இடம், மனிதர்கள் மற்றும் எண்ணம் ஆகியவற்றைச் சுற்றியே அமைவது. மகிழ்ச்சி மற்றும் கவலை, துன்பம் மற்றும் இன்பம் என்று எதிர்மறையான உணர்வுகள் கலந்து நிற்கும் ஒரு நிலையே அது. ஆனால் இவற்றுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ஒவ்வொரு குடும்பங்களும் இதனை எதிர் கொள்ள வேண்டுமென்பது இன்றியமையாததாகிறது. நம்பிக்கையுடன் இதனை எதிர்கொள்கையில் நல்ல விஷயங்கள் முதன்மை பெற்று, தேவையில்லாத எண்ணங்கள் புறந்தள்ளப்படுகின்றன. இவை செயல்படுத்துவதற்குக் கடினமாக இருந்தாலும், கண்டிப்பாகப் பலன் தரும் அணுகுமுறையாகும்.
ஏற்கனவே கூறியுள்ளது போல, மற்றவர்களுக்கு உலகில் வேண்டிய அனைத்தும் நலமாகவே கிடைத்துள்ளன, நமக்கு மட்டும் தான் அதுபோன்ற கொடுப்பினை இல்லை என்ற நினைப்பு வருவது தவிர்க்க இயலாதது. இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுதான் ஆகவேண்டும். அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் தரும் நண்பர்களையும், உறவினர்களையும் அறிமுகம் இல்லாதவர்களையும், அனைவரையுமே முறையாக மதித்துக் கேட்டுக் கொள்ளுதல் அவசியமே. கண்டிப்பாக அவர்கள் நம் மேலும் நம் குடும்பத்தின் மேலும் ஒரு அக்கரையில்தான் கூறுகிறார்கள் என்ற உணர்வே உதவிகரமாக அமையும்.
ஆழமாக நினைத்துப் பார்க்கையில், ஆட்டிஸமும் நேர்த்தியானதே, ஆட்டிஸமும் அழகானதே. அது வாழும் பலநிலைகளில் ஒன்று. அதனுடன் வாழப் பழகிக் கொள்வதும் அவசியமானது. மற்றவர்களைவிட நம்மை வேறு விதமாக நினைத்துக் கொள்ளவோ, நடத்திக் கொள்ளவோ எந்தத் தேவையும் இல்லை. நமக்கு நாமே முதுகில் தட்டி விட்டுக் கொண்டு, நமக்கு உதவுபவர்களையும், சுற்றி உள்ளவர்களையும் மனதாரப் பாராட்டிக் கொண்டு வாழ்வது முக்கியமாகிறது. நல்லதே நடக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
- மூலம்: சுரேஷ் ரங்கமணி
- மொழிபெயர்ப்பு: வெ. மதுசூதனன்.