\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பகுத்தறிவு – பகுதி 3

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on February 28, 2016 6 Comments

pakkutharivi_2_620x443

(பகுத்தறிவு – பகுதி 2)

ஹிந்து மதம் குறித்து எழுதுவதாகச் சென்ற பகுதியில் சொல்லி விட்டேன். எழுதலாம் என்று தொடங்கினால் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் என்ன வேத வியாசரா? வால்மீகியா? ஆதி சங்கரரா? இல்லை ரமண மகரிஷியா? வேதம் அறிந்தவனா? இதிகாசங்களை முழுவதுமாகப் படித்தவனா? சமஸ்கிருதத்திலோ தமிழிலோ கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஞான இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையாவது முழுமையாகப் பயின்றவனா? பக்தி இலக்கியங்கள் எழுதியவர்கள் என்று கருதப்படும் உண்மையான ஞானிகளான பட்டிணத்தாரையோ, அருணகிரிநாதரையோ, திருஞான சம்பந்தரையோ, மாணிக்கவாசகரையோ, திருநாவுக்கரசரையோ, ஆழ்வார்களையோ, நாயன்மார்களையோ, ஆண்டாளையோ ஓரளவுக்காவது படித்தவனா? தமிழ் மாமுனிவரான திருவள்ளுவரைக் கசடறக் கற்றவனா? அவ்வளவு ஏன், ஒரு நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, கடந்த இரு நூற்றாண்டுகளின் தமிழ் மொழியின் முடிசூடா மன்னனாக விளங்கிய சுப்பிரமணிய பாரதியைக் கூடச் சரியாக விளங்கிக் கொண்டவனா? இதையெல்லாம் கூட விட்டுவிடலாம். சாதாரணமாகச் சிறு வயதில் வீட்டிலிருந்த சாமியறையில் தினந்தோறும் மனப்பாடமாய்ப் பாடிய தமிழ் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களின் உண்மையான அர்த்தங்களாவது புரிந்தவனா? இத்தனை கேள்விகளுக்கும் “இல்லை” என்பதே உண்மையான பதில்.

இவையேதுமே இல்லாமல் ஹிந்து மதம் பற்றி எழுத வந்துவிட்டாயா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொள்ள, ”ஆமாம், எல்லாம் தெரிந்தபின் தான் பேசுவேன் என்றிருந்தால் எதுவுமே பேச இயலாது” என்று ஒரு இளப்பமான பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து எழுத வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஹிந்து மதம் ஒரு மகாப் பெரிய சமுத்திரமாக நமக்குக் காட்சியளிக்கிறது. அந்தச் சமுத்திரத்தின் முன் நின்று கால்களைச் சற்று அந்த அலைகளில் நனைத்த தகுதி மட்டுமே உடையவனாக இருந்தாலும், அந்தச் சமுத்திரத்தைப் பற்றியே எழுதத் தொடங்கி விட்டோம். எழுதுவதற்கு முன்னர், நமது அறைகுறை அறிவைப் பற்றிக் குறிப்பிடுவது போதுமான அளவு எச்சரிக்கையாக இருக்கும் என்ற எண்ணத்துடன் இதனைக் கூறித் தொடர்கிறோம்.

இன்னும் கூர்ந்து கவனித்தால், நம் போன்ற அறைகுறைகளுக்கும் நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற காரணத்தாலே பல சடங்குகள் ஹிந்து மதத்தில் உருவாகின என்ற பெரியவர்களின் கருத்து விளங்கும். இது குறித்துப் பின்னர் விளக்கமாகப் பார்ப்போம். எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் இப்போதைய குழப்பம். முழுவதுமாக மதம் குறித்து விளக்கும் நோக்கம் இல்லை என்றாலும் பேசப் போகும் பகுத்தறிவுக்கும், பக்தி மார்க்க, ஞான மார்க்க விளக்கங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு மதம் குறித்துப் பேச வேண்டியது அவசியமாகிறது.

முதலில் “ஹிந்து மதம்” என்பது குறித்தும் அது ஒரு மதமா, அது எங்கே தோன்றியது, எதற்காக அந்தப் பெயர் பெற்றது என்பது குறித்தும் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்த மதத்தின் வேர்கள் எங்கே தோன்றின, இதனை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கு நேரடியான விடையை எந்த ஆராய்ச்சியாளரும் அறுதியிட்டு உறுதியாய்க் கூறியதாகத் தெரியவில்லை. ”காலத்தைக் கடந்து, எப்பொழுதுமே வியாபித்திருந்த ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லலாம்” என்ற முடிவுக்குத்தான் பலரும் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதனை “சனாதன தர்மம்” என்றும் குறிப்பிடுகின்றனர். ”சனாதன” என்ற  சமஸ்கிருதச் சொல்லுக்கு “எப்பொழுதுமே இருந்த, இருக்கின்ற” அதாவது “eternal” என்று பொருள் கொள்ளலாம். ”vedic dharma” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதும் உண்டு எனினும், வேதங்கள் மிகவும் பிற்காலத்தில் வந்தவை எனவும் கூறப்படுகின்றன. இந்த மதத்தை நிறுவியவர் என்று ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ குறிப்பிடவும் இயலாது. இந்த மதத்திற்கென ஒரு குறிப்பிட்ட போதனை நூல் என்று ஒரே ஒரு நூலையும் குறிப்பிட இயலாது.

ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருந்த இந்த இனக்குழுக்களை, வட இந்தியாவில் வாணிகத்திற்காக நுழைய முயன்ற இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள் சந்திக்கின்றனர். சந்தித்த மாத்திரத்தில், தங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் நடைமுறை வேறுபாடுகளை உணர்கின்றனர். குறிப்பாக அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றிலுள்ள வேறுபாடுகள் அவர்களின் கவனத்தைப் பெருமளவு கவர்கின்றன. தங்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் அவர்களைக் குறிப்பிட்டு அழைப்பதற்காகவும் ஒரு பெயர் தேவைப்பட்டது. இந்த வழக்கங்களைக் கொண்ட மனிதர்கள், சிந்து நதியின் கரையில் வாழ்ந்து வந்தனர், எனவே அவர்களை இஸ்லாமியர்கள் “சிந்துக்கள்” என அழைக்கத் தொடங்கினர். இதுவே காலப்போக்கில் மருவி, “ஹிந்துக்கள்” ஆனது என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

இஸ்லாமியர்கள் உருவ வழிபாட்டு முறையைக் கடைபிடிக்காதவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஹிந்துக்கள் பெயரும் வடிவமும் கொண்ட கடவுளர்களையே வழிபடுகின்றனர் என்றுதான் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோமல்லவா? அந்த முறைதான் அனைவராலும் இன்று பின்பற்றப்படுகிறது என்பதும் உண்மையே. நாத்திகர்களும் அதைத்தான் நினைத்துப் பலவிதமான அதிமேதாவித் தனமான கேள்விகள் கேட்பதும், கிண்டல்கள் செய்வதுமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களைக் கூட விட்டு விடலாம், அனுதினமும் கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குச் செல்லும் பக்தனானாலும் அவனையும் விடப் பழுத்த மதவாதியான, அதே கோயிலில் பூஜை செய்யும் குருக்கள் அல்லது பூஜாரியாயினும் சரி, அவர்களும்கூட பெயரும் வடிவமும் உடைய கடவுளர்களைத்தான் ஹிந்து மதம் போதிக்கிறது என்று மனதார நம்புகின்றனர்.

உண்மையைக் கூர்ந்து கவனித்தால், அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக ஹிந்து மதம் உருவ வழிபாட்டை எங்குமே பரிந்துரை செய்ததில்லை என்ற உண்மை விளங்கும். ஆனால் பலவிதமான உருவங்களைக் கொடுத்தது சாதாரண மனிதர்கள் தங்களுடன் ஒவ்வொரு நிலையிலும் தொடர்பு படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்பதையும் அவை தொடர்பான கருத்துக்களைக் குறிப்பிடுகையில் விவரமாகப் பார்க்கலாம். உருவமின்றி அரூபத்தை வழிபடும் விதத்திலும், இப்படித்தான் செய்ய வேண்டுமென்ற விதிமுறை ஒன்றையும் வகுக்கவுமில்லை. ஓரிடத்தில் கூடிக் குழுவாக நின்று வழிபடும் “congregational prayers” என்ற வழிமுறையும் எங்குமே நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் தான் வழிபாடு என்பது அவரவர்களின் வசதிக்கேற்ப அமைகிறது. அதனால்தான் ஒரு கோயிலில் திருமண்ணும், இன்னொரு கோயிலில் விபூதியும் வழங்கப்படுகிறது. ஒரு கோயிலில் புளியோதரையும் மற்றொரு கோயிலில் வெட்டிய கிடாவும் படையலாகக் கருதப்படுகிறது. ஒரு கோயிலில் கற்பூரமும் வேறொரு கோயிலில் மாவிளக்கும் ஏற்றப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், உன் வழிபாடு என்பது உந்தன் தனிப்பட்ட விஷயம், இதனை இவ்வாறுதான் நடத்த வேண்டும் என்று எந்த விதியும் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற போக்கு இந்த மதத்தினால் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. உனக்கு வேண்டுமென்றால் உன் வீட்டிலேயே ஒரு கோயிலை வைத்துக் கொள் என்ற அளவுக்கு வழிபாடுகள் அவரவர்களின் இஷ்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கொடுக்கப்படுகின்றது என்ற வகையில் இந்த அணுகுமுறை சிறப்பாக அமைந்தாலும், இதுவே பலவிதமான அறிவுக்கு, அறிவியலுக்கு ஒவ்வாத, ஒப்பாத விஷயங்கள் நடைமுறைக்குள் புகுந்து விடக் காரணமாக அமைந்து விட்டது என்பதும் நம் தனிப்பட்ட கருத்து. அதுகுறித்துப் பல உதாரணங்களுடன் காணவிருக்கிறோம்.

இந்தச் சிறு குறிப்பு நாம் இப்போது பார்க்கப் போகும் சில பகுத்தறிவான கருத்துக்களுக்குப் போதும் என்ற காரணத்தால் மதம் பற்றிய விஷயங்களைத் தற்காலமாக நிறுத்தி, வேறு திசைக்குச் செல்லலாம். முதலாவதாக, ஹிந்து மதம் குறிப்பிடும் கோயில்கள் என்ன என்பதைப் பார்த்து விடலாம்.

சுருங்கச் சொல்வதென்றால் கோயில்கள் என்பது “சக்திகளைச் சேமித்து வைக்கும் ஒரு வங்கி” என்று குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் “Energy Bank”. மனிதர்கள், உயிரினங்கள் ஏன் தாவர இனங்கள் கூட தங்களைச் சுற்றி ஒரு வகையான உயிர்ச் சக்தியினால் ஆன வட்டங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைய அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இதற்கு ”ஔரா” (Aura) என்றும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஔராவைக் கேமராக்களின் மூலம் படமெடுக்கும் கிர்லியன் ஃபோட்டோகிராஃபி முறையும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்த ஔராவின் அசைவைக் கொண்டு ஒருவரின் ‘வரவிருக்கும்’ உடல் உபாதைகளைக்கூட அறிந்து மருத்துவம் செய்யலாம் என்பதை உண்மையில் நிரூபித்த நரம்பியல் நிபுணர் டாக்டர். ராமமூர்த்தி சென்னையில் சமீபம் வரை வாழ்ந்து வந்தார். இதெல்லாம் இன்றைய அறிவியலால் ஒப்புக் கொள்ளப்பட்டுப் பழங்கதையாய்ப் போன விவரங்கள். இந்த ஔரா, உயிர்களின் உயிர்ச்சக்தியின் (Bio-magnetic Energy) வெளிப்பாடு என்பது அறிவியலால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது இன்று. இந்த உயிர்ச் சக்தியானது ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பாய்ச்சலாம் என்பதும், ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குப் பாய்ச்சலாம் என்பதும் அறிவியலால் ஒத்துக் கொள்ளப்படும் விஷயங்கள். ஆற்றல் என்பதை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது, ஒரு வகையான ஆற்றல் இன்னொரு வகையாக மட்டுமே மாற்றப்பட இயலும் என்பது நியூட்டனின் விதி என்பதும் இயற்பியல் அறிந்ததே. இதுபோலத் தேக்கி வைக்கப்பட்ட ஆற்றலை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பாய்ச்சுவது சாத்தியம், அதனால் அவர் பயனடைய முடியும் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மதம் கண்டதன் விளைவே கோயில்கள்.

கோயில்கள் கட்டப்படும் பொழுதும், சிலைகள் வடிக்கப்படும் பொழுதும் அவை வெறும் கற்கள்தாம். ஒரு கோயிலின் கற்பக்கிரகத்தின் கட்டுமானப் பணி நடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலைகளின் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், அந்தச் சிலைகளில் ஒன்றிரண்டு கீழே கிடத்தப்பட்டும் ஒன்றிரண்டு நிறுத்தி வைப்பட்டிருப்பதாகவும் கொள்வோம். இப்போது அங்கு வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளி மேலே ஏறி ஏதோ ஒரு வேலையைச் செய்ய வேண்டுமெனில், அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் ஒரு சிலையின் மீதேறிக் கூட அந்த வேலையைச் செய்வார். அப்போது ஏன் அது கடவுளாகக் கொண்டாடப்படவில்லை? அப்போது எங்கு போயிற்று அதன் சக்தி? அல்லது, கும்பாபிஷேகம் முடிந்து, பிரதிஷ்டைகள் முடிந்து, பூஜை புனஸ்காரங்கள் தொடங்கியபின் அதற்குரிய மரியாதையே முழுவதும் மாறிவிட்டதெப்படி? அந்த அதீத சக்திகள் அந்தக் கற்களுக்குள் புகுந்தது எப்படி?

இங்குதான் மேலே குறிப்பிட்ட பயோ மேக்னடிக் எனர்ஜியையும், இன்றைய நவீன விஞ்ஞானம் கூறும் விஷயங்களைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்களின் அறிவுக் கூர்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையாய், ஒழுக்கமாய், பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த மகான்கள் (purified souls) ஒன்று சேர்ந்து அவர்களின் பயோ மேக்னடிக் எனர்ஜியை அந்தச் சிலையின் மேல் கொண்டு வருவதே “கும்பாபிஷேகம்” ஆகும். அவர்கள் தங்களின் சக்திகளை அங்கு குவித்து வைக்க, சாதாரண மனிதர்கள் அங்கு சென்று தங்களுக்குத் தேவையான அளவு சக்திகளை அங்கிருந்து பெறுகிறார்கள், இதனால்தான் கோயிலை ஒரு எனர்ஜி பேங்க் என்று ஏற்கனவே குறிப்பிட்டேன். சில காலங்களுக்குப் பிறகு, மனிதர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டே போவதனால் குறைந்து விட்ட சக்தியை மீண்டும் ஏற்றுவதற்காக மற்றொரு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதே கோயிலின் தாத்பரியங்களாகும்.

கோயில்களில் பொதுவாக மூலவர் சிலை கற்களாலும், உற்சவர் சிலை உலோகத்தாலும் செய்திருப்பார்கள். மூலவர் என்பது முதன்மையாய்க் கர்ப்பகிருகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிலை. இதுதான் பயோ மேக்னடிக் எனர்ஜியைத் தேக்கி வைத்திருக்கும் ஒன்று. கற்கள் ஆற்றலைத் தேக்கி வைக்கும் தன்மையுடையவையாதலால் மூலவர் சிலைகளுக்குக் கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. உற்சவர் சிலை என்பது, திருவிழாக்காலங்களில் உலாவாகக் கொண்டுவரும் சிலைகளாகும். இவை பெரும்பாலும் உலோகத்தால் ஆனவையாக இருக்கும். உலோகம் ஆற்றலைக் கடத்தும் வகையானவை (conductors). அதற்கு ஆற்றலைத் தேக்கி வைக்கும் சக்தி கிடையாது. ஆனால், மூலவரிடமிருந்து ஆற்றலைப் பெற்று, உலா வரும் வேளையில் மனிதர்களுக்குப் பாய்ச்சுவது (conduct) உலோகத்தால் முடியுமென்பதால் உற்சவரை உலோகத்தில் அமைத்தார்கள். இதேபோல் துவார பாலகர்கள் தொடங்கி அனைத்து வகையான சிலைகளுக்கும் ஒவ்வொரு பொருளும், அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படும் விளக்கமும் கொடுக்க இயலும். இதுபோன்ற அமைப்பைத்தான் சில மேதாவிகள் மூட நம்பிக்கையின் கூடமென்று வர்ணித்துக் கொண்டுள்ளனர் இன்று.

சமூகக் காரணங்களை எடுத்துக் கொண்டால், கோயில்கள் என்பன பழங்காலத்தில் பொதுமக்கள் கூடுமிடமாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மொகலாயர்கள் இந்தியாவில் ஊடுருவுவதற்கு முன்னால், ஹிந்து மன்னர்களுக்கு அரண்மனை என்ற அமைப்பு ஒன்று இருந்திருக்கவில்லை என்று ஒரு நண்பர் என்னிடம் கூறினார். இதனை வரலாறு பூர்வமாக இன்னும் என் மனதிற்கு நானே ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவில்லை என்ற காரணத்தால் வெறும் செவிவழிச் செய்தியாகவே குறிப்பிடுகிறேன். ஆனால் இதில் உண்மை இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். ஏனெனில், மன்னர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமாயின் கோயில்களிலேயே செய்ததாகப் புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் பார்க்கிறோம். கோயில்களில் பெரிய அடுக்களைகளும் உணவு பரிமாறும் இடங்களும் காலங்காலமாக இருந்து வந்துள்ளன, இன்றும் இருக்கின்றன. கோயில்களிலேயே பொதுமக்கள் படுத்துறங்குவதற்கான கூடங்கள் அமைந்திருக்கின்றன. கோயில்களிலேயே மன்னர்கள் வசிப்பதற்கு அறைகளும் இருந்திருக்கின்றன. அதாவது, அதுவே அவர்கள் வாழும் வீடுகளாகவும் அமைந்திருக்கிறது. பக்திக்கான இடமாக மட்டுமில்லாமல், குடியிருப்புகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் இடமாகவும் கோயில்கள் இருந்திருக்க வேண்டுமென விளங்கிக் கொள்ள முடிகிறது. மன்னர்களும் உல்லாச வாழ்வு வாழ்ந்திடாமல், பொதுமக்களுடன் ஒருவராகப் பொது இடங்களில் வாழ்ந்திருப்பதாகப் புரிய வருகிறது.

“கோயில்கள் திருடர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று திரையுலகின் மூலம் மிகவும் கவலைப்பட்டு, பின்னர் வந்த காலங்களில் பெரிய அளவு கொள்ளைக் கூட்டங்களையே நடத்திய பல நாத்திகர்களும் கோயில் பற்றிய இந்த பக்திபூர்வமான, ஞானபூர்வமான, அறிவியல் பூர்வமான மற்றும் சமூகம் சார்ந்த தாத்பர்யங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டு அதன் பின்னரே கோயில் மறுப்புச் செய்தனர் என்று நம்மால் நம்ப இயலவில்லை.

இன்னார்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற இடைக்காலத்தில் தோன்றிய கட்டுப்பாடுகளில் கண்டிப்பாக இடைச் செறுகல்களாகப் புகுந்து விட்ட அனர்த்தங்கள் இருந்தன என்பதை மறுப்பதற்கியலாது. ஆனால், இன்னார்தான் கர்ப்பக்கிருகத்தில் நுழையலாம் என்று கூறப்பட்டதற்கு இந்த பயோ மேக்னடிக் எனர்ஜித் தத்துவத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அது ஒரு ஜாதியைக் குறித்ததாகப் பரவலாகக் கருதப்படுவதை அறிந்தே இருக்கிறோம். அது குறித்த இன்றைய நடைமுறைப் பழக்கங்களையும், முன்பிருந்த விதிமுறைகளையும் அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

  • வெ. மதுசூதனன்.

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. vijay says:

    நேர்மையான பதிவிற்கு வாழ்த்துக்கள் ! “கோயில்கள் திருடர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று சொன்னவர்கள் திருடுவதும், கடுவுளாகப் போற்றப்படும் பெரியவாள்கள் கொலை குற்றத்திற்காகச் சிறை சென்று மீண்டதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அணைத்து அறிவியல் செய்திகளையும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கு மதம் பயன்பட்டது அன்று. மதநம்பிக்கைகளைப் படித்த மக்களிடம் கொண்டுசெல்வதற்கு அறிவியல் பயன்படுவது இன்று. கலி முத்திடுச்சு ….

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      சட்ட விரோதச் செயல்கள் செய்பவர்கள் எவருக்காகவும் வக்காலத்து வாங்கும் நோக்கம் இல்லை. எழுதப்பட்ட பல உயரிய கருத்துக்களில் அந்த வரி மட்டும் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

      மத நம்பிக்கைகளை அனைவருக்கும் கொண்டு செல்ல அறிவியல் பயன்பட்டால் நலமே. இன்னும் ஆழ்ந்து பார்த்தால் மத நம்பிக்கைகளே முழுமையான அறிவியல் என்பதும் விளங்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டெயினும், லெவாய்சியரும் அதுபோன்ற பலரும் இது குறித்து விளக்கியுள்ளனர். அது குறித்தும், ”கலி முத்தியது” என்றால் என்னவென்றும் வரும் பகுதிகளில் காண்போம்.

  2. Sachi says:

    “மன்னர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமாயின் கோயில்களிலேயே செய்ததாகப் புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் பார்க்கிறோம்.” புறநானூறு பாடல் எது என்று சுட்ட இயலுமா?

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      சச்சி, தாமதமாகப் பதில் வரைவதற்கு மன்னிக்கவும். இந்தப் பதிவுகள் என் கவனத்திலிருந்து தப்பி விட்டன. மன்னிக்கவும்.

      புறநாநூற்றில், சில இடங்களில் “கோயில்” பற்றிய குறிப்புக்கள் வருவதாக அறிகிறேன். கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலுமே, விளக்கவுரை அளிப்பவர்கள் அக்குறிப்புக்களை இன்றைய கோயில்கள் போலக் கருதினர் என்றே தோன்றுகிறது, அல்லது “கோயில்” என்ற பதம் “அரண்மனை” என்பதையும் குறிக்கும் என்ற வகையில் விளக்கமளித்துள்ளனர். ஆனால், கோயில் அரண்மனையாக விளங்கியுள்ளது என்ற வகையில் விளக்கமளிக்கப்படுவது ஒரு சில இடங்களிலேயே. குறிப்பாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை “மொகலாயப் படையெடுப்புக்கு முன் இந்திய மன்னர்கள்” என்பதில் இது குறித்த சில தகவல்கள் “கேள்விகளாக” வெளியாகிவுள்ளதைப் படிக்க நேரிட்டது. அதுகுறித்த இணைய தளப் பதிவு எனக்குக் கிடைக்கவில்லை. அச்சுப் பதிவைப் பெற முயற்சிக்கிறேன்.

      புறநானூற்றில் 127 ஆக வரும், ”உரைசால் புகழ்” என்ற பாடலைப் பார்க்கலாம். இதில், கோயில் அரண்மனையாக விளங்கியது என்று பொருள் வண்ணம் அமைந்திருப்பதாகக் கருதுகிறேன்.

      ”ஈகை அரிய இழையணி மகளிரொடு
      சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
      சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்
      பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
      உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
      முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே.”

      அரசன், தாலி அணிந்த தம் மகளிருடன் வாழ்கிறான். அவனது கோயிலில் (அரண்மனையில்) யானைகளைக் கட்டி வைக்கும் தறி வெற்றிடமாக உள்ளது, ஏனெனில், அவன் அவைகளை யாழீட்டிப் பாடும் பாணர்களிடம் கொடுத்துவிட்டான்.. என்ற விளக்கம்.. இதையும் கூட, கோயிலில் இருக்கும் யானைகள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்று விவாதிக்கலாம், ஆனால் அரசர்கள் கோயிலுக்கு (அரண்மனையாக இல்லாது இருந்தால்) தானமாக வழங்கினரேயன்றி, கோயிற்பொருட்களை தானமாக வழங்கவில்லை என்ற நோக்கில் பார்த்தால் ”கோயில்” என்பது இன்று நாம் பயன்படுத்தும் பொருளில் இல்லையென்பது புலனாகலாம்.

      புறநாநூற்றில் இன்னும் சில பாடல்களில், கோயில்களில் பொதுக் காரியங்கள் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பதற்கான பதிவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் கொண்டு கோயிலே அரண்மனையாகப் பயன்பட்டது என்று உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாதென்றாலும், அரண்மனை கொலுமண்டபங்களில் நடந்ததாகக் கருதப்படும் பல பொதுநன்மைச் செயல்கள் கோயிலில் தான் நடந்துள்ளன என்று புரிந்து கொள்ள இயலும்.

  3. Sachi says:

    “சுதந்திரம் கொடுக்கப்படுகின்றது என்ற வகையில் இந்த அணுகுமுறை சிறப்பாக அமைந்தாலும், இதுவே பலவிதமான அறிவுக்கு, அறிவியலுக்கு ஒவ்வாத, ஒப்பாத விஷயங்கள் நடைமுறைக்குள் புகுந்து விடக் காரணமாக அமைந்து விட்டது என்பதும் நம் தனிப்பட்ட கருத்து.”

    மது, தங்களின் தனிப்பட்ட கருத்தில் ஊடுருவும் எண்ணம் இல்லை. இங்கே “சுதந்திரம்” என்ற சொல்லாடல் என்னை இந்த கேள்வியை பதிவு செய்ய தூண்டியது. அவரவர்களின் வழியில் முன்னோர்களை மதித்தல், குறுந்தெய்வ வழிபாடு என வாழ்ந்து கொண்டிருந்தனர். எங்கோ, ஏதோ நோக்கத்தில் துவங்கிய ஒருங்கிணைப்பிலே தான் எல்லா அவலங்களும் உருவாயின. எனக்கு புரிந்த என் வழியோடு எனக்கு புரியாத பலரின் வழிகளும் எம்மீது திணிக்கப்பட்டது. அன்றுதொட்டு என் வழி, என்மீது திணிக்கப்பட்ட வழி, இவற்றின் காரணங்கள் என அனைத்தையும் மறந்துவிட்டு தவிக்கும் என்நிலைதான் நம்மில் பலர்க்கும் என நம்புகிறேன். என் வழிகளை ஒன்று சேர்த்து ஒன்றெனச் சொல்லி ஒவ்வருவரும் உம் வழியில் செல்வீர் என சொல்வதில் எங்கே சுதந்திரம் வந்தது என்பதுதான் என் ஐயம்…

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      உங்களின் கருத்தில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. எனது தனிப்பட்ட கருத்து என்று நான் குறிப்பிட்டது, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் இடைச் செறுகல்களாகப் புகுந்த மூட நம்பிக்கைகள் இல்லாமல் போக வாய்ப்பிருந்திருக்கும் என்ற எண்ணத்திலேதான். ”இறைவனுக்குத் தனது பிள்ளையைக் கறியாகச் சமைத்துப் படைத்தார்” என்ற ரீதியிலெல்லாம் இடைச்செறுகல்கள் புகுந்து விட்டன, இதை இடைச்செறுகல்கள் என்று புரிந்து கொள்ளாது, மதமும் கடவுளும் இவற்றை எதிர்பார்த்ததாக இன்றைய சமுதாயம் நம்பத் தொடங்கிவிட்டதே என்ற ஆதங்கத்தால் சொல்லப்பட்ட எனது தனிப்பட்ட கருத்து அது.

      நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad