\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சாருலதா

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 2 Comments

saarulatha_620x754ஆண்டு 1940 : அதி காலைச் சூரியன் இன்று சோம்பலுடன் இருந்தான் போல. அந்த மார்கழிக் குளிரில் மேகப் போர்வையைக் கலைத்தபடி மெல்ல எழுந்தான். ஆனால் சாருவிற்கு முழிப்பு வந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். வெளியில் இருந்த சின்ன செடியில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தபடி படுத்திருந்தாள் சாரு. அந்த அதிகாலையில் சிறிய குருவி மெல்ல இலைகளில் இருந்த பனியை அருந்திய அழகு பார்க்க வேடிக்கையாக இருந்தது சாருவுக்கு. “சாரு எழுந்திரம்மா, நேரம் ஆறது வண்டி வந்துடும்.”. அம்மாவின் குரல் கேட்டும் எழுந்திராமல் படுத்திருந்தாள் சாரு. ஜன்னல் வெளியில் குருவி பறந்து விட்டது. திரும்பிப் படுத்தபடி தன் கைகளைப் பார்த்தாள் சாரு. இரண்டு நாள் முன் வைத்த மருதாணி கையில் சிவந்து இருந்தது. அதைப் பார்த்து ரசித்த படி படுத்து இருந்தாள் . “சாரு எழுந்திரு. நேரம் ஆறது”, மீண்டும் அம்மாவின் குரல் கேட்டு எழுந்து அமர்ந்தாள். இம்முறையும் வேடிக்கை பார்க்கக் கால்களைத் தேடினாள். கால்களில் கொலுசு, பிறகு புது நலங்கு, மருதாணி இப்படியே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.

இப்போது அறைக்குள் வந்து அம்மா முறைத்தாள்.

“எழுந்திருன்னு எத்தன தடவை கூப்படறது. குளிச்சு கிளம்பணும். வண்டி வாந்தாச்சு. நல்ல நேரம் போறதுக்கு முன்னாடி புது வீடு போகணும்”.

“அண்ணா எல்லாம் எங்க “? இது சாரு.

“உன்ன வழி அனுப்ப கிளம்பிட்டு இருக்காங்க”.

சாரு அமைதியாகக் கிளம்பினாள். குளித்து முடித்து சேலை கட்டுவதற்கு அம்மா உதவி செய்தாள்.

“நாளைக்கு நீயே தான் கட்டிக்கணும். எப்படிக் கட்டி விடறேன்’னு பாத்துக்கோ”. ஏனோ அம்மாவின் குரல் தழைந்தது.

சாருவிற்குப் புரியவில்லை. மீண்டும் சன்னல் வெளியில் குருவி வந்தது. சாருவின் குழந்தை மனம் குருவியை நோக்கிச் சென்றது.. ரசித்தபடி அம்மா கட்டி விட்ட புடவையைச் சரியாக பார்க்காமல் நின்றாள் சாரு.

“சாரு !! சாரு. புரிஞ்சுதா “. கூப்படறது கூட கேட்காம என்ன வேடிக்கையோ . அங்க போனதும் எல்லோரும் என்ன திட்டப் போறாங்க.

11 வயசு ஆச்சு பொண்ணுக்கு இன்னும் ஒண்ணும் சொல்லித் தரலையா ன்னு கேட்கப் போறாங்க.முதல்ல இந்தத் தாலிச் சரடை உள்ள போட்டுக்கோ”.

சாருவிற்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. சாருவின் சிறு வயது முதல் விளையாடிக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு ரகு… அவன் குடும்பம்ஒரு நாலு வருடங்கள் முன் வேறு எங்கோ சென்றார்கள். போன மாதம் திரும்பி வந்து சாருவை ரகுவிற்குத் திருமணம் பேசினார்கள். பதினைந்து வயது ரகுவிற்கும், சாருவிற்கும், நேற்று தான் திருமணம் நடந்தது. ஒன்றும் புரியாத சாரு இன்று புது வீடு அழைத்துச் சென்று விட வண்டி சொல்லி இருந்தார்கள்.

சூரியன் பொலப் பொலவென்று எழுந்து கொண்டான். பனித்துளி அருந்திய குருவியைக் காண வில்லை.

ஜன்னல் வழியாக விடியல் பொழுதில் எங்கோ சுதேசிகளின் கோஷம் கேட்டது. சாருவின் மனம் திரும்பவும் வேடிக்கை பார்க்க வெளியில் ஒடியது. கண்களில் பரபரப்போடு வெளியில் பார்த்தாள்.

அம்மா முறைத்தாள். “அப்பா !!! இத்தனை காத்தால கூட கோஷம் போட வந்தாச்சா”.

ஏனோ சாருவிற்கு இந்தச் சுதந்திரப் போராட்ட கோஷங்கள் ஒரு விதமான உத்வேகம் ஏற்படுத்தும். அவர்களின் அந்த அஹிம்சைப் போராட்டம் அழுகையை வர வழைக்கும். ஆனால் இன்று அம்மாவின் முகம் தான் அழுவது போல இருந்தது. சாருவிற்கு ஏன் என்று புரியவில்லை.

சாரு அந்தக் குடும்பத்தின் கடைக் குட்டிப் பெண். நான்கு பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே தங்கை. மணி, கிருஷ்ணன், தாமு அப்புறம் செந்தில், கடைசியாக சாரு. மணிக்குப் பதினைந்து வயது இருந்தபோது சாரு பிறந்தாள். மணிக்குச் சாரு என்றும் குழந்தை போல தான்.

அவளைக் கிளப்பும் பொழுதே அம்மா அழுதபடி இருந்தாள். “புது வீடு போய் நல்ல பெண்ணுன்னு பேர் எடுக்கணும். பொறுமையா இருக்கணும். “.. ஏதேதோ சொன்ன படி அம்மா அவளை அலங்காரம் செய்தாள்.

சாருவிற்கும் இப்பொழுது அழுகை வரும் போல ஆனது.

ஜல் ஜல் என்ற மணிச் சத்தம் கேட்ட போது சடக்கென்று திரும்பினாள் . வெளியில் மாட்டு வண்டி வந்தது. மாட்டின் கழுத்தில் கட்டி இருந்த மணி மிக அழகாக வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாட்டை வேடிக்கை பார்த்தபடி வண்டியில் ஏறினாள் சாரு. மணி வண்டியில் முட்டைகளை ஏற்றியபடி கண் கலங்கிக் கொண்டு இருந்தான். அனைவரும் சிரித்தபடியும், அழுதபடியும், சாருவை ரகுவுடன் அனுப்பி வைத்தார்கள்.

***

ஆண்டு 1947 : வீட்டில் எல்லோரும் ஒரே அழுகையாக, புலம்பலாக இருந்தார்கள். நான்கு வயது மீராவிற்கு மட்டும் ஏதோ குதுகலமாக இருந்தது. சாரு அத்தை வரப் போறா. மீராவிற்கு தினம் விளையாட, கூட இருக்கப் போறா. சாரு அத்தை வருவதற்கு எல்லோரும் சந்தோஷப்படாமல் ஏன் அழறாங்கன்னு புரியவில்லை. வாசலில் ஒத்தை மாட்டு வண்டி வந்து நின்றது. மணி ஓடினான். தலை மழிக்கப்பட்டு மிகவும் வித்தியாசமாக வந்து இறங்கிய சாருவைப் பார்க்க மீராவிற்குப் பிடிக்கவில்லை.

ரெண்டு மாதம் முன்னர் வந்த சாரு அத்தை எவ்ளோ அழகா இருந்தா. என்னோட தினம் பொம்மை விளையாண்டா . இப்போ ஏன் இப்படி இருக்கா?

வேகமாக ஓடி சாருவின் கை பிடித்துக் கொண்டாள் மீரா. பதினெட்டு வயது சாருவிடம் இருந்த அந்தக் குழந்தைத்தனம் மறைந்து போய்த்தான் இருந்தது. மீராவிற்குச் சாரு என்றால் உயிர்தான். அத்தை கையைப் பிடித்தபடி உள்ளே வந்தாள். மணி தான் அழுது புலம்பியபடி இருந்தான்.

“ஐயோ சின்னக் குழந்தை அவளுக்கு ஏன் இந்த நிலைமை”.

எங்கேயோ சுதந்திர வெற்றிப் பாடல்கள், கும்மாளங்கள், கேட்டன.

இந்தச் சத்தம் கேட்டுச் சாருவின் முகம் மாறவில்லை. அமைதியாக ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் அருகில் அமர்ந்த மீரா, “அத்தை வரியா செடிக்குத் தண்ணி ஊத்தலாம். மரத்தில குருவி கூடு கட்டி இருக்கு. பாக்கலாமா? என்று கேட்டாள். பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் சாரு. அவள் மடியில் பேசாமல் மீரா படுத்துக் கொண்டாள்.

ஏழு வருட திருமண பந்தம் அது. திருமணம் என்றால் என்ன என்று புரியாத வயதில் தொடங்கி, யவனப் பொழுதில் அதனைப் புரிந்து கொள்ளும் தருவாயில் திடீரென்று முடிந்து போனது.. ரகு இறந்து போனது தான் புரிந்தது சாருவிற்கு. ஆனால் இனி என்ன என்று புரியவில்லை.

ஆனால் வழக்கம் போல எதையும் ரசித்துச் சிரிக்க முடியவில்லை. பொங்கிய அழுகையை அடக்கிய படி அமர்ந்திருந்தாள்.

***

ஆண்டு 1959: “மீரா வாசல்ல வளையல்காரர் வந்தா உள்ள வரச் சொல்லு. நான் இந்த முறுக்கு எடுத்து வெச்சிட்டு வரேன். அத்தை முழிச்சுக்கப் போறா. அதுக் குள்ள இந்த எண்ணெய் வேலையை முடிச்சுடறேன்.

வாசலை நோக்கி வேகமாக ஓடினாள் பதினாறு வயது மீரா. போகும் வழியில் சிறு அறையில் முன் ஒரு நிமிடம் நின்று பார்வையைச் செலுத்தினாள். ஒரு ஓரத்தில் படுத்திருந்தாள் சாரு. தூங்குவது போலத் தான் இருந்தது.

“வளையல்காரரே. இங்க வாங்க. ” குரல் கொடுத்தபடி ஓடினாள்.

தோப்பில் வேலை முடித்து திரும்பி மாட்டு வண்டியில் வந்த மணியும் வளையல்காரருடன் நடந்து வந்தான்.

“அப்பா வந்தாச்சு ” உள்ளே குரல் கொடுத்தாள் மீரா.

“இதோ வந்துட்டேன் ” பதில் குரல் கொடுத்ததோடு எண்ணெய்க் கையைத் துடைத்தபடி வந்தாள் ஜானகி, மணியின் மனைவி.

“சாரு எங்க?”.

“தூங்கறா “.

“முறுக்கு பண்ணியா . எண்ணெய் வாசனை அடிக்கறது”.

“ஆமாம்”.

“எண்ணெய்ச் சட்டி எடுத்து வெச்சாச்சா?”, மணியின் கேள்விக்கு பதிலாக

“ஐயோ இல்லை” என்று விழுந்தடித்து ஓடினாள் ஜானகி.

மீரா வளையல் வாங்கக் கையில் சிலவற்றை எடுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் . திடுமென்று பின்னே “எனக்குச் சிவப்பு வளையல் வேணும் என்று வெடுக்கென்று கத்தி, கூடையில் இருந்த கண்ணாடி வளையல்களில் சிவப்பு வர்ணத்தை எடுத்துக் கொண்டாள் சாரு.

வளையல் விற்பவர் முழிக்க “என்ன பாக்கற எனக்கு ரெண்டு ஜோடி குடு, மணி அண்ணா பணம் குடுப்பார்” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினாள்.

வாசலுக்கு ஓடி வந்த ஜானகி “அம்மா சாரு எண்ணெயிலேந்து முறுக்கு எடுத்திண்டியா?”

“இல்லை”, வெடுக்கென்று புடவைத் தலைப்பை மறைத்தாள். “கையைக் காட்டு சாரு “.

“ஒண்ணும் இல்லை”. மேலும் மறைத்தபடி சுறு சுறு வென்று ஓடினாள். ஒரு பெருமூச்சோடு வளையல் வாங்க முன் வாசல் நோக்கிச் சென்றாள் ஜானகி.

மீரா வளையல் எடுத்த பின் உள்ளே சென்று, “சாரு அத்தை எங்க இருக்க ? ” என்று தேடிப் பிடித்தாள். அத்தை கைகளில் சூடான முறுக்கு.

“ஐயோ அத்தை கரண்டியால எடுக்க மாட்டியா ?”.

“அதுக்குள்ள எனக்குத் தர மாட்டாங்க. அதான் நானே எடுத்துண்டேன்”.

“அதுக்காக இப்படி ஒவ்வொரு தடவையும் கொதிக்கற எண்ணெயில கையை விட்டு,

பாரு உன் கை எல்லாம் எப்படிப் பழுத்துச் சுட்டுப் போய் இருக்கு”, சொல்லியபடியே களிம்பு எடுத்துத் தடவி விட்டாள் மீரா.

முப்பது வயது சாறு மூணு வயது குழந்தை போல முறுக்குத் தின்றாள்.

பதினெட்டு வயதில் கைம்பெண்ணாகத் திரும்பிய சாரு. ஒரு இரண்டு வருடத்தில் திடீரென்று சித்தம் பேதலித்துப் போனாள். முதலில் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. ஏதோ வருத்தத்தில் இருப்பதாக நினைத்து விட்டு விட்டார்கள்.

மணியைத்தவிர மீதி மூன்று அண்ணன்களும் வேலை காரணமாக ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். அஞ்சல் வழியாக நலம் விசாரிப்பதோடு சரி. மணியின் மனைவி ஜானகி பொறுமையில் உண்மையில் அந்த ஜானகி மாதாதான். அவளும், மீராவும் சாருவை சிநேகிதி போல கூட இருந்து பார்த்துக் கொண்டார்கள்.

சிவப்பு வளையல் போட்டுக் கொள்வதும், எண்ணெய்ச் சட்டியில் கை விட்டுச் சுடச்சுட எடுத்துச் சாப்பிடுவதும் என பேதலித்த அவள் செய்கைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை. அவள் புத்தியைத் தெளிய வைக்க வழியும் யாருக்கும் தெரியவில்லை. மணி, ஜானகி, மீரா மூவரைத் தவிர வேறு யாரையும் அடையாளம்தெரிய வில்லை. வேறு எந்தத் தொந்தரவும் செய்யாததால் அவளை அப்படியே விட்டு விட்டார்கள்.

***

காலச் சக்கரத்தை மட்டும் யாரால் நிறுத்த முடியும்? ஆண்டுகள் உருண்டோடின. மீராவை நன்கு படிக்க வைத்து அவளுக்கு 24 வயது ஆகும் பொது தான் மணி அவளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தான். ஏனோ சாருவைப் பார்க்கும் போது எல்லாம் ஒவ்வொரு தடவையும் அவன் மனத்தைப் பிசைவது போல இருக்கும். சாருவின் இந்த நிலைமைக்குத் தானும் ஒரு காரணம் என்று நினைத்துப் புலம்புவான்

மீராவிற்குத் திருமணம் ஆனது. மீராவுடனேயே சாரு . தங்கி விட்டாள். மீராவின் புகுந்த வீட்டு மனிதர்கள் மிகவும் பரந்த மனதுடையவர்கள். அதனால் சாருவை அவர்கள் மனதார ஏற்றுக் கொண்டனர்.

மீராவிற்குத் திருமணம் ஆகி 10 வருடங்கள் குழந்தைச் செல்வம் இல்லை. கோவில் குளம் நிறையச் சுற்றி, கடைசியில் பவித்ரா பிறந்தாள். பவித்ரா பிறந்த அந்த இரவு முழுவதும் பிரசவ வலியின் பொழுது மீராவின் அருகிலேயே சாரு கை பிடித்த படி, வெறித்துப் பார்த்த படியே நின்றிருந்தாள்.

“நீ போய் படுத்துக்கோ சாரு அத்தை, குழந்தை பிறக்க நேரம் ஆகும் போலிருக்கு “.

பதில் சொல்லாமல், கை விடாமல், அருகிலேயே அமர்ந்திருந்தாள். குழந்தை பிறந்ததும், முதலில் கையில் வாங்கினாள் சாரு. ஏதோ ஒரு இனம் புரியாத ஒன்றை உணர்ந்தாள் சாரு. பேதலித்த அவள் மனம் ஏதோ ஒன்றை அன்று உணர்ந்தது. அன்று முதல் அவள் அமைதியாகிப் போனாள்.

***

ஆண்டு 2005: குழந்தை பவித்ரா குமரியானாள். துடுக்கான சுபாவம் உடையவள். பல வருடத்திற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை. அதனால் அனைவரின் செல்லம் கூட.

சாருவிற்கும் வயதாகி விட்டது. நான்கு தலைமுறை மனிதர்களுடன் இருந்து விட்டாள். அவளைச் சுற்றி வேகமாக வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சியோ, கணிப்பொறி வளர்ச்சியோ அவளுக்குப் புரியவில்லை.

அவள் அதைப் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. பள்ளிப் பருவம் வரை சாருவுடன் ஆவலாக விளையாடிய பவித்ராவும் கல்லூரி சென்ற பின் மாறிப் போனாள்.

அவள் பெரிய பெண் ஆகி விட்டாள் என்று சாரு உணர்ந்து கொண்டாள்.

தோட்ட வேலை, குருவிகளை வேடிக்கை பார்ப்பது, என்று தினசரி வாழ்க்கையைக் கடத்தினாள் சாரு. வீட்டில் பெரும்பாலும் அவள் ஒரு தூண் போல இருந்தாள் . அவளால் யாருக்கும் தொந்தரவும் இல்லை, அவளையும் யாரும் தொந்தரவு செய்ய வில்லை .

பவித்ராவிற்குத் திருமணம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள் மீரா.

ஒரு சில மாதங்களில், பவித்ரா திருமணம் அமோகமாக நடந்தது.

அவள் புது வீடு சென்ற மூன்று மாதத்தில் ஏதோ ஒரு சிறிய சண்டையின் காரணமாக வீடு திரும்பி வந்து விட்டாள்.

“எனக்கு விவாகரத்து பண்ணி வை. எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை”.

பவித்ராவின் இந்தத் திடுமென்ற முடிவைக் கேட்டு அதிர்ந்து போனாள் மீரா.

“என்ன பவி உளர்ற “.

“ஆமாம். எனக்குப் பிடிக்கல”

“என்ன பிடிக்கல?”

பட பட வென்று பவித்ரா சின்னச் சின்ன விஷயங்களை ஏதோ பூதாகரமாக அடுக்கிய போது,

“இது எல்லாம் வாழ்கையில சகஜம் பவி. நீ ஒரே பொண்ணா வளர்ந்ததால, கொஞ்சம் கூட விட்டுக் குடுக்கத் தெரியல”.

மீரா கூறிய அறிவுரைகள் எதையும் சட்டை செய்ய வில்லை பவித்ரா.

அவளின் பிடிவாத குணத்தால் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறாளே என்று மீரா பயந்து கொண்டு இருந்தாள் .

ஒரு வாரம் கழித்துப் பவியின் கணவர் வந்து, அவளைச் சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முயன்றார். அவரிடமும் துடுக்காகப் பேசினாள் பவி.

அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரை அனுப்பி வைத்து விட்டு மீரா வீட்டினர் உள்ளே வந்து கோவமாகப் பவித்ராவிடம் கத்தத் தொடங்க,

பவித்ரா பதிலுக்கு

“எனக்கு இந்தக் கல்யாணம் எதற்கு. என்னால தனியாவே இருக்க முடியும். நான் வேலைக்குப் போறேன். எனக்கு வேணுங்கறத சம்பாதிக்கறேன். எதுக்கு நான் விட்டுக் கொடுத்து வாழணும். என்ன மாதிரி பெண்கள் நிமிர்ந்து நடக்கணும்னு தான் பாரதியார் கூட எழுதி இருக்கார். எனக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவை இல்லை. எனக்கு எல்லாம் தெரியும்.” என்று தூக்கி எரிந்து பேசினாள். அவளுக்குச் செல்லம் கொடுத்து ரொம்பக் கெடுத்து விட்டோமே என்று அனைவரும் வாய் அடைத்து நிற்க,

பல வருடங்களாகத் தூண் போல பேசாமல் இருந்த சாரு ஒரு ஓரத்தில் இருந்து தீனமான ஆனால் தெளிவான குரலில் பேசினாள்.

“அம்மா பவித்ரா”

இத்தனை வருடங்கள் கழித்து, அவள் குரல் கேட்டு அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் ஆச்சர்யத்தில் அமைதியாகிப் போனார்கள்.

பவித்ராவுடன் சேர்த்து அனைவரும் அவள் முகம் பார்க்க,

“உன்னால தனியா இருக்க முடியும் தான். ஆனா அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்னு என்னைப் பார்த்துக் கூட உனக்குத் தெரியலையா. ? விட்டுக் கொடுக்கறது முடியாதுன்னு சொல்றியே, அது ரொம்ப வேடிக்கையா இருக்கு. நாம குழந்தையா இருந்ததுல இருந்து எவ்ளோ பேர் கிட்ட விட்டுக் கொடுக்கறோம் . நமக்குப் பிடிச்ச தோழிகிட்ட, நமக்குக் கூட வேலை செய்யறவங்க கிட்ட, இப்படி எத்தனையோ பேர் கிட்ட நம்ம முகத்துக்காகப் பேசி,, பிடிச்ச மாதிரி நடந்துக்கறோம். நம்ம ரொம்ப மரியாதை உள்ளவங்கன்னு காட்டிக்கறோம். தெரியாதவங்க கிட்ட அது முடியும்னா, வாழ்கைத் துணை கிட்ட அது முடியாதா?

குறை இல்லாத மனிதர்களே உலகத்தில் கிடையாது. அந்தக் குறையோட மத்தவங்கள ஏத்துக்குறதுதான் நிறைவான திருமணம்.

வாழ்க்கையில உன்னோட உறவுகள் எல்லாமே கடந்து போகும் மேகம் போல , வருவாங்க, போவாங்க, ஆனா என்னைக்கும் ஒரு இதமான துணையா இருக்கக் கூடிய உறவு உன் கணவர் ஒருவர் தான். அந்தத் துணையை உணருமுன் இழந்துஎன் வாழ்க்கை முழுக்க தனித்து இருந்ததால எனக்குத் தெரியும் அந்தத் துணையின் அவசியம். நீ புத்திசாலி. யோசிச்சுப் பார்” என்று முடித்தாள் சாரு.

சுருக்கமான அவள் பேச்சு, அனைவரின் வாயையும் அடைத்தது.

ரெண்டு மணி நேரம் கழித்து அமைதியாகஇருந்த வீட்டின் வாசலில் இருந்து ஒரு ஆட்டோவில் பவித்ரா தன கணவர் வீடு நோக்கிக் கிளம்பினாள்.

****

பின் குறிப்பு : இந்தியாவில் விவாகரத்து எண்ணிக்கை அதிகமாக வளர்ந்துள்ளதாக ஒரு சமீபத்திய கணக்கீடு கூறுகிறது. மிக மிகச் சாதாரண காரணம் கூறிக் கூட விவாகரத்து கேட்கும் பழக்கம் உருவாகி வருகிறது. பரஸ்பர நட்பாக ஒரு துணையைத் தேடும் சாருலதா போன்றவர்களை நினைத்தாவது, உப்பு சப்பில்லாத காரணம் காட்டி விவாகரத்து நாடும் பழக்கம் குறைந்தால் நல்லது.

  • லக்ஷ்மி சுப்பு

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Anand says:

    Very good narration . I agree it\\\’s takes few minutes to sit and talk to resolve issues

  2. Priya says:

    Superb story. I like the way it moved during different periods. An apt story for today’s youngsters who take hasty decision .

    Way to go Lakshmi , expecting more

    Priya C K

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad