\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2016 0 Comments

american-politics-election_620x620

(அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..)

சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி அயோவா காகஸ் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. அவற்றின் முடிவுகளை அறியும் முன்னர் காகஸ் மற்றும் ப்ரைமரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காகஸ் (Caucus)

காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் கூட்டம். ஒரு மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் (precinct) நடைபெறும் இவ்வகைக் கூட்டங்களிலிருந்து ஒருவரோ சிலரோ பிரதிநிதிகளாகத் (delegates) தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் இவர்கள் மாநில அளவில் ஒன்றுகூடித் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள். இப்பிரதிநிதிகள் தங்களது அபிமான வேட்பாளருடன் குழுமி நின்றோ அல்லது அவரது பெயர் வாசிக்கப்படும் போது கையை உயர்த்தியோ தங்கள் ஆதரவை வெளிப்படுத்தலாம். இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (electoral college) அதிபர் தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் கூட, அதிபரை மாற்றி நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவர்கள். [popular votes (பெரும்பான்மை வாக்குகள்) vs electoral votes (தேர்தல் வாக்குகள்) – இதைப்பற்றி பின்னர் பார்க்கலாம்].

ப்ரைமரி (Primary)

காகஸ் போன்ற குறிக்கோளுடனே நடைபெறும் இவ்வகைக் கூட்டங்கள் காகஸ் போன்று வெளிப்படையானவை அல்ல. பொதுத் தேர்தலைப் போல வாக்குச்சீட்டு முறையில் தங்களது அபிமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்

முறை இது. இம்முறையிலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அவர்கள் கூடித் தங்களது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ப்ரைமரி முடிவுகள் காகஸ் முடிவுகளைவிடச் சற்று துல்லியமானவை. காகஸ் முறையில் ஒரே உறுப்பினர் இரண்டு அல்லது பல வேட்பாளர்களுக்குக் கை உயர்த்த வாய்ப்புள்ளது. ப்ரைமரி முறையில் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். இதையும் சற்றுச் சிக்கலாக்கும் வகையில், இரண்டு விதமான ப்ரைமரிகள் உண்டு.

க்ளோஸ்டு ப்ரைமரி (Closed Primary) என்பது கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் மட்டுமே பங்கெடுத்து வாக்களிப்பது. ஓபன் ப்ரைமரி முறையில் கட்சி பாகுபாடுகளின்றி வாக்குரிமை கொண்ட எவரும் வாக்களிக்கலாம்.

இதனால் எதிர்க்கட்சியினர் தங்களது கட்சிக்குப் பலமான போட்டியளிக்கக் கூடிய ஒருவரை வீழ்த்தக் கூடிய வாய்ப்புள்ளது.

காகஸ் அல்லது ப்ரைமரியின் மற்றுமொரு முக்கிய அம்சம், பிரதிநிதிகளின் பங்கீடு. இந்தப் பங்கீட்டு முறை முற்றிலும் சிக்கலான ஒன்று. ஏற்கனவே பார்த்ததுபோல் இவர்கள் அதிபர் தேர்தலில் மக்கள் நேரிடையாக

வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் ஒருவரை மாற்றக் கூடிய சக்தி கொண்டவர்கள். எனவே வேட்பாளர்கள் இந்தப் பிரதிநிதிகள் பங்கீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கை அளிக்கப்படும். ஆண்டுதோறும் நடக்கும் கட்சி மாநாட்டில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காகஸ் மற்றும் ப்ரைமரியில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை வைத்து ஒவ்வொரு வேட்பாளருக்கான பிரதிநிதித்துவப் பலம் கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு இருபது பிரதிநிதிகள் என்று எடுத்துக் கொள்வோம். அக்கட்சியின் சார்பில் ஜோ, ஜாக், ஜில் என மூன்று வேட்பாளர்கள் காகஸில் பங்கெடுக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஜோ 70%, ஜாக் 20% ஜில் 10% வாக்குகளைப் பெறுகிறார்கள் என்றால் அதே அடிப்படையில் பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு ஜோவுக்கு 20 x 70 /100 = 14, ஜாக்குக்கு 4, ஜில்லுக்கு 2 எனப் பதிவாகும். இது ஜனநாயகக் கட்சியின் கணக்கிடும் முறை. குடியரசுக் கட்சியின் கணக்கீடுப்படி ஜோ முன்னணி வகித்ததால் 20 பிரதிநிதிகளையும் ஜோவே பெறுவார்.

இவ்வாறாக ஒதுக்கப்படும் பிரதிநிதிகள் குறிப்பிட்ட வேட்பாளரின் கொள்கைகளை ஏற்று முற்றிலும் அவரது ஆதரவாளராக இருக்கலாம் (pledged delegate), இல்லை இறுதியில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நாள் வரை முடிவெடுக்க முடியாத நிலையிலும் இருக்கலாம் (unpledged delegates). இவர்களை ஜனநாயகக் கட்சியில்

அதிபல பிரதிநிதிகள் (super delegates) என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக் கூடிய சக்தியுள்ளவர்கள். (”பின் எதற்கு இவ்வளவு களேபரம்” என்று தானே கேட்கிறீர்கள்? வாஸ்தவமான கேள்வி)

இவ்வாறாக காகஸ் அல்லது ப்ரைமரி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள ஆதரவைத் தெரிந்துகொள்ள முடியும். இம்முடிவுகள் அம்மாநிலத்து மக்களின் கருத்துகள் மட்டுமே. ஏற்கனவே சொன்னது போல்

இவை துல்லியமானவை அல்ல. இருப்பினும் தாங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்று உணரும் வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வர். அவ்வாறாக விலக நேரும் வேட்பாளரின் பிரதிநிதிகள் மற்ற வேட்பாளர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கலாம்.

காகஸ் முறையில் பல சிக்கல்கள் இருப்பதால் பல மாநிலங்கள் ப்ரைமரிக்குத் தாவி விட்டன. தற்போது மினசோட்டா உட்பட பத்து மாநிலங்களில் மட்டுமே காகஸ் முறை பின்பற்றப்படுகிறது. ஏனைய மாநிலங்கள் (35) முற்றிலும் ப்ரைமரியோ, அல்லது காகஸ், பிரைமரி இரண்டு முறையையும் பயன்படுத்தியோ தங்கள் வேட்பாளர்களையும் பிரதிநிதிகளையும் முடிவு செய்கின்றன.

இக்கட்டுரை எழுதப்பட்ட ஃபிப்ரவரி 11ம் நாள் வரை அயோவா, நியூ ஹாம்ஷயர் மாநிலங்களில் முறையே காகஸும் ப்ரைமரியும் நடந்து முடிந்துள்ளன. அவற்றின் முடிவுகள் இதோ.

2016 ஐயோவா – காகஸ் முடிவுகள்

குடியரசுக் கட்சி

ஜனநாயகக் கட்சி

வேட்பாளர்

ஆதரவு சதவீதம்

வேட்பாளர்

ஆதரவு சதவீதம்

டெட் க்ரூஸ்

27.6

ஹில்லாரி கிளிண்டன்

49.9

டானல்ட் ட்ரம்ப்

24.3

பெர்னி சாண்டர்ஸ்

49.6

மார்கோ ரூபியோ

23.1

பென் கார்சன்

9.3

ரான் பால்

4.5

மற்றவர்கள்

11.2

மற்றவர்கள்

.5

மொத்தம்

100%

மொத்தம்

100%

2016 நியூ ஹாம்ஷையர் ப்ரைமரி முடிவுகள்

குடியரசுக் கட்சி

ஜனநாயகக் கட்சி

வேட்பாளர்

ஆதரவு சதவீதம்

வேட்பாளர்

ஆதரவு சதவீதம்

டானல்ட் ட்ரம்ப்

35.3

பெர்னி சாண்டர்ஸ்

60.4

ஜான் காசிஷ்

15.8

ஹில்லாரி கிளிண்டன்

38.0

டெட் க்ரூஸ்

11.7

ஜெப் புஷ்

11.0

மார்கோ ரூபியோ

10.6

மற்றவர்கள்

15.6

மற்றவர்கள்

1.7

மொத்தம்

100%

மொத்தம்

100%

இவ்வாண்டின் மார்ச் மாத முதல் 12 மாநிலங்களில் காகஸ் அல்லது ப்ரைமரி கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மார்ச் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் இக்கூட்டங்கள் நடைபெறுவதால் அந்நாள் சூப்பர் ட்யூஸ்டே (Super Tuesday) என வழங்கப்படுகிறது. அத்தினம் மினசோட்டாவில் காகஸ் நடைபெறவுள்ளது. வாக்காளராகவோ அல்லது பார்வையாளராகவோ நீங்கள் இதில் பங்கெடுக்கலாம்.

இந்திய அரசியலமைப்பைப் போலவே அமெரிக்க அரசியலும் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தியாவின் லோக் சபாவுக்கு நிகரானது இங்குள்ள ஹவுஸ் ஆப் ரெப்ரேசெண்டேடிவ்ஸ். ராஜ்ய சபைக்கு நிகரானது செனட். ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 செனட்டர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 100 செனட்டர்கள் உள்ளனர். அந்தந்த மாநிலத்தின் மக்கட்தொகையைப் பொறுத்து தற்போது 435 ஹவுஸ் ஆஃப் ரெப்ரேசெண்டேடிவ்ஸ் உள்ளனர். டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவுக்கு (Washington DC) ரெப்ரேசெண்டேடிவ்ஸ்களோ, செனட்டர்களோ இல்லாத நிலையில், 3 எலக்டோரல் பிரதிநிதிகள் ஒதுக்கப்பட்டு, இவற்றின் கூட்டுத்தொகையாக 538 பிரதிநிதிகள் எலக்டோரல் காலேஜில் உள்ளனர். இதன் சரி பாதியான 269 பிரதிநிதிகளின் வாக்குகளை விட அதிகமாகப் பெறுபவர் மட்டுமே அமெரிக்க அதிபராவார்.

மெய்யாலுமா?

1984 அதிபர் தேர்தலில் வென்ற ரொனால்ட் ரீகன் அமெரிக்க வரலாற்றில் அதிகபட்ச எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றவர். இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 525. அந்தத் தேர்தலில் அவர் பெற்ற 54,455,075 அதிகபட்ச மக்கள் வாக்குகளே இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இது வரை இரண்டு அதிபர்கள் அதிகபட்சமாக 49 மாநிலங்களின் பிரதிநிதிகளின் வெற்றி வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஒருவர் ரிச்சர்ட் நிக்ஸன். 1972ல் இவர் மாசசூசெட்ஸ் தவிர மற்ற அனைத்து மாநிலங்களையும் வென்றார். மற்றொருவர் ரொனால்ட் ரீகன். 1984ல் இவர் தோற்ற ஒரே மாநிலம் மினசோட்டா.

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad