தெறிக்க விட்ட சங்கமம் 2016
வருடா வருடம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கொண்டாட்டத் திருவிழாவான ‘சங்கமம்‘, இவ்வருடம் ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ் மக்களின் பேராதரவுடனும், பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பினாலும், பல்வேறு கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பினாலும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வழக்கமாகப் போட்டுத் தாக்கும் குளிர், அன்று கொஞ்சம் போல் கருணை காட்டியது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அதற்கு முன்பே கூட்டம் குவியத் தொடங்கி இருந்தது. நுழைவு கை வளையம் (Entry Wrist band) பார்வையாளர்களுக்குப் பச்சை நிறத்திலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சிகப்பு நிறத்திலும் வழங்கப்பட்டன. அதுதான் குறியீடு. பார்வையாளர்களுக்குப் பரவசம் அளித்த அனுபவத்திற்குப் பின்னால் தன்னார்வலர்களின் கடும் உழைப்பு இருந்ததைச் சுட்டி காட்டும் நிறங்களாக அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
நமக்கு இரண்டாவது சங்கம அனுபவம். போன முறையே பேரானுபவம். அதே போலத்தானே இருக்கும் என்ற நினைப்பு. அதற்கு மேல் கொடுக்க என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான். ஆனால், சும்மா சொல்லக் கூடாது. இது ‘அதுக்கும் மேலே‘.
ஒவ்வொரு அம்சமாக விவரித்து எழுதலாம் தான். அப்படி எழுதினால் அடுத்த வருட சங்கமம் வரை பனிப்பூக்களில் தொடர் எழுத வேண்டி வரும். அதனால் சுருக்கமாக ‘ஹைலைட்ஸ்‘ பார்ப்போம்.
சங்கம நிகழ்ச்சிகளுக்கான பங்களிப்பு மழலைக் குழந்தைகளிடம் இருந்தே தொடங்கி விடுகிறது. தமிழ்ப் பள்ளியில் மழலை நிலையில் பயிலும் மழலைச் செல்வங்கள் பங்கு பெற்ற “மலரும் மொட்டும்” நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தால், தமிழ் சேனல்களில் ஒன்று உடனே “கண்மணி பூங்கா” வடிவ நிகழ்ச்சி ஒன்றை மீண்டும் களமிறக்கும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், மேடையில் மேலே இருந்த திரையில், அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வோரின் பெயரை லைவ்வாக காட்டியது செம ஐடியா. யார், என்ன என்று தெரிந்து கொள்ள அந்த லைவ் டைட்டில் கார்டுகள் உதவியாக இருந்தன.
இம்மாதிரி மெனக்கெடல்கள், தொடர் மேம்பாடுகள் ஏராளம். விட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கென ‘சிக்ஸ் சிக்மா‘ வாங்கி வந்து விடுவார்கள். இன்னொரு உதாரணம், சங்கத்தின் ஆண்டுக் கணக்கை முன்பு நிர்வாகி ஒருவர் மேடையில் வந்து வாசித்துவிட்டுச் செல்வார். இம்முறை, முன்பே தயாரிக்கப்பட்ட காணொளி – தரவுகளுடன் ஒளிப்பரப்பப்பட்டது.
இளஞ்சிட்டுகளின் மழை நடனம், பாரம்பரிய பரதம் என்று தொடங்கிய சங்கமம் நிகழ்ச்சி நிரலில் பல புது ‘ஐட்டங்களும்‘ புகுத்தப்பட்டிருந்தன. புதியதாக ஒரு இசைக்குழு உருவாகியிருந்தது. புதியதாக ஒரு குறும்படக்குழு உருவாகியிருந்தது. இவ்விரு புதுக் குழுக்களின் கன்னி முயற்சிகளான இசை கச்சேரியும், குறும்பட ஒளிபரப்பும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘வேர்களைத் தேடி‘ என்ற அந்தக் குறும்படம், இங்குள்ள குழந்தைகள் தமிழ் மொழி கற்க வேண்டியதின் அவசியத்தையும், அதற்கு இங்கு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளி ஏற்படுத்திக்கொடுத்துள்ள வசதி, வாய்ப்பையும் பற்றிப் பேசி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.
நடன நிகழ்ச்சிகளும் ஏதாவது ஒரு சிறப்பம்சத்துடன், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தன. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளப் பேரழிவை நினைவூட்டி, அப்போது உருவாகிய மக்கள் எழுச்சியைப் பாராட்டி, இந்த நிலைக்குக் காரணிகளாக இருந்தவற்றை அலசி, அடுத்து இவ்வகைப் பேரழிவைத் தவிர்க்க என்ன செய்யலாம்? என்பதைச் சிந்திக்கும் வண்ணம் அமைந்த நடன நிகழ்ச்சிகள் பாராட்டுக்குரியவை.
அதுபோலவே, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பைக்கூறும் வண்ணம் ஒரு தொடர் திரையிசைப் பாடலுக்கு ‘கலாட்டாக் கண்மணிகள்‘ குழு அமைத்திருந்த நடன நிகழ்ச்சி, பார்வையாளர்களைச் சுவாரசியத்துடன் நிகழ்ச்சியுடன் ஒன்றச் செய்தது. ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு இடங்களை, உணவுகளை, மனிதர்களைப் புகைப்படங்களாக மேலே உள்ள திரையில் காட்டியது இன்னும் சிறப்பு. அந்தந்த ஊர் மக்கள், அவர்களது மாவட்டம் வந்த போது கரவொலி எழுப்பிப் பெரும் வரவேற்புக் கொடுத்தனர். வந்திருந்த இந்தப் பெரும் கூட்டத்தில் நம்ம ஊர்க்காரர்கள் யார் எனக் கண்டு கொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு வழியும் செய்து கொடுத்தது.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அன்றைய தினத்தின் உச்சக்கட்ட உயர் தரப் படைப்பு என ‘கலைகளின் சங்கமம்‘ நிகழ்ச்சியைச் சொல்லலாம். நக்கல் நையாண்டியுடனான வில்லுப்பாட்டு, அலகினால் ஜூஸ் குடித்த மயிலும், மாலை எடுத்த மயிலும் ஆடிய மயிலாட்டம், முளைப்பாரியை வளர்த்து, அதைச் சுற்றி ஆடிய கும்மியாட்டம், கொண்டாட்டமான கோலாட்டம், பார்ப்போரை ஆட்டம் போட வைத்த ஒயிலாட்டம், புயல் வேக சிலம்பாட்டம், பட்டையைக் கிளப்பிய பறை, பாரதிதாசனின் கவிதையை மேடையேற்றிய தெருக்கூத்து, துள்ளலான குறவன் குறத்தி ஆட்டம், சீற்றத்துடன் கூடிய புலியாட்டம், எதைக் கொண்டும் கட்டாமல் ‘ஜஸ்ட் லைக் தட்‘ எனக் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆச்சரியப்படுத்தும் பல செயல்களைச் செய்துக்காட்டிய கரகாட்டம், காணுவதற்கரிய ‘ஒரிஜினல்‘ பொய்க்கால் குதிரை ஆட்டம் என அனைத்தும் ஒருமித்த ஒருங்கிணைப்புடன் மேடையில் அணிவகுத்தது, பரவச அனுபவத்தைக் கொடுத்தது. அடுத்த சங்கமம் எப்பொழுது என்ற ஏக்கத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.
MNTS சங்கமம் 2016
முன்னதாக, இரவு உணவாக வழங்கப்பட்ட ‘உடன்குடி கருப்பட்டி‘யில் செய்யப்பட்ட பொங்கல், சாம்பார், ரசத்துடன் சாதம், தயிர் சாதம், பலகறிக் கூட்டு, உளுந்த வடை ஆகியவையும் அமர்க்களச் சுவையுடன் இருந்தன. சிறார்களுக்கு நான் (Naan) மற்றும் பன்னீர் பட்டர் மசாலா வழங்கப்பட்டது. இச்சுவை மிகுந்த உணவிற்குப் பின் பல தன்னார்வலர்களின் பல மணி நேர உழைப்பு இருந்த பின்னணியைக் கேட்டபோது, உணவின் சுவை இன்னும் கூடியது.
இவ்வருடச் சங்கமத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர்களான, ஈரோடு மகேஷ், கிறிஸ்டோபர், வெங்கடேஷ் மற்றும் சசி ஆகியோரது நகைச்சுவைத் தோரண நிகழ்ச்சி, பார்வையாளர்களும் பங்குபெறும் வண்ணம் அமைந்து, அனைவரையும் சிரிக்க வைத்தது. அவர்களது நிகழ்ச்சிக்குக் குறைந்த நேரம் அமைந்ததே குறை. அவ்வளவு நேரமானாலும், பெருமளவில் மக்கள் முழுமையாக உட்கார்ந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்தது, அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் கொடுத்த ஆதரவைக் காட்டுவதாக இருந்தது.
பொதுவாக, இம்மாதிரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்பவர்களின் நிகழ்ச்சிகள் தான், அன்றைய நிகழ்வின் சிறப்பம்சமாக இருக்கும். ஆனால், சங்கமத்திலோ, வரும் சிறப்பு விருந்தினர்களே, உள்ளூர்க் கலைஞர்களின் கலைத் திறமையைக் கண்டு பிரமித்துப் போவார்கள். சென்ற வருடம், திண்டுக்கல் ஐ. லியோனி மலைத்துப் பாராட்டிச் சென்றார். இவ்வருடம், அசத்தல் மன்னர்கள் அசந்து போனார்கள். நம்மூர்க் கலைஞர்களின் திறமையைக் காணும் பொழுது, அவர்கள் அமெரிக்காவின் பிற மாகாண விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாகச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கமம்‘ வளர்கிறது. அதில் இவ்வருடம் பெரிய பாய்ச்சலுடன்.
–சரவணகுமரன்