கலக்கப்போவது நாங்கதான்
ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல்.
கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே? நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும்?
பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல லெக்சரரா இருந்தேன். அதனால ஸ்கூல் ஜோக்குங்க நிறைய சொல்லுவேன். மாணவர்களைப் பத்தின நகைச்சுவையும், குடும்பம் பத்தின நகைச்சுவையும் என்னுடைய ப்ரோக்ராம்ல ரொம்ப ஸ்பெஷலான இடத்தைப் பிடிக்கும்
கேள்வி: கோயம்புத்தூர் குசும்புன்னா என்ன?
பதில்(மகேஷ்): கோயம்பதூருன்னு இல்ல, மதுரையை எடுத்தீங்கனா அங்க உள்ள மண்ணுக்கேத்தா மாதிரி காமெடி இருக்கும். அந்த இயல்பான நகைச்சுவை கலந்த பேச்சிருக்கும். ஒன்னுக்கு ரெண்டா பேசறது, அதுல நகைச்சுவையைக் கலக்கறது தான் கோயம்புத்தூர் குசும்பு.
கேள்வி: நீங்க சினிமாவில நடிச்சிருக்கீங்க, மேடை நகைச்சுவை ப்ரோகிராமும் பண்றீங்க. இதுல உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்.
பதில்(மகேஷ்): எனக்கு TV ஷோ பண்ணத் தான் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அதுல எனக்கு சுதந்திரம் இருக்கும். நம்ம என்ன வேணும்னாலும் பகிர்ந்துகிட முடியும். சினிமான்னா ஒரு இயக்குனர் என்ன கதை சொல்றாரோ அதுக்குள்ள தான் நடிக்க முடியும்.
கேள்வி : நீங்க அழகா வரையறீங்க, நகைச்சுவையா நடிக்கறீங்க, பாடுறீங்க. உங்களுக்கு இதுல எல்லாம் ஆர்வம் இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?
பதில் (கிறிஸ்டோபர்) : நானா எதுவும் எதையும் தேர்ந்தெடுக்கல. நம்ம ஸ்கூல்ல படிக்கறப்ப எதுல ஆர்வம் இருக்குனு நமக்கு தெரியவரும். பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, வரைபடப் போட்டின்னு நடத்தும்போது. அதுல நம்ம வாங்கற பரிசு, நம்ம வரையற படம் இதுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைக்கும் போது நமக்கான தகுதி இதுதான்னு தெரியுது. அப்படித்தான் நான் கவிதை எழுதறது, ஓவியம் வரையறது, மிமிக்ரி பண்றதெல்லாம் .. T ராஜேந்தர் மாதிரி எல்லாமே ஸ்கூல் படிக்கும் போதும், காலேஜ் படிக்கும் போதும் கத்துக்கிட்டேன்.
அதுவும் இல்லாம, எங்க அப்பா நல்ல வரைவாரு, அண்ணன் நல்லா பாடுவாரு. அந்த பின்னணி கூட எனக்கு உதவுச்சு.
கலக்கப்போவது நாங்கதான்
கேள்வி: நாடகப் பாணி நகைச்சுவை பண்றீங்க ; தனி நபர் நகைச்சுவை பண்றீங்க. இரண்டுக்கும் பயிற்சி முறையில என்ன வித்தியாசம் இருக்கு?
பதில்(மகேஷ்) : நாடகப் பாணி நகைச்சுவைப் பண்ணும் போது ஒரு நல்ல புரிதல் வேணும். ஒருத்தருக்கு நல்ல பெரிய பாகம் இருக்கும் போது மத்தவுங்க துணை போகணும். இதுக்கு புரிதல் அவசியம்.
ஸ்டாண்டப்புல நம்ம தனி. அதனால என்ன வேணும்னாலும் செய்ய முடியும். எதுவானாலும் நம்மளால சாதிச்சிக்க முடியும்.
சசி: தனி நபர் நகைச்சுவை பண்ணும் பொழுது ஆடியன்ஸை பொறுத்து 30 அல்லது 15 ஜோக்குங்களை சொல்லாம். ஆனா மூணு பேரு சேர்ந்து செய்யும் பொழுது அது முடியாது. ஜோக் சொல்ல வேண்டிய இடத்துல சொல்லியாகணும். சொல்லாம விட்டுட்டா திருப்பியும் சொல்ல முடியாது.
கேள்வி: சினிமாவிலும் டிவியிலும் தமிழ் உச்சரிப்பு ரொம்ப குறைஞ்சுகிட்டே வருது. அதை எப்படி சரி பண்றது? உங்க நிகழ்ச்சிகள்ல உச்சரிப்பு ரொம்ப நல்லாருக்கு. இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?
பதில் (மகேஷ்): மொழி மீதுள்ள ஆர்வம் தான் இதற்கு காரணம். ஆர்வம் அதிகமாக அதிகமாக தேடல் உண்டாகும். தேடல் உண்டாச்சுன்னா வாசிப்பு உண்டாகும். வாசிக்கும் போது நிறையப் பேசுவோம். அப்படி பேசும்போது நமக்கு தானாவே உச்சரிப்பு வந்துடும். பயிற்சின்னு ஒன்னும் இல்ல. ஒரு சொல்ல அஞ்சு தடவை சொன்னா வந்துடும். செந்தமிழும் நாப்பழக்கம் இல்லயா. பேசப் பேசத்தான் வரும். இப்ப தமிழே தெரியாம பேச வரலன்னா எப்படி வரும்?
கிறிஸ்டோபர்: நான் “தமிழ் பேசுங்க தலைவா” ன்னு ஒரு நிகழ்ச்சி நூறு வாரம் பண்ணினேன். இது ஆதித்யா தொலைக்காட்சில வந்துது. அப்படி பண்ணும்போது தமிழ் சம்பந்தமான விஷயங்கள் நிறைய தேடி எடுக்கணும். தமிழ் மொழியுடைய செழுமை, வழமை, பழமை இதெல்லாம் தேடி எடுக்கணும். அதுவும் இல்லாம, இப்போ நாம் உபயோகிக்கும் வார்தைகளுக்கு சரியான பழமையான வார்த்தைகளையும் தேடனும். அதுக்கு புத்தகங்கள் நிறைய படிக்கணும். அப்படி பண்ணும் பொழுது பெரிய ஆச்சர்யமா இருந்தது எங்களுக்கு. காலேஜ், ஸ்கூல் பசங்களுக்குச்’ சின்னச் சின்ன வார்த்தைகளுக்குக் கூட தமிழ் வார்த்தை தெரியல. நானும் தமிழ் புலவன் இல்ல. தமிழ் மொழி மேல எனக்கு ஆர்வம் அதிகம். தேடி பார்த்ததுல நிறைய விஷயம் எனக்குத் தெரிஞ்சுது. தமிழ் உபயோகத்தில நாம ரொம்ப பின்தங்கியிருக்கோம். அதனால, தமிழ் நாட்டில் இருக்க தமிழர்களை விட, வெளி நாடு வாழ் தமிழர்கள் இன்னும் அதிகமான உயரத்துக்கு எடுத்துட்டுப் போறாங்க. அவங்க தமிழ் மொழியை முன்னேற்ற அதிக நேரம் ஒதுக்கி எப்படியாவது வளக்கனும்னு ஒரு வெறியோட இருக்காங்க. அது எனக்குப் பெரிய சந்தோஷம்.
தொகுப்பு: பிரபு
புகைப்படம்: இராஜேஷ்