சாவுக்கு சாவும் நம் உயிருக்கு உயிர்ப்பும்
உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்போம் என்பது இயற்கையின் கட்டாயம். இதில் ஏழை என்றோ பணக்காரன் என்றோ பகுப்பாடு கிடையாது. ஆனால் கிடைத்த வாழ்வில் சாவைவென்று உயிருள்ள வாழ்கையை எப்படி வாழ்வது என்பதை உணர்த்தவும், துன்பத்தில் துவண்டுபோன மனிதன் எப்படி துள்ளி குதித்து எழவேண்டும் என்பதை வெளிப்படுத்தவும், வாழ்வில் பாவம் மற்றும் இறப்பின் பயத்திலிருந்து மீண்டு வரவும், வாழ்க்கைக்கடலை கடப்பது எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் கடவுள் மனிதனாக பிறந்தார்.
மனிதனாக பிறந்த நம் எல்லாருக்கும் சாவு என்றால் ஒரு பயம் வந்துவிடுகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ செல்வச்சிறப்புகள் இருந்தாலும், புகழின் உச்சியில் இருந்தாலும், கணவன், மனைவி பிள்ளைகள் என்று அருமையான குடும்பம் இருந்தாலும் எல்லாரும் ஒருநாள் இறப்போம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சோகமான சிந்தனைதான்.
இறப்பை வென்றவர் யார்? இங்குள்ள எல்லாரும் ஒருநாள் இறப்போம் என்பது உண்மைதானே? அப்படியென்றால் எதற்காக வாழ்கிறோம்? சாவதற்காகத் தானா? இல்லை; நம் வாழ்விற்கு மற்றும் நாம் வாழ்வதற்கு ஒரு பொருள் இருக்கவேண்டும். அந்தப் பொருளை உணர்த்துவதுதான் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் இந்த தவக்காலமும் உயிர்ப்பு விழாவும்.
இன்றைய நடைமுறையில், உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பு விழாவை விலாவரியாக கொண்டாடுவதை காண்கிறோம்.
ஆனால், ஆதி கிறிஸ்துவர்கள், அதாவது கி.பி. முதல் 3 நூற்றாண்டுகளில், உயிர்ப்பு விழாவைத்தான் ஒரு உன்னத விழாவாக கொண்டாடி வந்தார்கள். இதுதான் கிறிஸ்துவர்களின் தொடக்க விழா. தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் தொல்விழா.
கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்துவத்தின் ஆணிவேர். கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் இன்று கிறிஸ்துவ மறையே இருந்திருக்காது. இதையே பைபிளில் புனித பவுல் தன்னுடைய உரையில் “கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் உங்களுடைய விசுவாசமும் வீண் என்னுடைய போதனையும் வீண் ” என்று கூறுகிறார். எனவே இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்ப்புதான் கிறிஸ்தவ மறையின் பிறப்பிடம்.
இது தவக்காலம் அல்லது தபசுகாலம்
இயேசு இந்த உலகில் மனித அவதாரம் எடுத்ததே மனிதருக்கு மாதிரி காட்டத்தான். எனவே, இயேசு தனது 30வது வயதில் மறைபணிக்கு வருவதற்கு முன் 40 நாட்கள் பாலைவனத்தில் உணவு தண்ணீர் இன்றி விரதம் இருந்து செபம் செய்து பின்பு தனது இறைபணியை தொடங்கினார். அதன் நினைவாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தன்னையே ஒறுத்து, ஆசைகளை கட்டுப்படுத்தி மனித மாண்பினை உணர்ந்து வாழவேண்டும் என்பதை உணர்த்துவதுதான் தவக்காலம்.
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருந்து தங்களுடைய உணர்வுகளை, ஆசைகளை கட்டுப்படுத்தி தான் செய்த தவறுகளுக்காகவும், பாவங்களுக்காகவும் மனம்வருந்தி மனதை திருத்தி மனித மாண்பை உணரந்து வாழ முயற்சி செய்வார்கள். இந்த ஒறுத்தலின் பலன்களை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்தளித்து மனித மாண்பை போற்றி மகிழ்வார்கள். ஒருவர் தான் செலவு செய்வதில் பத்தில் ஒரு பகுதியை அல்லது தான் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி எடுத்து சேமித்து அதை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவது இதன் நோக்கமாகும்.
நான் சிறுவனாக இருந்தபோது, என் அம்மா ஒவ்வொருநாளும் சமைக்கும்போது எப்போதும் சமைக்கும் அரிசி அளவை எடுத்து அதில் அரைப்படி அரிசியை தனியாக வைத்து விடுவாங்க. இதுபோல சேர்த்த அரிசியை தவக்காலம் முடித்ததும் எளியவருக்கு கொடுப்பதைப் பார்திருக்கிறேன். இன்றும் நமது ஊரில் கிறிஸ்தவ தாய்மார்கள் தவக்காலத்தில் ஒவ்வொருமுறையும் சமைக்கும்போதும் அதிலிருந்து ஒருபிடி அரிசியை எடுத்து தனியாக வைத்துவிடுவார்கள். அது அவர்களுடைய தவக்கால ஒறுத்தல். தவக்கால இறுதியில் சேமித்த அரிசியை கோவிலுக்கு எடுத்துச் சென்று காணிக்கையாக கொடுப்பார்கள். அது கோவிலிலிருந்து வசதி இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். நாம் செய்யும் ஒறுத்தலின் பயன் பிறருக்கு பயன் படவேண்டும். அவை தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாகவும், செய்யத் தவறிய நல்ல செயலுக்கு ஈடாகவும் கொடுக்கப்படுகிறது.
யேசுவின் பாடுகளில் பங்கு
இயேசு துன்பப்பட்டு இறந்ததை நினைத்து அதே போல நம் வாழ்வில் வரும் துன்ப துயரங்களை எதிர்கொள்ளவும், மனதை ஒருநிலைப்படுத்தி நாம் செய்த குற்றம் குறைகளுக்காக, பாவங்களுக்காக மனதுருகி கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, மேலும் இவ்வாறான பாவங்களை, தவறுகளை செய்யாதிருக்க வழி செய்வதே இந்த தவக்கால நிகழ்வுகள்.
இந்த தவக்காலத்தின் இறுதியில் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். இந்த குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்துவது என்னவெனின் “ இப்போது நம்மை போற்றி புகழ்வோரெல்லாம் ஒருநாள் நம்மை புழுதிவாரி தூற்றுவார்கள் “ என்பதைத்தான்.
இயேசு தான் பாடுபடுவதற்கு முன்பாக ஜெருசலேம் நகருக்கு வருகிறார். அப்போது மக்கள், இயேசுவினுடைய நற்செயலை அறிந்தவர்களாக “ஓசன்னா” என்று புகழ்பாடி “தாவீதின் மகன் வாழ்க” என்று கூறி குருத்தோலைகளை அசைத்து ஜெருசலேம் நகருக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள்.
அவ்வாறு புகழ்பாடி அழைத்துச் சென்றவர்கள்தான், அடுத்த ஐந்து நாட்களிலே, “இவரை சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்” என்று பழி சொன்னார்கள்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல்.”
என்ற பொய்யாமொழி புலவனின் குறளுக்கேற்ப வாழவேண்டும் என உணர்த்துவதுதான் தவக்காலம்.
ஆகா! ஓகோ! என நாம் புகழப்படும் போதெல்லாம் புகழ்ச்சி போதையினால் பாதை நழுவாமல் நடக்கவும், அதே போல நாம் இகழப்டும்போதெல்லாம் மனம் நொறுங்கிப்போக தேவையில்லை என்பதை உணர்த்துவதுதான் தவக்காலமும் யேசுவின் இறப்பும்.
சாவுக்கே சாவை கொடுத்த இயேசு
புனித வெள்ளி அன்று இயேசு கொடுராமாக சிலுவையில் அறையப்பட்டு இறக்கிறார். இது, ஒரு வித்தியாசமான, ஏன்? சற்று சிக்கலான சிந்தனை. கடவுள் ஏன் மனிதானாக பிறந்து பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. பிற புராணங்கள், இதிகாசங்களை படிக்கும் போது, கடவுள் தீயவர்களையும் அரக்கர்களையும் அழித்து வெற்றிகொண்டார் என்று இருக்கும். ஆனால் இங்கு கடவுள் மனிதனாக பிறந்து நற்செயல்கள் பல புரிந்து, பாடுபட்டு இறந்தார்.
ஏன் கடவுள் இறக்கவேண்டும்? “மனிதனாக பிறந்த எனக்கே சாவு வந்தது. அதுவும் சிலுவைச்சாவு வந்தது. எனவே மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் சாவு உண்டு” என்பதை கடவுள் நமக்கு தெளிவுபடுத்த இந்த நிகழ்வு அமைகிறது. பிரிவு இல்லாமல் கூடலில்லை. இறப்பில்லாமல் உயிர்ப்பில்லை. மண்ணில் ஒரு விதை விழுந்து மடியாமல் அது பலன் தருவதில்லை. மண்ணில் மடிந்து பல செடிகளுக்கு உயிர் கொடுத்து பல மடங்கு பலன் தருவது போல நாமும் வாழ்வில் பயம், பாவம், என்ற மரணத்தை வெற்றிகொண்டு பலருக்கும் பயன்தர வேண்டும். இந்த இறப்போடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்பதை உணர்த்த சிலுவையில் பாடுபட்டு மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்தெழுகிறார்.
வாழ்வு முடிந்துவிடவில்லை, சாவுக்கு சாவும் நாம் வாழும் உயிருக்கு உயிர்ப்பும் கொடுக்கிறார் இயேசு. நம்முடைய செத்துப்போன வாழ்க்கைக்கு உயிர் கொடுப்பதுதான் உயிர்ப்புவிழா. ஆகவே சாவுக்கு சாவு மணி அடித்து புதிய வாழ்விற்கு உயிர் கொடுக்கிறார். பாவத்தினால், பயத்தினால் தினமும் செத்து கொண்டிருக்கிறோமே அதிலிருந்து மீண்டு உயிர் கொடுப்பதே இந்த உயிர்ப்புவிழா. அந்த புதிய உயிருள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த உயிர்ப்புவிழா. புதிய வாழ்வு என்பதை உணர்த்ததான் ஈஸ்டர் முட்டைகள் பரிமாறப்படுகிறது.
இந்த உயிர்ப்புவிழா 40 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிறகு 50வது நாள் “பெந்தகொஸ்தே” நாள் கொண்டாடப்படுகிறது. ‘பெந்த’ என்றால் 50 என்று பொருள். அன்று பரிசுத்த ஆவி மக்கள் மீது இறங்கிவந்து அவர்கள் புதிய வாழ்வில் உயிர்பெற்றதாக கருதப்படுகிறது. ஆக, ஒவ்வொரு மனிதனும் மனிதத்தை உணர, புதிய வாழ்வு பெற, கடவுள் மனிதனாக பிறந்தார். இயேசுவினுடைய உயிர்ப்புதான் நம்முடைய உயிர் உள்ள வாழ்க்கையின் தொடக்கம். எனவே, இனி நாம் துன்பங்களை எப்படி கையாளவேண்டும், துயரங்களை எப்படி மெய்யாள வேண்டும், நம்முடைய வாழ்க்கையின் தோல்விகளை எப்படி போராட வேண்டும். மேலும், இவை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு நாம் எப்படி வாழ வேண்டும், வாழ முடியும் என்பதை உணர்த்துவதுதான் இந்த தவக்காலமும் உயிர்ப்புவிழாவும் ஆகும். இந்த பாரில் பரமனின் பண்புகள் பரந்துவிரிந்திட வேண்டும் என்பதைத்தான் இந்த உயிர்ப்பு விழா உணர்த்துகிறது.
அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்புவிழா வாழ்த்துகளும் ஆசீரும்.
- தந்தை. தாமஸ் ராயர் –