\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திருவிவிலியக் கதைகள்: அழிவையல்ல….  மனமாற்றத்தையே…..!

திருவிவிலியக் கதைகள்_620x550(திருவிவிலியக்  கதைகள்)

கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை,  எல்லையும் இல்லை.  கனிவு காட்டுவதில் நல்லார்  பொல்லாதவர் என்று அவர் வேறுபாடு பார்ப்பதில்லை.

அவரது அறிவுறுத்தும் வார்த்தையைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்புத் தருகிறார்.  அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும்.

பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார்.

முன்பொரு காலத்தில் அதாவது  கி.மு. 600 ஆம் ஆண்டுக்கு முன்பு  ஆஸ்ரியா  என்ற ஒரு பேரரசு இருந்தது.

அதனுடைய தலைநகரம் நினிவே என்ற அழகான மற்றும்  செழுமையான நகரம்.

இந்த நகரமானது  இப்போது  ஈராக் நாட்டிலுள்ள திக்ரிஸ்  நதியின்  கிழக்குகரையில் இருந்தது.

செல்வச் செழிப்பான  மக்கள்….. ஆடம்பரமான வாழ்க்கை. ….அப்பறமென்ன வசதி வாய்ப்பு வந்துட்டா…. தறிகெட்ட வாழ்க்கைதானே.

நினிவே மாநகர் மக்கள் நெறி கெட்டவராய் வாழ்ந்து,  எல்லாத் தவறுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு அளவுக்கு மேல நினிவே மக்களோட தவறான வாழ்க்கையைப் பார்த்த   கடவுள், மக்கள்  இப்படியே  வாழ்ந்தால்  அழிவுதான் வரும் என்று தெரிந்து,   அதை எப்படி அவர்களுக்குஅறிவுறுத்துவது என்று பார்த்தார்.

அதற்கு யோனா என்ற ஒரு நபரைத் தேர்ந்தெடுத்தார்.

கடவுள்  யோனாவைப் பார்த்து  “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளவர்களுக்குச் சொல்லு.  அவர்கள் செய்யும் தீமைகள் அதிகமாயிட்டே போகுது” என்றார்.

ஆனாப் பாருங்க, யோனா கடவுள் சொல்லுவதைக் கேட்காம தர்சீசு என்ற நாட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார். உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, கடவுளுக்குத் தெரியாம தப்பியோட நினைத்துக் கொண்டு  அந்தக் கப்பலில் ஏறி தர்சீசுக்குப் பயணப்பட்டார்.

படைத்தவருக்குத் தெரியாதா நாம என்ன செய்கிறோம் என்று. ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படிச் செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று. கப்பல் உடைந்து போகும் நிலை ஏற்பட்டது

கப்பலில் இருந்தவர்கள் பயந்து போனார்கள்.

வேறென்ன பண்ணுவது….. அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் தெய்வத்தை நோக்கி வேண்டினார்கள். கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள்.

யோனாவோ கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றான்.

பிறகு கப்பலில் இருந்தவர்கள், “நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.

விதி விடாது என்பார்களே அதுபோல,  சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் யோனாவைப் பார்த்து , “இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது?  உன்னாலையா ? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்” என்று சொன்னார்.

மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் பயந்து, “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.

கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், “கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை. கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகிக் கொண்டேயிருந்தது.

அவர்கள் அதைக் கண்டு மேலும் பயந்து ஆண்டவரை நோக்கிக் கதறி,

“ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்.  குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது விருப்பத்திற்கு ஏற்ப இவ்வாறு செய்கிறீர்”   என்று சொல்லி வேண்டினார்கள்.

பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்.  கடல் கொந்தளிப்பும் அடங்கியது.

அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் பயந்தார்கள்.

ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.

யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டினார்.

“ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த நேரங்களில் மட்டும் நான் உம்மை நோக்கி வேண்டுகிறேன்.

நீர் என் வேண்டுதலை கேட்டீர். வாழ்க்கையின் பாதாளத்தில் இருந்தபொழுது உம்மைப் பார்த்துக் கதறினேன்.

என்னைக் காப்பாற்றினீர்.   இப்பொழுது நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்.

தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்து கொண்டது. நீர் அனுப்பிய அலை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. மூச்சுத் திணறும்படித் தண்ணீர் என்னை அழுத்துகிறது

என் உயிர் ஊசலடிக் கொண்டிருக்கிறது.  ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுகிறேன்.

நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். என்னைக் காப்பற்றும்” என்று வேண்டிக் கொண்டார்.

ஆண்டவர்  யோனாவை வயிற்றுக்குள் வைத்திருக்கும் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.

கடவுள் யோனாவைப் பார்த்து  “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை  அங்குள்ளோருக்குச் சொல்லு” என்றார்.

அப்படியே யோனா புறப்பட்டு ஆண்டவரது சொற்படி  நினிவேக்குச் சென்றார்.

நினிவே ஒரு மாபெரும் நகர்.

அதைக்கடக்க மூன்று நாட்கள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின்,

சத்தமாக, “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் கடவுள் சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, மனம் வருந்தி, எல்லாரும் விரதமிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.

இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்.

மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் அறிவிக்கச் செய்தான்.

“இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது…. எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது.   ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.

மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்.  தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கோபமும் தணியும். நமக்கு அழிவு வராது.”

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.  தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தப்பு செய்த மனிதர்களைக் கடவுள் ஒண்ணுமே செய்யவில்லை என்பதால்.

யோனா  கடவுளைப் பார்த்து  “ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படு முன்பு இதைத்தானே சொன்னேன்?  நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ளவர் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்,  பிறகு உம் மனத்தை மாற்றிக் கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும்.”

கோபமாக யோனா நகரைவிட்டு வெளியேறினார், நகருக்குக் கிழக்கே போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக்கொண்டு, நகருக்கு அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.

கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறு நாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.

கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. “வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது” என்று சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது கடவுள் யோனாவை பார்த்து, “ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வளவு கோபப்படுவது சரியா?” என்று கேட்டார். அதற்கு யோனா, “ஆம், சரிதான்.  செத்துப்போகும் அளவுக்கு கோபம் வருவது சரிதான்” என்று சொன்னார்.

ஆண்டவர்  யோனாவை பார்த்து  

“அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது.

நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவுமில்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே!

இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?” என்றார்.

யோனா கடவுளின் நல்லுள்ளத்தை உணர்ந்தார்.

நினிவே மக்கள்  தங்கள் தவறை உணர்ந்து மனம் மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர்.

கடவுளோ அவருக்கும் கருணை காட்டித் தம் இயல்பை வெளிப்படுத்தினார்.

நல்ல நெறிகளைக் கொண்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பதே படைத்த கடவுளுடைய விருப்பம்.

கடவுள் பார்க்க விரும்புவது  அழிவையல்ல….   மனமாற்றத்தையே….!

ம. பெஞ்சமின் ஹனிபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad