உலகத் தாய்மொழி தினம் – 2016
அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் இன ஒழிப்பு என்பது அதன் மொழி இலக்கியங்களின் அழிவு என்ற அளவுக்கு முக்கியமாக விளங்குகிறது..உலகப் புகழ்பெற்ற யாழ் நூலகம் தீக்கிரையானதும் ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்டால் புண்ணியம் என்ற மூட நம்பிக்கையைப் பரப்பி பல அறிய செய்திகளை ஆற்றோடு விட்டதும் இதன் அடிப்படையிலேயே . ஆகவேதான் தாய் மொழிக்குச் சிறு சறுக்கல் அல்லது இழுக்கு ஏற்பட்டாலும் மக்கள் கிளர்ந்தெழுந்து தம் மொழியினை இன்றுவரை காத்து வருகின்றனர். இன்றைக்கும் நடைபெற்றுவரும் ஈழப் போராட்டம், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வங்கப் போராட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒன்றிணைந்த அன்றைய பாகிஸ்தானில் உருது மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட, அங்கு வாழ்ந்து வந்த வங்க மொழியினர் ஒன்றிணைந்து போராடினர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட, அதனையும் மீறிப் போராடித் தோட்டாவிற்கு இரையான மாணவர்களின் நினைவாகவும் மற்றும் சில மொழிகள் அவற்றைப் பேசும் மக்கட்தொகை பல்லாயிரமாய் இருந்து ஏற்கனவே சில ஆயிரமாகச் சுருங்கிவிட்டதாலும், அவை சில நூறாக ஆகிவிடாமல் காப்பதற்காகவும் பிப் 21 தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐ.நா சபை 1999 ஆம் ஆண்டில் அறிவித்தது. அது இன்றளவும் உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
சொந்த மண்ணில் வாழ்பவர்களைவிட அந்நிய மண்ணில் வசிப்போர் தம் தாய் மொழியை முன்னெடுத்துச் செல்வதற்குச் சற்றுக் கூடுதலாக மெனக்கெடத்தான் வேண்டும். ஆதியிலே வந்த நம் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆங்காங்கே உள்ள தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டு நமது தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்வது நாம் அறிந்ததே . நாம் வசிக்கும் மினசோட்டா மாநிலத்திலும், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி பல நிகழ்ச்சிகளையும் நடத்தி, நடுங்கும் குளிரிலும் தமிழ்க் கங்கு அணையாமல் காத்து வருகின்றனர். இங்கு வாழும் தமிழர்களை மொழியால் ஒன்றுகூடிய அமைப்பாக்கிடத் தமிழ்சங்கமும், எழுத, படிக்க, பேச மற்றும் இலக்கணம் கற்க என்று தமிழை முறையாகவும், முழுமையாகவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காக தமிழ்ப் பள்ளியும் தோன்றின. இந்தப் பள்ளி 12 மாணவ மாணவிகளைக் கொண்டு 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றைக்கு 203 மாணவ மாணவிகளாக வளர்ச்சி பெற்று, 9 நிலைகளுடன் ,62 ஆசிரியர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் உயர்தரக் கல்விக்கான அங்கீகாரம் (Accredited by AdvancED ) பெற்று ஒரு முழுமையான பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் உலகத் தாய்மொழி தினம் பிப் 20 அன்று ஹாப்கின்ஸ் இளநிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நிலை இரண்டு வரை படிப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு “என் குடும்பம்” அல்லது ”நேர்மை”. நிலை மூன்று முதல் ஐந்து வரை படிப்பவர்களுக்கு “ஒழுக்கத்தின் உயர்வு” அல்லது ”உல்லாசப் பயணம்” என்ற தலைப்புகளும், நிலை ஆறுக்கு மேல் படிப்பவர்களுக்கு “தன்னம்பிக்கை” அல்லது ”தமிழர் பண்பாடு” என்ற தலைப்புகளும் கொடுக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பேசலாம் என்ற விதிமுறையுடன் பேச்சுப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அனுபவமும் தகுதியும் நிறைந்த நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுப் போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவை மட்டுமின்றி, பெரியவர்களுக்குக் கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டிக்கு, “தற்காலத் தமிழிலக்கியம்” அல்லது ”திரைகடலோடியும் தமிழ்ப்பணி” என்ற இரண்டு தலைப்பில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறும், கவிதைப் போட்டிக்கு “காணக் கண்டேன் கன்னித்தமிழ் உலகாள்வதாய்” அல்லது “கேட்கும் ஒலியிலெல்லாம் கீதமாய்த் தேன்தமிழ்” என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கவிதை வரைய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளிலும் பலர் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க, நடுவர் குழு சிறந்த இரண்டு கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.
மாணவர்களுக்கான போட்டிகளில், இவ்வருடம் மொத்தமாக 42 மாணவ மாணவிகள் பங்கேற்றது சிறப்பிற்குரியது. ஒவ்வொரு வருடமும் தரத்திலும் எண்ணிக்கையிலும் போட்டியாளர்கள் வளர்ந்து வருவது நமக்குச் சொல்லாமல் சொல்லுவது ” ஆதியில் வந்த மொழி, பாதியில் போகாது” என்பதைத்தான்.
புதுப்பேட்டைத் திரைப்படத்தில் வரும் ஒரு வசனம், “அம்மான்னாப் புடிக்குமா குமாரு? அம்மான்னா யாருக்குதான் புடிக்காது, நாய்க்குக் கூடத்தான் புடிக்கும்” என்று, இவ்வசனம் அம்மாவிற்கு மட்டுமல்ல, அனைத்துத் தாய்மொழிகளுக்கும் பொருந்தும்.
எப்பொழுதும்போல் இப்பொழுதும் இந்நிகழ்ச்சியைச்சிறப்பாக ஏற்பாடு செய்த மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மற்றும் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும் உடனுழைத்த தன்னார்வலர்களுக்கும் மாணவ மாணவிகளைத் தயார்ப்படுத்திய பெற்றோர்களுக்கும் மற்றும் பங்குபெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-விஜய் பக்கிரி