கவித்துளிகள்
எங்கு கற்றாயடி
பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி
பருவ நினைவுகளைப் பயிராக்கி
ஆனந்தப் பூங்காற்றாய் வீசும் வித்தையை
எங்கு கற்றாயடி !
திருமணம் எனும் நன்னாளில்
ஆன்றோர் பலர் முன்னிருக்க
தன் பெயரும் மாறிப்போக
கும்பிட்ட குலசாமியும் தொலைந்துபோக
தோழிகள் வாழ்த்துக்களும் அட்சதைகளாகிப்போக
மெளனமே மொழியாகி நிற்க
எங்கு கற்றாயடி !
உன் ஒற்றைப் புன்னகையால்
புறம்பேசுவோரை முறத்தால்
புறந்தள்ள எங்கு படித்தாயோடி!
நீரின்றி அமையாது இவ்வுலகு!
நீயின்றி அசையாது இவ்வுலகு!
பெண்ணே !!! நீ தாயுமானவளே !!!
=============================================
உயிர்க்கொல்லி!
பிறப்பையே வெறுக்க வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
பாசம்!
பிறப்பையே அசர வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
அன்பு!
பிறப்பையே அர்த்தமுள்ளதாக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
பிரிவு!
பிறப்பையே உரைய வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
காதல்!
பிறப்பையே அதிர வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
நேசம் !
பிறப்பினை உலகறிய வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
பற்று!
பிறப்பையே உலுக்க வைக்கும்
ஒரே உயிர்க்கொல்லி
இறப்பு!!!
=============================================
முத்தம்
காதல் கடனில்
வட்டியும் முதலும்
மொத்தமாய் – அவளின்
முத்தம்!
காதல் கடலில்
முத்தும் பவளமும்
வைரமுமாய் – அவளின்
முத்தம்!
காதல் படகில்
துடுப்பும் உடுப்பும்
இடுப்புமாய் – அவளின்
முத்தம்!
காதல் வானில்
மின்னலும் இடியும்
மழையுமாய் – அவளின்
முத்தம்!
- உமையாள்