தனிமை தரும் சமூகவலயமா?
சமூகவலயம் தனிமை தருமா? இந்தக் கட்டுரையின் தலைப்பே சரியாகப் படவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். வாருங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு அலசுவோம்.
சுமார் பத்து வருடங்களின் முன்னர் நியுயார்க் நகரத்திற்கு அருகாமையில் கனக்டிக்கட் மாநிலத்தின் கீரீன்விச் எனப்படும் ஒரு நகரத்தில் நடந்த சம்பவம். கீரீன்விச் அமெரிக்காவிலேயே மிகவும் வசதி மிகுந்த மத்திய அத்திலாந்திக் சமுத்திரக் கடற்கரையோர நகர் எனவும் கூறிக்கொள்ளலாம்.
இந்த நகரில் ஒரு சம்பவம் யாவரையும் பேச வைத்தது. பாரிய சொத்துடைய செல்வந்தப் பெண்மணி ஒருவர் 83 வயதில் மிகப் பெரிய வீட்டிலே இறந்து ஒரு வாரத்திற்கு மேல் அயலவர்க்கே தெரியாது போய் விட்டதாம். அவர் தாமாகவே அவ்விடம் வாழ்ந்து வந்ததாக உள்ளூர் பத்திரிகை தெரிவித்தது.
நாம் பிச்சைக்காரர் தெருவில் குளிரில் தனித்து இறப்பதைப் பற்றிப் பேச முனைவதில்லை ஆயினும் இதைப்போன்ற செய்திகளும் இந்நாட்டில் பல செல்வந்த நகர்ப் பகுதிகளிலும் நடைபெறுகிறதாம். இதைப் பற்றி மின்வலய கதைகள் பலவும் பலவருடங்களாகப் பரவியவாறுள்ளன. இது எப்படித்தான் நடந்திருக்கலாம் இந்தப் பெண்மணி அவரது குடும்பத்தினரும் மிகவும் பிரபலமான ஆட்கள் ஆச்சே, யாருக்காவது இவரைப் போய்ப் பார்த்துக் கொள்ள வசதிதான் இல்லையாயென பல வரையான கேள்விகளும் பதில்களையும் பலரும் பரிமாறிக் கொண்டனர்.
ஆயினும் இந்தக் கரிசனை யாவற்றையும் நாம் பார்க்கும் போது எமது தற்கால வாழ்க்கை முறை எவ்வாறு தனிமையான அரிசியல்லாக் கோதான நெல்மணி போன்ற வாழ்க்கை தனை வாழுகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாகலாம். எம்மில் பலரும் கேட்டால் நேரடி ஒன்றுகூடலிற்கு நேரமில்லையென்போம். வெளிப்புறத்தில் யாவற்றையும் சர்வ சாதாரணமாகக் காட்டிக்கொள்வோம், ஆயினும் தற்கால இலத்திரனியல் யுக உள் வாழ்க்கையோ தனிமையை ஆட்கொள்ளும் தவிப்பானதொன்றாகிவிடுகிறது என்று சொல்லுவதையும் மறுக்க முடியாது.
சமூக தொடர்புகளும் அவற்றின் உபயோகத் தரங்களும்
இன்று நியூயோர்க், சிக்காக்கோ, சென்னை, இலண்டன், மினியாப்பொலிஸ், லாஸ் ஆஞ்சலீஸ் எதுவாக இருக்கட்டுமே நாம் தற்காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களே வாழ்க்கை என்று மாறியுள்ளோம். அடுக்களை என்றால் என்ன, படுக்கையறையென்றால் என்ன எமது வாழ்க்கைத் துணை, வாரிசுகள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் பேஸ்புக்,கூகிள் பிளஸ்,டவீட்டர் எம்மைத் தொடருகின்றன. மின்னியல் மென்பொருள்களினால் உருவாக்கப்பட்ட நகலான பரந்த ஆயினும் ஆழமற்ற தொடர்புகளை உண்டு பண்ணும் ஃபேஸ்புக் போன்ற சமுகவலைகளை உண்மை நட்புகள், உறவுகள் என நம்புபவர்கள் பலர்.
பல மில்லியன் மக்களிடையே நகர வாழ்வில் நிர்பந்திக்க எம்மில் பலரும் சமூகரீதியல் மிகத்தனிமையான வாழ்க்கையை எமது முதியோர் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாதவொன்று. மென்பொருள் சமூகவலையானது 20 ஆண்டுகளிலும் இளையது, மின்னஞ்சல் தொடர்பு என்று எடுத்துக் கொண்டாலும் அது பொது மக்களைப் பொறுத்தளவில் 30 ஆண்டுகளிலும் குறைந்தவொன்றே எனினும் நாம் யாவரும் சுடும் சுடரை நோக்கிப் பறக்கும் பூச்சிகள் போல தெரிந்தும் தெரியாமலும் அசல் மனிதத்தொடர்பு வாழ்விலிருந்து விலகி வர்த்தகத்தை மையமாகக் கொண்ட மென்பொருள் சமூகவலையை நோக்கிச் சென்றவாறேயுள்ளோம்.
மின்இணையம் ஆக்கியோர் இலட்சியம்
ஆய்வாளர்களால் ஆரம்பிக்கபட்ட மின்இணையம் சுதந்திரத் தகவல் பரிமாற்றத்தை நோக்கியமைந்தது. அதன் பொழுது முழுஉலகமே எமது கிராமத்து முற்சந்தியாக்குவோம் என்றெல்லாம் இலட்சியவாதிகள் முழங்கினார்கள். ஆயினும் இந்த இலட்சியங்களை எல்லாம் மெதுவாக வர்த்தக விளம்பரத்தார் அபகரித்து இன்று நாம் யாவரும் சிறு தனிமை இலத்திரனியல் வட்டாரங்களில், காம்பவுண்ட்களில் தள்ளப்பட்டு அதே சமயம் நீண்ட மின்இணையச் சாலைகளுக்குத் தகவல் பட்டியல்களையும் தரப்பட்டுள்ளோம்.
இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகள் ஆழமான, பாசமான, மனிதத்துவத்திற்கே முக்கியம் தரும் ஒருவர் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்தறிந்து இயங்கும் அசலான சொந்தங்களை விட்டு, இமோட்டிக்கான்கள் கொண்ட நகலான உணர்வுகளிற்குப் பூட்டுப் போட்ட இணைவுகளையே பரிவிளைவுகளாத் தந்துள்ளன.
உங்கள் தனிமை எங்கள் வருமானம்
இந்தத் தனிமைதரும் பேஸ் புக் சமூகவலயத்தை எடுத்துப் பார்த்தால் ஏறத்தாழ 1.59 பில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்கள், விளம்பர ரீதியில் 2011இல் 17.08 பில்லியன் டொலர் ஆதாயத்தைத் தந்தனராம். இணையத்தில் இணைந்து பலபேர் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளவிரும்பும் ஒவ்வொருவரும் ஒட்டு மொத்தத்தில் தனிமைதனைப் பெரும்பாலும் உணர்ந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் சமூகவலைக்கு
ஏறத் தாழ 11 டொலர் வருமானத்தைத் தொடர்ந்து தந்தவாறுள்ளார்கள். இந்தச் சமூகவலை தனிமையிலும் பேரும், பெருமையென்பதே முக்கியம் எனும் புதிய ரக விருப்பங்கள் Likes எனும் மென்பொருள் அப்பிப்பராயத்தை தூண்டுகோலாகப் பாவிக்கிறது. இந்த விருப்பங்கள் என்பது அசல் மனித சமூகரீதியில் செல்லாது எனினும் பேஸ்புக் இதை தனது வாடிக்கையளர்க்கு வெற்றகரமாக புகட்டி வருகிறது.
பல பில்லியன் இணைப்புக்களைக் கொண்ட சமூகவலயமாக பேஸ்புக் இருப்பினும் தனிமைக்கு மாற்றுப் பொருளாக மினவலயத்தில் ஆழமற்ற தொடர்புகளில் போலி அந்தஸ்த்தையும், அதே சமயம் சிறிதளவு வருமானத்தையும் ஆறுதல் பரிசாகத் தருகிறது.
தாபகரும் அவர்களது தாபன கொள்கைகளும்
ஒவ்வொரு வர்த்த தாபனங்களையும் அவற்றின் குணாதியசங்களைக் கொண்டு அதன் தாபகர்கள் தமது வாழ்க்கையில், தமது சுழலில் காணப்பட்ட தடைகளை, குறைகளை நிவர்த்திச் செய்து கொள்ள முயற்சித்தார்கள் என்பதிலிருந்து அறியலாம் என்கிறது மனோத்துவ அறிவியல். தற்போதைய பிரபல்யத்திற்குப் பின்னால் பேஸ்புக் தோற்றத்தைப் பார்க்கையில் சில நடைமுறைத் தடயங்கள் ஆதாரங்கள் வெளிவருகின்றன என்கிறது அந்த வர்த்தகத்தைப் பற்றிய ஆவணப்படம் . அதாவது தாபகர் மார்க் ஸக்கபேர்க் தனது பல்கலைக்கழகத் தனிமையைப் போக்க, தோழர்கள், தோழியரை நேரடியாக கலந்து பேசுவதில் நாட்டம் இல்லாமையால் ஒரு நேர்மறைமுகமான சமூகவலயத்தை உண்டு பண்ணிக்கொண்டார் என்கிறது.
பேஸ்புக் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கள்
பேஸ்புக்கை நாடும் பலரும் இதுமாதிரி இலகுவாக மனிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பதாக நுகர்வோர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மை என்னவென்றால் நீங்கள் பழைய பள்ளி நண்பன், நண்பியுடன் பள்ளியில் படிக்கும் போதே பரிச்சயப்படுத்திக் கொள்ளவேயில்லை என்றால் 10-20 வருடங்களில் அதை மீண்டும் முயற்சிப்பது வெற்றியாகுமா என்பது கேள்விக்குறியே. இதை பேஸ்புக் நிவர்த்தி செய்யுமா என்று பார்த்தால் சாத்தியமில்லை என்றே தகவல் தரவுகளும், ஏன் பொதுவான நமது ஊகிப்புமே தெரிவிக்கும்.
மின்வலய வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட சமூகவலைச் சாதகங்களும்
நாம் இலத்திரனியல் தகவல் தொடர்பு பரிணாமத்தையும், மின்வலய இணைய வளர்ச்சிதனையையும் வரலாற்று ரீதியில் எடுத்துப்பார்த்தால் பேஸ்புக் போன்ற சமூகவலயங்கள் சனப்பெருக்கம் மிகுந்த நகர்களில் வேலை,போக்குவரத்துப் போன்றவற்றில் நீண்ட நேரம் செலவிடுவதால், தனிமை அதிகரித்துப் போனதாக தெரிகிறது. அது உடனே நட்பைத்தேடவும், துணை தேடவும், பொழுதுபோக்கு ஒன்று கூடல்களை உருவாக்கவும் உதவியது. எனவே இது பல்கலைக்கழக மாணவர் மட்டுமல்லாது இளையவர், முதியவர் என பலருக்கும் உடன் தொடர்புகளை ஏற்படுத்தும் சாதனமாக அமைந்தது. எனவே இது காற்றுத் தீபோல நகரத்திற்கும், நாட்டுபுறத்திற்கும் பரவியது. மின்இணைய வசதி தொலைத் தொடர்புள்ள நாட்டுப்புற வாசிகளுக்கும் அவர்கள் நகர்ப்புறத்தில் தொடர்புகளை உருவாக்கவும், துணை தேடவும், ஒரு குழுவில் பங்கு பெறவும் சமூகவலயமாகவும் பின்னணியில் உருவாகியது.
1950களில் அமெரிக்க வீடுகளில் 10 சதவீதமானவர்களே தனித்து வாழ்ந்தனர். எனினும் 2007ம் ஆண்டில் 27 சதவீதமான அமெரிக்க வீடுகளில் தனிமையான வாழ்க்கை நடாத்தினர். தனித்து வாழ்வதும் தனிமையை வாழ்க்கையில் எதிர்கொள்வதும் வித்தியாசமான விடயங்கள். நீண்டகாலத் தனிமை சந்தோசமற்றது இது மனதைப் பலதரப்பட்ட சூழல்களுக்கும் தள்ளக் கூடியதொன்று.
மனிதர்கள் அடிப்படையில் சமூக விலங்குகள். எனவே வாழ்க்கையில் சகபாடிகள் தொடர்பை, உறவை நோக்குவது இயல்பு. நடைமுறையில் இப்பேர்ப்பட்ட தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள நாழிகள் பல தேவை. ஆயினும் இயந்திர வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் நகரவாழ்க்கையில் மனித தொடர்புகள் பலதரப்பட்டவை. இவையாவும் பயனுள்ளவையாகவே இருப்பதும் குறைவு. எனவே நகர் வாசிகள் பெரும்பாலும் ஆழமற்ற, உபயோகமற்ற உறவுகளை எதிர் நோக்கவும் கூடும். எனவே இதில் இருந்து குறைந்த நேரம் செலவு செய்து கூடிய தொடர்புகள் பெறமுடியுமானால் அது நகரவாசியின் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு சீட்டிற்குச் சமன்.
சமூக பற்றாக்குறையும் பேஸ் புக்கின் ஆரம்பகாலமும்
பேஸ்புக் பல்கலைக்கழக விடுதிகளில் ஆரம்பித்து, பி்ன்னர் அதன் பாவனையாளாராகிய பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பட்டணங்களில் வேலை தேடும் போது அவர்களுடனும் நகரவாசிகளைப் பிரவேசித்தது. இந்த நகரவாசிகளுக்கு வேலை தேடலில் இருந்து, வாடகை இடம் தேடல், நட்புத் தேடல் எனப் பல வகைத் தொடர்பு பற்றாக்குறைகள் இருந்தன. பெரும் நகரங்களில் மிகச்சிறிய வாடகை அறைகளில் பக்கத்து இடத்தில் யார் உள்ளனர் என்று கூட ஒருவருக்கு ஒருவர் தெரியாத சூழ்நிலை. மேலும் மிகவும் குறுகிய 300 சதுர அடிகளுக்கும் குறைந்த இடத்தில் இருக்க முடியாமல் பலதரப்பட்டவரும் வெளியே தமது நேரத்தைச் செலவிட்டனர். வேலைக்குப் பின்னர் ஒன்றுகூடல் குழுக்கள் அதிகரித்துக் காணப்பட்டன, என்னும் இதற்காகச் செலவிடும் நேரமும், பணமும் தொடர்ந்து நிலைக்க முடியாத சூழலையும் பல புதிய நகரவாசிகள் உணர்ந்தனர்.
இந்த பெரும் நகர சமூகப் பற்றாக்குறை பலவிதத்திலும் அபாயங்களையும் உண்டு பண்ணக் கூடிய விடயம். அப்போது நியுயார்க் நகர் மனோத்துவ நிபுணர்கள், சமூகவியலாளர்கள் இந்த நகரங்களில் எவ்வளவு தூரத்திற்கு தனிமை ஒவ்வெருவரையும் ஆட்கொள்கிறது என்பதையும் அதனால் ஏற்படும் சுகாதார, குற்றவியல் அதிகரிப்புக்களையும் அவதானித்தனர். பெருநகர் வாழ்க்கையில் நடமாட்டத்தில் அதிகதொகையினர் காணப்படுகினும் அவ்விடம் வாழ்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் தனிமையால் அல்லல் படுகின்றனர் இதன் பரிவிளைவுகள் நகரவாழ்க்கைக்கே பாதகமானது என்பதும் ஒரு கண்ணோட்டமாகும்.
ஆளுக்காள் உடனடித் தொடர்பு, அதே சமயம் அமோகமான விதவிதமான தொடர்பு வசதிகள் காணப்படுதல் போன்ற தகவல் தொழிநுட்பங்கள் புதிதாக அதிகரித்தவாறுள்ளன. எனினும் நாம் வரலாற்று ரீதியில் எடுத்துப் பார்த்தால் வாழ்வில் நாம் முன்பிலும் அதிகமாக சமூகத்தில் இருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதும் ஒரு அடிப்படை அவதானிப்பேயாகும்.
நிச்சயமாக நமது வாழ்வின் வினோத முரண்பாடு என்னவெனில் தொடர்புவசதிகள் அதிகரிப்பினும் தனிமையே தலையாட்டியவாறுள்ளது. பல்வேறு மின்இணைய சமூகவலயங்கள் உருவாக்கப்படினும், புதிய புதிய வகைகளில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தும் நுட்பங்கள் இருப்பினும், நேரம் போதாமையாலும், எமக்கு ஏற்கனவே மங்கிவரும் கவனத் தன்மை பலவகையில் தெறித்துப்போவதால் நாம் மென்மேலும் அந்நியராகவே மாறிவாருகிறோம் எனலாம்.
தனிமை பற்றிய பேஸ்புக்கின் எதிர்வாதாடல்
எனினும் ஃபேஸ்புக் தாபன ஆராய்ச்சியாளர்கள் தனித்துப்போனவர்கள் சூழ்நிலைகள் அவர்கள் மின்தள சமூகவலயங்களிற்கு வருமுன்னரே காணப்பட்டிருக்கலாம். அவர்கள் மனப்பாங்கு,குணாதிசயங்கள் எவ்வாறு சூழலில் காணப்படுகிறதோ அவர்கள் மனித தொடர்புகளில் சாதகமான மாற்றங்களை, முயற்சிகளைக் கொண்டு வராவிட்டால், அவர்கள் இயற்கைச் சுபாவமே மின்இணயத்திலும் அவர்களைத் தொடரலாம் என்கிறார்கள். அதனாலேயே தனிமையைத் தொடர்ந்து அனுபவிக்கின்றனர் என்றும் ஆய்வுத் தரவுகளுடன் வாதாடுகின்றனர்.
உங்கள் அந்தரங்கங்களை நீ்ங்கள் பகிரக்கூடியவர்கள்
நாம் பேஸ்புக்கின் போட்டி சமூகவலயங்களாகிய கூகிள்பிளஸ், மற்றும் டவீட்டரை எடுத்துப் பார்த்தாலும் அவர்களும் தம்மை பேஸ்புக்கில் இருந்து வித்தியாசமாக்க் காட்டிக்கொள்ள சில யுக்திகளைப் பாவிப்பர். உதாரணமாக கூகிள் “உங்கள் உண்மையான நண்பர்கள் தாம் நீங்கள் உங்கள் அந்தரங்க விடயங்களைப் பகிரக்கூடியவர்கள்” என்று இலேசாகச் சுட்டிக்காட்டி வரவேற்கின்றன. ஆயினும் மின்வலய சமூகத்தில் அந்தரங்கம் என்பது வர்த்தகர் மத்தியில் பகிரங்கமான விடயம் என்பது யாவரும் அறிந்த விடயம். மேலும் பேஸ்புக் ஆழமானதோ இல்லையோ தம் வாடிக்கையாளர்களால் உருவாக்கப்பட்ட தொடர்புகளில் தொடர்ந்து சமூகவலை பின்னணி உடன் பகிர்தல் யுக்திகளால் உறவுகளில் இடைநடுவில் நிற்கிறது. இதனால் எமது உண்மை உறவுகள் கணித்துக்கையாளும் மென்பொருள் யுக்திகளால் மேன்மேலும் வெளித்தள்ளப்பட்டு ஆழமற்ற தொடர்பகளாக மாற்றி தொடர்ந்தும் எம்மைத் தனிமையாக்கி அதே சமயம் பேஸ்புக்கையே நாடவைக்கிறது என்ற அபிப்பிராயத்தையும் மற்ற சமூகவலயங்கள் வாடிக்கையாளருக்கு எடுத்துக் காட்ட முயல்கின்றன. ஆயினும் மின்வலய சமூகவலயங்கள் யாவுமே பல்வேறு கணனியுக்தி வழிமுறைகளை (Algorithms)பாவித்து வாடிக்கையாளர்கள் தொடர்புகளை வைத்து விளம்பர ஆதாயம் பெறமுயல்கின்றன என்பதே அடிப்படை உண்மை.
தனிமையின் தன்மை
எமது தற்கால அதிவேக நடைமுறை வாழ்க்கையில் தனித்துவாழுதலுக்கும், தனிமை எனும் மனோத்துவ தன்மையை அடைதலுக்கும் வேறுபாடுகளை அறிவோம். தனிமை சில சமயம் அருமையானது. கும்பல் கும்மாளம் சில சமயம் தொந்தரவாகவும் இருக்கலாம். பெருகிவரும் பலதரப்பட்ட சமூகவியல்,மனோதத்துவ ஆராய்ச்சிகளில் இருந்து வெளிப்படையாவது என்னவென்றால் தனிமை என்பது வெளிப்புறமாக இருக்கும் காரணிகளினால் உருவாக்கப்பட்டதொன்றல்ல. இது மனதிற்குள் உருவாகும் ஒரு தன்மை. இது தற்காலகமானதாகவும் இருக்கலாம் அதே சமயம் மரபணுத்தொடர்புகளால் குடும்பரீதியில் உள்ள நீண்டகாலக் குணாதிசயமாகவும் இருக்கலாம்.
எனவே தனிமையென்பது பற்றி ஆராய்ச்சிகளைப் பொறுத்தளவில் சற்று சிரமமான, அதேசமயம் வைத்தியமுறையில் இந்தத் தன்மையை அவதானித்துக் கண்டு பிடிப்பதும் இலேசான விடயமும் அல்ல.
அமெரிக்காவின் தனிமை
மேலும் தமிழரின் தாய் நாடுகளில் துரித நகரவாழ்க்கைகள் எவ்வாறு மக்களைத் தனிமைப் படுத்துகின்றன என்பதற்கான புள்ளிவிபரவியல் கிடைக்காத பட்சத்திலும் நாம் மேலத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களிற்கு இந்த நாட்டுக்கணிப்புக்களை எடுத்துக் காட்டாக உபயோகிக்கலாம். பொதுவாக தொழில்நுட்பரீதியில் வளர்ந்த நாடுகள் யாவற்றிலும் தனிமையினால் வாடல் தொற்றுநோய் போன்று பரவலாகிப் பெரும் சமூகத் தாக்கல்களை உண்டு பண்ணுகிறது என மனோத்துவ நிபுணர்கள்,வைத்தியர்கள்,சிகிச்சைத் தாதிமார்கள் மற்றும் மனோத்துவ மருந்து கொள்வனவு அறிக்கைகளின் மூலம் பகிரங்கமாகத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனாலேயே தற்கொலைகளும் அதிகரித்தவாறே உள்ளன என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன. அமெரிக்க நாட்டில் இதுவரை தொகுக்கப்பட்ட ஆராய்ச்சித் தரவுகளில் இருந்து வெளியானது என்னவெனில் ஏறத்தாழ 20 சத வீதமான மக்கள் தமது வாழ்க்கையில் தனிமையால் வாடி வதங்குகிறார்கள் என்பதே. இது ஏறத்தாழ 60 மில்லியன் குடிமக்கள் சனத்தொகையைச் சாரும்.
அமெரிக்காவில் ஏறத்தாழ 25 சதவிதமான மக்கள் தமக்கென அதிமுக்கியமான விடயங்களைப் பேசிக் கொள்ளவோ, இல்லை வாழ்க்கைத் துன்பங்களைப் பகிரவோ யாருமே இல்லை என்று வருந்துகிறார்களாம். மேலும் இதைத்தவிர தமக்கென நம்பிப் பேசக்கூடியவர்கள் தொகையும் 20 சதவிதமான மக்களுக்கு ஒரே ஒரு நபராக மட்டுமே தொடர்ந்தும் காணப்படுகின்றதாம்.
இந்தப் புள்ளிவிபரங்கள் எவ்வளவுக்கு அதிவேக தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை ஒன்று கூடிய கிராமிய சமூகவாழ்க்கையில் இருந்து வெகுவாக நாம் அகன்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. மேலும் அவனவனிற்கென எவ்வாறு பொருளாதார,வேலைவாய்ப்புப் போட்டிகள் எமது சமூகத் தொடர்புகள் தொடர்ந்தும் தகர்ந்து,தெறித்து நொறுக்கிவாறுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது எனலாம். இது மனித இனத்தின் 200,000 ஆண்டு உயிர்வாழ்விற்கே அத்திவாரமாகிய சமூக ஒத்துழைப்பிற்கே இது முரணான விடயம்.
தனிக்குடி தனிமையைத் தழுவ வைக்குமா?
இன்று வடஅமெரிக்காவிலும் சரி, தமிழர் தாயகமாகிய இந்துசமுத்திர நகரங்களிலும் சரி தனிமையானது பல மார்க்கங்களிலும் எம்மை ஊடுருவுகிறது. வாழ்க்கையில் கைநிறையச் சம்பாதித்தல், இதானால் உருவாக்கப்பட்ட தனிக்குடிதனம் போன்றவற்றினால் ஒரு பக்கம் தனியுரிமை/privacy உண்டு அதன் மறுபக்கம் தனிமையும் அதிகரிக்கிறது. தமிழர்கள் வாழ்க்கை ஒருகாலத்தில் கூட்டுக்குடும்பங்களாக பல தலைமுறைகளையும் சேர்த்துக் காணப்பட்டது. பாலர் பாடப் புத்தங்களிலேயே ஏறத்தாழ 30 ஆண்டுகள் குடும்பம் பாட்டி,பாட்டா யாவரையும் கொண்டு காணப்பட்டது. இன்று அது அம்மா, அப்பா, குழந்தைகள் மாத்திரமே.
கூட்டுக்குடும்ப வாழிவினில் தனிமையென்பது எம்மக்கள் காதலன்,காதலி விடுபடல் காவியங்களிலும், அகராதியிலும் இருந்து தான் அறிந்து கொள்ளலாம். ஆனால் இன்றோ தனிமையென்பது சாதாரண உள் மனப்பாங்காக பலருக்கும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விடயமாகிவிட்டது.
அமெரிக்க தனித்துவமும் சமூகவியல் விளைவுகளும்
அமெரிக்க நாட்டு பல்லின மக்களின் குழுமியமே ஒரு சமுகவியல் ஆய்வுகூடம் என்றே நாம் கூறிக்கொள்ளலாம். வட அமெரிக்கப் பூர்வீக வாசிகள் கூட்டுக்குடும்பதிற்குரியவர்கள். அவர்கள் பல அல்லல்களின் பின்னரும் தமது குடியுரிமைப்பகுதிகளில் மூதாதையர்,சமூகத்தில் பெரியவர் கூடிய குடும்பமுறைகளைப் பேணியவாறேயுள்ளனர்.
எனினும் சனப்பெருக்கம் கூடிய ஐரோப்பிய வருகையாளர்கள், வட அமெரிக்க மண்ணில் பணம்,பொன்,காணி பூமி கொள்ளுதல் போன்றவற்றினால் மென்மேலும் தமது சமூக உறவுதொடர்புகளை தமது வருமானம் அதிகரிக்கத் தள்ளிவைக்க ஆரம்பித்தனர். இந்த முறைப்பாடு முன்னோடிகள் Pioneers கால கட்டத்தில் அவர்கள் எதிர் கொண்ட சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் சற்று ஒத்திவைப்பினும், பிற்காலத்தில் அவர்கள் ஓரிடத்தில் குடிமனை அமைத்த பின் சுயநலவாதங்கள் அதிகரித்தன.
வட அமெரிக்காவில் பிரித்தானிய பிரிவு யுத்தத்திலும், பிற்காலத்தில் முதலாம் உலகயுத்தத்திலும் ஐரோப்பிய இராச்சியங்கள் அமெரிக்கரைப் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. இதனால் உலகிற்கு தனித்து வாழ்ந்து காட்டுவது என்பது அமெரிக்கவின் அடிப்படை இலட்சியமாகியது.
இரண்டாம் உலக மகாயுத்ததின் போது தன் காலில் நிற்பதே பெருமை, தன் கையே தனக்குத் துணை, மாற்றான் உதவி நமக்குத் தேவையில்லை போன்ற கொள்கைகளைப் பின் பற்றி சமூகங்கள் வளர்ந்தன. கோயில், தேவாலயம், சிறு விவசாயம், ஊர் வங்கி, ஊர்க் கடைகள், ஊர் தபாற்காரர், உற்றார், உறவினர், பாடசாலை, இராணவ இளைபாறிகள் சார்ந்த சமூகம் என்பதெல்லாம் உபயோகப்படுத்தப் படாததால் காலகாலத்தில் அழிந்து போகத் தொடங்கின. இன்று குடும்பப் பிளவுகள், விவாகரத்து, தனித்து வாழல் என்று பலவித பிரதிவிளைவுகளையும் அமெரிக்கர் ஏற்க வேண்டிய சூழலில் உள்ளது.
இதை மேலும் வெந்த புண்ணில் வேல்புகுவது போல நகரவாசிகளின் தனிமைக்கு உபகாரமாக ஆதாயத்தை நோக்கி அமைக்கப்பட்ட பேஸ்புக் போன்ற மின்தள சமூகவலயங்கள் தோன்றின. இவை ஆழமற்ற தொடர்புகளைத் தொடர்ந்து பாரமரித்தும், பன்மடங்காக அதிகரித்தும், தம்மையே வாடிக்கையாளர்களை நாடவைத்து தனிமையையே தம் வருமானத்திற்கான மூலப் பொருளாகாப் பாவிக்கின்றனர்.
சமுதாயத்தில் இளையவரிடையே மனித சமூகத்தில், பொதுவிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ளல் போன்ற சமூக ஒழுக்கமுறைகள் தொடர்ந்தும் வீழ்ந்தவாறுள்ளன. மேலும் இளையதலைமுறையினர் பள்ளியில் சரி, விளையாட்டுகளிலும் சரி ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்தல், ஒன்று கூடி குழுவாக வேற்றிகொள்ளுதல், தோல்வியில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுதல் போன்ற சுயாதீன மனிதவியல்புகள் குன்றியே காணப்படுகின்றனர்.
அதே சமயம் விருப்பு(Likes) எனும் புதிய செயற்கை சமூகவியல் தேர்வு முறைகளைத் தமது வாழ்க்கையின் அடிப்படையாக உபயோகித்துக் கொள்கின்றனர். இது தமிழ் சான்றோர் அறிவுரைகளுக்கும் அப்பால் சுயநலவாதிகளை உருவாக்கி சமூகத்திற்குப் பயனின்மையை வளர்க்கிறது எனலாம்.
நேரடியுறவுகளே எம்மை நிலைகொள்ள வைப்பன
மனிதவினம் ஒருவருடன் ஒருவர் நேரடியாக அவர் முகம், உடல் அசைவு பாவனையறிந்து, உரையாடல்கள், சமிஞ்சைகள் மூலமும் மேற்கொள்ளும் தொடர்புகள் ஆழமானவை. அவை தாம் சமுதாயத்தை நிலைக்க வைக்கும் உந்துகோல்கள்.
மின்னியல் நூற்றாண்டில் வாழும் தமிழர்கள், நாம் எமது மனித உறவுகளை உண்டு பண்ணல் என்ற சுயாதினத்தை சிறிது, சிறிதாக இழந்தோமேயானால் அதை நிவர்த்தி செய்ய புதிய பேஸ்புக் போன்ற மின்வலய செயற்கைப் பரிணாம வளர்ச்சிகள் வரலாம். அவையாவும் மனித சமூகத்திற்கு சமத்துவமான ஆதாயத்தைத் தருமா என்பது கேள்விக்குறியான விடயமே. மேலும் சென்ற 20 வருட தொழில்நுட்பங்கள் எமது தற்போதைய சமுதாயமும், எமது இளம் சந்ததிகளும் சனப்பெருக்கம் அதிகரித்தாலும், மனத்தால் பல மடங்கு தூரத்தில் உள்ளவராகவே மாற்றியுள்ளது. மின்வலய சமூகவலயங்களே உண்மை மனித உறவுகள் என்று நம்பும் எம்மில் பலர் தட்டியெழும்பும் வரை எமது வருங்காலம் முதியவர்களும் சரி, இளையவர்களும் சரி தனிமையையே தரிப்பிடமாகத் தழுவ நேரலாம்.
– யோகி அருமைநாயகம்
உச்சாந்துணை
- Yoram Bachrach et.al (2012), “Personality and Patterns of Facebook Usage”, WebSci ’12 Proceedings of the 4th Annual ACM Web Science Conference
- Ryan, T and Xenos, S (2011), ‘Who uses Facebook? An investigation into the relationship between the Big Five, shyness, narcissism, loneliness, and Facebook usage’, Computers in Human Behavior, vol. 27, no. 5, pp. 1658-1664.
- Mauss, IB, Tamir M, Anderson CL, Savino NS. (2011). Can seeking happiness make people unhappy? Paradoxical effects of valuing happiness Emotion. 11(4):807-815.
- Movie: The Social Network (2010), https://www.imdb.com/title/tt1285016/
- K.S. Susan Oorjitham (1982), Changes in the South Indian Hindu Family Structure in West Malaysia, Southeast Asian Journal of Social Science Vol. 10, No. 2 (1982), pp. 90-97