தலையங்கம்
இது தேர்தல்களின் நேரம். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட சபைக்கான தேர்தல் தெருவெங்கும் முழக்கமிடத் தொடங்கியுள்ளது. இரண்டையும் கூர்ந்து கவனிக்கும் நமக்குச் சில விஷயங்கள் தெளிவாக விளங்குகின்றன. எந்த ஊரானாலும், எந்த நாடானாலும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் செய்கைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அரசியல்வாதிகளின் குணங்களிலும் பெருமளவு ஒற்றுமையைக் காண முடிகிறது. பொது வாழ்வில் நாகரிகம் என்பது எல்லா இடங்களிலுமே குறைந்து வருகிறது என்பதும் இன்றைய மேடைப் பேச்சுக்களைப் பார்க்கையில் விளங்குகிறது. பொதுவாக மேற்கு உலகத்தில், சில முதிர்ச்சியான வழிமுறைகள் கையாளப்பட்டாலும் அது போன்ற முறைமைகளிலும் தற்போது மரியாதையற்ற, சில கீழ்த்தரமான பேச்சுக்களும் ஏச்சுக்களும் உள்வரத் தொடங்கியுள்ளன. நம்மூரில் ஒருவரை ஒருவர் மதித்து, மரியாதையுடன் நடத்துவது என்பது அரசியலில், பொது வாழ்வில் மறைந்து பல வருடங்களாகி விட்டன என்பது நாமறிந்ததே. எதிர்க் கட்சிகள் என்றால் எதிரிக் கட்சிகள் என்ற நினைப்பு ஏற்பட்டு, அதற்கேற்றவாறு ஒருவருக்கொருவர் சேர் வாரி இறைக்கும் முயற்சிகள் பல காலங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் இப்பொழுது தனிமனிதச் சாடல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன என்பது துரதிர்ஷ்டவசமானது. அதுவும், ஒரே கட்சியில், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என அறிந்து கொள்வதில் நடக்கும் “நேரடி மோதல்களில்” ஒருவரை ஒருவர் சேர் வாரி இறைக்கும் செயல்கள் நடப்பது சற்றும் ஆரோக்கியமானதல்ல.
நூற்றுக்கணக்கான பத்திரிக்கைகளும் மேலும் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் இது குறித்துக் கருத்துக்களையும், நேர்முகங்களையும், தலையங்கங்களையும் தீட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதற்கேற்றவாறே செய்திகளை வெளியிடுவதும் அனைவரும் அறிந்ததே. இவற்றில் பலவற்றிற்குப் பொதுநலம் என்ற ஒரு நோக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் அவ்வப்பொழுது வந்த வண்ணம் இருக்கின்றது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உலகிற்கு அதற்கான பக்குவமும் பொறுப்புணர்வும் உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பல பிரபலமான பத்திரிகைகளும் இந்தப் பொறுப்பற்ற செயல்களில் சளைத்தவர்களல்ல என்பதுதான் நமது கருத்து.
“இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம்” என்ற போர்வையில், தங்கள் சொந்தக் கருத்திற்காகவோ அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் கருத்திற்காகவோ மட்டுமே செயல்படுவது என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிரபலமடைய ஆரம்பித்த தொலைக்காட்சி நேர்காணல்கள் தற்பொழுது தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் பெருமளவு ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவற்றை மேம்போக்காகப் பார்த்தோமென்றால் மிகவும் நேர்மையாகவும், துணிகரமாகவும் கேள்வி கேட்பது போலத் தோன்றினாலும், இதே நேர்முகம் காண்பவரின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்தால் அவரிடமிருக்கும் “ஒருதலைப் பட்ச” நோக்கம் விளங்கத் தொடங்கும்.
கிட்டத்தட்ட எவரையும் முழுமையாக நம்ப இயலாது என்ற நிலைக்கு வந்துவிட்ட சாதாரண மக்களாகிய நாம் இந்த ஜனநாயகத்தில் செய்ய முடிந்தது என்ன? இரண்டு விஷயங்கள் செய்ய முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது. முதலாவது தத்துவார்த்தமானது: அனைவரும் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு ஒரு “பாஸிடிவ் எனர்ஜி”யை நம்மைச் சுற்றி உருவாக்குவது. நம் எண்ணமும், செயலும் நன்றாக இருக்கும் பட்சத்தில் நமக்கு நல்லதே நடக்கும் என்பது உறுதி. நிறைய நல்லவர்கள் உள்ள தேசத்தை ஆள்வதற்கு நல்லவர்கள் தாமாகவே கிடைப்பர், அல்லவர் வந்திடினும் காலப்போக்கில் நல்லவர்களாக மாறுவர். இது உறுதி. நாம் இரண்டாவதாகச் செய்ய வேண்டியது, நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், போட்டியிடும் வேட்பாளர்களில் நமக்குத் தெரிந்து பெருமளவு நல்லவராக – முழுமையான நல்லவரைக் காண்பது அரிது என்ற காரணத்தினால் – இருப்பவருக்கு ஓட்டுப் போடுவது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவது, நமது ஜாதியை, மதத்தைச் சார்ந்தவராக இருப்பதால் ஓட்டுப் போடுவது அல்லது வேறுசில தற்காலிகக் கணக்குடன் ஓட்டுப்போடுவது என்பதை விடுத்து, இருப்பவர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்போம் என்ற எண்ணத்துடன் வாக்களிப்பது நமக்கு நெடுங்கால நன்மையைத் தரும். எந்தக் காரணத்திற்காகவும் வாக்களிக்காமல் இருந்து விடவும் கூடாது. ஒருநாள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லையெனில், நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் குறித்து அங்கலாய்க்கும் உரிமைகளையும் இழந்து விட்டதாகத்தான் கொள்ள வேண்டும்.
“நல்லதையே நினைப்போம், நல்லது மட்டுமே நடக்கும்” என்று வாழ்த்துகிறோம்.
ஆசிரியர்.