தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
தைமகள் தருவது தங்கமாய் அறுவடை
தையலும் தலைவனும் தன்மான வாழ்வுற
தைத்திரு நாளுடன் சித்திரை போட்டியிட
தைமாதம் இனிமேல் புத்தாண்டு என்றனர் !
பழையன கழித்துப் புதியன பிறப்பதாய்
புதுவருடப் பிறப்பைப் பலரும் நினைப்பதால்
பயனாய்ச் செலவிடும் பல்வேறு நாட்களும்
பதிவாகும் நம்கணக்கில் பொலிவான நாட்களாய் !
வருடம் தொடங்கும் முதல் நாளன்று
வழக்கமாய்ப் பலரும் ஆலயம் சென்று
வழிபட்டுத் திரும்பும் முறைமை நன்று
வந்தனம் செய்து வாழ்த்திடுவோம் இன்று !
பூத்துக் குலுங்கிடும் புன்னகை மலர்களால்
பூவான இதயத்தால் பூலோகம் முழுக்க
பூரிப்புடன் வாழ்ந்திடப் புரிந்திடுக என்றே
பூரணம் திகழும் புத்தாண்டில் வணங்குவோம் !!!
-வெ. மதுசூதனன்