இணையச் சுழல்….
இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்….சிலர் இன்னும் கடுமையாக உழைக்கிறார்கள்… சிலர் அதற்கும் ஒரு அடி முன்னால் சென்று சுரண்டுகிறார்கள்….பணம் சேர்ப்பவர்கள் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.. காசுக்கு ஓட்டு வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. கட் அவுட்டுக்கு… பால் ஊற்றும் முட்டாள் மனிதர்கள்….மீண்டும் தங்களை முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள் …தொடரும்…. எல்லா முட்டாள்தனங்களிலும் குறைந்த பட்ச முன்னெடுப்பாக..இன்றைய இன்றியமையாத இணைய உலகில்…..சக மனிதனை.. ஒரு மனிதன் எப்படிப் புரிந்து கொள்கிறான்… என்பதே… மிகப் பெரிய கேள்வி இங்கு… இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே… எப்போதாவது ஏற்படும் பேரழிவில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைச் சராசரிக்கு கூட எடுத்துக் கொள்ள முடியாது… ஓர் இயல்பான திங்கள் அன்று அவன் எப்படி இயங்குகிறான் என்பதே இந்தத் தேடல்…
இன்னும் சொல்லப் போனால்… சக போட்டியாளனை (எப்போது குழுவாகப் பிரிந்தானோ அன்றே போட்டியாளன் ஆகி விட்டான்) போட்டியாளனாக மட்டும்தான் பார்க்கிறோமா.. இல்லை….பொறாமைக்காரனாகப் பார்க்கிறோமா…இரண்டு அரசியல்வாதிகள் கூட ஓர் அறையில் ஒரு மணி நேரம்.. ஒன்றாகத் தூங்கி விட முடியும்.. ஆனால் ஒரே அறையில் இரு எழுத்தாளர்கள்.. ஒன்றாகப் பேசிக் கொண்டாவது இருக்க முடியுமா..? முடியவே முடியாது.. வெளியில் வரும் போது….மாற்றி மாற்றி முதுகில் குத்திக் கொண்டு செத்திருப்பார்கள்…. இது உதாரணம்தான்.. பெரும்பாலும் இதே நிலை தான் எந்தத் துறையிலும்…….
இணையம் இல்லாத ஒரு நாளைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத சூழலுக்குள் நாமே சூழ்ந்து கொண்டோம்.. அது மறுக்க முடியாத உண்மை…அந்த உண்மைக்குள் உருண்டு புரண்டு பார்த்தால்…எல்லாவற்றுக்கும் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில்…தனி மனித தாக்குதலைதான் நாம் செய்து கொண்டிருக்கிறோமா என்றொரு ஐயம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை……இந்த சமூக அமைப்பே கருத்துக்களாலும்.. ஊடகத்தாலும்.. முக நூலாலும்….ட்விட்டராலும், யு டியூபாலும் கட்டமைக்கப் பட்டிருப்பது போல இருக்கும் இன்றையச் சூழலில் நாம் நம் விமர்சனங்களை, உள் வாங்கலை, அணுகுமுறையை, அலசலை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றன……இங்கு படிப்பவர்களை விட எழுதுபவர்கள் நிறைந்து விட்டார்கள் என்பதை எந்தக் கோணத்தில் பார்ப்பது…என்ற படபடப்பில் மீண்டும் கருத்து சொல்லவே வாய் எழுவதை பழக்கமாக்கிக் கொண்டோமோ என்ற கேள்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்…..
ஒரு கலைஞன் மட்டமான படைப்பைக் கொடுத்தால் அந்தப் படைப்பை விமர்சிக்கலாம்….அதை விட்டு விட்டு அவன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்து உள்ளே.. அவன் எழுதுவது போல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று கூறுவது மகா மடத்தனம் அல்லவா….எல்லாருக்கும் எல்லாமே தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை…ஆனால் எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதுதான் பிதற்று நிலை…உண்மையான தெரிதல்…. புலம்பாது….எத்தனை நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளாத நண்பன்தான் பெரும்பாலும் நண்பனாக இருக்கிறான்… சகித்துக் கொள்பவன் எதிரியாகி விடுகிறான்…..இணையத்திலும்….
எதைச் செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்க ஒரு கூட்டம்…எல்லாவற்றிலும் பொருக்கி எடுத்துப் பிழை சொல்வது அவர்களின் மனவியாதியாகவே இருக்கிறது…. ஆம் இருக்கிறது என்று கூட சொல்லும் முற்றிய நிலையில்தான் பல கருத்தாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்…. அத்தனை மூர்க்கமான சுய தடுமாற்றம் கோர்த்து ஒரு வித இருண்மைக்குள் தாங்களே அகப்பட்டுக் கொண்டார்கள் என்பது வருந்தத்தக்கது…….. நல்ல டைம் பாஸ் ஆகும் என்று கூறுபவனை உழைக்கும் அகராதியில் கட்டி வைத்து உதைக்க வேண்டும்…என்பது உண்மைத் தத்துவம்……..
மீசை வளர்த்தால், பெரிய ஸ்டாலின் இவன் என்பதும்.. மீசை எடுத்தால், பெரிய கிளிண்டன் இவன் என்பதும்…. தாடி வைத்தால், பெரிய சாக்ரடிஸ் இவன் என்பதும்… முடி நிறைய விட்டால் பெரிய சே இவன் என்பதும்… என்ன விதமான பார்வை.. ஏன் இன்னொரு சாக்ரடிஸ் வரக்கூடாதா…. இன்னொரு சே வரக்கூடாதா…. இன்னொரு ஜீசஸ் வரக்கூடாதா.. இன்னொரு புத்தன் வரக்கூடாதா… இங்கு படிப்பவர் குறைந்து போய் விட்டார்கள்….வாழ்க்கையைப் படிக்கும் அனுபவமாக எடுத்துக் கொள்பவர்கள் குறைந்து விட்டார்கள்… நொட்டை சொல்லிக் கொண்டு…முகமூடி மாட்டிக் கொண்டு…24 மணி நேரமும். இணையத்தில் அரட்டை அடிப்பவர்கள் நிறைந்து விட்டார்கள்… இந்த சமூகச் சூழலே வேறு திசை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது….இணையத்தை உபயோகமாக பயன் படுத்துபவர்களை வணங்கலாம்….
எல்லாருமே தலைவனாக இருக்க விரும்பினால் அந்த க்ரூப் மொக்கை ஆகி விடாதா….? அதுதான் இங்கு நடக்கிறது….. முகநூல் நண்பர்களின் சந்திப்பில்கூட, இருக்கும்340 பேரும் முன்னால் நிற்க வேண்டும் என்று விரும்பினால் விளங்குமா….? விட்டுக் கொடுத்தல் சுத்தமாக இல்லை.. என்பதை உணர வைத்துக் கொண்டே இருக்கும் சம்பவங்கள் ஏராளம்….பெரும்பாலைய ஆண்கள் இன்னமும்…பெண்கள் பெயராக தேடித் தேடி ரிக்வெஸ்ட் தரும் செயலை எதைக் கொண்டு பொசுக்க…? பொழுது போகாமல், இருப்பவனைச் சுரண்டிக் கொண்டே இருக்கும்…..வயதானவர்களில் பலர்…தங்கள் வயதுக்கு தகுந்தாற் போல நடந்து கொள்வதில்லை…. புத்திசாலிகள் என்று தங்களைத் தாங்களே முட்டாள்கள் என்று திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொள்கிறார்கள்… ஒரு பெயரில் ஒரு எழுத்தை மாற்றி கதை எழுதி விட்டால்… அவ்வளவு பெரிய அப்பாடக்கராகி விட முடியுமா…இந்த இலக்கியச் சமூகத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினால் ஒரு காவியம் படையுங்கள்…இன்றைய தமிழ் நிலையைப் பதிவு செய்யுங்கள்….. வருங்காலம் போற்றும்.. ஒரு வள்ளுவனைப் போல் நடக்க முடியாவிட்டாலும்….அவன் குறளையாவது படியுங்கள்…. படிக்காதச் சமூகம் உருப்படாது… படித்தவன் உருப்படாத சமூகத்தை வளர்த்தால் ஐயோ வென போவான் என்பது பாரதியின் வாக்கு….
இரண்டு பேர் சேர்ந்து மூன்றாவது ஆளைப் பற்றி குறை கூறுகிறார்கள்… பின் அந்த மூன்றாவது ஆளுடன் சேர்ந்துகொண்டு நான்காவது ஆளைப் பற்றி அதே குறையைக் கூறுகிறார்கள்.. இது என்ன விதமான மனநிலை…பழகும் வரை பழகி விட்டு… சண்டை வந்த பின் முன்பு பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகளைப் பொதுவாக எல்லாரும் பார்க்கும்படி பகிருபவர்களை எதைக் கொண்டு அடிக்க….? அவர்களும்.. கருத்தாழமிக்க இலக்கியத்தில் சேவை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்…..கசக்கும் உண்மையைப் போல…
“அட.. உனக்கு இன்னும் வயசு பத்தாது.. அனுபவம் பத்தாது…. இன்னும் கத்துக்கோ” என்று கூறினால்… “அதச் சொல்ல நீ யாரு. எனக்கு எல்லாம் தெரியும்…..நான் பெரிய மண்ணுன்னு ” பேசும் கல்லூரி கூட தாண்டாதப் பையனை அளவுக்கு மீறிப் புகழ்ந்து கெடுத்து விட்டிருக்கிறது இன்றைய இந்த நவ நாகரிகச் சமூகம்… அவனும்…. தனக்குப் பெரிய கொம்பு முளைத்து விட்டதாக எண்ணி, யாரை வேண்டுமானாலும் பேர் சொல்லி அழைக்கும் மிக மோசமான வட்டத்துக்குள் விழுந்து வீணாய்ப் போகிறான்…
எந்த ஒரு படைப்பையும் படைக்க ஓர் ஆர்வம் ஒருவருக்கு இருப்பது இயற்கை.. ஆனால் அதை வளர்த்துக் கொள்ள அவன் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்….. ஒரு ஓவியன் ஓவியனாகவே இருக்க.. நிறைய வரைய வேண்டியிருக்கிறது…..ஏற்கனவே வரைந்தவன் பற்றிய தேடல் இருக்க வேண்டும்…ராஜா ரவி வர்மா…. ஹுசைன்…. ஜீவா… பிகாசோ.. மைக்கேல் ஏஞ்சலோ….வான்கா… லியானர்டோ…இன்னும் இவர்கள் போல் உள்ள ஓவியர்களை உள் வாங்க வேண்டும்.. மூத்தவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்று உட்கார்ந்து யோசிக்க வேண்டும்….. எல்லாம் தெரியும் எல்லாம் தெரியும் என்றுதான் இங்கிருந்த சித்தர்களை…. மருத்துவ குணமுள்ள.. மூலிகைகளை… கண்டுக்காமல் விட்டு, திரும்பவும் சைனாக் காரனிடமிருந்தும்…. ஜப்பான்காரனிடமிருந்தும் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம்….பொதுவாகவே எல்லாம் தெரியும் என்று கூறும் மனித கசகசப்புகளைப் பார்த்து…. ஒரு படத்தில் கமல் அவர்கள் கேட்கும் கேள்வியைத்தான் கேட்க தோன்றுகிறது…
அவசர குணம்… அதீத தன் முனைப்பு….. தான் மட்டுமே எங்கும் உலா வர வேண்டும்… அதிலும் முகநூலில்…. கேட்கவே வேண்டாம்…ஒரு மணி நேரப் புகழுக்கு ஏங்குகிற மனப்பான்மை… இன்னும் சொல்லப் போனால் லைக்ஸ் பொருக்கிகளாக இருக்கவே நம் மனம் விரும்புவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது…. ஆபத்தான கட்டத்தில்… மனித சமூகம்…இருப்பதை மனித மனங்கள் உணர வேண்டும்……இல்லையெனில் நாளைய இந்திய வல்லரசுக் கனவு வெறும் கனவுதான்…ஐயா அப்துல் கலாம் இறந்த போது “ஐயோ அவர் அப்படி….ஐயோ அவர் இப்படி….ஐயோ அவர்..” என்று எத்தனை கூச்சல்… கதறல்…. செய்தோம்….. இன்னைக்கு அவர் சமாதி என்ன நிலைமையில் இருக்கிறது என்று யாருக்காவது கேட்கத் தோன்றியதா…? எப்போதுமே ஒன்றை மறக்கும் இன்னொன்றாகத்தான் இருக்க விரும்புகிறோம்…இணையத்திலும்…! நிறைய அறிவாளிகளுக்கு நையாண்டிக்கும்… நொண்டிச் சாக்குக்கும் வித்தியாசம் தெரிவதில்லை… நையப் புடைக்கு அர்த்தம் சொல்லித் தர வேண்டி இருக்கும்… என்பது அமைதியான ஆக்கபூர்வமானவர்களின் ஆதங்கம்…
30 கவிதை சேர்ந்தாற் போல எழுதி விட்டால் பேருக்கு முன்னால் கவிஞன் என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சேர்த்துக் கொள்ள எப்படித் தைரியம் வருகிறது ?..கவிதை என்ன அத்தனைச் சுலபமான ஒன்றா…. ஓடிப் போய் வாங்கி வந்து விடும்… கடுகு டப்பாவா….? அது கற்பனை டப்பா…! பழக பழகத்தான் புரிபடும்….ஆர்வக் கோளாறுகள் அடக்கி வாசிக்க வேண்டும்…முதலில் படியுங்கள்…… படிக்க முடியாத எவனாலும் நல்ல படைப்பைப் படைக்க முடியாது….பொரணி பேசிக் கொண்டே இருந்தால் நல்ல இலக்கியம் எப்படி வளரும்… சாடுதல் வேறு….பொறாமை வேறு .. என்பதை நினைவூட்டுகிறேன்…பரிசுக்கு மட்டுமே போராடிட்டு இருந்தால் நல்ல படைப்பு எங்கிருந்து வரும்…நான்…. நான்…. நான்….. என்று நிற்பவன் நல்ல படைப்பை எப்படிக் கொடுப்பான்……? படைப்பு முன்னால் நிற்க வேண்டும்…. படைப்பாளி பின்னால்தான் நிற்க வேண்டும்…. தோனி… உலகப் கோப்பையைக் கொடுத்து விட்டு, பின்னால் நின்றாரே….. அதுதான் உணர்தல்…. உயிர்த்தல்… உங்கள் சமூகத்துக்கு நீங்கள் கொடுத்த அர்த்தம்…,,,..
பாருங்கள்…. உணருங்கள்…. கை கொடுங்கள்…. படியுங்கள்….கம்பனை, இளங்கோவைப் படியுங்கள்…பாரதியை, பாரதி தாசனைப் படியுங்கள்……பட்டுக் கோட்டையாரைப் படியுங்கள்….. வள்ளுவரை, வள்ளலாரைப் படியுங்கள்…. ஜெயகாந்தனையும், சுஜாதாவையும் படியுங்கள்….. நகுலனை, பிரமிளைப் படியுங்கள், கி. ராவையும், ஜி.நாகராஜனையும் படியுங்கள்….தமிழன்பனை, புவியரசைப் படியுங்கள்…. நாஞ்சில் நாடனை, ஜெயமோகனைப் படியுங்கள்…..வல்லிக்கண்ணனை, புதுமைப் பித்தனைப் படியுங்கள்…..ந. பிச்சமூர்த்தியை, தி. க. சியை, . கு.அழகிரசாமி, அசோக மித்திரனைப் படியுங்கள்….பொன்னீலன்…. அப்துல் ரஹ்மானை, பூமணியை, சு. வெங்கடேசனைப் படியுங்கள்….. கோணங்கி, சிற்பி, ஞானியைப் படியுங்கள்….கல்கி, சாண்டில்யனைப் படியுங்கள்…..இமையத்தை, மேத்தாவை சி சு செல்லப்பாவைப் படியுங்கள்…….தேவதச்சன், ஞானக் கூத்தனைப் படியுங்கள்…தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாயைப் படியுங்கள்… அலன் போ, ஆண்டன் செகாவ்,மிகைல் நேயமியைப் படியுங்கள்… பைபிள், குர்ரான், கீதா, சத்திய சோதனையைப் படியுங்கள்….தாகூரைப் படியுங்கள்…கிப்ரான், உமர் கையாம்…ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் , காப்ரியல் மார்கஸ், பாப்லோ நெருடாவைப் படியுங்கள்…..இன்னும் இன்னும்… படைப்பில் உச்சம் தொட்டவர்களைத் தேடி தேடித் படியுங்கள்…..படிக்க முடிவெடுத்த நாளில்… உங்கள் படைப்புகளில்… கருத்துகளில்… விவாதங்களில்…. தனி மனித தாக்குதல் வராது….அது உங்கள் நாகரிகத்தின் தொழுகையை… இன்னும் விசாலாமாக்கும்…எதிர்க்க வேண்டும் என்றால்… எதிர்த்து விடுங்கள்…குரோத வேளைகளில் ஈடுபடாதீர்கள்…..அது உங்களைக் கீழ் இறக்கி விடும்….
பெண்களைப் பார்க்கும் போதே படுக்கைக்குதான் அழைக்கிறான்… என்று சில பெண்கள் நினைத்துக் கொள்ளும் மன நோயை உங்கள் அறிவு இனி விதைக்காது… அதே சமயம் ஹாய் என்று கூறியவுடனே கல்யாணம் வரை கனவு காண்பதை ஆண்களும் விட்டு விட வேண்டும்…படிக்க படிக்க… உங்கள் பக்குவத்தில்…. குடை விரியும்…. அது பனங்காட்டு நரியின் சல சலப்பைப் போல அல்லாமல்… காடுகள் விரிக்கும்…. பெரும் கொடையாக திகழும்… அறிவு மழை, குடைக்குள்ளும் பெய்தால்…. நீங்கள் வரம் பெற்றவர்கள்… அதன் பின் உங்கள் படைப்புகள்.. கருத்துக்கள்.. கனவுகள்.. சொல்லாடல்கள்.. சக மனிதனை நேசிக்க மட்டுமே பயன்படும்…அறிவின் விசாலப்படியே உங்கள் புரிதல் மேம்படையும்…. எதிர் கருத்து கொண்ட படைப்புக்கும் சேர்த்து… லைக்ஸ் போடும் பக்குவத்தில்…… உங்கள் நவ நாகரிகத் தமிழ்க் கலாசாரம்.. மீண்டும்.. உயிர் பெரும்…படித்தவன் உருப்படாதச் சமூகத்தை வளர்த்தால் ஐயோ வென போவான் என்பது பாரதியின் வாக்கு…….நினைவிருக்கட்டும்…
கவிஜி