சுறா மீன் கறி
மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம்.
ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் பிடித்து வருவார்கள் பெருமையுள்ள பரதவர்கள்.
இந்து மகா சமுத்திரத்தில் ஆபத்தையும் அலசிவிட்டு அரைக்கால் உடுத்தலுடன் அனைவரையும் அசற வைப்பார்கள் அழகிய மீனவர்கள். கரை தொட்டதும் படகில் இருந்து குதித்துத் திமிருடன் தரமான சுறா மீன்களைத் தோளில் போட்டுக்கொண்டு தரைக்குக் கொண்டுவருவார்கள்.
.
வட அமெரிக்காவில் இந்து சமுத்திரத்தில் இருந்து தருவிக்கப்பட்ட சுறாமீன்களை இந்தியக் கடைகளிலும், சீனச் சந்தைகளிலும் வாங்கலாம்.
தேவையானவை
1 lb சுறாமீன்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி வெந்தயம்
½ தேக்கரண்டி பெருஞ்சீரகம் (Jira)
1 மேசைக்கரண்டி நறுக்கிய சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய் – நீளமாகக் கீறப்பட்டிருந்தால் நல்லது
1 கிளை கறிவேப்பிலை
1 கோளையுருண்டை அளவு பழப்புளி
1 கோப்பை கட்டித் தேங்காய்ப்பால்
2-1/2 தேக்கரண்டி கறித் தூள்/யாழ்ப்பாணத்தார் கறிமிளாகாய்த்தூள்
தேவையான அளவு சமையல் எண்ணெய்
தேவையான அளவு கடல் உப்பு
செய்யும் விதம்
ஏற்கனவே துண்டுகளாக இல்லாவிட்டால் சுறாமீனைச் சுமார் 2 அங்குலமளவுத் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். சிறியதாகவும் முடிந்த அளவு சரி சமமான பங்குளாகவும் வெட்டுதல் குறைந்த நேரத்தில் வெந்து சமைத்து வர உதவும்.
சுறாத்துண்டுகளுடன் கறித்தூள் மற்றும் உப்பு நன்கு சேர்த்து ஒருபுறம் ஊற விடவும். உறைந்த மீன் துண்டுகளாயின் முதலில் அறை வெப்பத்திற்குக் கொண்டு வருதல் அவசியம். அதன் பின்னர் கறித்தூளைப் போட்டுப் பிரட்டுதல் நலம்.
அடுத்து ஒரு குவளையில் ½ கோப்பை நீரில் பழப்புளியைக் கலந்து வடித்துப் புளி நீர் எடுத்துக் கொள்ளவும். தொடர்ந்து வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். வெங்காயம் சற்று மண்ணிறமாகக் கருகிவரும் போது வெந்தயம், கடுகு, சீரகம் போன்ற திரவியங்களையும் போட்டு இன்னும் ஒரு நிமிடமாவது வதக்கவும்.
கறித்தூள், உப்புடன் ஊறிய சுறாமீ்ன் துண்டுகளை எடுத்து சமையல் பாத்திரத்தில் சேர்த்து அதிலுள்ள சொற்பமான நீரும் வற்றும் வரை மத்திம வெப்பத்தில் சமைக்கவும். அடுத்து பழப்புளி நீர், தேங்காய்ப்பால் விட்டு சுறாக்குழம்பு தடித்து வரும் வரை குறைந்த வெப்பத்தில் சமைத்தெடுக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி சுடுசோறு, முருங்கை, அகத்தியிலை வறை போன்றவற்றுடன் பரிமாறலாம்.
தொகுப்பு – யோகி