ஆணவம் கொ(ல்)ள்வோம்
உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !
காதல் புரிந்ததாலின்று வீழ்ந்த உயிருக்கும்
காலம் அழித்திடாக் கரும் பளிங்கிலே
அரங்கம் சமைத்து சரித்திரம் படைத்து
அகிலங் கூட்டிப் பெருமை கொள்வோமே !
ஆணவம் என்ற அரிய சொல்லினை
ஆபரண விகுதியுடன் ஆவணப் படுத்துவோமே
விரிந்து, மலிந்து கிடக்கும் வலையுலகில்
விரைந்து புதுப் பொருளினைப் பதிந்திடுவோமே !
எழுத்துக் கூட்டித் தமிழ்ப் படிக்கும்
எம்பிள்ளைகள் என்றாவ தொரு தினம்
இதைப்படித்து நம் கலாச்சாரம் புரிந்து
இறுமாப்பு மிகுந்திட பெருமை கொள்ளுமே !
மிருகம் வளர்த்து மனிதம் தகர்ப்போமே
மிக்காரும் ஒப்பாருமிலை மார் தட்டுவோமே
அஹிம்சை நாடென்ற அடையாளம் விடுத்து
அரக்கர் நாடென்றே முரசு கொட்டுவோமே!
– ரவிக்குமார்