முதுமையும் மழலையே
அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான்.
“பத்ரி எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு,
“ஹ்ம்ம். நீங்க தூங்குங்க ” என்று சொல்லி விட்டு வெளியில் வராண்டாவில் நடந்து வந்தான்.
வராண்டாவைத் தாண்டி வெளியில் திண்ணையில் ஒரு பெரிய மரச் சாய்வு நாற்காலியில் கொள்ளுத் தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தார்.
“என்ன தாத்தா இவ்ளோ சீக்கிரமா இன்னிக்கு எழுந்தாச்சா? தூக்கம் வரலையா?”.
“இல்லடா கண்ணா நீ எழுந்து வருவே உன்னோட கொஞ்சம் பேசலாம்னுதான் . அப்புறம் நீ படிக்கப் போயிடுவ. தொந்தரவு பண்ண முடியாது”. என்று மெல்லியக் குரலில் பதில் அளித்தார் சபாபதி தாத்தா.
சபாபதி தாத்தா, பத்ரியின் கொள்ளுத் தாத்தா. அவன் அப்பாவின், அப்பாவின் அப்பா. பத்ரி குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே ஒரு மகன் தான். சபாபதி தாத்தாவிற்கு ஒரு மகன் சுந்தரம், அவர் மகன் கணேஷன், கணேஷன் மகன் பத்ரி.
பத்ரியின் அப்பா, அம்மா இருவரும் வெளி நாட்டில் ஒரு பெரிய மருத்துவமனையில் மருத்துவர்கள். பத்ரியும் மருத்துவம் படிக்க விழையவே அவன் இந்தியாவில் படித்து அனுபவம் பெற அவனை இந்தியா அனுப்பிவிட்டு ஒரு ஐந்து வருடம் கழித்து வந்து அங்கு படிப்பைத் தொடர திட்டமிட்டனர் அவன் பெற்றோர். பத்ரிக்கு உலகத்திலேயே மிகவும் அதிகமாக பிடித்த இடம் பாட்டி தாத்தா வீடு தான். அந்த வீட்டில் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் விளையாடியப் பொழுதுகள், அவன் மறக்க முடியாதவை.
அதனாலேயே இந்தியாவில் படிக்க என்று தொடங்கியவுடன் உடனே சரி என்று கிளம்பி வந்துவிட்டான். இப்பொழுது இரண்டாம் வருடப் படிப்பு. வெறும் படிப்பாக மட்டும் அல்லாது, இயற்கை ஆரோக்கிய உணவை, வாழ்க்கை முறையை கடைபிடிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவன். அதனால் தினமும் காலையில் சீக்கிரம் எழுவது, யோகாசனம் செய்வது என்று பழக்கம் வைத்துள்ளான்.
காலையில் எழுவதில் இன்னொரு குதூகலமான விஷயம், கொள்ளுத் தாத்தாவுடன் பேச்சு. தாத்தாவிற்கு 98 வயது. வீட்டில் சுந்தரம் தாத்தாவும் பாட்டியும் தான். அதிகமாக யாரும் அவருடன் தினம் பேசிக் கலந்துரையாடுவது இல்லை.
மரியாதை இல்லாமல் இல்லை ஆனால் தாத்தாவிற்குப் புரிகிற மாதிரி நெறைய விஷயங்களை விவரிக்க பொறுமை இல்லை.
பத்ரிக்குத் தாத்தாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வாஞ்சை.
சிறிய குழந்தை போல தோன்றும் அவர் முகம்,பொக்கை வாய்ச் சிரிப்பு எல்லாம். தினமும் அவருடன் கொஞ்ச நேரம் பேசுவது, அவரை கைப்பிடித்து வாக்கிங் அழைத்துச் செல்வது என்று இயன்ற உதவிகளைச் செய்வான். அதனால் அவருக்கும் பத்ரியுடன் இந்த நேரத்தில் பேசுவது மிகவும் பிடித்த ஒரு விஷயம்.
தாத்தா எப்போதுமே ஒரு ஆச்சர்யம் தான் பத்ரிக்கு. இந்த வயதிலும் அவர் வேலையை அவரே செய்துக் கொள்வார்.
காலையில் 9 மணி அளவில் நெற்றியில் விபூதி பட்டை இட்டுக் கொள்வார். அதே போல் நேரம் ஆவது எப்படி தெரிந்து கொள்வாரோ தெரியாது, சரியாக 6.30 மணிக்கு விபூதி எடுத்து வரச் சொல்வார்.
“தினமும் விபூதி பட்டை போடலேன்னா தூக்கம் வர மாட்டேங்கறது”. இதே வரியுடன் ஒரே மாதிரி பேசிச் சிரிப்பார். வெள்ளந்தியாக அந்த பொக்கை வாய்ச் சிரிப்பைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.
தினமும் காலை 10 மணிக்கு முந்தைய நாள் செய்தித் தாளை எடுத்து வரச் சொல்வார். ஒரு வரி விடாமல் பக்கத்திற்குப் பக்கம் படிப்பார்.
“அது ஏன் தாத்தா முதல் நாள் பேப்பர். இன்னி பேப்பர் படிச்சா என்ன? என்று பத்ரி கேட்டால்,
“எனக்கு என்ன அவசரம்? செய்தியை மறுநாள் படிச்சாப் போதும். சுந்தரத்துக்கு அவசரமா படிக்கணும் .” என்று பதில் கொடுப்பார்.
சுந்தரம் தாத்தாவும், ஜானகி பாட்டியும் கொள்ளுத் தாத்தாவை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்றே பத்ரிக்கு தோன்றும். அவர்களுக்கே வயதான காரணத்தால் சில நாட்கள் சலிப்பானச் சொற்களை உதிர்க்கும் பொழுது கொள்ளுத் தாத்தாவைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.
தாத்தாவிற்குச் சில நேரம் ஏதாவது பேச வேண்டும் போல இருக்கும். அதனாலேயே முடிந்தவரை பத்ரி தாத்தாவிற்கு ஒரு நல்ல பேச்சுத் துணையாக இருக்க முயற்சித்தான்
அன்றும் வழக்கம் போல பத்ரி யோகாசனம் செய்தபடி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தான். தாத்தா, தான் படித்த செய்திகள் பற்றி விமர்சித்தார். அவன் படிப்பு பற்றி கேட்டுக் கொண்டார்.
எத்தனையோ முறை சொல்லியும், அவருக்கு இன்னும் புரியாத ஒன்றாக இருந்தது – ஈமெயிலும் , கணிப்பொறியும் தான்.
“எப்படி அந்தத் திரையில் அவங்க வீடியோ தெரிஞ்சு நீ அவங்களோட பேசற?
வழக்கம் போல அதே கேள்வி.
பத்ரியும், தாத்தாவிற்குப் புரியும் மாதிரி இணையத்தளம் பற்றி விளக்க, அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வானம் நோக்கி பார்த்தபடி இருந்தார். அப்படியே அமைதியாகிக் போனார். பத்ரி கல்லூரி பாடம் படிக்கத் தொடங்கினான். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தபொழுது, தாத்தா இன்னும் ஏதோ சிந்தனையில் இருந்தது தெரிந்தது.
“எப்பவுமே இப்படி அமர்ந்து இவர் என்ன தான் யோசிப்பார் ?
தாத்தாவின் 65 வயதில் பாட்டியின் துணையை இழந்து விட்டார். அதன் பிறகு தினம் எழுவது, பேப்பர் படிப்பது விபூதி பட்டை போடுவது , வாரத்தில் ஒரு சில நாட்கள் கோயிலுக்குப் போவது, என இதுதான் வாடிக்கை. வேலை பார்த்த பொழுது கணக்கு வாத்தியாராக கண்டிப்பான ஆசிரியராக இருந்தவராம் இவர். ஆனால் இப்பொழுது அவரைப் பார்த்தால் அந்த கண்டிப்பெல்லாம் ஒன்றும் தெரியாது.
கால ஓட்டம் எப்படி மாறுகிறது. முப்பது வருடங்கள் இப்படி ஒரே வாழ்க்கை . என்ன தான் யோசிப்பார் அவர். வாழ்ந்த அத்தனை நாட்களையும் திரும்பவும் ஓட்டிப் பார்ப்பாரோ?
வயதான பின்னர் எல்லோரின் வாழ்க்கையும் பயனின்றி தான் போகுமோ? மருத்துவம் பயிலும் பத்ரியால் எந்த உயிரும் அனாவசியமானது என்று யோசித்துப் பார்க்கவே முடியாது.
மூன்று வயது வரை ஒரு குழந்தை எப்படி மழலையுடன் இருக்கிறதோ, அதே போல தான் தாத்தாவைப் பார்த்தால் தோன்றும். குழந்தையின் செயல்களை ரசிக்க குடும்பமே காத்திருக்கும் ஆனால் அதே குடும்பத்தில் ஒரு பலமாக இருந்தவர் முதுமை அடைந்து ஒரே வீட்டில் இருந்தாலும் அனைவரும் கொடுப்பது தனிமை என்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்.
***
மாலையில் கல்லூரியிலிருந்து வந்தவுடன் தாத்தாவை வாக்கிங் கூட்டிட்டு போக கிளம்பினான்.
“தாத்தா வாங்க போலாம்”
மெதுவாக ஒரு கையில் குச்சியையும், இன்னொரு கையில் பத்ரியின் கரத்தைப் பிடித்தபடி நடந்தார். வழியில் மிதி வண்டியை ஓட்டிபடி ஒரு சிறுமி வர,
தாத்தா, “பாரு! இப்படி யாராவது வந்தா, நாம இப்படி அப்படி போக கூடாது, அப்புறம் அவங்களும் இப்படி அப்படி வளைச்சு ஓட்டி நம்ம மேல இடுச்சிருவாங்க . நாம அப்படியே நின்னோம்னா அவங்க வளைச்சுட்டு போய்டுவாங்க. புரிஞ்சுதா?”
சிரித்தபடி சரி என்றான் பத்ரி. தினமும் இரண்டு முறையாவது இதே அறிவுரையைச் சொல்லி விடுவார்.
கோயிலில் சுற்றி வலம் வந்த பின்னர், அசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார்.
பத்ரியின் கைப்பிடித்து “நீ ரொம்ப பொறுமை. இந்தக் காலத்து பசங்க மாதிரி இல்ல. நல்ல மருத்துவம் பார்த்து பெரிய ஆளா வருவ”.. தாத்தாவின் களைப்பை மீறிய அந்த முகத்தின் ஒரு மெல்லியச் சிரிப்பும், நிறைவும் பத்ரியின் மனதில் அப்படியே பதிந்து போனது.
திரும்பி வரும் பொழுது அமைதியாக நடந்தார்.
அன்று இரவே சபாபதி தாத்தா காலமாகி போனார்.
தூக்கத்திலேயே அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
துக்கம் விசாரிக்க வந்த அனைவரிடமும் சுந்தரம் தாத்தா சொன்ன ஒரே விஷயம் “வயாசாச்சு. ஒருத்தருக்கும் கஷ்டம் தராம போயிட்டார்.”.
ஏனோ ஒருவர் முகத்திலும் அதிக கஷ்டமோ , துக்கமோ தெரியவில்லை.
பத்ரியின் மனதில் ஒன்று மட்டும் புரிந்தது. ஒரு வயதிற்கு மேல் வரும் இறப்பிற்கு கூட துக்கம் இல்லை தான் போல.
முதல் மழலையை ரசிக்கும் மனிதம், இரண்டாம் மழலையான முதுமையை மட்டும் ஒதுக்குவது யதார்த்தமான வாழ்க்கையாகிப் போனது.
***
நாட்கள் பறந்து, தாத்தாவை அனைவரும் மறந்து போகத் தொடங்கினாலும் , பத்ரியிடம் மட்டும் ஏதோ இனம் புரியாத தாக்கம் ஏற்படுத்தி விட்டார் தாத்தா.
தாத்தாவுடன் ஏற்பட்ட பழக்கம் தொடர்ந்து அதே நேரத்தில் கோயில் செல்லும் பழக்கம் மறக்கவில்லை அவன். தெருவில் நடந்த பொழுது, எதிரே மிதிவண்டி ஒன்று வர, அப்படியே நின்று கொண்டான். மிதி வண்டியில் செல்கிறவர் இவனைச் சுற்றி வளைத்துகொண்டு சென்றார். ஒரு சிறிய சிரிப்புடன் மீண்டும் நடந்தான்.
காலங்கள் மாறும் தனக்கும் முதுமை வரும்; உலகில் தனக்குப் புரியாத விஷயங்கள் உருவெடுக்கும்; அன்று வானம் பார்த்துச் சிந்திக்கும் பொழுது வாழ்க்கை முழுக்கப் பிரதிபலிக்கும்.
-லக்ஷ்மி சுப்பு
அன்புடையீர்,
வணக்கம் . முதுமையும் மழலையே சிறுகதை அருமை. யதார்த்தமான எளிய நடை ,சிறுகதை சொல்லிய விதம் அருமை. “ஒரு வயதிற்கு மேல் வரும் இறப்பிற்கு கூட துக்கம் இல்லை தான் போல. முதல் மழலையை ரசிக்கும் மனிதம், இரண்டாம் மழலையான முதுமையை மட்டும் ஒதுக்குவது யதார்த்தமான வாழ்க்கையாகிப் போனது ” அர்த்தமுள்ள உண்மையான வாக்கியங்கள். நினைவில் வைக்க வேண்டியவை. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். சிறுகதையை பனிப்பூக்கள் இதழில் இடம்பெறச் செய்தமைக்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி
பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
Nice one
Lucky thatha! He had Badri!
Good one