சித்திரைத் திருமகள்
மானொத்த விழியாளின் மருகிய பார்வையும்
மாலையற்ற கழுத்தும் மலரில்லாக் கூந்தலும்
மாநிறச் சருமமும் மயக்குகின்ற விழிகளும்
மாலைச் சூரியனாய் மலர்ந்ததந்த வதனமும்
மாண்புமிகு நெற்றியின் மத்தியிலிட்ட சுடரும்
மாங்கனியாய்க் குவிந்த மதுததும்பும் அதரமும்
மாறனின் கணைகளுக்கு மடுவான நாசியும்
மாரிக்கால வருடலாய் மந்தகாசத் தோற்றமும்
மாந்தர் குலமதனை மகிழ்ச்சியில் ஆழ்த்திடவே
மாவிலைத் தோரணமும் மங்கலமாய்த் தொங்கிடவே
மாதவளின் தூய்மையினை மங்காமல் காத்திடவே
மார்பினை நளினமாய் மறைத்திடும் வாழையுடனே
மாநகரம் நோக்கி மலர்ந்ததன் நோக்கமென்ன?
மாசற்ற இன்பமும் மனங்குளிரும் செல்வமும்
மாதவம் புரிந்திடும் மகத்தான நற்குணமும்
மாட்சிமையான வழியிலே மனிதகுலம் சேர்ந்திட
மாதங்கள் பனிரெண்டும் மறைந்தே போனபின்னர்
மாநிலம் வாழ்பவர்க்கு மற்றுமொரு புதுக்கணக்காய்
மாற்றங்கள் புரிந்து மறுமலர்ச்சி அடைகவென்று
மாதரசி மீண்டும்வந்து மகிழ்விக்கிறாள் துர்முகியாய் !!!
வெ. மதுசூதனன்.
super up