அம்மா அப்பா’ விளையாட்டல்ல
எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தார். “எங்க வீட்ல வேலை செய்றவங்க நின்னுட்டாங்க. உங்க வீட்ல
செய்றவங்க வருவாங்களான்னு கேக்க வந்தேன்.”
இன்று கிளாரா அக்கா விடுமுறை. சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை நானே தேய்ப்பதற்கு நல்ல நேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன். சொன்னேன்.
“நம்பர் இருக்கா…ஃபோன் பண்றீங்களா? எனக்கு இப்போவே யாராவது வந்தா தேவலை. ரென்டு
நாளாச்சு எங்க வீட்ல வேலை செய்றவங்க வந்து. ரொம்பக் கஷ்டமா டயர்டா இருக்கு.” அழுது
விடுவாள் போலிருந்தது.
நான்கு வயதில் ஒரு மகளும், கைக்குழந்தையும் வைத்திருப்பவர். ஊரிலிருந்து வயதான மாமனார்
மாமியார் வந்திருக்கிறார்களாம். கணவருக்கு ஐடி கம்பெனியில் வேலை. இரவு ஷிஃப்ட். அவர்
நிலவரம் புரிய இது போதுமென்று நினைக்கிறேன்.
சமாதானப்படுத்தி உள்ளே வந்து அமரச் சொன்னேன். நான் எதிர்பார்க்கவில்லை. சத்தியமாகச்
சொல்கிறேன், அவரே படபடவென பேச ஆரம்பித்தார். “2006ல காலேஜ் முடிச்சேன்; கோல்ட்
மெடலிஸ்ட். மூணரை வருஷம் தான் வேலை பார்த்தேன். 2010ல கல்யாணம் பண்ணி
வெச்சிட்டாங்க. முதல் குழந்தை கன்சீவ் ஆனதுமே வேலையை விட்டுடச் சொன்னாங்க. பாத்துக்க
ஆளில்லையேன்னு நானும் விட்டுட்டேன். கொஞ்சம் வளந்தப்புறம் போய்க்கலாம்னு. இப்போ
அடுத்தது. பெரியவளையே நல்ல டே கேர்ல விட்டுப் பாத்துக்கலாம்னு தான் சொன்னேன். இவர்
கூடவே கூடாதுன்னு சொல்லிட்டார். உனக்கு என்ன வேணுமோ வாங்கித் தர்றேன், வீட்ல இருந்து
குழந்தைங்களை மட்டும் பாத்துக்கோன்னு சொல்லிட்டார்.
உங்க ஹஸ்ப்ன்டாவது குழந்தைங்களைப் பாத்துக்கறதுல, வீட்ல நிறைய ஹெல்ப் பண்றார் (சீன்
மன்னன்!) இவர் ஒண்ணுமே பண்ண மாட்டார். அதனால குழந்தைகளுக்கு ஏற்பாடு பண்ணிட்டு
வேலைக்குப் போனாலும் டபுள் கஷ்டம் எனக்குத் தான். அஞ்சு வருஷத்துல எனக்கு வாழ்க்கையே
வெறுத்துப் போச்சு.”
அவரது கணவனை அவ்வப்போது பார்க்கிங் லாட்டில் பார்த்திருக்கிறேன். அமைதியான
அடக்கமான முகம். ஆனால் இந்தப் பெண் பேசியதைக் கேட்டதும் அடக்கமாட்டாமல் கோபம்
வந்தது.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவள் விருப்பம் குழந்தை வளர்ப்பு, பாத்திரம் தேய்ப்பு, வீட்டுப்
பராமரிப்பு என்பதாக மட்டுமே இருக்க வேண்டும், தன்னைத் தாண்டி ஒரு வாழ்க்கையே இருக்கக்
கூடாது என்று எதிர்பார்ப்பவன் மீது கோபப்படாமல் என்ன செய்வது?
நிற்க;
தோழியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். தோழி அம்மா வீட்டுக்கு மேலேயே வசிப்பவள்.
குழந்தைகளை அம்மாவிடம் தான் விட்டு வேலைக்குச் செல்கிறாள். வீட்டுக்கு வந்ததும் எப்போதும் அம்மாவிடம் சர்ச்சை. “என்னைக் கெடுத்தது போலவே குழந்தைகளையும் செல்லம் கொடுத்துக் கெடுத்து விடாதே. எவ்வளவு நேரம் டிவி பார்க்க விடுகிறாய்? க்ரீம் பிஸ்கட் வாங்கிக் கொடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது…” இப்படி.
அதற்கெல்லாம் கொஞ்சமும் சலனமடையாத அந்த அம்மா இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள தன் மகன் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.
அவர் சொன்னது யோசிக்க வைத்தது. “இவ ஆயிரம் குறை சொல்றா நான் குழந்தையைப் பாத்துக்கறது பத்தி. ஆனாலும் எனக்கு வித்தியாசமா படல. அங்கே மகன் குழந்தைக்கு நான் ஒரு சட்டை போட்டு விடலாம்னு எடுத்தேன். “இது வேண்டாம் அத்தை. சம்மருக்கு ஸ்லீவ்லெஸ் தான் போடணும்”னு வேற ஒண்ணைப் போட்டுவிட்டா. எனக்கு அது சுருக்னு ஆயிடுச்சு. தப்பு யார்மேல இங்கே?”
அடிப்படையான ஒரு விஷயம் இங்கே தெளிவாகிறது. தன் மகள் பிரசவிக்கும் போதும் அவள் வயிற்றுக் குழந்தை மீதும் அம்மாக்களுக்குக் கூடுதல் ஒட்டுதல் இருக்கிறது. உடல் மற்றும் உளரீதியான மறுக்க முடியாத தொடர்பு இது. குழந்தை வளர்ப்பு பெரிதும் தாயின் பொறுப்பாகவே பார்க்கப்படும் நிலையில் பெற்றோர் மகனுடன் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தில் இது பல்வேறு சிக்கல்களைக் கொண்டு வருகிறது. நாத்தனார் வந்து ஓய்வெடுப்பதும் வீட்டு மருமகளே வேலைகள் அத்தனையும் செய்வதும், தான் ஓய்வெடுக்கத் தன் அம்மா வீட்டையே நினைத்து ஏங்குவதும் தாங்க முடியாத கொடுமையான நாடகங்களாகக் காலங்காலமாய்த் தொடர்ந்து வருகின்றன. கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்று விடும் இக்காலப் பெண்கள் பலரும் பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றிருப்பதால் திரும்ப வருவதே அரிதாகி விடுகிறது. குடும்பங்கள் உடைகின்றன.
ஆண் பெண் சமத்துவம் வீட்டில் இருந்து தொடங்கினால் என்ன? மனைவியின் தந்தை தாயுடன் ஒரு ஆண் வாழ்வதில், அல்லது இருவரின் பெற்றோரைக் காப்பதில் சமபங்கு எடுப்பதிலும் யாரது கிரீடம் இறங்கிவிடக் கூடும்? எல்லாருக்கும் வசதியாகவும் இணக்கமாகவும் இருக்க வேண்டிய இந்த அமைப்பு கலாச்சாரம், குடும்ப வழக்கம், சாதி என்று பல்வேறு சப்பைக் காரணங்களுக்காக அவமானமாகப் பார்க்கப்படுகிறது.
இப்படித் தான், சிந்தித்துப் பார்த்தால் கலாச்சாரம் என்று நாம் கட்டிக் காத்துக் கொண்டு வரும் பலவும் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவே இருக்கின்றன. காலத்துக்கேற்றாற் போல் வேண்டாதவற்றை மாற்றிக் கொள்வதில் என்ன தவறு? காலம் தோறும் மாறாத ஒன்றே ஒன்று அன்பும் காதலும் தான். கலாச்சாரங்களும், சம்பிரதாயங்களும் இவற்றை வளர்ப்பதற்கு மாறாக ஒடுக்குவதற்கும் சிதைப்பதற்குமே நிலவுகின்றன.
காதல் வயப்படும் இளைஞர்களிலிருந்து தான் மாற்றம் தொடங்க வேண்டும்.
தங்கமகன் என்றொரு தனுஷ் படம். தற்காலப் பெண்களை இதை விடக் கொடுமையாகச் சித்திரித்த படம் சமீபத்தில் வரவில்லை. ஆனால் உண்மை அதற்கு வெகுதூரத்தில் இல்லை என்பது தான் கசப்பு. காதலி நாகரிக உடை அணிவதையும், ஏன் பியர் குடிப்பதையும் உடலளவில் நெருங்குவதையும் கூட ஏற்றுக் கொள்ளும் காதலன் அவள் தன் வீடு தனக்கும் தன் துணைக்குமானதாய் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை ஏற்காமல் விலகிச் செல்வது யதார்த்தமாக அல்ல நாயகத்தன்மையாகக் கட்டமைக்கப்படுவது தான் விபரீதம்.
கணவன் வீட்டில் கேள்வி கேட்காமல் விழுந்து விழுந்து வேலை செய்பவளைம், இழுத்துச்
செருகிய புடவையுடன் கணவனுக்குப் பின் சோற்று மூட்டையுடன் ஓடி வருபவளையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் ஆதர்ச பெண்ணாகக் காட்ட விரும்புகிறார்களோ தெரியவில்லை.
இப்படங்களும் ஓடுகின்றன என்பது தான் வேதனை.
- தீபாலக்ஷ்மி