அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ….. பைபிள் கதைகள்
ஆதி காலத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பாரோன் மன்னனிடம் அடிமைகளாய்த் துன்புற்றனர்.
இஸ்ரயேல் மக்கள் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்ததால், அஞ்சிய பாரோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை எதிரி நாட்டினரோடு போரில் ஈடுபடுத்தினார். அதோடு பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்வதற்கும் அரசனால் ஆணையிடப்பட்டது.
அப்போது இஸ்ரயேல் லேவி குலப் பெண்ணொருத்தி கருவுற்று அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.
இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டு வைத்தாள்.
அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்து கொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று அந்தப் பேழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பாரவோனின் மகள் நைல் நதியில் நீராட வந்திருந்தாள். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள். அதைத் திறந்தபோது அதில் அழகான ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்.
அந்தக் குழந்தை இஸ்ரயேல் லேவி குலத்தை சேர்ந்ததுச் என்பதை அறிந்திருந்தும், பார்வோனின் மகள், அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். அப்போது அங்கிருந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள்.
“அழைத்து வா” என்று பாரவோனின் மகள் சொல்ல, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் குழந்தையின் தாயான அப்பெண்.
குழந்தை வளர்ந்தபின் அவள் பாரவோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். “நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்” என்று கூறி அவள் அவனுக்கு “மோசே” என்று பெயரிட்டாள்.
ஒருநாள் மோசே தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைக் கண்டார். கோபமுற்று அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
இச்செய்தியைப் பாரவோன் கேள்வியுற்று, மோசேயைக் கொல்லத் தேடினான். இதை அறிந்த மோசே பாரவோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
மோசே, அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அங்குள்ள ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஆண்டுகள் பல உருண்டன….
இஸ்ரயேல் மக்களோ அடிமைத் தனத்தால் துன்புற்று அழுது புலம்பி கடவுளிடம் முறையிட்டனர் .
மனம் இறங்கினார் கடவுள். விடுதலை பெற்றுத் தர கடவுள் மோசேவை தேர்ந்தெடுத்தார்.
ஒருநாள், மோசே ஆட்டு மந்தையை மேய்த்து வந்த போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அந்த முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்த போதும் தீய்ந்து போகவில்லை.
அதைப் பார்ப்பதற்காக மோசே முட்புதர் அருகே வருவதை ஆண்டவர் கண்டார். “மோசே, மோசே” என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.
ஆண்டவர், ” உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.
அப்போது ஆண்டவர் கூறியது, எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்டேன், அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்.
“எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து வேற ஒரு வழமான நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்பப் போகிறேன்.”
“நீ இஸ்ரயேல் மக்களிடம், போ, நானே உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். பிறகு, நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். அடிமைபட்டிருக்கும் எம் மக்களை பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக அனுமதி தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
தயக்கத்தோடு மோசே தனது சகோதரன் ஆரோனுடன் பாரவோன் மன்னனிடம் சென்று “ஆண்டவர் அடிமைப்பட்ட மக்களை உம்மிடமிருந்து அழைத்து போகச் சொன்னார்” என்று அறிவித்தனர்.
பாரோன் மன்னன் கோபமுற்று மோசேவையும் ஆரோனையும் ஏளனம் செய்து அடிமைப்பட்ட மக்களை விடுவிக்க மறுத்தான். மேலும் இஸ்ரயேல் மக்களுக்கு அதிகத் துன்பங்களை அளித்தான்.
அதைக் கண்ட ஆண்டவர் மோசேயின் வழியாக பாரவோன் மன்னனுக்கு அச்சம் தரும் அற்புதங்களைக் காட்டினார்.
மோசே தனது கோலை எறிந்தால் பாம்பாக மாறியது.
நயில் நதியின் நீரை இரத்தமாக மாற்றினார்.
நாடு முழுவதும் எங்கும் தவளைகளால் நிரம்பச் செய்தார்.
நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய கால் நடைகளுக்கு மிகக் கொடிய கொள்ளை நோய் வந்தது
மிகப் பெருந்திரளான வெட்டுக் கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலை முடுக்கெல்லாம் பரவின.
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து, “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன். எனக்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறி இறுதியாக இஸ்ரயேல் மக்கள் பாரவோன் நாட்டிலிருந்து போக அனுமதித்தான்.
கடவுள் மக்களைப் பாலை நிலத்தைச் சுற்றிச் செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த அவர்களைச் சுற்றி மேகத் தூண்களாகவும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூண்களாகவும் இருந்தார்.
எகிப்திலிருந்து அனைத்து இஸ்ரயேல் மக்களும் மோசேயுடன் போய்விட்டார்கள் என எகிப்திய மன்னன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் மனம் மாற்றம் கண்டது. “நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு வேலை செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?” என்று யோசிக்கத் தொடங்கினான்..
எனவே அவன் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், அவற்றின் படைத் தலைவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டான்.
இதை அறிந்த ஆண்டவர் மோசேயிடம், “நீ அழைத்துச் செல்லும் இஸ்ரயேல் மக்கள் பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் இறங்கும்படி அவர்களிடம் சொல்.” என்றார்.
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கிருந்த அவர்களை நெருங்கினர்.
பார்வோன் படைகளோடு நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்ட, இஸ்ரயேல் மக்கள் பெரிதும் அச்சமுற்றவர்களாய் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.
அவர்கள் மோசேயை நோக்கி, “எகிப்தில் சவக் குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலை நிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!
மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்! நிலை குலையாதீர்கள்! இன்று ஆண்டவர் உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை” என்றார்.
ஆண்டவர் தனக்குக் கூறியபடி மோசே கையிலிருந்த கோலை உயர்த்தி கடல்மேல் நீட்ட கடல் நீர் இரண்டாகப் பிரிந்தது. வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
இஸ்ரயேல் மக்களை மேகத் தூண்களும் இறைத் தூதர்களும் அரவணைக்க, எகிப்தியரின் அணி வகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணி வகுப்புக்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.
பாரவோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன் இஸ்ரயேல் மக்கள் கடலைக் கடந்தவுடன் மோசே கையிலிருந்த கோலை உயர்த்த கடல் நீர் ஒன்றுசேர்ந்தது. எகிப்திய தேர்ப்படை முழுவதும் நீரில் முழ்கி நிலை குலைந்து அமிழ்ந்து போயினர்.
இவ்வாறு ஆண்டவர் எகிப்தியர் பிடியினின்று செங்கடலைக் கடக்கச் செய்து இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.
விடுதலை அடைந்த இஸ்ரயேல் மக்களுக்குப் பாலைவனத்தில் ஆண்டவர் வானிலிருந்து மன்னா என்ற உணவையும் பாறை நடுவிலிருந்து நீரையும் வரச் செய்தார்.
அரசியல் விடுதலை பெற்ற மக்களுக்கு ஆன்மீக விடுதலை தர, கடவுளும் மோசேவிடம் பத்துக் கட்டளைகள் கொண்ட பலகையை அளித்தார்.
-ம. பெஞ்சமின் ஹனிபால்