அமெரிக்கத் தேர்தல் – பகுதி 4
ஏப்ரல் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில பிரைமரி, காகஸ் நடந்து முடிந்து விட்ட நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் சார்பிலான அதிபர் வேட்பாளரை அடையாளம் காண்பதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் விடை தெரியவில்லை.
ஏப்ரல் ஐந்தாம் தேதி விஸ்கான்சின் மாநில பிரைமரியில், டெட் க்ரூஸ் வென்று 36 பிரதிநிதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். இதுவரையில் அக்கட்சியில் முன்னிலை வகிக்கும் டானல்ட் ட்ரம்ப், 6 பிரதிநிதிகளின் நம்பிக்கையையே பெற முடிந்தது.
துவக்கம் முதலே விஸ்கான்சின் மாநிலத்தில் ட்ரம்ப்க்கு பெரிய அளவில் வரவேற்பில்லாமல் இருந்தது உண்மையெனினும், விஸ்கான்சினில் அவரது செல்வாக்கு பெருமளவில் சரிந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இத்தேர்தலுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ‘கருச்சிதைவுக்குச் சம்மதிக்கும் பெண்கள் ஏதாவது ஒரு விதத்தில் தண்டிக்கப்பட வேண்டும்’ என்ற அவரது கருத்து இத்தேர்தலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
மேலும் சிலர், டானல்ட் ட்ரம்ப், கட்சியின் சில அடிப்படைக் கொள்கைகளை ஏற்காதவராதலால், குடியரசுக் கட்சியின் தலைமை அவருக்கு ஆதரவளிக்காமல் அவரைத் தோற்கச் செய்வதில் முனைந்தது தான் ட்ரம்பின் தோல்விக்குக் காரணம் என்கிறார்கள். இக்கட்சியைச் சார்ந்த, பிரதிநிதிகளின் சபை சபாநாயகரான பால் ரையன் விஸ்கான்சின் மாநிலத்தவர். இவர் ட்ரம்பை ஆதரிக்காததும் விஸ்கான்சினில் ட்ரம்ப் வெற்றி பெற முடியாததற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற பிரைமரி / காகஸ்களில் பல்வேறு மக்கட்தொகைப் பிரிவின்படி ட்ரம்பை ஆதரித்தவர்களின் சதவிகிதப் பங்கைக் கீழே காணலாம்.
ஆண்டு வருமானம் 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் – 42%
கல்லூரி படிப்பை முடிக்காதோர் – 40%
எந்தவொரு கட்சிக் கொள்கைகளையும் சாராதோர் – 36%
மிதவாதக் கொள்கையுடையோர் – 39%
வலதுசாரிக் கொள்கையுடையோர் – 34%
குடியரசுக் கட்சி சார்ந்தோர் – 38%
விஸ்கான்சினைப் பொறுத்தவரை மற்ற பிரிவுகளின் வாக்குச் சதவீதம் சற்றேறக்குறைய அதே அளவில் இருந்தாலும், வலதுசாரிக் கொள்கையுடையோரின் ஆதரவு 27%, குடியரசுக் கட்சி சார்ந்தோரின் ஆதரவு 33% எனக் குறைந்து காணப்பட்டது.
மாறாக விஸ்கான்சின் மாநில ஆளுநர் ஸ்காட் வாக்கரும், பல உள்ளூர் வானொலி நிலையத்தாரும் டெட் க்ரூஸுக்கு அளித்த ஆதரவு தான் தனது தோல்விக்குக் காரணம் என்று டானல்ட் கருதினார்.
குடியரசுக் கட்சிக்குள் தான் அதிபர் வேட்பாளராகக் கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் குறுக்கு வழிகளைக் கையாள்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் டானல்ட். ஊடகங்களும் ஜூலை மாதத்தில் கிளீவ்லாண்டில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சி மாநாட்டில் டானல்ட் ட்ரம்பை ஓரங்கட்டி, பால் ரையனை வேட்பாளராக அறிவிக்க முயற்சிகள் நடப்பதாகச் செய்திகளைக் கசியவிட்டன. பால் ரையன் இதை மறுத்தாலும், கட்சித் தலைமை இதை மறுத்து அறிக்கை வெளியிடாமல் இருப்பது டானல்டை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இது போன்றதொரு முடிவினைக் கட்சித் தலைமை எடுக்குமானால், கலகங்கள் வெடிக்குமென டானல்ட் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். சமீப காலங்களில் கட்சிக்குள்ளிருக்கும் சில பிரிவினர் அவரது கூட்டங்களில் வேண்டுமெனவே வன்முறைகளை நிகழ்த்தி வருவதாகவும் குறைபட்டுள்ளார்.
இடையே டானல்ட் மற்றும் க்ரூஸ் தரப்பில் பல அருவருப்பான, சிறு பிள்ளைத்தனமான அவதூறுப் பரிமாற்றங்களும் அரங்கேறின. டெட் க்ரூஸை ஆதரிக்கும் ‘மேக் அமெரிக்கா ஆஸம் (Make America Awesome)’ எனும் அமைப்பினர் டானல்டின் மனைவி மெலேனியாவின் அரை நிர்வாணப் படத்தை வெளியிட்டு ‘இவர் உங்களது ‘முதல் பெண்மணியாக’ (first lady) இருக்க வேண்டுமா? டெட் க்ரூஸுக்கு வாக்களியுங்கள்’ என விளம்பரமிட, ஆத்திரமடைந்த டானல்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் உனது (க்ருஸின்) மனைவியின் வண்டவாளத்தை வெளியிட்டால் தாங்கமாட்டாய்’ எனப் பதிவிட, தேர்தல் களம் பாரம்பரிய கண்ணியத்தை இழந்து சிறுவர்களின் சண்டையாகிவிட்டது என்று பல பத்திரிகைகள் கிண்டலடித்தன.
இதனிடையே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியிலும் நிலைமை மாறி, விஸ்கான்சின் பிரைமரியில், எதிர்பாராத அளவில் பெர்னி சாண்டர்ஸ் ஹிலரி கிளிண்டனைத் தோற்கடித்து வென்றார். மார்ச் 22ம் தேதி ஐடஹோ, யூட்டா விலும், மார்ச் 26ம் தேதி அலாஸ்கா, ஹவாய், வாஷிங்டனிலும், ஏப்ரல் 5 விஸ்கான்சினிலும், ஏப்ரல் 9 வையோமிங்கிலும் நடைபெற்ற ஏழு தேர்தல்களிலும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றதில் கிளிண்டன் தரப்பு சற்றே ஆட்டம் கண்டுள்ளது.
பெர்னி சாண்டர்ஸின் சோஷலிசக் கொள்கைகள் இளவயதினரிடையே குறிப்பாக ‘மிலேனிய’ வயதினர் எனப்படும் பதின்ம வயதினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல வேட்பாளர்கள், ஆஃப்கானிஸ்தான், சிரியா, வட கொரியா என்று வெளிநாட்டுச் சிக்கல்களை அமெரிக்கா எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று பேசி வரும் வேளையில், இலவச கல்லூரிப் படிப்பு, அகவிலைக்கேற்ற குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், பெரிய நிறுவனங்களுக்கு வரி உயர்வு என்று சாண்டர்ஸ் அடிப்படை விஷயங்களைப் பேசுவது இவர்களைக் கவர்ந்துள்ளது. ஆனாலும் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் கிளிண்டன் முன்னணி வகித்து வருகிறார். சூப்பர் டெலிகேட்ஸ் என்று சொல்லப்படும் கட்டுப்பாடுகளற்ற பிரதிநிதிகளின் ஆதரவும் கிளிண்டனுக்கு அதிகளவில் உள்ளது அவரது தரப்பினருக்குச் சாதகமாகக் காணப்படுகிறது. ஹிலரியும் பெரிய அளவில் சாண்டர்ஸைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், டானல்டின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து அவருக்கு பதிலடிகள் கொடுத்து வருகிறார்.
இக்கட்டுரை எழுதும் தினமான ஏப்ரல் 19 நியுயார்க் பிரைமரிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மணித்துளிகளில் இம்மாநில முடிவுகள் வெளியாகும். எனினும் பல வல்லுனர்களின் கருத்துப்படி குடியரசுக் கட்சி சார்பில், நியுயார்க்கில் தனது கட்டிடங்கள், மனைகள் வியாபாரமென்று வியாபித்திருக்கும் சாம்ராஜ்யத்தைக் கொண்ட டானல்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் இரண்டு முறை செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியுயார்க்கின் மூலை முடுக்கெல்லாம் மனப்பாடமாக அறிந்த ஹிலரி கிளிண்டனும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. குடியரசுக் கட்சியில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி கனெக்டிகட், டெலவர், மேரிலாந்து, பென்சில்வேனியா மற்றும் ரோட் ஐலந்து ஆகிய இடங்களில் காகஸ்கள் நடைபெறவுள்ளன.
இம்மாத முடிவில் ஜனநாயகக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் குடியரசுக் கட்சியின் இழுபறி நிலை ஜுலை மாத மாநாடு வரையில் விலகாத நிலையே காணப்படுகிறது.
– ரவிக்குமார்