அன்னைக்கு ஓர் அன்னையாக !
மழை நீரில் நான் நனைந்தால்
ஜலதோஷம் வந்துவிடும் எனத்
தன் முந்தானையால் தலை துவட்டினாயே…
தாயே ! தோஷம் உனக்கு வராதா?
கையளவு சோறு பானையில் இருக்க
ஒருகவளம் தண்ணீரை தான் முழுங்கி – உன்
பசியை மறந்து என் பசி போக்கினாயே …
தாயே ! பசி உனக்கு வராதா?
காய்ச்சலில் இரவெல்லாம் நான்பிதற்ற
காத்துக் கருப்பு அண்டியதோ எனத்
தன் குலதெய்வதிற்கு காசு முடிந்தவளே ….
தாயே ! காய்ச்சல் உனக்கு வராதா?
கல்தடுக்கி நான் விழுந்தாலும்
கண்ணடி பட்டு விழுந்தேன் என
என் காலடி மண்ணெடுத்து திருஷ்டி கழித்தவளே …
தாயே ! திருஷ்டி உனக்கு விழாதா?
இன்னுமோர் பிறப்பு உண்டெனில்
தாயே, உனக்கு நான் அன்னையாக !
இப்பூமிதனில் பிறந்திட
கடவுளிடம் யாசிக்கிறேனே!
உமையாள்