ஆட்டிஸம் – பகுதி 5
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தெரபி (therapy) முறையில் தொடர்பயிற்சி செய்வதே ஆட்டிஸத்தைக் கட்டுப்படுத்தும் ஒரே முறையாகும். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இவை போன்ற தெரபிகளும், அவற்றைக் கற்றுத்தரும் தெரபிஸ்ட்டுகளின் அறிவுரைகள் மட்டுமே வழி. பெற்றோர், தெரபிஸ்ட்டுடன் கைகோர்த்து, ஒவ்வொரு தினமும் எதிர்கொள்ளும் புதுவிதமான சோதனைகளைத் தொடர்ந்து சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்தத் தெரபிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு செய்வது என்பது குறித்தும், முக்கியமாக அவை குறித்துப் பெற்றோருக்கு இருக்க வேண்டிய புரிதல்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம். எங்களது அனுபவம் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை விரிவாக வெளியிடுகிறோம்.
பேச்சுப் பயிற்சி (Speech / Language Therapy): பேச்சுக்குத் தேவையான ஒலிகளை உண்டாக்குவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பேச்சுப் பிறழ்ச்சி (Speech Disorder) என்று பெயர். வார்த்தைகளைச் சரியாக இணைத்து, ஒரு வாக்கியமாக மாற்றி மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்குவதில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மொழிப் பிறழ்ச்சி (Language Disorder) என்று பெயர். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட தெரபிஸ்ட்கள் இந்த இருவிதமான பிரச்சனைகளையும் கவனித்து அவற்றைக் குறைக்கும் வகையில் பயிற்சி தருவதில் வல்லுனர்கள், வல்லவர்கள். அவற்றில் பட்டம் பெற்றவர்கள், பல சான்றிதழ்களுக்கும் சொந்தக்காரர்கள். தொடக்கத்தில், அவர்கள் குழந்தையுடன் பேசிப் பழகி குழந்தைகளைக் குறித்து முழுவதுமாக அறிந்து கொள்கின்றனர். இவை சாதாரணமாகச் செய்யப்படும் வருடாந்திரச் சோதனைகளிலோ அல்லது பள்ளிகளில் செய்யப்படும் மருத்துவ முகாம் மூலமாகவோ நடத்தப்படும். இவை போன்ற சோதனைகள், ஏதேனும் குறையிருக்கக் கூடுமோ என்று சந்தேகப்படும் சில பெற்றோர்களினால் தொடங்கப்படுவதும் உண்டு. ஏற்கனவே ஓரளவுக்குப் பேசும் குழந்தைகளுக்கு தெரபியின் மூலம் பேச்சுத்திறனை வளர்ப்பது சாத்தியம், ஆனால் முழுவதுமாகப் பேச இயலாத குழந்தைகளுக்குத் தெரபியின் மூலம் பேச்சு வர வைப்பதென்பது மிகவும் கடினமான காரியம்.
இது போன்ற குழந்தைகளுக்கு, படங்களின் மூலம் தங்களின் வெளிப்பாடுகளைக் காட்டும் பயிற்சி அளிப்பது பயன் தருவதாய் இருக்கும். இதற்கு Picture Exchange Communication System (PECS) என்று பெயர். உதாரணத்திற்கு, நீர், உணவு, கழிவறை போன்ற படங்களைக் காட்டி, அதற்கான தேவை வருகையில் குறிப்பிட்ட அந்தப் படங்களைக் காட்டுமாறு பயிற்சி தருவதே இந்த முறையாகும். மீண்டும் மீண்டும் அதே படங்களைப் பலமுறை காட்டிப் பயிற்சி தந்து, குழந்தைகளின் மனதில் அந்தப் படங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் படங்களைக் காட்டிப் பயிற்சி தருகையில், குழந்தையைப் பயிற்சியாளரின் வாயசைப்பைப் பார்ப்பதற்குப் பழக்குவார்கள். படத்தைப் பார்ப்பதுடன், அதற்கான ஒலி அவர்களின் வாயசைப்பில் வருவதையும் கவனிக்க வைப்பர். இதன்மூலம் அந்தப் படத்திற்கான பெயர் என்ன என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பர். தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் விரிவடைந்த இந்த நாட்களில், இதுபோன்ற பயிற்சிகளைக் கொடுப்பதற்கு ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய் கைபேசிகளுக்கான மென்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு “டச் சேட்” (Touch Chat) என்ற அப்ளிகேஷன் இந்த PECS முறைப் பயிற்சியைப் பல படங்களின் மூலம் மிகவும் திறமையான வகையில் அளிக்கிறது.
தொழில்முறைச் சிகிச்சை (Occupational Therapy): இந்த முறை, ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து பயிற்றுவித்து அவர்களின் மூளைக்குள் செலுத்தி அதனைப் புரிய வைத்து, அவற்றைப் பழக்கமாக மாற்றுவது. குழந்தைகளுக்கு ”சுய கவனிப்பு” கற்றுத் தருவதே இந்த முறையின் முக்கியக் குறிக்கோள். சிறு விஷயங்களான கரண்டி கொண்டு உணவு உட்கொள்வது தொடங்கி, பல சாதாரணமாகச் செய்யப்படும் செயல்களான விளையாட்டு, மிதிவண்டி ஓட்டுவது, ஏணியில் ஏறி இறங்குவது, சறுக்கு மரத்தில் இறங்குவது போன்றவற்றைக் கற்றுத்தருவதே இந்த முறையின் நோக்கம். இதுபோலவே ஒரு பாட்டிலைத் திறப்பது, கதவைக் கைப்பிடி பிடித்துத் திறப்பது, எழுதுகோலைக் கையாள்வது, கத்திரிக்கோல் கொண்டு காகிதத்தைக் கத்தரிப்பது, பேண்ட் ஜிப் மேலே கீழே நகர்த்துவது என்று அடிப்படையாய் மிகச் சாதரணமாய்த் தெரியும் விஷயங்களையும் பயிற்சி அளிப்பதும் இதன் நோக்கமே. குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுப்பதுடன், பெற்றோருக்கும் பயிற்சி கொடுப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கின்றனர். இதன் மூலம் வீட்டில் பலமுறை மீண்டும் மீண்டும் பெற்றோரால் குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்க முடிகிறது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் பல முறை திரும்பத் திரும்ப பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பெற்றோர் இவற்றை அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்தப் பயிற்சியினால் பயன் பெற்று, முன்னேற்றமடைந்த குழந்தைகள் ஏராளம்.
இசைச் சிகிச்சை (Music Therapy): இசை பலவித அதிசயங்களைப் புரிய வல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களுக்கும் இசையைக் கேட்கும், ரசிக்கும், புரிந்து கொள்ளும் காதுகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதத்தில் இசையை உணர்கின்றன. இசை, பல விஷயங்களைப் பயிற்றுவிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. முழுவதுமாக பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்கு பியானோ, டிரம்ஸ், கிடார் போன்ற இசைக்கருவிகளின் மீது நாட்டம் இயற்கையிலேயே ஏற்படுவதாகத் தோன்றுகிறது. எங்கள் மகனுக்குப் பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துக்களின் மீது அலாதிப் பிரியம். அதனால், அவனுடைய பியானோவில் இசைச் சிகிச்சை தருபவர் A முதல் G வரையிலான எழுத்துக்களை ஒட்டி வைத்துள்ளார். இசைக் குறிப்புகளை மனதில் வாங்கிக் கொண்டு ஒரு பாடலை வாசிப்பதற்கு இந்த எழுத்துக்களை ஒட்டி வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது பல நாட்களாகப் பொறுமையுடன் செய்ய வேண்டிய முயற்சி, ஆனால் பலனளிப்பதாகவே உள்ளது.
எங்கள் மகனுக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். இதனை உணர்ந்து கொண்ட சிகிச்சையாளர், அவனுக்காக இசைக் கருவிகளை இசைப்பதும் பாடல்களைப் பாடுவதுமாக அவனைத் தன்னுடன் இணைந்து செயல்படப் பயிற்சியளிக்கிறார். இசையில் கவனமாக இருக்கையில், சொல்லித்தரப்படும் சிகிச்சைகளிலும் கவனம் செலுத்த இயல்கிறது, அதன்மூலம் சிகிச்சையாளர்களின் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொள்ள முடிகிறது. பொதுவாக, இந்தக் குழந்தைகளில் இருக்கும் குறை எந்த ஒரு செயலிலும் தொடர்ந்து கவனம் செலுத்த இயலாது என்பதே. இசையின் மூலம் இதனை மாற்றி, அவர்களைக் கவனம் செலுத்த வைக்க இயலும் என்பது மிகவும் அதிசயமான உண்மை. எங்களைப் போன்ற பெற்றோருக்கு அது ஒரு வரப்பிரசாதம். பெற்றோருக்கு இசை ஆர்வம் இருப்பின் குழந்தையை அதில் ஈடுபடுத்துவது இன்னும் எளிதாக இருக்கும். பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகள் இசையின் மூலம் தங்களை வெளிப்படுத்தும் அதிசயம் பல குழந்தைகளிடம் கண்டோம்.
தண்ணீர் சிகிச்சை (Water Therapy): சில குழந்தைகளுக்குத் தண்ணீரில் விளையாடுவதில் விருப்பம் அதிகம். எங்கள் மகனுக்கு தண்ணீருக்குள் இருப்பதற்கு அலாதிப் பிரியம். நாங்கள் ஃப்ளாரிடா மற்றும் பஹாமாஸ் போன்ற ஊர்களுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது, ஒவ்வொரு தினமும் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தண்ணீருக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தான். தண்ணீருக்குள் இருக்கையில், நாங்கள் எது கேட்டாலும் செய்வான். 1 லிருந்து 100 வரை எண்ணுவதிலிருந்து, தெரிந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்வது என அனைத்து வேலைகளையும் நாங்கள் கேட்டபடி செய்து முடிப்பான். இந்த சந்தர்ப்பங்களில், அவனிடம் தொடு உணர்ச்சி தூண்டப்பட்டு, தொட்டு உணரும் திறனும் அதிகமாகக் காணப்படும். மணலைத் தொட்டு காய்ந்த மணலா, ஈரமான மணலா என்று அறிவது, செருப்புப் போடாமல் நடந்து மண்ணின் ஈரத்தை உணர்வது, நீருக்குள் இறங்குகையில் உடம்பு குளிர்த்தன்மையை உணர்வது போன்ற உணர்வுகள் வெளிப்படும்.
எங்கள் மகன் இன்னும் முழுவதுமாக நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் பல ஆட்டிஸ்டிக் குழந்தைகள் நீச்சலில் மிகவும் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக, இதுபோன்ற குழந்தைகளின் திறமை அனைத்தும் ஏதேனும் ஒன்றிரண்டு விஷயங்களில் செறிந்து காணப்படும், அந்த ஒரு விஷயம் நீச்சலாகக் கூட இருக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாங்கள் கேள்விப்பட்ட வரையில், இந்தப் பயிற்சி கொடுக்கும் சிறப்புச் சிகிச்சையாளர்கள் அதிகமாக இல்லை. மற்ற சிகிச்சை அளிப்பவர்களே ஓரளவுக்குத் தண்ணீரில் வைத்துச் சொல்லித்தரும் பயிற்சிகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்கின்றனர். தண்ணீர் பொதுவாக இவர்களை அமைதிப் படுத்துகிறது. இந்த அமைதியான நேரங்களில், சாதாரணமாக அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சி அளிப்பது எளிதாகிறது, மற்றும் அவர்களும் நன்றாகக் கவனித்துப் பின்பற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தண்ணீருக்கு உள்ளே சென்று விளையாடும் ஆர்வம் இருப்பின், இந்த முறை மிகவும் பயனுள்ளதாக முடியும்.
ஹிப்போ சிகிச்சை (Hippo – Horse – Therapy): சில சமயங்களில் ஆட்டிஸக் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதைக் காட்டிலும், மிருகங்களுடன் பழகுவதற்குப் பிரியப்படுகின்றனர். அவர்களுக்கு மிருகங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது எளிதாக இருக்கிறதாம். மிருகங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் அமைத்துத் தருவது, அவர்கள் மனிதர்களுடன் பழகுவதற்குப் பயிற்சி தரும் முதல் படியாகக் கொள்ளலாம். எங்கள் மகனை இந்தச் சிகிச்சைக்காக குதிரைகளிடம் அழைத்துச் செல்கிறோம், குதிரையின் மீதமர்ந்திருக்கையில் மிகவும் அமைதியாகவும், சொல்வதைக் கேட்கும் தன்மையுடன் இருக்கிறான். இந்த நிலையிலும் பல புதிய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க முடிகிறது. குதிரையில் அமர்ந்து பல சுற்றுக்கள் போய்வரச் செய்வர். ஒவ்வொரு முறையும் வேறு வேறு சிறிய செயலைச் செய்யச் சொல்லித் தருவர். உதாரணமாக, 45 நிமிட சிகிச்சையில், முதல் சுற்றில் வடிவங்களை வரிசைப்படுத்துவது, இரண்டாம் சுற்றில் கூடைப்பந்தை எடுத்துக் கூடையில் போடுவது, மூன்றாவது சுற்றில் புதிர்களை விடுவிப்பது ஐந்தாவது சுற்றில் வண்ணம் தீட்டுவது என வெவ்வேறு செயல்களைச் செய்யப் பழக்குவர். குதிரைச் சவாரி குழந்தைகளின் சிந்தனைகளையும், செயலையும் சமநிலைப் படுத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவி செய்கிறதாம். பல குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை அதிசயிக்கத்தக்க முன்னேற்றங்களைக் காட்டுவதாகக் கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு முறையும் இந்தச் சிகிச்சை நேரம் முடிகையில், எங்கள் மகன் குதிரைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடக் கொடுப்பான். அது சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே, மனிதர்களிடம் பேசுவது போல அதன் முகம் பார்த்து “Thank You” என்று அவன் விடைபெற்று வருவது பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். இதில் அவன் காட்டும் ஈடுபாடு எங்களை மறுபடியும் அவனை அங்கே அழைத்துச் செல்ல வைக்கிறது.
பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு (Applied Behavioral Analysis – ABA): ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் முக்கியமான, பயன் தரக்கூடிய ஒன்று. இது மிகவும் பிரபலமான ஒன்றும் கூட. பல இடங்களில், பல விதங்களில் பேசப்படும், ஆய்வு செய்யப்படும் இந்தச் சிகிச்சை முறை பற்றி ஒரு தனி அத்தியாயம் எழுதுவது அவசியம். இதனை அடுத்த இதழில் காண்போம்.
(தொடரும்)
பின்குறிப்பு: ஏப்ரல் மாதம் ஆட்டிஸ சிறப்பு மாதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைப் பயணங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அவை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும், உங்களின் ஆதரவைத் தெரிவிப்பதற்கும் கீழ்க்கண்ட இணையதளங்களிற்குச் செல்லவும்:
https://www.crowdrise.com/TeamSanju
மூலம்: சுரேஷ் ரங்கமணி
தமிழாக்கம்: வெ. மதுசூதனன்.