மழைப்போல நான்
மேகத்தாய் ஈன்றெடுக்கிறாள்
ஒரு நொடியில்
பல கோடி
நீர்த் திவலைகளை..
அதை
மழை என்றீர்கள்.
பிறகு
அது மலையில்
ஒன்றுக்கூடியவாறு
வீழ்கிறது.
அருவி என்றீர்கள்.
பிறகு
நதிநீர் என்றீர்கள்
ஆற்றுநீர் என்றீர்கள்
குளத்து நீர் என்றீர்கள்.
வாய்க்கால் தண்ணீர் என்றீர்கள்
கிணறு, கேணித்தண்ணீர் என்றீர்கள்
மிஞ்சியது எல்லாம்
மண்ணில் புதைந்தாலும்
அதையும்
கருவறுக்கும் வெறியோடு
உறிஞ்சி உறிஞ்சியெடுத்து
ஆழ்துளை கிணறு என்றீர்கள்
பம்புசெட் தண்ணீர் என்றீர்கள்
உப்புத்தண்ணீர்
நல்லத்தண்ணீர்
பிரித்துப் பிரித்து தரம் பார்த்தீர்கள்
குடிநீர் என்றாக்கி
அதையும்
வடிகட்டி..
மினரல் வாட்டர் என்றீர்கள்
கேன் வாட்டர் என்றீர்கள்
மழையாக இருந்து
எது எதுவாகவோ மாறினாலும்
நீரின் மூலக்கூறு
H2O என்பதுமட்டுந்தான்
தோழர்களே….
அதுப்போலத்தானே
நானும்…
உங்கள் வகைமைக்கு ஏற்றுவாறும்
உங்கள் குணக்கட்டமைப்புக்கு ஏற்றவாறும்
நானும் உங்களுக்கு
காட்சிப்படுகிறேன்
எதுவாக எதையாகவோ
எனை நினைத்தாலும்
எனது இயல்பு
ஒரே சமன்பாட்டிலே
பயணிக்கிறது. பயணிக்கப்படுகிறது.
-இரா.சந்தோஷ் குமார்.