அம்மா ஒரு தீர்க்கதரிசி
ஒரு வியாழக்கிழமை அதிகாலை… அமெரிக்காவில், கணேஷின் வீடு என்றும் போல் அன்றும் வேலை நாளுக்கான காலை நேரப் பரபரப்பில் தொடங்கியிருந்தது. அவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், முதல் மீட்டிங்க் காலை 7 மணிக்கு. லக்ஷ்மிக்கும் அலுவலகம் செல்ல வேண்டும், சற்று லேட்டாக அலுவலகம் தொடங்குகிறதென்றாலும் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்குத் தயார் செய்து, பெரியவளைப் பள்ளிப் பேருந்திலும், சிறியவளைப் பள்ளியிலும் சென்று சேர்த்து விட்டுத்தான் அவள் அலுவலகத்திற்குச் செல்ல இயலும். எல்லோருமே பரபரப்பாய் இயங்கும் நேரம். இந்த நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான சொரூபமும், அடிமன எண்ணங்களும் வெளிப்படும் போலும்.
“ஏன்னா, வர்ற ஞாயித்துக் கெழம என்ன நாள்னு ஞாபகம் இருக்கோன்னோ?” லக்ஷ்மி….
காலையில் முதலாவதாக இருக்கும் பட்ஜெட் ரிவ்யூ நினைவில் முழுவதும் மூழ்கியிருந்த கணேஷிற்கு இவள் என்ன கேட்கிறாள் என்று புரிவதற்கே சில மணித்துளிகள் தேவைப்பட்டன. புரிந்தாலும் எதைப் பற்றிக் கேட்கிறாள் என்று யூகிக்க முடியவில்லை. ”ஏதாவது பர்த்டே, ஆனிவர்ஸரி மறந்துட்டோமோ… செத்தடா சேகரு” என்று உள் மனம் சொல்ல, ஆண்களுக்கே உரிய தப்பிக்கும் தொனியில், “எதப்பத்திடி சொல்ற?” எனப் பொதுவாகக் கேட்டு வைத்தான்.
“மதர்ஸ் டேன்னா… எப்டி மறந்தேள்?”
“ஓ அதுவா, மறந்தேன்னு எப்டி முடிவு பண்ணே” – இப்பொழுதும் பிடி கொடுக்காத பதில்…
”இல்லன்னா, ஞாபகம் இருக்கா, கரெக்டா பத்து வருஷத்துக்கு முன்ன…. இதே நாள் நாம எல்லாரும் க்ரேண்ட் கேன்யன் போயிருந்தோமே… உங்கம்மா கூட நம்மோட இருந்தாங்களே…..”
கணேஷின் அடித்தளத்தை ஆட்டி வைத்தது அந்த நினைவூட்டல். மீட்டிங்க் மறந்தது, பட்ஜெட் ப்ரெசண்டேஷன் மறந்தது… உலகமே மறந்து பின்னோக்கிச் செல்லத் தொடங்கினான் கணேஷ்……
போம்மா.. நோக்கு வேற வேலையே இல்ல” முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு விறுவிறுவென வெளியே சென்று விட்டான் கணேஷ்.
“அப்டி என்னடா கேட்டுட்டேன்? அந்தப் பரண்ல ஏறி, கவுத்து வெச்சிருக்கிற ரெண்டு ஜாடிய எடுத்துக் குடுடா, ஊறுகாய் நிரப்பி வெக்குறேன்னு கேட்டா….. அவ்ளோ கோபமா நோக்கு? வா, வா, ராத்திரிக்குக் கொட்டிக்க வருவயோனோ அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி” கணேஷைத் திட்டுவதாக நினைத்து, அவன் படாரென்று கோபத்தில் சாத்திவிட்டுப் போனதில் இன்னமும் ஆடிக்கொண்டிருக்கும் கேட் கதவிடம் பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் மங்களம் மாமி.
மங்களம் மாமியும், கணேஷும் இதுபோல சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. இப்பொழுது அவன் கோபமாகக் கிளம்பிச் சென்றது, வெளியில் கிரிக்கெட் மட்டையும் கையுமாக நிற்கும் நண்பன் வெங்கடேசனுடன் கைகோர்த்துக் கொள்ளத்தான். கிரிக்கெட் என்றால் உயிர் அவனுக்கு. சித்திரை மாதத்தில் தரையில் விழும் சூரியனின் கிரணங்கள் எல்லாம் கணேஷ் மற்றும் அவன் நண்பர்கள் தலையில்தான். பள்ளி இல்லாத தினங்களில் காலையிலேயே தொடங்கி விடும். கணேஷின் வீட்டிற்கு எதிரே, ஒரு மிகப்பெரிய திடல், திடலின் மறுபுறம் ஊருக்குக் குடிநீர் வழங்கும் ஊருணி. “கரும்புச் சாறு மாரி இனிப்பா இருக்கும் இந்த ஊரணித் தண்ணீ” அந்த ஊரின் வாய்வழித் தகவல்.
குளத்தின் மறுமுனையில் புராதனமான சிவன் கோவில் பதினாறடி உயர மதிற்சுவருடன் கம்பீரமாய் நிற்கும். இந்தச் சிவன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டால் கணேஷ் தன்னையே மறந்துவிடுவான். கட்டி முடிக்கப்பட்டு நூறு வருட நிறைவைக் கடந்த வருடம்தான் கொண்டாடினர்.
கணேஷின் அப்பா உயிருடன் இருந்த பொழுது தினமும் அந்தக் கோவிலுக்குச் செல்வார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இறைவனைப் பார்ப்பதற்காக. அவருடன் கணேஷும் உடன் செல்வான் – அவனுக்கு அங்கே தரப்படும் பிரசாதங்களின் மீது அலாதியான பிரியம். அப்பா இறந்த பின்னர், அந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அப்பா உடன் வருவதாக அவனுக்கு ஒரு நினைப்பு. கோவிலின் பெரும்பாலான பகுதிகள் கும்மிருட்டாய் இருக்கும். பல ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகப் பெரிய கோவில், மின்சாரக் கட்டணம் கட்டி மாளாது என்பதால் இருக்கலாம். கோவிலின் சுவர்களும், தரையும், திண்ணைகளும், ஏன் கூரைகளும் கூட கற்களால் கட்டப்பட்டவை. நூற்றுக் கணக்கான ராட்சத இயந்திரங்களை வைத்துத் தகர்க்க வேண்டுமெனிலும் இயலாது – அத்தனை உறுதி. வெளியில் கொளுத்தும் வெயிலிலும் கோயிலுக்குள் ஒரு குளுமை உணர முடியும். இந்த ஓசி ஏசியை அனுபவிப்பதும் அவன் கோவில் செல்லும் காரணங்களில் ஒன்று.
அம்மாவுடன் எத்தனை சண்டை போட்டாலும், இரவானால் அம்மாவின் கிழிந்த பாயில், அவளுக்கு அருகில் படுத்து, அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டால் மட்டுமே உறக்கம் வரும் கணேஷுக்கு. சிறுவயதுப் பழக்கம் பதினேழு வயதிலும் மாறவில்லை. கடுமையான சண்டை நடக்கும் தினங்களில் கூட இந்தப் பழக்கத்தில் மாற்றமில்லை. அம்மாவுக்கும் அதேபோலத்தான். எத்தனை கோபமாக இருந்தாலும், மகனுக்குச் சாப்பாடு பரிமாறி அவன் உண்ணும் அழகை அருகில் இருந்து பார்த்து ரசிப்பது அவளின் தினசரிப் பழக்கங்களில் ஒன்று.
பெரிய பணக்காரர்களில்லையெனினும், சாப்பாட்டிற்குக் கஷ்டப்படுமளவு ஏழைகளுமில்லை. அப்பா அரசாங்க வேலை பார்த்து, ரிடையர் ஆவதற்கு முன்னரே இறந்து விட்டபடியால் அவரின் பென்ஷன் அம்மாவின் பெயரில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மகன் படித்து, வளர்ந்து வாழ்க்கையில் பெரிய உயரங்களைத் தொடவேண்டும் என்று எல்லா அன்னையரைப் போல பல ஆசைகளை வளர்த்துக் கொண்டு அதற்காக மட்டுமே வாழ்பவர்.
“டேய், எப்போப் பாத்தாலும் கிரிக்கெட், கிரிக்கெட்னு அலைஞ்சிண்டு இருக்கியே, நோக்கே இது சரின்னு பட்றதா… நல்லாப் படிச்சாதாண்டா இஞ்சினியரிங்க், எம்.பி.பி.எஸ்னு ஏதாவது ப்ரொஃபஷனல் கோர்ஸ் படிக்கலாம். அவர் போனதிலிருந்து நான் கிடந்து அல்லாடிண்டிருக்கேன்.. நீதாண்டா இந்தக் குடும்ப பாரத்தைச் சொமக்கப்போறவன், இப்டிப் பொறுப்பில்லாம இருந்தா எப்டி? கிரிக்கெட் சோறு போடுமாடா?” மங்களம் மாமி..
“அம்மா… சும்மா நொய் நொய்னு ஏதாவது சொல்லிண்டே இருக்காத, நான் நன்னாத்தான் படிச்சிண்ட்ருக்கேன்”…
“டேய், நீ ப்ளஸ் டூடா… தொண்ணூத்தஞ்சு பர்செண்ட் மேல எடுத்தாத்தாண்டா நமக்கெல்லாம் இஞ்சினியரிங்க் சீட்டு…..”
”தெரியும் நிறுத்தும்மா…..”
“நாளைக்கு பப்ளிக் எக்ஸாம்டா.. கணக்குப் பரிட்சை…. இப்பப் போய் மட்டையைத் தூக்கிண்டு போயிண்ட்ருக்கியே, கொஞ்சமாவது பயம் இருக்காடா நோக்கு…..”
”எல்லாம் படிச்சு முடிச்சிட்டேம்மா… ஒண்ணும் பாக்கி இல்ல, நான் ரெடி… நீ கொஞ்சம் சும்மா இரு”…. சொல்லிக் கொண்டே வாசற்கதவு நோக்கி நடக்கலானான் கணேஷ்.
”இப்டியே சொல்லித்தான்.. டென்த்ல.. கணக்குல ஒரு மார்க் கோட்ட விட்ட.. நினைவு இருக்கா… தொண்ணூத்து ஒம்போது மார்க்…. ப்ளஸ் டூ ரொம்ப இம்பார்ட்டண்ட் டா….. நோக்குக் கொஞ்சம் கவனக்குறைவு ஜாஸ்தி.. திரும்பத் திரும்ப பிராக்டிஸ் பண்ணுடா…… ”
செவிடன் காதில் ஊதிய சங்காய், மாமியின் குரல் காற்றில் கரைய, கணேஷ் தெருவில் நண்பர்களுடன் ஐக்கியமாயிருந்தான்…….
அம்மா சொன்னபடியே ப்ளஸ் டூ கணக்குத் தேர்விலும் இருநூறு மதிப்பெண்களுக்கு நூற்றித் தொண்ணுத்தி ஒன்பது… மார்க் ஷீட்டைப் பார்த்த அம்மாவின் பார்வையே கதை பல சொன்னது……..
மனத் திரையில் ஓடிய திரைப்படங்களுடனே இருபது மைல் கார் ஓட்டிக் கொண்டு அலுவலகமடைந்தான் கணேஷ். நேராகக் கான்ஃபரன்ஸ் ரூம் சென்ற கணேஷ், ப்ரொஜக்டர் செட்டப் எட்செட்ரா, எட்செட்ரா என்று பிஸியாகிவிட்டான்… பட்ஜெட் ப்ரெஸண்டேஷன் தொடங்க… சி.ஈ.ஓ, சி.எஃப்.ஓ, சி.டி.ஓ ஆகிய கிழங்கள் அறையில் அமர்ந்திருக்க மொத்த போர்ட் மெம்பர்ஸ்ஸும் தொலைபேசியிலோ அல்லது நேரடியாகவோ ஆஜர் ஆகியிருந்தனர். சரளமாகச் சென்ற ப்ரெசண்டேஷனின் இறுதியில் சி.எஃப்.ஓ. கிழம் ஒரு கேள்வி கேட்க, தான் போட்டிருந்த கணக்கில் இருந்த சிறு பிழை ஒன்று அனைவர் முன்னரும் வெளிப்பட்டது. சிறு பிழையாயினும் அதன் விளைவு மிக அதிகம், சில ஸ்ட்ராடஜிகளையே மாற்றச் செய்யும் பிழை.
“கணேஷ், யூ ஷுட் ஹேவ் பீன் மோர் கேர்ஃபுல்… சாரி டு சே தட் அ ப்ரெசண்டேஷன் ஆஃப் திஸ் லெவல் ஷுட் ஹேவ் பீன் ஹேண்டில்ட் வித் மோர் கேர்”…….
நேற்றுப் பாதித் தயாரிப்பில் இருக்கும் பொழுது, நண்பர்களிடமிருந்து வந்த ஃபோன் கால் நினைவுக்கு வருகிறது. “கால்ஃப் போலாமாடா” கேள்விக்கு உடனடியாக, “சரி” என்று சொல்லிவிட்டு, அவசர அவசரமாய்க் கணக்குகளை முடித்ததன் விளைவு இது என்று புரிகிறது. எக்ஸக்யுடிவ்ஸ் முன் என்ன செய்து சமாளிப்பது என்று தெரியாமல் ஒரு தர்ம சங்கட நிலைமை.
“தெரியும் நிறுத்துய்யா……” அம்மாவிடம் சொன்னது போல் இந்தக் கிழத்திடம் சொல்ல இயலவில்லை கணேஷால்…….
பி.கு: தினசரி நிகழும் சிறு சம்பவங்களிலும் அன்னையை நினைவூட்டிக் கொள்ளும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் இது அன்னையர் தின சமர்ப்பணம்.
வெ. மதுசூதனன்.
Wonderful story . I could link so many events that happened In my life with this story . Very touching.Priya C K