\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5

american-politics2_620x620(பகுதி 4)

சென்ற இதழில், இதே கட்டுரையில் “மே மாத இறுதிக்குள் ஜனநாயகக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் குடியரசுக் கட்சியின் இழுபறி நிலை ஜூலை மாத மாநாடு வரையில் விலகாத நிலையே காணப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் சென்ற மாதத்துச் சம்பவங்கள் அரசியல் எதிர்பார்ப்புகள் அந்தரத்தில் தொங்கும் பெண்டுலம் போல எந்த வகையிலும் ஆடக் கூடியவை என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

மே மாதம் மூன்றாம் தேதி, தான் பெரிதும் எதிர்பார்த்த இண்டியானா மாநில ப்ரைமரி முடிவுகள் பெருத்த ஏமாற்றமளித்து விட, அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் டெட் க்ரூஸ். ஏப்ரல் முதல் வாரத்தில் “இன்றைய இரவு அமெரிக்க அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது” என்று விஸ்கான்சின் மாநில வெற்றிக்குப் பிறகு உற்சாகத்துடன் பேசிய க்ரூஸ், இண்டியானாவில் ஒரு சிறிய கூடத்தில், தமது ஆதரவாளர்கள் சூழ்ந்திருக்க “நமது இத்தனை நாளைய பயணம் முடிந்து விட்டது. அமெரிக்க மக்கள் வேறு பாதையில் செல்ல முடிவெடுத்துவிட்டனர். மிகுந்த வருத்தத்துடன் இப்போட்டியிலிருந்து விலகுகிறேன்” என்று அறிவித்தார். அவரது பிரச்சாரக் குழுவினர் உட்பட, அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் இது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டியானாவில் வெற்றி பெற்ற டானல்ட் ட்ரம்ப், தனது மகிழ்ச்சிக்கிடையே “நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களில் மிக பலத்த போட்டியை உருவாக்கியவர் டெட் க்ரூஸ்” என்று புகழ்ந்தார்.

ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த குடியரசுக் கட்சித் தலைமை செய்வதறியாமல் திகைத்து நின்றது. ஒரு பக்கம் கட்சிக்குள் ட்ரம்புக்கு எதிர்ப்பு வலுப்பெற, மறுபக்கம் அவர் முக்கியமான சில ப்ரைமரிகளில் வென்று கொண்டிருந்தார்.  வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்தும் க்ரூஸுக்குப் பணம் செலவழிக்க அவரது ஆதரவாளர்கள் (sponsors) தயங்கினர்.  கட்சி மாநாடு வரையில் முடிவு தெரியாமல் இழுத்துக்கொண்டு போவதில் பெரும்பான்மையானவர்களுக்கு உடன்பாடில்லாமல் இருந்தது.

கூடவே ட்ரம்பின் “கட்சி என்னை ஆதரிக்கவில்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்ற அதிரடியான எச்சரிக்கைகள் வலுத்து வந்தது, கட்சிக்குப் பெரும் தலைவலியாகவே இருந்தது. தேர்ச்சிபெற்ற அரசியல் நோக்கர்கள், க்ருஸ் பெரும்பான்மைக்கு அருகாமையில் வரமுடியாமற் போனால், குடியரசுக் கட்சி மாநாட்டில், புதிதாக இதுவரை போட்டியிடாத  ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லி வந்தனர்.

அதிபர் ஒபாமா தனது இறுதிச் செய்தியாளர்கள் விருந்தில், “இன்றைய விருந்தில் மீன் அல்லது மாட்டிறைச்சி.. இவை இரண்டும் தான் விருப்பத் தேர்வுகள். அதை விடுத்து மூன்றாவது வகையான உணவைச் சிலர் குறிப்பிட்டிருந்தனர் .. ” என்று  பூடகமாகக் குறிப்பிட்டுக் கிண்டலடித்திருந்தார்.

க்ரூஸ் விலகியது கட்சிக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கையில், ஜான் காசிஷ் சில நாட்களில் போட்டியிலிருந்து விலகி விட சரேலென்று ட்ரம்பின் ஆதரவுப் பிரதிநிதிகள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக எகிறிவிட்டது. கலிஃபோர்னியா உட்பட இன்னும் சில மாநிலங்களின் ப்ரைமரிகள் நடைபெறாத நிலையில் அதிகாரப்பூர்வத் தகுதி பெற ட்ரம்புக்கு 69 பிரதிநிகளின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இவ்வளவு நடந்த பின்னரும் குடியரசுக் கட்சியின் பழமைவாதிகள் (conservatives) சிலருக்கு ட்ரம்பை தங்களது வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் உடன்பாடில்லை. அவருக்குப் பெரும்பான்மை பலம் கிட்டாத போது அவரை விடுத்து வேறொருவரை நியமிக்க  குடியரசுக் கட்சிக்கு வாய்ப்பிருந்தது. இப்போது அதற்கும் வழியில்லை. கீழவைத் தலைவராகவுள்ள

குடியரசுக் கட்சியின் பால் ரையன், முன்னாள் அதிபர் வேட்பாளர்கள் மிட் ராம்னி, ஜான் மெக்கய்ன் உள்ளிட்ட சிலர் வெளிப்படையாக டானல்ட் ட்ரம்புக்கு ஓட்டளிக்கப் போவதில்லை என்று சொல்லி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரையன் ஒரு படி மேலே சென்று, ட்ரம்ப் விரும்பினால் ஜூலை மாத மாநாட்டுக்கு முன்னர் தான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார். (இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே மாற்றுக் கருத்துகள் உண்டு. ஏப்ரல் மாதம் வரை குடியரசுக் கட்சி மாநாட்டில் திடுமென பால் ரையனை வேட்பாளாராக அறிவிக்கக் கூடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தன. தவிர ஜூலை மாத மாநாட்டை  எப்படியும் சபாநாயகர் என்ற முறையில் பால் ரையன் தான் தொடங்கி வைக்க வேண்டும். ட்ரம்ப் அதை எந்த அளவுக்கு விரும்புவார் என்றும் தெரியாது.  இதன் காரணமாகக் கட்சிக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதால் பால் ரையன் இதைச் சொன்னதாக நம்பப்படுகிறது).

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சென்ற இதழ் கட்டுரைக்கு எதிர்மாறாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் இன்னமும் தெளிவான முடிவு தெரிந்தபாடில்லை. இதுவரை பெரும்பான்மைப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஹிலரி  தனது முழுக் கவனத்தையும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மீது செலுத்திக் கொண்டிருக்க  சத்தமில்லாமல் சிறிய மாநிலங்களில் வெற்றி மீது வெற்றி பெற்று பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் பெர்னி சாண்டர்ஸ். இளைஞர்களிடம், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே இவருக்கு இருந்த வரவேற்பு, மெதுவாக மற்றவர்களுக்கும் தொற்றி வருவது போலத் தோன்றுகிறது. மே மாதம் நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுள்ளார் சாண்டர்ஸ். குடியரசுக் கட்சியினைப் போல, ஜனநாயகக் கட்சியில் ஒரு ப்ரைமரியில் வெற்றி பெறுபவர் அம்மாநில பிரதிநிகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுவதில்லை. அவரவர் பெறும் வாக்கை வைத்து பிரதிநிதிகளின் எண்ணிக்கை பிரித்தளிக்கப்படுவதினால் ஹிலரி இன்னமும் முன்னிலை வகிக்க முடிகிறது. தற்போதைய நிலவரப்படி அதிபலம் வாய்ந்த சூப்பர் டெலிகேட்ஸ் உட்பட ஹிலரி 2293 ஆதரவாளர்களையும், சாண்டர்ஸ் 1536 ஆதரவாளர்களையும் பெற்றுள்ளனர்.  சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவாளர்களைக் கருத்தில் கொள்ளாமல் பார்த்தால் ஹிலரி 1768, சாண்டர்ஸ் 1497 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். எண்ணிக்கையின் அடிப்படையில் சாண்டர்ஸ் வேட்பாளாராவது கடினமென்றாலும், சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு அலை மாறக் கூடிய வாய்ப்புள்ளது. (வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் சூப்பர் டெலிகேட்ஸ் ப்ரைமரிகளில் பெரும்பான்மை பெறுபவர்களுக்கே ஆதரவளித்துள்ளனர்).

இது ஒருபுறமிருக்க, ட்ரம்பும், ஹிலரியும் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிட்டால் யார் அதிபராவார் என்ற கருத்துக் கணிப்பு நாடெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது போன்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது கணிசமான அளவில் முன்னிலை வகித்த ஹிலரி சமீபத்திய நிலவரப்படி ஒரு புள்ளிக்கும் குறைவான, மிக மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே முன்னிலை வகிக்கிறார்.

அதே  சமயம் இரண்டு கட்சிகளிலும், இவர்களது தலைமையை விரும்பாதவர்களின் எண்ணிக்கை 55 சதவிகித அளவில் உயர்ந்து, அதிருப்தி நிலவுகிறது.

வேட்பாளர்கள் தெரியாத நிலையில் ஊடகங்களில் பலவித ஹேஷ்யங்கள், அனுமானிப்புகள், கணித வகையிலான சாத்தியங்கள் என்று அலசப்பட்டு வந்தன. இப்போது கிட்டத்தட்ட வேட்பாளர்கள் முடிவாகிவிட்ட நிலையில், ஊடகங்களில், குறிப்பாகத் தொலைகாட்சிகளில் பலவித விளம்பரங்கள் வரத் துவங்கிவிட்டன. இரு வேட்பாளர்களும்,  தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களது திட்டங்கள், செயல்பாடுகள் என்னவாகவிருக்கும் என்பதைச் சொல்லாமல் மற்றவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவரை விட நான் மேல் என்ற வகையிலான விளம்பரங்களில் ஈடுபட்டு வருவது, உலகின் எந்த மூலையிலும் அரசியல் என்றால் இதெல்லாம் சாதாரணம் என்ற கசப்பான கருத்துக்கு வலுவூட்டுகிறது.

வரும் நவம்பர் மாதத் தேர்தலில், யார் அதிபர் வேட்பாளரென்றாலும் எனது ஓட்டு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் என்று கட்சி சார்ந்து முடிவெடுக்கும் வாக்காளர்கள் ஒருபுறமிருக்க, இரண்டு கட்சியையும் சாராத சுதந்திர வாக்காளர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறார்கள்.

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad