\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆட்டிஸம் – பகுதி 6

Autism_Walk_Pic1

(பகுதி 5)

ஆட்டிஸத்தை மட்டுப்படுத்துவதில் முதன்மையான வழிமுறையாகக் கையாளப்படுவது பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு (Applied Behavioral Analysis) என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த முறை சாதரணத் தேவைகளான பார்த்தல், கவனித்தல், படித்தல், உரையாடுதல், மற்றவர்களைக் கவனித்துப் புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைக் கற்றுக் கொடுக்கும் விதமாக அமைகிறது. இந்த முறை வகுப்பறைக் கல்வியாகவும், தினசரிக் குடும்பச் சூழல்களிலும் பயிற்றுவிக்கப்படலாம். இவை குழந்தைகளுக்கு ஒருவரோடு ஒருவர் பயிற்றுவிக்கும் சூழலிலோ, குழுவாக வகுப்பறை போன்ற அமைப்பிலோ கற்றுத்தர இயலும். சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விஷயங்களை நல்ல முறையில் சிறுவயதிலேயே பல தொடர்ப் பயிற்சிகளின் மூலம் பழக்கப்படுத்த இயலும்.

ஒரே விதமான பயிற்சி எல்லாக் குழந்தைகளுக்கும் பலனளிக்கும் என்று கூற இயலாது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையுடைய பெற்றோர்கள் இதனை நன்கு அறிவர். ABA முறை வேறுபட்ட பயிற்சிகளை, குழந்தைகளின் தன்மைக்கேற்ப வழங்குகிறது. குழந்தைகளின் தன்மை, பாதிப்பு, சூழல் ஆகியவற்றைப் பொறுத்து குணப்படுத்துதலின் இலக்கு அமைக்கப்பட்டு, தொடர்ப் பயிற்சியின் மூலம் அந்த இலக்கை அடைய முயல்வதே இந்த முறையின் தனிச் சிறப்பாகும். சில குழந்தைகள் விரைவிலேயே முன்னேற்றம் காட்டுகின்றன, சில குழந்தைகளுக்கு வெகு காலம் தேவைப்படலாம். ஆனால், இந்த முறை பெரும்பாலும் நல்ல பலனளிக்கிறதென்பது கண்கூடாகக் காணப்பட்ட உண்மை. இந்த முயற்சியைத் தொடங்குவது முதலானதான, முக்கியமானதான ஒன்றாகும்.

இந்த முறையின் அரிச்சுவடியைப் (ABC of ABA) பின்வருமாறு விளக்கலாம்:

Antecedent Manipulation: (முன்னுதாரணமாகக் கையாளுதல்): ஒரு குழந்தையின் மாற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏற்படும் முன் என்ன செயல்கள், சம்பவங்கள் அல்லது சூழல்கள் ஏற்படுகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து, அவற்றை, சரியானவற்றைக் கற்பிக்கும் நல்ல செயலாக மாற்றுவதே இந்த முறை.

Behavioral Treatment: (நடத்தை சிகிச்சை): சில வித்தியாசமான, பொது நடத்தைக்கு மாறுபட்ட செயல்களை எப்படிச் சமாளித்து மாற்றுவது என்பதே இந்தச் சிகிச்சையின் அடிப்படை.

Comprehensive Intervention: (விரிவான தலையீடு): தேவைப்படுமளவு திருத்தங்களைக் கலை, நுட்பம் மற்றும் பயிற்சி தொடர்பான விஷயங்களைக் கொண்டு விரிவான முறையில் சிகிச்சையளிப்பது.

எங்கள் மகனின் தேவை சமூக விஷயங்களை உணர்ந்து கொண்டு, தற்காப்பு விஷயங்களையும், பேசும் திறனையும் வளர்த்துக் கொள்வது. பள்ளிகளுடனும், அவனது சிகிச்சையாளர்களுடனும் பலவழிகளில் ஒருங்கிணைந்து இதற்கான திட்டத்தை உருவாக்குவதே எங்களின் முதல் பணியாக இருந்தது. இதற்காக சிகிச்சை மையத்தின் இயக்குநர், சிகிச்சையளிப்பவர், ஒருங்கிணைப்பாளர் எனப் பலரையும் சந்தித்து, உரையாடி அவர்களுடன் சேர்ந்து உழைத்து அவனுக்குப் பயனளிக்கும் விதத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கினோம். மேலும், இவர்களுடன் தொடர்ந்து வேலை செய்து, அவனது முன்னேற்றத்தைக் கண்காணித்துத் தேவையான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்தவாறு இருந்தோம். இவற்றையும், நமது எதிர்பார்ப்புகளையும், இலக்குகளையும் ஆவணப்படுத்தும் வண்ணம் தனிப்பட்ட முறைகளும் (Individualized Education Program) இந்த மையத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில், இதன் இயக்குநர்கள், கல்வியாளர்கள், உயற்பயிற்சி ஆசிரியர்கள் என அனைத்து அலுவலகர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களின் அறிவுரைப்படி நடந்து கொண்டோம். இதனுடன், எங்கள் மகனுக்கு நடத்தைச் சிகிச்சை (Behavioral Therapy) வழங்கும் ஆசிரியரையும் இந்த மையத்தின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வோம்.

பேச்சு மொழிகளைக் கற்றுவிக்கும் பயிற்சி (ABLLS – Assessment of Basic Language and Learning Skills) முறையும் இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை வழிகாட்டுதலில் தொடங்கி, வளர்ச்சியைக் கண்காணிப்பதில் தொடர்ந்து, பார்த்தறிவது, படித்தறிவது எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. சிறிய செயல்களையும், பல கிளைச் செயல்களாக வடிவமைத்து ஒவ்வொன்றாகப் பயிற்சியளித்து முடிவில் அந்தச் சிறிய செயலை முழுமையாக செய்யும் வண்ணம் குழந்தைகளை வளர்ப்பது இந்த முறையின் சிறப்பம்சமாகும். உதாரணமாக, ஒரு பந்தை எறிய வேண்டுமெனில், அதைக் கையிலெடுப்பது எப்படி என்று ஆரம்பித்து, ஒவ்வொரு சிறு செயலாகப் பயிற்சியளித்துக் கடைசியில் பந்தை எறியும்படிப் பழக்குவார்கள். பல் தேய்க்கப் பழக்க வேண்டுமெனில், பற்பசையைக் கையிலெடுப்பது, அதனைத் திறப்பது, பற்பசையை பிரஷ்ஷில் போடுவது எனப் பல செயல்களாக அதனைப் பிரித்து, தொடர் பயிற்சியின்மூலம் முழுச் செயலாகச் செய்ய வைப்பார்கள். இவற்றைச் செய்வதற்குப் பல உற்சாகப்படுத்தும் வழிமுறைகளையும் கையாள்வர். உதாரணமாக, எங்கள் மகனுக்கு இசையென்றால் கொள்ளைப் பிரியம். பல் துலக்குவதை ஒரு பாட்டாக மாற்றி, அவர்களும் பாடுவர், நாங்களும் உடன் சேர்ந்து பாடுவோம். அதுவே அவனுக்கு ஒரு உற்சாகமாக மாறி அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். இதுபோல அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் ஒரு வழிமுறை வகுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பயிற்சியளித்து தேவையான இலக்கை அடைய உதவுவர்.

சிகிச்சையளிப்பவரும் பெற்றோர்களும் சேர்ந்து இதுபோல சாப்பிடுவது, உடையணிந்து கொள்வது, விளையாடுவது, கழிவறைக்குச் செல்வது எனப் பலவிதச் செயல்களையும் குழந்தைக்கு தினசரி பயிற்றுவிப்பார்கள். இதேபோல தனக்குத் தேவையான விஷயங்களை எப்படி முறைப்படி கேட்பது என்பதும் கற்றுக் கொடுக்கப்படும். பொதுவாக, இந்தப் பயிற்சியில்லாதபோது, நோக்கமின்றி ஓடுவது, மற்ற சிறுவர்களின் முடியைப் பிடித்து இழுப்பது போன்ற சில ஏற்றுக்கொள்ள முடியாத வழிவகைகளைக் கையாளும் இந்தக் குழந்தைகளை இந்தச் சிகிச்சை முறை மூலம் முழுவதுமாகவே மாற்றிவிட இயலும். பேசக் கற்றுக் கொடுப்பதுடன், பேசுபவரின் கண்களைப் பார்த்துப் பேசுவேண்டுமென்ற பழக்கத்தையும் பயிற்சி மூலம் கொணர்வர்.

பொதுவாக, இந்த முறையில் ஒரு வாரத்திற்கு இருபத்தி ஐந்து முதல் நாற்பது மணி நேரம் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. பெற்றோர்களின் பங்களிப்பு என்பது இதில் மிக முக்கியம். குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சியை வீட்டில் செய்வது, பயிற்சி மையங்களில் செய்வதைவிட அதிகப் பலனளிப்பதாக அமைகிறது. பெரும்பாலான மையங்கள் இது போன்ற பயிற்சியளிப்பது எப்படி என்பதைப் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும், தாத்தா பாட்டி மற்றும் பிற உறவினர்களுக்கும் ஏன் நண்பர்களுக்கும் கூடப் பயிற்றுவிக்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதால் வளர்ச்சி இன்னும் துரிதப்படுத்தப்படுகிறது. எங்களுக்கு இதுபோன்ற மையங்களை எங்களூரில் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இது போன்ற மையங்களைத் தெரிவு செய்து கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இது, அமெரிக்க மருத்துவக் கழகத்தால் (US Surgeon General) நன்கு சோதிக்கப்பட்டு, பல குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் கொடுக்கிறது என்று உறுதி செய்யப்பட்ட முறையாகும். முறையாகவும், தொடர்ந்தும் கொடுக்கப்பட்டால் இந்தச் சிகிச்சை முறை பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அதிசயிக்கத்தக்க முன்னேற்றத்தைக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இராணுவ ஒழுங்குடன், ஒவ்வொரு நாளும் விடாமுயற்சியுடன் இந்தச் சிகிச்சை முறையைக் கடைபிடிப்பது மிகவும் வியக்கத்தக்கப் பலனைத் தரும்.

ஆட்டிஸத்துக்கான 5K நடைப்பயணம்:

ஆட்டிஸம் விழிப்புணர்வை மக்களிடம் தூண்டும் வகையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் மற்றும் சிகிச்சைகளுக்காகச் செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் வகையிலும் மே மாதம் 21 ஆம் திகதி, மினியாபோலிஸின் புறநகர்ப் பகுதியான செயிண்ட் லூயிஸ் பார்க்கில் இருக்கும் கேலூன் ஏரியைச் (Lake Calhoun) சுற்றி 5K நடைப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான autism5k.org மற்றும் C.A.D.E (Children with Autism Deserve Education) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் மட்டும் அமெரிக்காவின் பிற மாநிலங்களில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் பலவற்றின் நிதி ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மனிதச் சமுதாயத்தில்  ஆட்டிஸத்தின் தாக்கம் அதிகரிப்பதால், அனைவரிடத்தும் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் அமைப்பது அவசியமாகின்றது.

நாங்கள் “டீம் சஞ்சு” (Team Sanju) என்ற பெயரில் ஒரு குழுவமைத்து எங்கள் நண்பர்கள் பலரையும் ஒருங்கிணைத்து இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டோம். இதில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நிகழ்வை ஏற்படுத்தித் தந்த அமைப்பாளர்களுக்கும், ஆதரவளித்த நிறுவனங்களுக்கும் எங்களின் உளங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்காக இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

(தொடரும்)

Autism_Walk_Pic2 Autism_Walk_Pic3 Autism_Walk_Pic4

மூலம்: சுரேஷ் ரங்கமணி

தமிழாக்கம்: வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad