பகுத்தறிவு – பகுதி 4
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கட்டுரையைத் தொடர இயலாததற்கு இதனை எதிர்பார்த்திருந்த வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எழுத இயலாததற்கான காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் சொல்ல இயலவில்லை. மனிதனொன்று நினைக்க இறை – எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – ஒன்று நினைக்குமென்பதையே காரணமாகச் சொல்லலாம் என்று விழைகிறேன். இயற்கையில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை என்பதை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இது. நாம் பிறந்த இடம், குடும்பம், கிடைக்கும் நண்பர்கள், அலுவலகம், சுற்றுச் சூழல், செய்யும் தொழில், படிக்கும் விஷயங்கள், கண்களில் தென்படும் நன்மை தீமைகள் எல்லாமே செயல் விளைவுத் தத்துவங்களின் அடிப்படையில் நிகழ்பவையே என்பதைக் கற்றுணர்ந்த ஞானிகள் பல வழிவகைகளில் விளக்கியுள்ளனர். ”கர்மா” என்ற வடமொழிச் சொல் இன்று ஆங்கில வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பற்றி அறிந்து கொள்வது நாம் இனிமேல் சொல்லப்போவதை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.
”கர்ம பலன்” என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதனை “தலைவிதி” என்று திரித்துக் கூறி, அறிவியலுக்கு ஒவ்வாததாக மாற்றிவிட்டனர் காலப்போக்கில். இது குறித்து ஹிந்து மதத்தில் மிகவும் ஆழமாக விளக்கியுள்ளனர். பிற மதங்களில் பல விதங்களில் இவை விளக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். ஏற்கனவே கூறியபடி நமக்கு அறைகுறையாகவாவது அறிமுகமானது ஹிந்து மதம் மட்டுமே என்ற காரணத்தால் அதிலிருந்து விளக்க முற்படுகிறோம்.
ஒரு மனிதனின் இன்றைய நிலை மூன்று விதங்களான கர்ம பலன்களால் நிர்ணயிக்கப்படுவதாக ஞானவியல் நூல்கள் விளக்குகின்றன. அவை முறையே சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் மற்றும் ஆகாம்ய கர்மம் என அழைக்கப்படுகின்றன. சஞ்சித கர்மம் என்பது நாம் பிறப்பதற்கு முன்னரே நமது கணக்கில் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய வினைப் பயன்கள். பிராரப்த கர்மம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக் கணம் வரை செய்த நல்வினை மற்றும் தீவினையின் நிகரப் பயன்கள். ஆகாம்ய கர்மம் என்பது இனி நாம் செய்யவிருக்கும் செயல்களின் விளைவுகள். இது ஒன்று மட்டுமே நம் கையில் உள்ளது. சரி, இவை மூன்றையும் ஒவ்வொன்றாகச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சஞ்சித கர்மம் என்பது நாம் பிறப்பதற்கு முன்னரே நம் கணக்கில் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டோம். ”நான் பிறப்பதற்கு முன்னரே செய்யப்பட்ட செயல்களுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்” என்ற கேள்வி மிகவும் சரியானதும் புரிந்து கொள்ளக் கூடியதுமாகும். இது போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளத் தயங்கவே கூடாது என்றே ஹிந்து மதம் போதிக்கின்றது. எதையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டுக் கொள்ளாதே, உன் அறிவினால் கேள்வி கேட்டு ஆராய்ந்தறிந்து சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக்கொள் என்று மிகத் தெளிவாக விளக்குகிறது. சரி, இதற்கான விடையென்ன எனப் பார்ப்போம். ஹிந்து மதத்தில் மறுபிறவி என்பது காலப்போக்கில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மற்றொரு கருத்துருவாக்கமாகும். மறுபிறவிக்கு, இன்று வழக்கிலுள்ள புரிதல் “கிருஷ்ணன்” என்பவன் “கோவிந்தன்” என்பவனாக அடுத்த பிறப்பில் பிறந்தான் என்பதே. இன்னும் பல வேடிக்கையான நம்புதல்களும் உண்டு, இந்தப் பிறவியில் மனிதனாக இருப்பவன் சென்ற பிறவியில் ஒரு விலங்கினமாகப் பிறந்திருக்கக் கூடுமென்பது அந்த வேடிக்கையான புரிதல்களுக்கு ஒரு உதாரணம். ஆனால், உபநிஷதங்களை ஆழ்ந்து நோக்கும் ஞானிகளின் விரிவாக்கம் ஒரு மனிதனின் மறுபிறவி என்பது அவனது மகனே அல்லது மகளே என்பதாகும். அந்த விளக்கத்தின்படிப் பார்க்கையில், சஞ்சித கர்மம் என்பது என் தாய் தந்தையர்களோ, அவர்களின் தாய் தந்தையர்களோ செய்த புண்ணிய, பாவப் பதிவுகளின் நிகர விளைவு. இந்த சந்ததித் தொடர் ஏழு தலைமுறைவரை தொடரலாம் என்றும் கூறுகின்றனர். சரி அப்படியே எடுத்துக் கொண்டாலும், என் தாத்தாவின் பாவக் கணக்குகளை நானேன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வருவதும் இயல்பு. தாத்தாவின் சொத்து பேரனுக்கே என்று இன்றைய சட்டங்கள் கூட வலியுறுத்துவதை நாமறிவோம். சொத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நாம், புண்ணிய பாவங்களின் நிகரங்களைப் பெற்றுக் கொண்டு அனுபவித்துத் தீர்க்க வேண்டிய நிலையில் தானுள்ளோம். இதனையும் தாண்டி ஆழமாகப் பார்க்கும் பொழுது, சர்க்கரை வியாதி கூட சந்ததிகள் தொடர்ந்து பரவுகிறது என்பது அறிவியல் கூறும் உண்மை, சஞ்சித கர்மமும் அது போன்றதே.
அடுத்ததாக வருவது பிராரப்த கர்மம். இது, நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த நன்மை தீமைகளின் நிகர விளைவு என்று விளக்கப்படுகிறது. விதுர நீதி போன்ற ஆழமான ஹிந்து மத நூல்களில் எந்த வயதிலிருந்து இந்தக் கணக்குத் தொடங்குகின்றது என்றுகூட விளக்கப்பட்டிருக்கிறது. தர்ம தேவனே மண்ணுலகில் பிறந்து மனிதனாக வாழ்ந்து வாழும் வகைகளையும், அதற்கான தர்மங்களையும் வடிவமைத்தான் என்பதை வெறும் நம்பிக்கைதான் என்று கொண்டாலும், விதுர நீதி என்பது பல சான்றுகளுடன் இன்றும் கிடைக்கும் சாஸ்திர நூலாகும். ஏழு வயதிற்குப் பிறகு ஒரு மனிதன் செய்யும் செயல்களின் உடனடி விளைவுகளைப் புரிந்து கொண்டுதான் ஒரு செயலைச் செய்கிறான் என்றும் அதனால் அவனின் செயல்களில் விளைவுகள் அவனைச் சுற்றி வருகின்றன என்றும், அதற்குப் பெயர்தான் பிராரப்த கர்மம் என்றும் சாஸ்திர நூல்கள் விளக்கம் அளிக்கின்றன.
ஆகாம்ய கர்மம் என்பது மூன்றாவது வகையான கர்மம். இது, இனி் நாம் செய்யவிருக்கும் செயல்களின் விளைவுகளைக் குறிப்பிடுவது. இந்த ஒன்று மட்டுமே நம் கையில் உள்ளது. நம் எதிர்கால விளைவுகள் நன்மையில் முடிய வேண்டுமெனில், நம்மால் மாறுதல் செய்ய முடிந்தது இன்று நம் கையில் இருக்கும் ஆகாம்ய கர்மம் மட்டுமே.
நாம் இன்று அடையும் நன்மை தீமைகளுக்குக் காரணமாக இயங்கிக் கொண்டிருப்பது, சஞ்சித மற்றும் பிராரப்த கர்மங்களின் மொத்த விளைவே. கொள்ளை, கொலை போன்ற பஞ்சமா பாதகங்களை இன்று புரியும் ஒருவன் கூட மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்வதும், நேர்மையாக வாழும் ஒருவன் வறுமையில் வாடுவதும் ஏன் எனப் பலர் பல நேரங்களில் கேட்பதை நாம் அறிவோம். இதற்குக் கொடுக்க முடிந்த ஒரே விளக்கம், அவர்களின் சஞ்சித, பிராரப்த கர்மங்களுக்கான விளைவுகள் என்பதே. இன்று பஞ்சமா பாதகம் புரிபவன் ஒருவனின் சஞ்சித மற்றும் பிராரப்த கர்மத்தின் விளைவுகளில் நல்வினையே கூடுதலாக இருப்பின் அவன் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது இயற்கையாகிறது. இன்று நல்லவனாக இருப்பினும், சஞ்சித, பிராரப்த கர்மங்களில் நிகரம் மோசமாக இருப்பதால், இன்று துன்பப்படும் நிலை ஒருவனுக்கு வருகிறது. இந்த சஞ்சித, பிராரப்த கர்ம விளக்கங்களை விலக்கி வைத்துவிட்டு, நல்லவன் துயரப்படுவதற்கும், தீயவன் பல சுகங்களை அனுபவிப்பதற்கும் என்ன காரணம் என்று எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களால் எவ்வாறு விளக்க இயலும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
இதனை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டவர் தத்துவ ஞானி, நம் முப்பாட்டன், பொய்யாமொழிப் புலவன் திருவள்ளுவன். இதனைப் பல திருக்குறளில் தெளிவாகவும், இனிமையாகவும் விளக்கியுள்ளார். உதாரணத்திற்கு கீழே விளக்கப்பட்டுள்ள திருக்குறள் ஒன்றை மட்டும் பார்க்கலாம்.
”இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப் பதில்”
அதாவது துன்பம் வரும்பொழுது மகிழ்ச்சியடையுங்கள் என்கிறார். கேட்பதற்கு வேடிக்கையாக இல்லை? கண்ணதாசன் கேட்டதுபோல, “பாம்பு வந்து கடிக்கையில், பாழுமுடல் துடிக்கையில், யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?” என்று கேட்பது இயல்பாகிறது.
இந்த இடத்தில்தான் வள்ளுவரின் ஆழமான தத்துவார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர் குறிப்பிடுவதும் இதே சஞ்சித, பிராரப்த கர்மங்களின் விளைவுகளையே. இன்று வரை நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை எனது சஞ்சித பிராரப்தங்களின் நிகரம் என்பதைப் புரிந்து கொண்டபின், இன்று எனக்கு ஒரு துன்பம் ஏற்படின், எனது கணக்கில் செய்யப்பட்டிருந்த எதிர்மறையான விளைவுகளின் பலனை நான் இப்பொழுது அனுபவித்துத் தீர்க்கிறேன் என்றும், இந்த எதிர்மறைப் பதிவுகள் இனித் தொடராது என்றும் உணரும்பொழுது அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே மாறுகிறது என்பதே இதன் விளக்கமாகும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், இன்று வரை நடந்து முடிந்து விட்ட ஒன்றை என்னால் மாற்றிட இயலாது. ஆனால் நடந்து விட்ட செயல்களுக்கான விளைவுகள் என்னை வந்தடைந்தே தீரும், ஆனால் இனிமேல் நடக்கவிருக்கும் செயல்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அவற்றை நல்லதாகச் செய்வதன் மூலம் இனிமேல் எனக்குக் கிடைக்கும் விளைவுகள் நன்மையுடையதாகவே இருக்கும் என்பதே விளக்கம். இதே விளக்கத்தை, ஏற்கனவே விளக்கப்பட்ட மறுபிறவித் தத்துவத்துடன் இணைத்துப் பொருள் கொள்க. எனது மகனோ, மகளோ என் மறுபிறவி, நான் செய்யும் நன்மை தீமைகளின் நிகரமான விளைவு அவர்களை சஞ்சித கர்மமாகச் சென்றடையும் என்று நான் உணர்கையில், அவர்கள் துயரப்படும் விதமான விளைவுகளை விட்டுச்செல்ல என் மனம் ஒவ்வுமா?
இதுபோன்ற ஆழ்மன உணர்வுகளை அறிவுபூர்வமாகத் தூண்டி, தத்துவார்த்தமாக உணர்ந்து கொள்ள வைத்து, நல்லன மட்டுமே செய்யத் தூண்டிய முயற்சிகளில், ஹிந்து மதத்தில் கூறப்பட்ட இந்த செயல் விளைவுத் தத்துவமும் ஒன்று. இப்பொழுது சிந்தியுங்கள்; இது போன்ற விளக்கமில்லாத நிலையில், இன்று நாம் படும் துயரங்களை “தலைவிதி” என்று எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டோம்? அப்படிச் சொல்வதனால், எதிர்காலத்திற்கு இதனை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பையும் பயன்படுத்தாது போகிறோமே?
இந்த விளக்கங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்களையும், திறந்த மனமுடையவர்களெனில் மதத்தில் கூறப்பட்டிருக்கும் உயரிய கருத்துக்களை உன்னிப்பாகப் பார்க்கச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம்.
(தொடரும்)
வெ. மதுசூதனன்.
/*தாத்தாவின் சொத்து பேரனுக்கே என்று இன்றைய சட்டங்கள் கூட வலியுறுத்துவதை நாமறிவோம். சொத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நாம், புண்ணிய பாவங்களின் நிகரங்களைப் பெற்றுக் கொண்டு அனுபவித்துத் தீர்க்க வேண்டிய நிலையில் தானுள்ளோம்*/ என் தாத்தாவின் சொத்தை வேண்டாம் என்று உதறித்தள்ள எனக்கு உரிமையும், வாய்ப்பும் உண்டு அதுபோல் அவரின் பாவ\புண்ணியங்களை நான் உதற முடியுமா அதற்க்கு மதத்தில் இடமுண்டா ???
முதலில், இது மதம் விதிக்கும் கட்டுப்பாடல்ல, இடமுண்டா இல்லையா என்ற கேள்வி எழ.. மதத்தின் பகுதியாக உள்ள ஞான விளக்கங்கள் இது இவ்வாறு நடை பெறுகின்றது என்று ஆராய்ச்சிகளின் முடிவாக விளக்கும் விளக்கங்களே. ஏற்றுக்கொள், உதறித் தள் என்றெல்லாம் எங்கும் “கட்டளை” பிறப்பிக்கப்படவில்லை.
உதாரணத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு வேண்டுமானாலும் பார்க்கலாம்: தாத்தாவின் சொத்தை வேண்டுமானால் வேண்டாமென்று சொல்லலாம் (எத்தனை பேர் சொல்கிறார்கள் என்பது வேறு கேள்வி), ஆனால் தாத்தா விட்டுச் சென்ற கடனை வேண்டாம் என்று உதறித்தள்ள தர்மத்தில் இடமில்லை என்பது போலவே செய்வினைப் பயன்களை வேண்டாமென்று உதறித் தள்ளும் வாய்ப்புமில்லை என்பதே ஞான நூல்களின் விளக்கம்.
>>ஆனால், உபநிஷதங்களை ஆழ்ந்து நோக்கும் ஞானிகளின் விரிவாக்கம் ஒரு மனிதனின் மறுபிறவி என்பது அவனது மகனே அல்லது மகளே என்பதாகும்.
Can you point me to the source(s)? I’d like to explore further on this topic.
Certainly. And, thanks for the interest. I would like to start out with saying I’m a seeker in this regard and by no means will claim “know it all” status. To point to a reference specifically for rebirth, my source is Brihadharanyaka Upanishad where the excerpts elaborately explain about what happens to life energy & how that traverses through to the next generation. You would also find many such citing on Kaushitaki Upanishad & you’ll also find many citations that are contrary to this as well, Mundaka Upanishad being the more popular one amongst all.
Personally, some explanations that convinces me (to an extent, of course) is Bhagvan Ramana Maharishi’s preaching – to quote something specific; his “உள்ளவை நாற்பது” the poetic verses that followed the trend of இனியவை நாற்பது and இன்னா நாற்பது. Anything about Ramanar’s preaching will take us to the profound question of “who am I” and taking a deeper dive into it will take us in the path of understanding/listening about rebirths.
Two other ancient scriptures can also be referenced: 1. Yoga Vasishtam which was part of Ramayan (the preaching of Vasishta to Rama) and Yaksha Prasnam (the debate between the Brahma Rakshas Yaksha and Yudhistra). My readings are more on the books/write-ups about them rather than the sources themselves. And, unfortunately I struggle to prescribe one weblink/site as an authentic reference to any of these – mainly because of the contradictory nature of the topic. But, there are plenty of printed materials regarding this subject.
Will keep exploring the topic.
Thanks,
Madhusoodhanan V.
மிகவும் அருமையான கட்டுரை. கர்மாவைப் பற்றி நான் புரிந்து கொள்ள முயன்று வருகிறேன், பல வருடங்களாக. இந்தக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் பரம அயோக்கியர்கள் நலமாயிருக்க நமக்கு இந்த கதியா என்று பல பேர் சொல்ல அவர்களின் நிலைமையைப் பார்த்து நானே மிகவும் வருந்தியுள்ளேன். அதற்கு என் வழிகாட்டி போன்றவர், அதெல்லாம் அவர்களின் நல்வினை இன்னும் நன்றாக வைத்துள்ளது, அது தீர்ந்தவுடன் நிலைமை மாறும் என்பார். எனக்கும் இது சில சமயத்தில் புரிந்தது போலிருக்கும். ஆனால் இன்று நன்றாகப் புரிந்தது. மிக்க நன்றி.