\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திரைப்படத் திறனாய்வு – 24

24moview1சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும்.

படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற வேண்டும். ஆங்கில சஸ்பென்ஸ் தொடர் “24” பார்த்தவர்களுக்கு இங்கே என்ன சொல்கிறோம் என்று விளங்கும். எட்டு, ஒன்பது வருடங்களாக அமெரிக்கத் தொலைக்காட்சியில், பிரம்மாண்டமாக வந்து கொண்டிருந்த சஸ்பென்ஸ் தொடர் இது. பல பிரமிக்க வைக்கும் குற்றங்களையும், தீவிர வாதங்களையும், தனி மனிதராக, விதிகளை முழுவதுமாக மீறி ஆனால் நல்ல நோக்கு ஒன்று மட்டுமே கொண்டு, உயிரைப் பணயம் வைத்து அழித்துத் தீர்ப்பார் அந்த ஹீரோ. மொத்தக் கதையும் ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் நடந்து முடிவது போலக் காட்டுவர். அதுபோல ஒருவரைத்தான் இந்தப் படத்திலும் காணப்போகிறோம், அதுபோன்ற சீட்டு நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படமாக இருக்கப் போகிறது என்று பார்க்கச் சென்ற நமக்கு ஏமாற்றமே பரிசாகக் காத்திருந்தது.

1980 களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி வெளிவந்த “பேக் டு த ஃப்யூச்சர்” (Back To The Future) தொடர்ப்படங்களின் கதையே இந்தப் படத்தின் கரு. ஒரு ஃபேண்டஸி படமெடுக்கிறோமென்றால் அதில் பெரும்பாலும் நகைச்சுவையையோ, அல்லது உண்மையல்ல என உணரும் வகையில் மிகையான காட்சித் தொகுப்புக்களையோ முதன்மைபடுத்தி தான் எடுப்பார்கள் ஹாலிவுட்டில். ஆனால், நம்மவர்களுக்கு, ஃபேண்டஸியிலும் பங்காளிச் சண்டை வேண்டும், காதல் வேண்டும், உறவுகள் வேண்டும், நடக்க முடியாத விஷயங்களைக் கூட நடந்தது போலக் காட்ட வேண்டும். இதனையே இந்த இயக்குநரும் முயன்றிருக்கிறார். அதுபோன்ற ஃபேண்டஸியையும், ரியல் லைஃபையும் இணைக்கும் நேரங்களில் சலிப்புத் தட்டுகிறது.

வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பின்னோக்கிப் பயணம் செய்யும் ஒரு கருவி – டைம் மெஷின் – கண்டுபிடிப்பதே என்று முழுமையான ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு விஞ்ஞானி – சூர்யாவின் முதல் வேடம். அந்தக் கருவியைத் தன் சுய தேவைக்காகக் கைப்பற்றி, இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி பெற்றவனாக மாற வேண்டுமென்ற ஒரே லட்சியம் கொண்ட பலம் வாய்ந்த, அந்த விஞ்ஞானியின் அண்ணனான (மூன்று நிமிடங்கள் முந்திப் பிறந்த இரட்டையர்களில் ஒருவர்) வில்லன் – சூர்யாவின் இரண்டாவது வேடம். விஞ்ஞானிக்கு மகனாகப் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் பொழுதே தாய் தந்தையர் கொலை செய்யப்பட்டு (கொலை உபயம்: பெரியப்பா சூர்யா) இரயில் வண்டியில் கிடைக்கப்பட்டு சரண்யாவால் வளர்க்கப்பட்ட மகன் – சூர்யாவின் மூன்றாவது வேடம். என்ன தலை சுற்றுகிறதா? அதற்குள் தலை சுற்றினால் எப்படி, முழுவதும் படியுங்கள்.

ரயில் வண்டியில் சரண்யாவின் கையில் கைக்குழந்தையாய்க் கிடைக்கப் பெறும்பொழுதே, அவருடன் அப்பா விஞ்ஞானி இறப்பதற்கு முன்னால் வெற்றிகரமாகக் கண்டுபிடித்த கடிகாரம் (டைம் மெஷின்) ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு அவருடனேயே பயணிக்கிறது. ஆனால் அந்தப் பெட்டியின்  சாவி வில்லன் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டது, வில்லன் சூர்யா  விஞ்ஞானியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிக்கையில் அடிபட்டு கோமாவில் மாட்டிக் கொள்கிறார். அவர் நினைவு திரும்பும்பொழுது 26 வருடங்கள் கடந்து விடுகின்றது. 26 வருடங்களுக்குப் பின்னர் அந்த விஞ்ஞானியின் பழைய வீட்டிற்கே சென்று டைம் மெஷின் வைக்கப்பட்ட பெட்டியைத் தேடும் முயற்சியில், அவரிடமிருந்த சாவியைப் பறிகொடுக்கிறார்., அந்த சாவி எங்கெங்கெல்லாமோ சுற்றி, மகன் சூர்யாவின் கையில் கிடைக்கிறது. அவரும் தற்செயலாக அந்தச் சாவி, அவருடன் 26 வருடங்களாகக் கூடவே இருந்த அந்தப் பெட்டியினுடையதுதான் என்று கண்டுபிடித்து, பொருத்தித் திறந்து, உள்ளிருக்கும் கடிகாரத்தை எடுத்து, அது டைம் மெஷின் என்பதையும் எதிர்பாரா விதமாகவே கண்டுபிடிக்கிறார். எழுதுவதற்கே மூச்சு முட்டுகிறது, படிப்பவர்களின் கதி என்னவோ?

தொலைந்து போன டைம் மெஷினைக் கண்டுபிடிக்கச் சில வழிகளைக் கையாள்கிறார் வில்லன் சூர்யா. ஒருவழியாகக் கண்டுபிடித்தும் விடுகிறார். கண்டுபிடிக்கும் முயற்சியில் மகன் சூர்யாவையும் கொன்று விடுகிறார். ஆமாம், ஹீரோ செத்துடறாருங்க…. இப்பொழுது அந்தக் கடிகாரத்தை 26 வருடங்களுக்குப் பின்னோக்கிச் செலுத்தி, தனது இளமையை அடைந்து உலகை ஆளப்போவதாக அவரது நோக்கம். ஆனால், விஞ்ஞானி கண்டுபிடித்த டைம் மெஷினில் நேரம் மட்டுமே இருப்பதாலும், திகதி இல்லாததாலும் அவரால் அதே நாளில் பின்னோக்கிப் பயணப்பட முடிகிறதேயல்லாமல் அதற்கு மேல் பின்னோக்கிச் செல்ல இயலவில்லை. உடனே அவரின் அதி தந்திரமான மூளைக்கு, கடிகாரக் கடை வைத்திருக்கும் மகன் சூர்யா திரும்ப வந்தால் இந்த மெஷினை மேலும் முன்னேற்றமடையச் செய்து 26 வருடங்களுக்குப் பின் செல்ல வைக்க இயலும் என்று உதிக்கிறது. டைம் மெஷினை சில மணி நேரங்களுக்குப் பின் செலுத்தி  இறந்த மகன் சூர்யாவை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். இதற்கு மத்தியில், மகன் சூர்யாவை வளர்த்த சரண்யாவிற்கு ஒரு கிளைக் கதை, அவரின் அண்ணன் மகள்தான் நாயகி   சமந்தா. இவர்கள் குடும்பத்திற்குள் பெரியப்பா சூர்யா, விஞ்ஞானி சூர்யாவாக வேடமேற்று உள்ளே வந்து மகன் சூர்யாவை ஏமாற்றி அந்தக் கடிகாரத்தில் திகதி பார்க்கும் வசதியைச் செய்யச் செய்கிறார். அவரும் அதனைச் செய்து தர, அந்த நேரத்தில் வில்லன் வசனம் பேசி அதனை அபகரிக்க முயல, “நான் நேத்தே இன்னைக்குக்குள்ள வந்து நீ வில்லன் தான்னு கண்டுபிடிச்சிட்டேன்” என்று சொல்லி மகன் சூர்யா டபாய்க்க, நடக்கும் கைகலப்பில் இருவரும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தின் உதவியினால் 26 வருடம் பின்னோக்கிப் பயணிக்கின்றனர். தொடர்ந்து படிக்கிறீங்களா?

26 வருடம் பின்னோக்கிச் சென்றபின், விஞ்ஞானி சூர்யா உயிருடன் இருக்கிறார். மகன் சூர்யா கைக்குழந்தையாக மாறுகிறார். அதே கடிகாரத்தின் உதவியால் விஞ்ஞானி, அண்ணன் சூர்யாவைக் கொலை செய்ய, மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அந்தக் கடிகாரத்தைத் தலையைச் சுற்றி எறிந்து சாதாரண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். அத்தோடு வணக்கம் போடப்படுகிறது. தப்பித்தோம் பிழைத்தோமென்று நாமும் வீடு தேடிச் செல்லத் தொடங்கினோம்.

மிகவும் குழப்பமான கதை. ஆனால், முடிந்த அளவு தெளிவாகக் கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மிகச் சிறப்பான அம்சம் சூர்யாவின் நடிப்பு. மனிதர் அனாயாசமாக நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஆண்மை காட்டி, அதிகாரம் காட்டி, நம்பிக்கையுடன் நடிக்கும் காட்சிகளிலும், இருபத்தி ஆறு வருட கோமாவிற்குப் பிறகு நினைவு திரும்பியும் வீல் சேரிலே முழுவதும் அமரும் நிலையில் அவர் காட்டும் உணர்ச்சிகளிலும், பல இடங்களில் நடிகர் திலகத்தை நினைவூட்டுகிறார். அவரின் நிஜ வாழ்க்கைத் தந்தை சிவக்குமார் சிவாஜி கணேசனிடம் கொண்டிருந்த அபாரமான பற்றும் ஈடுபாடும் இவரின் குழந்தைப் பருவ மரபணுக்களில் ஏறியிருக்க வேண்டுமென்று எண்ணத் தோன்றுகிறது. சமந்தா வந்து போகிறார், ஒரு சில இடங்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சரண்யா எப்பொழுதும் போல் குணச்சித்திரத்தையும் அப்பாவித்தனமான நகைச்சுவையையும் நன்றாகச் செய்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றார்கள். பின்னணி இசை வழக்கம் போல நன்றாக இருந்தது, ஆனால் பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை. அது சரி, பொதுவாகவே பலமுறை கேட்டால் மட்டுமே மனதில் நிற்கும் தன்மையைக் கொண்டவையல்லவா அவை. நாம் ஒரு முறைதான் கேட்டுள்ளோம். மேலும் கேட்டு முடிவு செய்யலாம்.

”யாவரும் நலம்” என்ற சஸ்பென்ஸ் ஹாரர் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் K குமார் என்பவரின் இயக்கம். மனிதருக்கு இந்தப் படத்தில் எந்த அளவுக்குச் சுதந்திரம் தரப்பட்டது என்று தெரியவில்லை. ஒளிப்பதிவும் (திருநாவுக்கரசு) படத்தொகுப்பும் (ப்ரவீன் புடி) மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளன. சூர்யாவின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவே தெரியுமளவுக்கு இருந்ததில் வியப்பில்லை.

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad