கிராமத்துக் காதல் !!!
ஏரில் பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது களைத்திருப்பார்
அப்பா …
அவர் வியர்வை நிலத்தில்
விழுமுன்னே முந்தானையால்
ஓற்றியெடுத்து நுகர்வாள்
அம்மா ….
சித்திரை வெயிலின் கொடுமை
முந்தானையின் வாசத்தால்
தவிடுபொடியாக …
கரிசல் நிலத்தைத் தரிசாக்க
விழைந்தார் அப்பா …
உச்சியில் பழைய சாதத்தோடு
வெங்காயமும் மணக்க
அம்மா பக்குவமாய்க் கொண்டுவர –
அமிர்தம் இதுவன்றோ?
என்றே வரப்பிலமர்ந்து உண்ணுவார் அப்பா …
மிஞ்சிய சாதத்தைக் கரைத்துக் குடித்து
தேவாமிர்தம் …இதுதானோ….என்பாள்
அவளும் தன் பங்குக்கு ….
பாசக்காரி அம்மா …
இந்தக் காட்சியைக் கண்ட வானமும்
காதல் கொண்டு மழையாய்ப்
பொழிந்தது …வெட்கத்தில் முந்தானையால்
முகத்தை மூடிக்கொண்டாள்
அம்மா …
உழவன் …!!!
வான் மழையிலும் பூமிச் சேற்றிலும்
கலந்ததே எங்கள் வாழ்க்கை …
வருடம் முழுதும் ஒயாது உழைத்தாலும்
தீராததே எங்கள் வேட்கை …
குயிலின் கீதமும் மயிலின் அகவலும்
இணைந்ததே எங்கள் இன்னிசை…
வயக்காட்டில் நீரோடையின் ஓசையில்
தீராத் துயரும் தீருமே…..
ஆட்டுமந்தையிலே இளைப்பாரி
மாட்டுக் கொட்டகையிலே ஒடி விளையாடுகையிலே …….
இளங்கன்று பசிக்கையிலே
பாசத்தோடு பால்புகட்டி நாவால் வருடிக் கொடுக்க….
வளர்பயிர்களின் வாசம்
உழைப்போர் மனதைக் கொள்ளை கொள்ளுமே …
வான்மழையும் பொழிந்தால்
அதை வர்ணிக்க வார்த்தைகள் தானேது …..
பாட்டான் உழுத கலப்பையும் பயிருக்கு
நீர்வார்த்த விதமும் மரத்தை அவர்கள் வளர்த்தவிதமும் ……
கம்பங்கூழும் கூட்டிவைத்த மீன் குழம்பும் சொல்லுமே ஆயிரங் கதை…
உடல்நலமின்றி நோயில் இருந்தாலும்
பயிரை நோய் அண்ட விட்டதில்லை….
உயிரே போனாலும் மண்ணிற்கு
உரமாய்க் கலந்திருப்போமே…!!
உமையாள்