கவித்துளிகள்
கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,
சத்தத்தின் ஞாபகக் கூட்டில்
உன் பாதங்கள் வழுக்கிய
‘ஐயோ’ என உருண்டு ஓடிய
உன் பெருங்குரல்…..
வந்து மோதிய குரலின்
பார்வையைக் கவர்ந்து
கரைத்துக் குடித்து
மேல் எழும்பிய திரவியக் காட்டுக்குள்
நிறமற்று, நினைவற்று
அதுவரை இருந்த
வௌவால் இரவுகளின் திமிர்
திறந்து விடப் பட்டதாக நம்புகிறது
திறக்கவே காத்திருக்கும் என்
வீட்டு ஜன்னல்…
ஏனோ
உன் சத்தத்துக்கும் என்
மௌனத்துக்குமான
தழுவல் ஓங்கி ஒலிக்கிறது…
இம்முறை நான் ஜன்னல்
திறக்கவில்லை…
.மீண்டும் ஜனிக்கிறது உன் மரணம்…
சொல்லற்ற புனைவுகளின்
வழியெங்கும்
அழிய மறுக்கிறது
உன் கால்தடங்கள்…
நிழல் தூக்கிச் சுமக்கும்
இடைவெளிகள்
நிரம்பி வழிவது
உன் ஞாபகம்…
உயிர் திருகி உணர் பெருகி
தீக்காட்டுக் கலவரமாய்
காகிதப் பூக்களின் நடுவே
உன் மறதி …
ஞாபகமற்ற வலுவில்
நித்திரைத் தவங்களின்
தீர்ந்த கரைச் சலனத்தில்
உன் இருத்தல்…
போதும் போதும் முடியாத
அழுகைகளின்
வாயிலாக மீண்டும் ஜனிக்கிறது
உன் மரணம்…
உதிரிகள்
எல்லாக் கதைக்குள்ளும்
தானாக வந்து விழும்
திரைக் கதையை
வசனமின்றிக் கடந்து விடுகிறான்
கூட்டத்தில் முகமற்று
அமர்ந்திருக்கும்
நடிகன் ஒருவன்…
——————————————————–
வெட்டிக் கொண்டே வந்த
ஞாபகத்தில்
புத்தனையும் கொன்று விட்டு
நிமிர்ந்தேன்…
அப்போதும் அழுது
கொண்டுதான்
இருந்தாள் யசோதரை…
———————————————————
மீண்டும் அசைகின்ற
மனக்கண்ணில்
புகைப்படமாகவே
இருந்து விடட்டும்
நம்
எதுவும்…
———————————————————
தீ வளர்
குளிர்கிறது
என் பிணம்…
———————————————————–
கவிஜி