\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆணவம் அழிவைத்தரும் –  பைபிள் கதைகள்

bible-brothers-keeper_620x550அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் ஒருவரைப் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும்,  அதே சமயம் அடக்கமின்மையும் ஆணவமும்,  கடவுள் மேல் விசுவாசமின்மையும்   நம்மை இருளுக்குள் ஆழ்த்தி அழிவைத்தரும். உருவம் பார்த்து யாரையும் ஏளனம் செய்யக் கூடாது. மற்றவர்களைவிட நானே பலமானவன் என்று நினைப்பதே நம்முடைய முதல் பலவீனம். அதே போல எதிரியின் பலம் நமக்கு தெரியவில்லை என்றால் அதுவே நமது பலவீனம். இது எல்லாமே நாம் கேள்விப்பட்டதுதான்.

இதை நமக்கு உணர்த்தும்படியாக, கிருஸ்துவத் திருமறையாம் பைபிளின் பழைய ஏற்பாட்டில் நடந்த ஒரு நிகழ்வை இப்பொழுது பார்க்கப் போகிறோம்

ஆமாங்க ….  ஆதி காலத்தில் சாமுவேல் என்ற நீதிமான் இருந்தார்.

கடவுள் மீது ஆழ்ந்த பக்தியும், விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டவர்.  தன்னைச் சுற்றியிருக்கும்   மக்களுடைய நலனில் அதிக ஈடுபாடு உள்ளவர்.  தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேல்  மக்களுக்குத் தலைவராய் இருந்தார். சாமுவேலுக்கு வயதான போது அவர் தம் மகன்களை இஸ்ரயேலின் நீதித் தலைவராக அமர்த்தினார். ஆனால், அவர்கள் கடவுளுக்க ஏற்றவாறு நடவாமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாத பொறுப்பற்றவர்களாக இருந்தனர்.

இதைப் பார்த்த பின் கடவுள் பக்தியுள்ள சாமுவேல் ரொம்பவே மனது நொந்துபோய் கடவுளிடம் மன்றாடினார்.  பின்ன, பெத்த மனசு வேதனைப் படத்தானே செய்யும். அந்த நேரம் பார்த்து ……. இஸ்ரயேல்  மக்களும்,  சாமுவேலிடம் வந்து  “எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்என்று கேட்டார்கள்.  காரணம் அவர்களுக்கு நீதி வழங்கி வழிநடத்த மட்டுமில்லை…,  அடிக்கடி பக்கத்து நாட்டு பெலிஸ்தியர்கள் மிகப்பெரிய படையோடு வந்து  இஸ்ரயேலருக்கு மிகப்பெரிய கொடுமைகளைத் தந்தார்கள். சுருக்கமாச் சொல்லணும்னா ……. அந்த நாட்களில் இஸ்ரயேல்  மக்களுக்கு  நித்திய கண்டம் பூர்ண  ஆயுசுதாங்க. கடைசியில   சாமுவேல் கடவுளிடம் போய் முறையிட்டார்.

கடவுளுக்கும் மக்களுடைய வேதனையை அறிந்தாலும், மக்களுக்குத் தன்மேல் விசுவாசமோ நம்பிக்கையோ இல்லையே என்ற வருத்தம் இருந்தது.  என்ன இருந்தாலும் காக்கும் கடவுள் மக்களைக் கைவிடமாட்டார் இல்லையா? வலிமையான சவுல் என்ற ஒரு வாலிபனைச் சாமுவேலுக்கு காட்டினார். கடவுள்மேல் விசுவாசம் உள்ள போதெல்லாம் சவுலினுடைய வலிமை பல மடங்காக வெளிப்பட்டது. எதிரிகளிடமிருந்து இஸ்ரேல் மக்களைக் காக்க முடிந்தது.

ஆனால், வெற்றிகளையும் புகழையும் பெறப் பெற சவுலினுடைய நடத்தையில் மாற்றம் வரத் தொடங்கியது. கடவுளுடைய பார்வை சவுலைவிட்டு விலகியது. இதை அறிந்த சாமுவேல் மிகுந்த வருத்தமடைந்தார்.  மக்களைக் காத்து வழிநடத்த வலிமையான ஒருவரும் இல்லாதது கண்டு சாமுவேல் கடவுளிடம் போய் மன்றாடினார்.

ஆண்டவர் சாமுவேலைப் பார்த்து , “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கப்படுவாய்? பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரிடம் போ. ஏனெனில் அவர் மகன்களில் ஒருவனை அரசனாகத் தேர்ந்து எடுத்துள்ளேன்என்றார்.

ஆண்டவர் சொன்ன மாதிரியே  சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்றார்.  அங்கு ஈசாயையும் அவர் மகன்களையும்  பார்த்தார்.  அவர் மகன்களில் ஒருவனான எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம்  “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே.  மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்என்றார்.

அப்படி ஒவ்வொரு மகன்களாகக் கடந்து போயினர்.  சாமுவேலுக்கு ஒரே குழப்பம்.  அவர் ஈசாயைப் பார்த்துஉன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்கஇன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்என்று பதிலளித்தார் ஈசாய்.  அதற்கு சாமுவேல் அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா,  அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார்.

அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான்…………   அவன்தான் தாவீது.  ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.  சாமுவேல் அப்படியே செய்தார். சில நாட்களுக்குப் பிறகு பெலிஸ்தியர் போருக்குப் படைகளோடு வந்து  இஸ்ரயேலியர்கள் அருகில் ஒரு முகாம் அமைத்துத் தங்கினார்கள்.

இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு அவர்களும் ஒரு முகாம் அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிட அணிவகுத்தனர். பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு ஒன்று இருந்தது. பெலிஸ்தியர்  படையிலிருந்து கோலியாத்து என்ற வீரன்இஸ்ரயேலாரைத் தாக்க பெரும் படை தேவையில்லை நான் ஒரு ஆள் போதும்என்று வந்தான்.

அவன் உயரம் ஆறரை முழம். அவன் வெண்கலத் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கலத்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும், கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அணிந்திருந்தான். அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டைப் போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழுகிலோ இரும்பால் ஆனது.  அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.  அவன் இஸ்ரயேல் படைகளைப் பார்த்து  உரத்த குரலில்  “நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.

அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம். நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்குப் பணி செய்ய வேண்டும்என்றான். “ஒத்தைக்கு ஒத்தை வா  பார்க்கலாம்என்று நம்ப ஊர் பக்கம் சொல்லுவாங்க….. அதேதான். இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு பயந்து நடுங்கினர்.

அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான். அப்போது தாவீது போர்முனையில் இருந்த தன் சகோதர்களுக்கு உணவு கொண்டுவந்தார். அங்கு பயங்கரத் தோற்றம் கொண்ட பெலிஸ்திய வீரனான கோலியாத்து மேல சொன்ன அதே சவாலை இஸ்ரயேல் படைகளை ப் பார்த்துச் சொல்வதைத் தாவீது  கேட்டார். இஸ்ரயேல் படையினர் அனைவரும் மிகவும் அச்சமுற்று ஓடினர்.

இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுபடுத்த இவன் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மகளையும் மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார்என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்.

தாவீதைப் பார்த்த மூத்த சகோதரன் எலியாபு, தாவீதின் மேல் கோபத்துடன்  “நீ  இங்கு ஏன் வந்தாய்? நீ சின்னப் பையன்.  போரை வேடிக்கைப் பார்க்கவா  வந்தாய்என்றான். தாவீது அங்கிருந்தவர்களிடம்  “யாரும் கோலியாத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.  கடவுள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து நானே அவனோடு போர் செய்யப் போகிறேன்என்றான்.

அதற்கு  தாவீதிடம் அங்கிருந்தவர்கள்   “இந்தக் கொடியவனை எதிர்த்துப் போரிட உன்னால் முடியாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்என்றனர். தாவீது அவர்களிடம்  “நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,   பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன். அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன். நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன். இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான். ஏனெனில் அவன், வாழும் கடவுளின் படைகளை இழிவுபடுத்தியுள்ளான்என்றார்.

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்என்றார்.  பின்பு தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து மார்புக் கவசத்தையும் அணிவித்தனர். தாவீது வாளைத் தம் உடை மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார்.  பின்பு  ” இதில் எனக்குப் பழக்கம் இல்லை,  இவற்றுடன் என்னால் நடக்க முடியாதுஎன்று கூறி அவற்றைக் கலைத்து விட்டார்.

தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தக் கோலியாத் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான், ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான். தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா?”  என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான்.

மேலும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இறையாக்குவேன்என்றான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் கொடுப்பார். நான் உன்னைக் கொன்று  உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இரையாக்குவேன். இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்து கொள்வர்.

மேலும் ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கிறவர் அல்ல என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும். எனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உன்னை எங்கள் கையில் ஒப்புவிப்பார்என்றார்.  பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில்வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் பதிய, குப்புற விழுந்தான்.

இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது சண்டையிட்டு வெற்றி கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தார். இதைக் கண்ட பெலிஸ்தியர் அங்கிருந்து வெகுண்டு ஓடினர்.

நானே பலமானவன் என்று நினைப்பதே நம்முடைய முதல் பலவீனம்.

அதே போல எதிரியின் பலம் நமக்குத் தெரியவில்லை என்றால் அதுவே நமது பலவீனம்.

. பெஞ்சமின் ஹனிபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad