\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப் பயணம்

FESTIVAL_OF_NATIONS_2016 59_620 X 524ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ்

மினசோட்டாவின் செயிண்ட் பால் ரிவர்செண்டரில் வருடாவருடம் நடைபெறும்ஃபெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்‘ (Festival of Nations) திருவிழா, இவ்வருடம் மே மாதத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சென்ற வருட விழாவைப் பற்றிய நமது கட்டுரையில், இந்த நிகழ்வு பற்றிய பல தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.panippookkal.com/ithazh/archives/5906

இந்த வருட விழாவின் சிறப்பம்சமாக, நம் தமிழர் (கவனிக்க, நாம் தமிழர் அல்ல!!) குழுவின் பங்களிப்பை, முக்கிய நிகழ்வாகத் தமிழர்கள் நாம் எடுத்துக் கொள்ளலாம். தமிழர்களின் பங்களிப்பை, அங்கிருந்த மற்ற சங்கதிகளுடன் சேர்த்து ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, ரிவர்செண்டர் அரங்கிற்குள் நுழையும் பொழுது, முதலில் வரவேற்புத் தளத்திலேயே ஏதேனும் நாட்டின் நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களை வரவேற்கவே அந்த நடனம் என்று எண்ணிக் கொள்ளலாம்.

பக்கத்திலேயே தகவல் மையம். எங்கே, என்ன, ஏது நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு நடக்கத் தொடங்கலாம். நமது வசதிக்காகவே, ஆளுக்கொரு தகவல் கையேடு, கையோடு கொடுக்கிறார்கள். ரிவர்செண்டர் அரங்கில், இத்திருவிழாவை ஐந்து தளங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கலாச்சார அடுக்கையும், ஒவ்வொரு தளத்தில் பார்வையிட்டு, அறிந்து கொண்டு, அனுபவம் கொண்டு, உணரச் செய்து செல்லும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

முகப்பு வாயிலில் இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தவாறு இருந்தன. ஒவ்வொரு மணி நேரமும், ஒரு நாட்டின் கலாச்சார நடனம் அல்லது பாரம்பரிய இசை. உங்களை உலகக் கலாச்சாரத்தினுள் மூழ்கடிக்க, வேறென்ன வேண்டும்?

Festival of Nations

அடுத்தது, பெரும்பாலான மக்களின் ஆர்வமான, உலக உணவு உற்சவம். உற்சாகத்திற்குக் குறைவிருக்குமா என்ன? முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் வரிசை கட்டி அமைந்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, சீனா, துருக்கி, இத்தாலி, மெக்சிகோ என உலக நாடுகளின் சமையற்கட்டுகள் அனைத்தும் அக்கம் பக்கத்தில் அமைந்திருந்தன. நகர, நகர ஒவ்வொரு நாட்டின் உணவு மணமும், சுவையும், பார்வையாளர்களைத் திக்கு முக்காடச் செய்திருக்கும்.  ஒரு வாய் திபேத் மொமொ, ஒரு கடி ஹங்கேரியன் டம்ப்ளிங், ஒரு மடக்கு ஃபிலிப்பினோ பப்புள் டீ என்று திவ்வியமாக உலக உணவுகளை ரவுண்டு கட்ட ஏற்ற இடம். இந்தியக் கடையில் சமோசாவும், தந்தூரி சிக்கனும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அடுத்த முறை, ஒரு தமிழ்க் கடையைத் திறந்து இட்லியும், பொங்கலும் விற்றால், யாம் பெற்ற இன்பத்தை, உலக மக்களுக்கும் அறிமுகப்படுத்தியதாக இருக்கும்.

உணவு அரங்கிலும், கலை நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு மேடை அமைத்திருந்தனர். நிகழ்ச்சி இடைவேளையில் உண்ணவும், உணவு இடைவேளையில் நிகழ்ச்சியைப் பார்க்கவும் தோதாக. ஆங்காங்கே, இள வயதினோர் ஆர்வத்துடன் விளையாட ஒருமெகாசெஸ் போர்டும், ஒருமினிகோல்ப் கோர்ஸும் அமைத்திருந்தனர்.

இங்கிருந்த கடை ஒன்றில், பச்சைத் திரை (Green Screen) மூலம் கிராஃபிக்ஸில் நமது படத்தை, உலகப் புகழ் பெற்ற இடங்களின் முன் இணைத்து விற்றுக் கொண்டிருந்தனர். எங்கூரில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில், இந்த மாதிரி படமெடுக்கும் வசதி இருந்ததை, சிறு வயதில் பார்த்தது நினைவுக்கு வந்தது. என்ன, அது பெயிண்டில் வரையப்பட்ட திரை, இது டிஜிட்டல் க்ரின் ஸ்கீரீன் டெக்னாலஜி. அவ்ளோ தான்!!

உணவு அரங்கிற்கு அடுத்தது, உலகக் கடைவீதி. ஒவ்வொரு நாட்டின் கைவினைப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, நாம் ஒரு ஊருக்குப் பயணப்பட்டால், அந்த ஊர் ஞாபகார்த்தமாக ஏதேனும் வாங்கி வருவோம். இங்கு எதை வாங்க, எதை விட என்று குழப்பம் தான் வரும். அவ்வளவு கண்ணைக் கவரும் பொருட்கள். குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் பக்கம் ஓட, பெண்கள் அலங்கார, உடை பகுதிகளுக்குச் செல்ல, ஆண்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாக இருந்தது. இங்கிருந்த இந்தியக் கடையில் பட்டம் விற்றுக் கொண்டிருந்தார்கள். கவனிக்க, வானில் பறக்க விடும் பட்டம் தான்!!

இத்தளத்திற்கு மேல், ‘வேர்ல்ட் ஸ்டேஜ்என்றழைக்கப்படும் பெரிய ஆடிட்டோரியம் உள்ளது. மற்ற அரங்கில், சிறு சிறு குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் என்றால், இங்கு பெரிய குழுக்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் சென்றிருந்த சமயம், தமிழ்க் குழுவின் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. அரங்கில் அமைக்கப் பெற்றிருந்த அகண்ட திரையில், எகிப்து, துருக்கி, செக் ஆகிய நாடுகளின் பெயர்களுடன் தமிழ் என்ற எழுத்துகள் ஒளிர்ந்தபோது, அதைக் காணவே ஜிவ்வென்றிருந்தது.

ஒவ்வொரு குழு வரும்பொழுதும், அந்த இனத்தைப் பற்றிய அறிமுகமும், அவற்றின் பண்பாடு குறித்த தகவல்களும் சொல்லப்பட்டன. தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பல பகுதிகளில் பேசப்படும் மொழியாகத் தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்றமுறை, நாம் இங்கு பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தபோது, யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின்உலக இசைக்கு நம்மவர்கள் ஆடியதைச் சிறு வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை அந்த வருத்தம் சுத்தமாகப் போக்கப்பட்டிருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், பறை, பொய்கால் குதிரை ஆட்டம் என நம்மூர்க் கலைகள் முதன் முறையாக, ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் திருவிழாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இவற்றுக்குப் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் பல கலைஞர்கள் ஒன்று சேர ஒருங்கிணைந்து பங்குபெற்று இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும். வரும் காலத்தில் இது போல் கண்டிப்பாக நடைபெற்று, நமது கலைகள் இங்கு உலகப் புகழ் பெறும் என்று நிச்சயம் நம்பலாம்.

இதற்குப் பக்கத்தில் இருந்த அடுத்த அரங்கில் பண்பாட்டுக் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் ஒரு தகவல் மையம் அமைத்து, அந்நாட்டின் சிறப்பைப் பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இங்கும் ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டு, இசைக் கச்சேரி நடைபெற்று வந்தது. நாம் சென்ற சமயம், ஒரு துருக்கியக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு அமர்ந்து அதைக் கேட்டபோது, அதனுள் நம்மால் சுலபமாக ஒன்றி ரசிக்க முடிந்தது. அதற்கு இசைஒரு உலகப் பொது மொழி என்பது ஒரு காரணமென்றால், நம்மூர்த் திரையிசைப் பாடல்களிலேயே, தற்சமயம் பல்வேறு நாடுகளின் இசைக் கருவிகளின் பங்களிப்பையும், இசை வடிவத்தையும் கேட்க முடிவது, இன்னொரு காரணமாக இருக்கக்கூடும்.

இங்கிருந்த தமிழ் அரங்கில் சிலப்பதிகாரம் குறித்த ஓவியங்களும், தமிழ்க் கலைஞர்களின் அலங்கரித்த புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. கரகம், பறை, சலங்கை, நாட்டுப்புறக் கலைஞர்களின் ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரங்கில் இருந்த அன்பர், திரு. சச்சிதானந்தம் அவர்கள் அங்கு வருகை தந்த அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சோர்வில்லாமல் தமிழ் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டுக் கலைகள் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு அவர்களது பெயர்களைத் தமிழில் எழுதியும்,  ‘வணக்கம்‘, ‘நன்றிபோன்ற தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்தும் சலிப்பில்லாமல், தமிழ் சேவையாற்றிக் கொண்டிருந்தார். இதுபோல், பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை, இங்கிருந்த அரங்குகளில் சென்று அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. இந்திய மருதாணிக்கடையிலும் வழக்கம் போல் இங்குள்ளவர்கள் ஆர்வத்துடன்தற்காலிகப் பச்சைகுத்திக் கொண்டிருந்தனர்.

எண்பது வருடங்களுக்கு முன்பு, முதன் முதலில் இந்த விழா ஆரம்பிக்கப்பட்டபோது, பத்திற்கும் குறைவான இனக்குழுக்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொள்கிறார்கள். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னமும் கூடும். பலன்மினசோட்டா மக்கள், விசா இல்லாமல் உள்ளூர் ரிவர்செண்டரிலேயே உலகைச் சுற்றிப்பார்க்கலாம். இது மினசோட்டாவாசிகள் மிஸ் பண்ணக்கூடாத நிகழ்வு.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad