\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எங்கிருந்தோ வந்த நட்பு

Filed in இலக்கியம், கதை by on June 26, 2016 0 Comments

enkurutho-vantha-nadpu_620x855எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் பயந்து பயந்து பார்த்துக் கொண்டே நகர்ந்தது. குட்டி நாய் தன்னைக் கண்டு மிரண்டு சென்றதைப் பெரிய வெற்றியாகக் கருதிய இந்த நாய் தன் இடத்தை முகர்ந்து பார்த்து, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வளைத்து விட்ட திருப்தியுடன் தனது உடலை வளைத்துப் படுத்தது. பசியினால் கண்களை மூடிக் கனவு காண ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு சத்தம். விடுக்கென்று நிமிர்ந்து பார்த்தது, பாதையின் அந்தப் புறம் இருந்த வீட்டிலிருந்துஇங்க எல்லாம் ஒண்ணும் கிடையாது போம்மாஎன்ற விரட்டலும் பசிக்கு ஏதாச்சும் போடுங்க சாமிஎன்ற அந்த பெண்ணின் குரலும் இதற்குக் கேட்டன. “போம்மா முதல்லஎன்ற அந்த வீட்டுக்காரனின் அதட்டலால் அந்தப் பெண் முணுமுணுத்தவாறு அடுத்த வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தது. இந்தக் காலனியில இருக்கும் வீட்டுக் காரர்களைப் பற்றி இந்தப் பெண்ணுக்குத் தெரியாது போலும் என்று நினைத்துக் கொண்ட அந்த நாய் மீண்டும் தன் கண்களை மூடிக் கனவினைத் தொடர்ந்தது. ஐந்து நிமிடங்கள் ஓடியிருக்கும், அந்தப் பெண் முணுமுணுத்தவாறு தன்னைக் கடந்து செல்வதை, கழுத்தைத் தரையோடு படுக்க வைத்துக் கண்களை மட்டும் விரித்துப் பார்த்தது. அந்தப் பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கலாம், எண்ணெய் காணாத தலை, கையில் ஒரு துணி மூட்டையை வைத்திருந்தாள். அதனுள் என்ன வைத்திருப்பாளோ ! அப்படி ஒரு இறுக்கத்துடன் அந்த மூட்டையைப் பிடித்திருந்தாள். மூக்கைச் சற்று நிமிர்த்தி அந்த மூட்டைக்குள் தான் சாப்பிடத் தகுந்த ஏதாவது வைத்திருப்பாளா என  முகர்ந்து பார்த்தது. அந்த மூக்கில் சட்டென்று ஒரு மணம் உள்ளே நுழைதது. விலுக்கென எழுந்து அந்தப் பெண்ணைத்  தொடர ஆரம்பித்தது. ஏதோ புலம்பியவாறு நடந்து கொண்டிருந்த அந்தப் பெண் தன்னைத் தொடர்ந்து வரும் இந்த நாயைஏய் போ போஎன்று விரட்டி, தன்னை விரட்டிய அந்த வீட்டுக்காரன் மேல் இருந்த கோபத்தை காண்பித்துக் கொண்டாள்.இது மாதிரி எத்தனை விரட்டுதலை இந்த நாய் பார்த்திருக்கும், அதற்கெல்லாம் அஞ்சாமல் அந்தப் பெண்ணின் மூட்டையைப் பார்த்தவாறு, மூக்கைத் துருத்திக் காண்பித்தது. அந்தப் பெண் மூட்டையை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

நாலைந்து தெருக்கள் சுற்றி விட்டார்கள் அந்தப்பெண்ணும், கூடவே அந்த மூட்டையைக் குறி வைத்து வந்த நாயும். இரண்டு இடங்களில் கிடைத்த பழைய சாதத்தை அந்தப் பெண் இதற்கும் பங்கு பிரித்துக் கொடுத்தாள். முதலில் தேவையில்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக்கொண்ட நாய் இவள் அரக்க பரக்கச் சாப்பிடுவதைப் பார்த்து மெல்ல மூக்கை அதன்மேல் வைத்தது. அதற்குப் பிடித்த வாசம் மூக்கில் ஏற,அதன் பின் அதுவும் வேகமாகக் காலி செய்ய ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டு அவள் உட்காருவாள் என நாய் எதிர்பார்த்தது, அவளோ மீண்டும் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விட்டாள். நாய் தயங்கியது, அங்கு வேறு இரண்டு நாய்கள் அந்தத் தெருவுக்கு ராஜாக்களாக இருந்தன. வீணான பிரச்சனைகளைச் சந்திக்க விரும்பாததால், அந்தப் பெண்ணை அடுத்த தெருவில் சந்திப்பது என முடிவு செய்து விட்டது. மீண்டும் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நடுப்பகல் கடந்து விட்டது.

அந்தப் பெண் மூடியிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாய் மெல்ல அவளிடம் நெருங்கி வாலை ஆட்டி நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று தெரிவித்தது. அவள் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இதனைப் படுக்கச் சொல்லிச் சைகை செய்தாள். இவள் சைகையை புரிந்து கொண்டது போல மெல்ல அவள் உடலை உரசிப் படுத்துக் கொண்டு தலையை நிமிர்த்தி எனக்கும் ஒரு எஜமான் உண்டு என்பது போல பார்த்தது.

இப்பொழுது மூட்டையில் இருந்து வந்த வாசம் அதற்கு அறிமுகமானது போல இருந்தது. ஆனால் அது என்னவென்று பிடிபடாமல் இருந்தது. அடிக்கடி டீக்கடைகளில் நிற்கும் போது இதன் வாசம் வந்ததாக நினைவு. மெதுவாக அந்த மூட்டைமேல் தன் மூக்கை வைத்து மூச்சை இழுத்துப் பார்த்தது. ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். அந்தப் பெண் திடீரென்று எழுந்து விரு விருவென நடக்க ஆரம்பித்து விட்டாள். இந்த நாயிற்கு ஒன்றும் புரியவில்லை, அதைத் தொடர்ந்து போகலாமா, இல்லை இங்கேயே இருந்து விடலாமா என்று தயங்கியது. அந்த மூட்டை வாசம் அதன் நினைவுகளில் வர, அதுவும் எழுந்து அந்தப் பெண்ணின் பின்னால் நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரு ஆள் இவளை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். இந்தப் பெண் அவன் அருகில் சென்று ஏதோ சொல்ல, என்ன பேசுகிறார்கள் என நாயிற்குப் புரியவில்லை, இருந்தாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பது போல அந்தப் பெண்ணை உரசி நின்று கொண்டு அவனைத் தலையை உயர்த்திப் பார்த்தது. அவனுக்கும் தன் அன்பைத் தெரிவிக்கத் தன் வாலை மெல்ல ஆட்டிக் காண்பித்தது.

இப்பொழுது அந்தப் பெண்ணுடன் இந்த ஆணும் இணைந்து நடந்ததால் நாயிற்குக் கொஞ்சம் கோபம் வந்தது. திடீரென்று வந்த இந்த நட்பால், தான் ஒதுக்கப்பட்டதாகக் கருதியது. வாலை நிமிர்த்தி வைத்தவாறு விரைப்புடன் இவர்கள் உடனே அதுவும் நடந்தது. அவன் ஏதோ இந்த நாயைப் பார்த்துச் சொல்ல அவள் கெக்கலி இட்டுச் சிரித்ததைஇவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிச் சிரிக்கிறார்கள் என நினைத்துத் தன் கோபத்தைக் காட்ட உர்..என உறுமிக் காட்டியது. இது உறுமியவுடன் இவன் அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்லி, கீழே குனிந்தான். இவன் கீழே குனிந்ததைப் பார்த்த அந்த நாய், கல்லைத் தூக்குவதாக நினைத்து அவனைப் பார்த்து மீண்டும் உறுமியது. அவன் நிமிர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்து ஏதோ சொல்லி மீண்டும் குனிய அந்த நாய் அவன் தன்னைத் தாக்கி விடுவானோ என்ற பயத்தில் குலைக்க ஆரம்பித்து விட்டது. அவன் உண்மையிலேயே கல்லை எடுத்து விட்டான், அந்தப் பெண் அவன் கையைப் பிடித்து ஏதோ சொல்ல, அவன் கோபமாய் அதற்குப் பதில் சொன்னான்.

இப்பொழுது நாயிற்குக் கோபம் வர ஆரம்பித்து விட்டது, அதற்குக் காரணம் அந்தப் பெண்ணிடம் அவன் அதீத நட்பாய் இருப்பது அதற்குப் பிடிக்கவில்லை. ஆனால் கோபத்தைக் காட்ட, குரைக்க ஆரம்பித்தால் அவன் கல்லை எடுத்துத் தன்னைத் தாக்குவான் என்று உணர்ந்து துக்கம் தாளாமல் அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்து விட்டது. அந்தப் பெண், நாயை சமாதானப்படுத்துவது போலக் கூப்பிட்டாள். இதற்கு அருகில் போக ஆசையிருந்தாலும் அவன் கையில் கல் இருந்ததால் பயந்து அங்கேயே நின்று ஊளையிட்டது. அந்தப் பெண், நாயைச் சமாதானப்படுத்த மெல்ல மூட்டையைப் பிரித்து ஒரு பேப்பரில் சுற்றி வைத்திருந்த வடையை எடுத்து அதனை நோக்கி வீசினாள். இவ்வளவு நேரம் தனக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த அந்தப் பொருள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த நாய் வேகமாக அதைக் கவ்வ, ஓடி வந்தது. அப்பொழுது எங்கிருந்தோ வந்த மற்றொரு நாய் அந்த வடையைத் தானும் கவ்விப் பிடிக்கப் பாய்ந்து வந்தது.

இந்த நாயிற்கு எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ தெரியவில்லை, அந்த வடையை ஒரே கவ்வாய்க் கவ்விக் கொண்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டது. அந்தப்பெண்ணும், ஆணும்,விழுந்து விழுந்து சிரிப்பதைக் கூட கவனிக்கவேயில்லை. அதனுடைய இடத்துக்கு வந்த பொழுது, மீண்டும் அந்தக் குட்டி நாய் அந்த இடத்தில் படுத்துக் கிடந்தது. இந்த நாய் வந்தவுடன் அந்த நாய் மெல்ல எழ முயற்சிக்க அதனைச் சட்டை செய்யாமல் தள்ளிப்போய் படுத்துக்கொண்டு தன் கனவை மீண்டும் தொடர ஆரம்பித்தது.

இறைவனின் குழந்தைகள்

இணையை அழைக்க, இல்லை,

மழையை அழைக்க !

சிறகை விரித்து அழகு காட்டும்

ஆண் மயிலுக்கு, ஆயிரம் வண்ணங்கள்

சிறகுக்குள் வைத்தவன் யாரோ?

சிறிய பொந்துக்குள் சிக்கனமாய்

குடும்பம் நடத்தும் சிட்டுக் குருவிக்கு

சிக்கனத்தைக் கற்றுக்கொடுத்தவர் யாரோ?

ஒரு முறை இட்ட உணவுக்கு

காலம் முழுக்க வாலை ஆட்டும் நாயிற்கு

நன்றியை சொல்லிக் கொடுத்தவர் யாரோ?

கூட்டுக் குடும்பத்தைப் பாங்காய்

நடத்தும் யானைக் கூட்டத்துக்கு

இதனைக் கற்றுக் கொடுத்தவர் யாரோ?

மூட்டை மூட்டையாய் ஆடை

அழுக்குகளை முதுகில் சுமந்து

செல்லும் கழுதைகளுக்கும்,

வண்டி வண்டியாய்ச் சுமைகளைச்

சுமந்து செல்லும் காளைகளுக்கும்

உழைப்பைக் கற்றுக் கொடுத்தவர் யாரோ?

நாளைய பொழுது நம் கையில்

இல்லை என்று,

வேதாந்தம் பேசி மூன்று தலை முறை

சொத்துக்கள் சேர்த்தும்,

நிம்மதி தேடும் மனிதர்களிடையே

நாளைப் பொழுது வாழ்க்கை

வாழ்வா சாவா! என்பது

தெரியாமல், நிலம், நீர், ஆகாயம்

இவைகளில் வாழ்ந்து, இன்றைய

பொழுதை இனிதே கழித்திடும்.

மனிதனைத் தவிர !

மற்ற உயிர்கள் அனைத்தும்

இறைவனின் குழந்தைகளே !

–           தாமோதரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad