கவித்துளிகள்
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலிரவில் கணவனின் பிடியில்
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் கருவுற்ற
பெண் !
தன்னுள் தாய்மையை
உணர்ந்தாள் ….
மழலையின் மொழியில்
பெண் !
நீர் இன்றி அமையாது உலகு !!!
கோடை வெயிலில் விவசாயி வியர்க்க
வறண்ட பூமியும் நீரின்றிப் பிளக்க
பூட்டிய கலப்பையில் காளைகள் மூச்சிரைக்க
கானல்நீரைப் பாதையில் தேடி – நானும் வியக்க ….!!
முப்பாட்டன் பெயர் சொல்லும் மரமே
கற்காலம் தொட்டு வளர்ந்து நிற்கும் மரமே
காடுகரை உருவாகும் முன்பே தோன்றிய மாமரமே
உனைத் தொட்டு நிற்பவன் நானோ மகாபாவி …
உனை வேரறுக்க இன்றே விலைபேசி முடித்தேனே
இதை நீ அறிந்தாயோ?
அறிந்தும் அறியமால் போனாயோ?
சுட்டெரிக்கும் வெயிலில் வேரறுக்க நினைத்த
எனக்கு நிழலும் தந்து…
களைப்பைப் போக்கி …..
என் வியர்வை போக்கி வியக்க வைத்த மரமே !
தாயே, உன் கருணையே கருணை !
சுயம்பாய் அருளிய இயற்கைக் கொடையே !
இயற்கை இறையே ! அருள்புரிவாயே !
நீர் இன்றி அமையாது உலகு !
மரமே, மன்னிப்பாயா?
அறியாமையால் நான் செய்த பிழையை பொறுப்பாயோ?
எமைக் காப்பாயோ !
ஏன் பிறந்தேன்?
கருவறையில் சுகமாக
இ்ருந்த என்னைப் பிரசவ அறையில்
இப்பிரபஞ்சத்தை அறியச் செய்தவளே,
உனை மகிழ்விக்க நான் அழுதே பிறந்தேனே !
அந்த ஒரு நொடி நீ அகமகிழ்ந்தாயே !
மறுநொடி நான் அழுததென் காரணத்தை அறிய முனைந்தாயே !
கவிழ்ந்தேன் ; தவழ்ந்தேன்;நடந்தேன் ;விழுந்தேன் ;
பின்னெழுந்தேன் !
” த்த…த்த …அத்தை ” என ஆரம்பித்து
நான் உளறிய மழலை மொழியில்
அவள் தன் உலகை மறந்தாளே
அறியாப் பருவத்தில் பள்ளி சென்று,
விவரம் அறியாமலே படிக்க ஆரம்பித்து
பன்னிரண்டாம் வகுப்புவரை படித்து
கல்லூரியிலும் பயின்று ….
இன்று நான் ..நானாக உள்ளேனா?
ஏதோ ஒரு வேலையை விரும்பித்தான் செய்கிறேனா?
எதற்காக இந்த ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எங்கு….நான் ஒய்வு எடுப்பது?
என் இலக்குத் தான் என்ன?
உலகில் பிறந்ததென் அர்த்தம் தானென்ன?
யாரை மகிழ்விக்க நான் பிறந்தேன்?
மகிழ்வித்தேனா?
அல்ல மகிழ்ந்தேனா?
என்னுள் இவ்வாறாக பல கேள்விகள்
இதன் பதில் தெரியாமலே ….
கண்களில் ஏதோ ஒரு ஏக்கத்தோடு விட்டத்தை நோக்கி நான்!
எதையோ ….இழந்தது
போன்ற உணர்வை
தவிர்க்க முடியாமல் …நான் !
ஒழுங்கு
மாலை நேர அணிவகுப்பு
கட்சிகளின் பொதுக்கூட்டத்தில்
சாரை சாரையாய் மக்கள் ….!!
மாலை நேரக் கடைகளில்
கைகளில் கோப்பைகளுடன்
சாரி சாரியாய் (குடி)மக்கள்….!!
மாலை நேர வகுப்பு
மின் கம்பத்தில்
வரிசை வரிசையாய் காகங்கள் !
மாலை நேரக் கூட்டத்தில்
கட்சித் தலைவர்களின்
வாரிசுகள் வரிசையாய் கழுகுகள் !
பணம் தின்னும் கூட்டத்தில்
பதவி வெறியால்
தமிழகத்தை தரிசாக்க முனைந்த
நாதாரிகள் !
ஊடலும் கூடலும்
எரிமலைக் குழம்பாய் இருந்தாள் அவள் …
ஆல்ப்ஸ் மலைக் காற்றாய் வீசினேன்
நான் ….
எனது வெள்ளைக் கொடிகள் எல்லாம்
விவாகரத்தான கட்சிக்கொடிகள்
போலாயின
இனியும் யுத்தம் செய்ய வார்த்தை
அம்புகள் ஏதுமற்ற நிராயுதபாணியாக
நிற்கிறேன் நான் ….
எரிமலை சீற்றங் கொண்டது போல்
பொங்கினாள் அவள் …..
சபரிமலை வாசனின் பக்தனைப் போல்
சாந்தமாக நான் ….
காளியாக ருத்ரதாண்டவம் ஆடினாள்
அவள் ….
நடராஜர் நர்த்தனம் ஆடியதைப்போல்
நான் ….
என்னுள் ஒரு மின்னல் …
இமைக்கும் பொழுதில் என்னுள்
அவளை இழுத்து என் இதழால்
ஒற்றி எடுத்தேன் …
வெப்பம் பரஸ்பரமாய்
பரிணாமம் அடைந்து…..அவள் விழியிலிருந்து கசிந்து போனதடா….
ஊடல்
இது தான் !
ஊடல் பின் கூடல்
என்பதுவோ?
என்னவளே !
உனை ஒவியமாகத் தீ்ட்டிட
தூரிகையைத் தேடினேன் …
ஓவியத்தை ஓவியமாகத் தீ்ட்டிட
தூரிகையும் துயில் உரித்ததடி….!
உனைச் சிற்பமாகச் செதுக்கிட
உளியைத் தேடினேன் ….
சிலையைச் சிலையாகச் செதுக்க
உளியும் உயிர் துறந்ததடி!
உனைக் கவிதையால் வர்ணிக்க
வார்த்தைகளைத் தேடினேன்….
கவிதைக்கே கவிதை படைக்க
கவிதையும் வார்த்தை தடுமாறியதடி!
அற்ப மானிடன் நானோ …
என் செய்வேன்? உன் அழகினிலே…
எனை இழக்கிறேனடி !
உமையாள்