வெள்ளரிக்காய் சம்பல்
பட்டப் பகல் வெய்யிலில் உடலும் உள்ளமும் குளிர்மையடைய இனிய வெள்ளரிக் காய் இதமான இன்பம் தரும் காய்கறி. பிஞ்சு வெள்ளரிக் கொடியில் இருந்து கொய்து, கொறித்துச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயைப் பலவிதமாகவும் பக்குவப்படுத்தி நம்மூர் மக்களும், இவ்வூர் மக்களும் சாப்பிடலாம். இதோவொரு இலகுமுறை
தேவையானவை
1 பெரிய வெள்ளரிக் காய்
1 காரட்
1 தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய புதினா இலைகள்
½ தேக்கரண்டி உப்பு
2 சிறிய வெங்காயம்
2 கட்டித் தயிர் (Greek Yogurt)
1 தேக்கரண்டி குற்றியெடுத்த மிளகுத்தூள்
செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் காரெட் இரண்டிலிமிருந்து தோல்களை முதலில் சீவி அகற்றிக் கொள்ளவும். அடுத்து வெள்ளரிக்காயை அரைவாசியாக அதன் நீளமான பகுதியில் பிளந்து கொள்ளவும். அடுத்து சிறிய கரண்டியால் விதைகளைக் காந்தி (scrape) அகற்றி விடவும். வெள்ளரிக்காய்ப் பாதிகளை மீண்டும் 2-3 பிளவுகளாக நீளப்புறமாக வெட்டி, அடுத்து சிறிய சிவல்களாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்.
காரெட்டையும் சிறிய சீவல்களாக அரிந்து எடுத்துக் கொள்ளவும். உணவை அழகாக்க விரும்புவோர் காரட்டை நெருப்புக் குச்சி போன்று கத்தியாலோ அல்லது இயந்திர அரியும் சாதனம் (Food Processor) உதவியுடனோ அரிந்து எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சமையல் அழகியல் முறை ஜூலியனிங் (Julienning) என்று அழைக்கப்படும்.
அடுத்து சின்ன வெங்காயத்தையும் சிறிய துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும். அரிந்த யாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, புதிதாக குற்றியெடுக்கப்பட்ட வாசமான மிளகையும், உப்பையும் சேர்த்து ஓரிருமுறை கையினாலோ அல்லது கரண்டியினாலோ கலக்கவும். அடுத்து, கட்டித் தயிரையும், நறுக்கிய புதினா இலைகளையும் நன்கு கலந்து, ஒரு 5-10 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, சுடுசோறு, கறிகளுடன் சேர்த்துப் பரிமாறலாம்.
பின்குறிப்பு – இளைய வெள்ளரிக்காய் இனிமையானது எனினும் சிலர் அரிந்து எடுத்த வெள்ளரிக்காயைச் சீனியும், உப்பும் இட்ட தண்ணீரில் உறவைத்தும் பின்னர் மேற்குறிப்பிட்ட மிகுதிச் செய்முறைகளையும் செய்து கொள்வர்.
தொகுப்பு யோகி