சுதந்திர தேவி
ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.
ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.
அகந்தை துறந்த அழகுப் பொலிவோடு
அளவில்லா அன்பின் அமைதிச் சிரிப்போடு
அண்டி வந்தோரை அகமலர்ந்து வரவேற்று
அவள் அரவணைத்த முகங்கள்தான் எத்தனை
உறவை மீண்டும்காண உறுதியற்ற நிலையில்
உரமேறிய நெஞ்சோடு உருவேறிய பற்றோடு
உலக அமைதிக்காக போர்முனை சென்றவரை
உளமாற வாழ்த்தி வழியனுப்பி வைத்திருப்பாள்.
உண்ண உணவும் உடுக்க உடையும்
உறங்க உறைவுமின்றி தஞ்சம் புகுந்தோரை
உவகை நிறைந்த வாஞ்சை காட்டி
உற்றார் இவரென நல்வாழ்வும் அளித்திருப்பாள்.
சுதந்திரக் காற்று சுகந்தமாய் படர்ந்து
சுகித்திடும் வாழ்வு எங்கும் நிறைந்து
சுருங்கா வளமும் சுணங்கா மனமும்
சுபிட்சமாய் நிலைத்திட காத்திடுவாள் தேவி.
– ரவிக்குமார்.