\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

reading-to-kids_620x474சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது  தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது.

உடலின் வெளிப் பெருந்தசைகள் பல வருடங்கள் எடுத்து வளரினும், மூளைத் தசையின் தேர்ச்சியோ மாறுபடுகிறது. இது மனிதனாகிய விலங்கு, தன் சுற்றுச் சூழலை எதிர்நோக்கி, தன் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்குப் பலவகைப் பகுத்தறிவுகளையும் பெற்று ஆயத்தமாக்குகிறது. எனவே பிற்காலப் பலனிற்கு முற்கால அத்திவாரம் மனிதச் சிறார்க்குத் தேவையாகவுள்ளது. பெரியவர்களும் பாலகர்களும் முதல் 5 வருடங்களில் சேர்ந்து வாசி்ப்பது மூளையின் தொழிற்பாட்டைத் தேர்ச்சியடைய வைக்கும்.

இது பிள்ளைகள் வளர்ச்சியில் வெளிப்படையாக அவதானிக்கக் கூடியது. எனினும் அண்மையில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள காந்த ஒத்திசை மீள்வரைவு (MRI – Magnetic Resonance Imaging) தொழில் நுட்பத்தினால் 3 தொடக்கம் 5 வயது பிள்ளைகளும், பெற்றார் பிள்ளைகளுக்கு வாசிப்பதையும் அதனால் ஏற்படும் மூளைத் தொழிற்பாட்டுத் தொடர்புகளும் தெளிவாக்கியது. இந்த அவதானிப்புக்கள் மூலம் தொடர்ந்த வாசிப்பும், பல்வேறு பட்ட புத்தக வாசிப்புக்களும் குழந்தை மூளையின் இடவலயத் தொழிற்பாட்டைத் துரிதமாக்கியதை அவதானித்தார்கள். மூளையின் இடவலயம் மூளையின் சொல் பிரயோகம், அதன் உட்பொருளை விளங்கிக் கொள்ளுதல் போன்ற தொழிற்பாடுகளிற்குப் பொறுப்பானது.

பிள்ளைகளும் பெற்றார்களும் சேர்ந்து வாசித்தல் மூளையை நல்லவகையில் தூண்டும் ஒரு விடயம். பிள்ளைகளுடன் வாசித்தலை மூன்று படிமுறைகளாக நாம் இவ்விடம் கருதிக் கொள்ளலாம்.

1 – முதல் புத்தக அறிமுகம் – படங்களைப் பார்த்தல் அது பற்றி உரையாடல்

2 – சொற்களை எழுத்துக் கூட்டி வாசித்தல்

3 – வாசி்த்ததைக் கிரகித்தல், வாசிப்பினால் உணர்ந்துள்ள முக்கிய சிந்தனைகளைப் பற்றி மேற்கொண்டு உரையாடுதல்.

பெற்றார் பிள்ளைகளுடன் அன்றாடம் வாசித்தல், நேரம் எடுத்து ஒன்று கூடுதல், விளையாடிச் சிந்தித்தல் போன்றவை பிள்ளைகளின் பாசத்தையும் அதனூடு மிகவும் சாதகமான நிலையில் புதிய விடயங்களைக் கற்றலையும் தூண்டும். மேலும் இந்தக் கைமுறை பிள்ளைகளில் திடகாத்திரமான பாடசாலை ஆரம்பித்திற்கும் உதவும்.

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல்

ஆரம்ப வாசிப்பில் பெற்றார்கள் நீண்ட கதைகளைத் தெரிந்தெடுக்கலாகாது. பாலகர்களது உக்கிரமான அவதானிப்பு சில நிமிடங்கள் தான். எனவே மேலே கூறப்பட்டுள்ளது போல கண்களைக் கவரும் படங்களையும், உருவங்களையும் குறித்துப் பேசிக் கொள்ளலாம். அடுத்த படியாக மீண்டும் மீண்டும் பாடக்கூடிய ஒரே ஒலி நடையுடைய, (Rhyming) சிறிய நாக்குகளும், உதடுகளும்

உச்சரிக்கக் கூடிய பாட்டுப் புத்தகங்களைப் பலமாக உச்சரித்துப் படிக்கலாம்.

பெற்றார்கள், ஓரிரு வயதுடைய பாலகர்கள் அவதானிப்புத் தன்மை சிறிதாகவே இருப்பது இயல்பு என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாசித்தலையும் வைத்திருக்க அறிந்து கொள்ளுதல் அவசியம். முதல் புத்தகப் படம் பார்த்துப் பேசுதல், சொற்களைக் குறித்து உச்சரிக்கப் பழகுதல் போன்றவை பாலகர்கள் மூளையை புதிய தகவல் பெறுதலுக்கு அறிமுகப் படுத்தும் செயற்பாடுகளே. எனவே இந்தத் தருணத்தில் தகவல் பெற புத்தகம் வாசித்தலும் ஒரு நடைமுறை என்பதை அவர்கள் அறிந்து கொள்வதிலேயே கவனத்தைச் செலுத்த வேண்டும்.

மொழிப்பிரயோகமும் சொல் உச்சரிப்புக்களை அறிமுகம் செய்தல்

தமிழ் மொழி படித்தலிலும் மேற்கொண்டுள்ள முறை முக்கியமானதொன்றாகும். பெற்றார் புத்தகம் உரத்து வாசித்தலின் போதும், உரையாடலின் போதும் சிறுபிள்ளைகள் மூளை தமிழ்ச் சொற்களைப் படங்களுடன் இணைத்தல் மாத்திரமில்லாமல், அதன் பாவனை உச்சரிப்பையும் உணர்ந்து கொள்ளுவர். வாசித்ததைக் கிரகித்தலும் அதைப் பற்றி மேற்கொண்டு தமிழில் உரையாடிக் கொள்வதும் மூளையில் மொழி வளர்ச்சியையும், மொழி பாவனையையும் பரந்த அளவில் தூண்டும். இது நாளளவில் திடகாத்திரமான பன்மொழி பாவனையாளராகவும் பிள்ளைகளை வளர உதவும்.

கணினி, கைபேசி, மின் பலகை போன்ற உபகரணங்களையும் மாத்திரம் தாமாகவே பாவனக்குக் கற்றுக் கொள்ளுவதைக் காட்டிலும், பெற்றார் உற்றாருடன் சேர்ந்து மடியிலிருந்து புத்தகம் வாசிப்பது மகத்துவமானது. வாசிப்பதன் முக்கியத்துவத்தை நாம் பல்வேறு வகையிலும் பார்த்துக் கொள்ளலாம். சிறுபிள்ளைகளின் மூளை வளர்ச்சியுடன், அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தமது சூழல் சமூகத் தொடர்புகளுக்கான பல ஆதாயங்களையும் நாம் காணலாம்.

நாளாந்த வாசிப்பும் அதன் நற்தன்மையும்

தினமும் கூடி வாசித்தல் குழந்தைகளை மகிழ்விக்கும் குடும்பப் பழக்க வழக்கமாகி விடும். பெரியவருடன் கூடிப் பாடிப் படித்துப் பேசி அரவணைத்துக் கொள்ளுதல் குழந்தையின் முளையைக் கற்றலுக்கு உந்தும் தொழிற்பாடாகும். குழந்தைகள் அவர்கள் விளையாட்டின் மத்தியில், நாளந்தம் சில வழக்கங்களை உண்டு பண்ணிக் கொள்ளுதலும் அவர்கள் மனநிலை மேம்பாட்டிற்கு அவசிமானதொன்று.

குழந்தைகள் தங்களின் வளரும் மூளை தனது திருப்தி நிலையை அடையும் எதிர்பார்ப்புக்களை சுயாதீனமாகவே உண்டு பண்ணி்க் கொள்வர். எனவே சிறுபிள்ளைகளுக்குச் சிற் சில எதிர்பார்ப்புக்களையும், அவற்றைத் திருப்தி செய்யும் வகையில் புத்தகம் வாசிப்பு வழக்கங்களையும் உண்டு பண்ணினால் அதுவும் அவர்கள் மூளை வளர்ச்சிக்கு உதவியாகும்.

பிள்ளைகள் கற்றலில் தமிழர் சம்பிரதாயத்தில் சில வழி முறைகள் இருந்து வந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் தமிழ்த் தாய்த் தாலாட்டும், கிண்ணச் சோறு உணவூட்டலில் கதை, பாட்டுச் சொல்லுதலும் தமிழர் மரபாக இருந்து வந்தன. இன்று இலத்திரனியல் நவீன காலத்திலும் நேரமெடுத்துக் குழந்தைகளுடன் குலாவிப் படித்தல் என்பது அவர்கள் எதிர்கால முளை விருத்திக்கு முக்கியமானதொன்று. உணவின் பொழுதும், உடன் விளையாட்டின் பொழுதும், உறங்கப் போகும் பொழுதும் பெரியவருடன் புத்தகம் வாசித்தலையும் ஊக்குவிக்கலாம்.

பிள்ளைகள் புத்தகங்களைத் தாமாகவே குறித்துப் பேசி, வாசிக்க முனைந்தால், அவர்கள் தினசரி வாசித்தல் வெற்றிகளிற்குப் பெரியார்கள் உடன் பாராட்டுவது, பிள்ளைகளுக்குப் பிடித்த விடயத்தை செய்வது, பிள்ளையின் உற்சாகத்தை அதிகப்படுத்துவதிலும், அவதானி்ப்பு நேரம் நீடிக்கவும் உதவலாம். இறுதியாக, தனியாகக் கணினிக் கருவிகளைப் பிள்ளைகள் விளையாடி, ஒருவராகவே நேரம் போக்கிக் கொள்வதையும் தவிர்க்கும்., நாம் பெரியவர்களும் சிறியவர்களுமாகக் கூடி வாசிப்பது, பாலகர் மூளையைப் பயன் தெரிந்து, அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் சமூகவியல் தொடர்புகளையும் எற்படுத்திக் கொள்வதற்கான நீண்ட கால அத்திவாரத்தைப் போட உதவும். இதுவே நாளடைவில் தெளிவான, செழிப்பான மூளை வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாகும்.

எனவே குழந்தைகளும் பெற்றார்களும் ஒன்று கூடிப் புத்தகம் வாசிப்பது முக்கியமானது. தமிழ் உட்பட பன் மொழிப் புத்தக வாசிப்பும் தேர்ச்சியும் பிள்ளைகளின் ஆரம்ப முளைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

  • யோகி அருமைநாயகம்.

உச்சாந்துணை

  1. Pamela C. High et al. (2014) Literacy Promotion: An Essential Component of Primary Care Pediatric Practice, Pediatrics Vol. 134 No. 2 August 01, 2014
  2. Dipesh Navsaria, Training and Education Modules, American Academy of Pediatrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad