\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழிசை இது நம் மக்களிசை

Tamilisai_6 x 620 x 295ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். செய்வதறியாது படுக்கையிலிருந்து வெளி நடப்புச் செய்த எனக்குக் கிடைத்த அரிய காட்சியது. மதிமங்கிய பொழுதினிலும் மூன்று குமரிகள் ஒய்யாரமாக உலவிக் கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்தில் இருந்த எனக்கு முன்னவளும் பின்னவளும் அன்று பெரிதாக ஈர்க்கவில்லை. ஆயினும் இடையவளின் வனப்பும் மென்மையும் என்னைச் சற்று ஈர்க்கவே செய்தது. அணைத்துக் கொள்ளும் ஆசையினால் அருகினில் சென்றேன், பெயரைக் கேட்டேன், இசை என்றாள், ஊர் தமிழகம் என்று பேசத் தொடங்கினாள். பேசிய சில நொடிகளில் மதுவைவிடப் போதை மிகுந்தவள் என்பதை உணர்ந்து அவள் பேச்சில் சற்று இசையவும் செய்தேன்.. அன்றிரவு முழுவதையும் அவளுடனே கழிப்பதற்காக இருவரும் அருகினிலிருந்த புல்வெளியில் அமர்ந்தோம். அவள் தொடர்ந்தாள் நானும் கேட்கத் தொடங்கிய சற்று நேரத்திற்குள் முழு மயக்கத்திற்குச் சென்றேன், எப்பொழுது எப்படி என்று தெரியாமல் அவ்விடத்திலேயே உறங்கியும் போனேன். இது போன்று தூக்கம் மறந்து அல்லது மறுத்து இசையுடன், அதிலும் தமிழிசையுடன் கழிந்த இரவுப் பொழுதுகள் பல.

தமிழிசை மென்மையானது , தொன்மை வாய்ந்தது, செழுமை நிறைந்தது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை தமிழினத்தின் வாழ்வியலோடு கலந்த ஒன்று. ஐவகை நிலங்களும் தனித் தனிப் பண்களைக் கொண்டன. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கும் முன்னோடிகளான முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் மாரிமுத்துப் பிள்ளை அவர்களை உலகிற்கு அளித்தது. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியம் போன்ற நூல்களில் நிறைந்துள்ள தமிழிசை சார்ந்த சான்றுகள் போன்ற பல தரவுகளை நம் முன்னவர்களும் மூத்தவர்களும் நிரம்பப் பதிவு செய்துள்ளமையால் எனது பதிவைச் சங்க காலத்தில் இருந்து தொடங்காமல் தற்காலத்தில் இருந்து தொடங்குகின்றேன்.

வாய்க்கு வந்ததைப் பாடாமல் வாழ்க்கையில் வந்ததையும் வருவதையும் இட்டுக் கட்டிப் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் தான் தமிழிசை இன்று உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. நகரத்தில் வளர்ந்த என்னைப்போன்ற பலருக்குத் தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சிகளில் திருமதி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் மூலமே தமிழிசையின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின்கொலுசுக் கடை ஓரத்திலேபாடல் அன்று ஒலிக்காத மேடைகளும், நிகழ்சிகளும் இல்லை என்றே சொல்லலாம். தமிழிசையே மற்ற இசைகளுக்கெல்லாம் மூலம் மற்றும் முன்னோடி என்பதை ஆய்வுகளுடன் நிரூபித்ததோடு, தொலைக்காட்சி மற்றும் மேடைகள் மூலம் தமிழிசையைப் பொது நீரோட்டத்திற்குக் கொண்டு வந்து இன்று தமிழ் மக்கள் வசிக்கின்ற அனைத்து நாடுகளுக்கும் சென்று தமிழிசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள். தமிழிசைப் பாடல்களுக்குத் தவில், நாதஸ்வரம், உறுமி, பறை போன்ற கருவிகளுடன் டிரம்ஸ் மற்றும் கிட்டார் போன்ற மேற்கத்திய இசையையும் இணைத்து இந்தத் தலைமுறைக்கு ஏற்றவாறு இசையமைத்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவர் திரு. அந்தோணிதாசன். தமிழிசையின் ஆதிக் கருவியான பறையை மையமாக வைத்து மற்ற கருவிகளின் துணையோடு தமிழிசை நிகழ்சிகள் நடத்திவரும்புத்தர் கலைக்குழுமற்றும் சென்னைத் தமிழிசையான கானாப் பாடல்களைப் பிரபலப்படுத்திவரும் திரு கானா பாலா என்று பலர் இன்றும் தமிழிசையை உயிர்ப்போடு வைத்துள்ளனர். பக்தியிசைவெண்கலக் குரலோன்சீர்காழி கோவிந்தராஜன் அவர்களையும், “இறைவனிடம் கையேந்துங்கள்என்ற பாடலில் இறையைக் கடந்து இசையை ரசிக்கவைத்த நாகூர் ஹனிபா அவர்களையும் குறிப்பிடாமல் தற்காலத் தமிழிசைப் பதிவு நிறைவு பெறாது.

தமிழிசையைப் பிரபலபடுத்தியதில் திரைப்படங்களுக்குப் பெரிய பங்குண்டு. எண்பதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு இசை என்பது வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மற்றும் வானொலியில் அவ்வபோது கேட்ட திரைப்படப் பாடல்களிலிருந்தே தொடங்கியது. கரகாட்டக்காரன் படத்தில் தவில், நாதஸ்வரம் கொண்டு எளிய இசையை வழங்கியது போன்று, தமிழிசைக் கருவிகளான உறுமி, பறை, முரசு ஆகிய இசைக் கருவிகளுடன் வட்டார இசையினைப் பொது வெளியில் கொண்டு சேர்த்த திரு. இளையராஜாவின் தமிழிசை தமிழக எல்லைகளைக் கடந்து இந்திய எல்லைகளைத் தொட்டது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தொடங்கி இன்றுவரைத் தனது இசைப்புயலால் தமிழிசையை இந்திய எல்லைகளைக் கடந்து உலகரங்கில் பேசவைத்த திரு .ஆர் ரஹ்மான். எளிய மக்களால் பாடப்படுவதால் புறக்கணிக்கப்பட்டு வந்த சென்னையின் பண் என்று அறியப்படும் கானாப் பாடல்களைத் திரைப்படம் மூலம் உலகம் முழுதும் கொண்டு சேர்த்து நன்மதிப்பைப் பெற்றுத் தந்தவர் திரு. தேவா. இவர்கள் வழியில் யுவன், சந்தோஷ் நாராயணன் போன்றவர்களையும் குறிப்பிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக குறிப்பிட வேண்டியது திரையிசையில் இவர்கள்அனைவருக்கும் முன்னோடியான மெல்லிசை மன்னர். எம்.எஸ்.வி அவர்களின் இசை சிறப்பா அல்லது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் சிறப்பா என்ற விவாதம் வைத்தால், இரண்டும் சேர்ந்த தமிழிசையே சிறப்பு என்பதே தீர்ப்பாக அமைய முடியும்

இத்துணை சிறப்பு வாய்ந்த தமிழிசையைப் பனிப் பிரதேசமான மினசோட்டாவில் நேரில் ரசிக்கின்ற வாய்ப்பினைமினசோட்டாத் தமிழ்ச் சங்கம்சமீபத்தில் வழங்கியது. சங்கத்தின் கோடை விழாவான முத்தமிழ் விழாவினை இவ்வாண்டு, தமிழ்ப் பள்ளியின் எட்டாம் ஆண்டு விழா, முனைவர் வேலு சரவணன் அவர்களின் குழந்தைகள் நாடகம் மற்றும் மினசோட்டாவில் முதல் தமிழிசை விழா என்று முப்பெரும் விழாவாக 11-ஜூன்-2016 அன்று மேப்பிள் க்ரோவ் நடுநிலைப் பள்ளியில் கொண்டாடினர். தனது வீணையிசை மூலம் உலக இசை அரங்கினைக் கட்டிப் போட்டு அமெரிக்காவின்புஷ் ஃபெல்லோஷிப் 2006″ என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றதோடு மினசோட்டாவின்வாழ்நாள் சாதனையாளர்விருதையும் பெற்ற திருமதி நிர்மலா ராஜசேகர் அவர்கள் தலைமையேற்றுத் தமிழிசையைத் தொடங்கி வைத்தது பொருத்தமாக அமைந்தது. “யாயும் ஞாயும் யாராகியரோஎன்ற குறுந்தொகைப் பாடலுக்கும்ஊரெல்லாம் தூங்கினும் உனக்கில்லை தூக்கம்என்ற மாயூரம் வேதநாயகம் அவர்களின் காலம் குறித்த பாடலுக்கும் எழுந்த கரவொலிகளின் ஓசை, தமிழிசையின் வலிமையைப் பறை சாற்றியது. தமிழிசையின் தொன்மை, செழுமை மற்றும் கருநாடக இசைக்கும் தமிழிசைக்கும் உள்ள தொடர்புகள் ஆகியவற்றை எளிமையாகவம் தெளிவாகவும் எடுத்துரைத்ததோடு இந்த முயற்சிப் பல்லாண்டுகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டு நிகழ்ச்சிக்கும் தன்னை அழைக்கவேண்டும் என்ற வாழ்த்துரையை, நிகழ்சியின் துவக்கமாகத் திருமதி நிர்மலா ராஜசேகர் அவர்கள் வழங்கினார். அவரின்நாதரசாஇசைப் பள்ளியினரின் தமிழிசையும், அதைத் தொடர்ந்து திருமதி லக்‌ஷ்மி சுப்பு அவர்களின்ராக சுரபிகுழுவினரும் மேடைக் கச்சேரியில் இறங்கினர். அவற்றைத் தொடர்ந்து, திரு. செந்தில் கலியபெருமாள் அவர்களின் MNTS கரோகி குழுவின் இசையோடு நிறைவு பெற்றது தமிழிசை நிகழ்ச்சி. ஏறக்குறைய ஒரு மணிநேரம் இசைவெள்ளம் நம் காதுகளில் தேனருவியாய்ப் பாய்ந்தது என்றால் மிகையாகாது.

புரியாத மொழிக்குத் தலையாட்டும் கூட்டம் ஒன்றைத் தமிழ் இனத்திற்குள் வளராமல் தடுத்துக் கொண்டிருப்பதில் தமிழ் அறிஞர்களுக்கும் தமிழிசை அமைப்புகளுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. 1974 ஆம் ஆண்டு மதுரையில் அண்ணாமலை அரசர் அவர்களால் தொடங்கப்பட்டதமிழிசைச் சங்கம்இன்று வரைத் தொடர்ச்சியாகத் தமிழிசை நிகழ்சிகளை நடத்துவதோடு, சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிப் பணமுடிப்பும் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர்.

பெரியார் தமிழிசை மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கித் தமிழிசை மற்றும் அதன் கலைஞர்களை வளர்ப்பதையே தன் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழிசையைத் தன் இறுதி மூச்சாகச் சுவாசித்து 23.05.2016 அன்று மறைந்த தமிழறிஞர் நா அருணாச்சலம் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதை ஒரு தமிழிசை ரசிகனின் கடமையெனக் கொள்கிறேன் .

நம் முந்தைய தலைமுறை நம்மிடம் ஒப்படைத்த சிறப்புகளை சரியான புரிதலுடன் அதன் நிறம் மாறாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை. தமிழிசையைக் காப்போம் ! தமிழிசைக் கலைஞர்களைப் பேணுவோம் !

தமிழிசை

நன்றி

விஜய் பக்கிரி !

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    அருமையான பதிவு விசய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad