எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள்.
“ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது.
இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான்.
இன்று மதியம் ஏதோ ஓவியம் வரைய வேண்டும் காலையிலேயே வண்ணங்களை எடுத்து வைக்கச் சொல்லி இருந்தாள். வீட்டின் அடித்தளத்திற்கு சென்று, ஒரு பெரிய விரிப்பை எடுத்து கார்ப்பெட்டில் விரித்தாள் . வரைவதற்கு வேண்டிய காகிதம் எல்லாம் அந்த விரிப்பின் மேல் வைத்தாள்.
தொலைபேசி அழைப்பு ஒலித்தது. தேவி மேலே வந்தாள் .யார் அழைப்பது என்று நன்கு அறிவாள். இந்தக் காலை வேளையில் அழைக்கும் ஒரே ஜீவன் ஸ்வாதி தான்.
அவள் கணிப்பு மிகச் சரியாக இருக்கவே , அழைப்பை எடுத்து “சொல்லு ஸ்வாதி” என்றாள்.
*****
ஸ்வாதி. தேவியின் உயிர் தோழி. ஒரு சகோதரி போல. இருவரும் ஒரே அறையில் தங்கிப் படித்து , ஒரே அலுவலகப் பணியில் மூன்று வருடம் பணி இருந்தார்கள். வேலையில் இருந்த பொழுதும் இருவரும் ஒரே அறையில் தங்கியே சென்று வந்தார்கள்.
இருவருக்கும் தங்கள் பணியும், அதில் இருந்த சுதந்திரமும் மிகவும் பிடித்தது.”பெண்களுக்கு வேலை எவ்வளவு தன்னம்பிக்கை தருது ஸ்வாதி. நம்ம மனதில் ஒரு வலிமை. எல்லாம் வந்துட்டா போல இருக்கு இல்லை?”
“ஆமாம் நான் எப்பவும் என் வேலையை விடவே மாட்டேன். எனக்கு கிடைக்கிற இந்த என்னோட நேரம், எனக்கு ரொம்ப முக்கியம் தேவி”.
ஸ்வாதியும் தேவியும் எத்தனை நட்புடன் இருப்பினும் இருவரும் சுபாவத்தில் இரு துருவம் போல. தேவி எளிமையும் பொறுமையும் கொண்டவள். ஸ்வாதி துடிப்பும் உணர்ச்சியும் கொண்டவள். எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும் . அவர்கள் நட்பு வட்டார கூட்டத்தில் எல்லோருமே இவர்கள் இருவரின் குணாதிசயங்களைக் கண்டு வியப்பதுண்டு.
ஆனால் இளமைகால நட்பு எந்த மதிப்பீடும் செய்யாது. சிட்டான இளமை தான் எத்தனை கனவுகள் தரும். வாழ்க்கையின் நிதர்சனம் எதையும் ஏற்காத ஒரு பருவம்.
“என்னால் எல்லாம் முடியும்” என்ற மமதை இளமைக்கே உரியது. அவர்களுக்கு வாழ்க்கை வைத்திருந்த ஆச்சர்யம் வேறு.
இருவருக்கும் திருமணம் நடந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பார்த்த வேலையை விட வேண்டிய நிர்பந்தம் இரண்டு பேருக்கும் வந்தது. ஒருவர் பின் ஒருவராக வேலையை விடும் பொழுது அவர்கள் இருவரும் அதை ஏற்றுக் கொண்ட விதமும் மாறுபட்டே இருந்தது.
*****
“ஆமா மீதுவைப் போய் கூப்பிட்டு வரணும். ஹ்ம்ம் சமையல் ஆச்சு.. நீ என்ன பண்ற?”.
“ரெண்டும் தூங்கறது. அதுக்குள்ள கொஞ்சம் நான் வேலையை முடிக்கலாம்னு பாக்கறேன்”.
“ஓ அங்க மத்தியானம் ஆயிடுச்சா? இங்க இப்போ தான் 10.30 மணி. நான் போய் மீதுவை கூப்பிட்டு வரணும். ரெண்டு பேரும் எவ்ளோ நேரம் தூங்கறாங்க?.
“பையன் ஒரு மணி நேரம் தான். பொண்ணு ரெண்டு மணி நேரம் தூங்கறா”.
“ரெண்டு பசங்களை சமாளிக்கிறது கஷ்டம் இல்லை?”.
“ம்ஃக்கும் . ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடி வேலையை விட்டுட்டு அமெரிக்கா வரும் போது, அப்படியே என் personal space அப்படின்னெல்லாம் பேசினதை நினைச்சா சிரிப்பா வருது. இப்போ என் personal space ல எப்பவுமே எப்பவுமே ரெண்டு பேர்”.
சிரித்தபடி அவள் கூறினாலும் தேவிக்கு அவள் குரலில் இருந்த சோர்வு தெரிந்தது.
“ஆரம்பத்தில கொஞ்ச கஷ்டம் தான். கொஞ்ச நாளுக்கு அப்புறம் உனக்கு நிறைய நேரம் கிடைக்கும்”.
“நீ எல்லாம் சொல்லுவே தேவி . மீது குட்டி இன்னும் ரெண்டு மாசத்தில் முழு நாள் ஸ்கூல் போக தொடங்கிடுவா.. அப்புறம் உனக்கென்ன ஜாலி தான்”.
“மீது பிறக்கும் பொழுதே 6 வயசா பிறக்கல ஸ்வாதி. உனக்கும் அந்த நேரம் வரும் அது வரை பொறுமையா இரு”
தேவியின் பொறுமை ஸ்வாதிக்கு என்றும் புரியாதது. பெண்மைக்கு பொறுமை கூடாது, துடிப்பும் வேகமும் வேண்டும் என்பாள்.
“உன்னுடைய துடிப்பும் வேகமும் சரி தான் ஸ்வாதி. ஆனால் உன்னை நம்பி ரெண்டு குட்டிஸ் இருக்கே .. அதுக்காகவாது கொஞ்சம் பொறுமையை வளர்த்துக்கோ”.
“அதெல்லாம் சத்தியமா வராது. என்ன பார்த்து ரெண்டும்hypher ஆக தான் கத்துக்கும் . பேசமா ரெண்டு பேரையும் ஒரு டே கேர்ல சேர்த்துட்டு நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.”
“ஸ்வாதி உன் குடும்ப சூழ் நிலை வேலைக்கு போகணும்னா நீ கட்டாயம் போ, இல்ல பசங்க கொஞ்சம் பெரியவங்க ஆயாச்சு அப்படின்னா உன் அறிவுக்கு தீனிப் போட போ. ஆனா நீ இப்போ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். எவ்ளோ வருஷம் கழிச்சு உனக்கு ட்வின்ஸ் பொறந்திருக்காங்க. அவங்களோடஅந்த மழலையை ரசி. இப்போ அவசரப் படாதே”.
“நீ ரொம்ப பழைய பஞ்சாங்கம் தேவி. நான் என்ன பசங்களை விட்டு ஓடியா போக போறேன். இன்னிக்கு வேலைக்கு போற பெண்கள் எல்லாம் அவங்க பசங்களை விட்டுட்டு போறது ஏதோ தப்புங்கற மாதிரி பேசற”.
“நான் தப்புன்னு சொல்லல . அவங்கவங்க சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி முடிவு எடுக்கறாங்க. ஆனா உனக்கு இப்போ பணக்கஷ்டமோ இல்லை வேலைக்குப் போயே ஆகணும்னோ நிலைமை இல்லை. ஏற்கனவே வேலைல ஒரு இடைவெளி விட்டாச்சு. இன்னும் மூணு வருஷம் பொறுத்து தொடங்கினா , உன்னோட பசங்களுக்கு நீ கொடுக்கக் கூடிய நேரம் கூடுதலா இருக்கும் இல்லையா ?”.
“Its not about quantity time devi.. Its about quality time.”. நான் கொஞ்ச நேரம் செலவு பண்ணினாலும் அதை முழுமையா கொடுப்பேன் . அதனால வேலைக்கு போறதுல எதுவும் பிரச்சனை இருக்க மாதிரி தெரியல. என்னப் பார்த்து என் பசங்க inspire ஆகணும்னு நினைக்கறேன்.”
மீதுவைக் கூட்டி வரும் நேரம் ஆகி விடவே , பேச்சு பாதியில் தடைபட்டுப் போனது.
மீதுவைக் கூட்டி வர கிளம்பினாள் தேவி. ஸ்வாதியின் கடைசி வரிகள் மனதை நெருடியது. வீட்டிற்காக தம்மைத் தியாகம் செய்யும் பெண்களை எவரும் inspiring ஆக ஏற்பதில்லையா என்ன? இந்த சிந்தனை என்று வளர்ந்தது ? ஏன் வளர்ந்தது?
தன்னைத் தேடுவதற்காக வேலை செய்வதில் தன்னைத் தொலைத்தார்களா பெண்கள்?
மீதுவின் குட்டி கரம் வந்து “அம்மா” என்று அணைத்தப் பொழுது தாய்மை வந்து பெண்மை சிந்தனை மறந்து போனது.
******
“தேவி, எனக்கு வேலை கிடைச்சாச்சு. இப்போ தான் அழைப்பு வந்தது.உனக்கு தான் முதல்ல சொல்றேன்”
ஸ்வாதியின் உண்மையான நட்பு தொண்டையை அடைத்தது.
“எப்போ தொடங்கணும்?“
“அடுத்த வாரம்”
“குழந்தைகள் டே கேர் போக ஆரம்பிச்சிட்டாங்களா?”
“ஆமாம் நேத்திலேந்து.. கொஞ்சம் பழகிக்கட்டும்ன்னு தொடங்கியாச்சு”
“சம்பளம் 3000 தான் கைல வரும். Fresher மாதிரி தான் எடுத்திருக்காங்க. பரவால்ல ஆரம்பத்தில கொஞ்சம் ஸ்ட்ரெஸா தான் இருக்கும் சமாளிக்க வேண்டியது தான்.”
“3000 கைல. பசங்க டே கேர் பணமே உனக்கு 2000 வருது இல்ல. அப்புறம் நீ போய்ட்டு வர செலவு, இந்த வேலைல என்ன லாபம் ஸ்வாதி?. ஒரு மூணு வருஷம் பொறு …”
தேவி முடிக்கும் முன் அவளை நிறுத்தினாள் ஸ்வாதி, ”அய்யோ நிறுத்து. நான் எதையும் கேட்க விரும்பல. என் வாழ்க்கை எப்படி இருந்தா சந்தோஷமா இருக்கும் தீர்மானிக்கிறது நான். நான் வேலைக்கு போனா, என்னை பார்த்து என் பிள்ளைகள் நிச்சயம் inspire ஆவாங்க . ஒரு பிசினெஸ் எக்சிகியூடிவா என்னால அவங்க முன்னாடி ஒரு தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமா இருக்க முடியும். அவங்கள வழி நடத்த முடியும்”.
பிள்ளைகள் நம்மிடம் inspiration எதிர்பாக்கிறார்களா என்பது ஒரு கேள்வி தான். இருந்தாலும் அதைப் பற்றி மறுபடியும் பேசி ஸ்வாதியின் உற்சாகத்திற்கு தேவி தடை சொல்ல வில்லை. அவளுக்கு வாழ்த்து கூறினாள்
“நீயும் திரும்பி வேலைக்கு முயற்சி பண்ணும் பொழுது தெரியும். நீ பெரிய போஸ்ட்ல இருந்து தான் வேலையை விட்டே. எனக்கு முன்னாடி ரெண்டு ப்ரோமோஷன் வாங்கின வேற, நீயும் ஆரம்பி”.
மீண்டும் அதே உற்சாகத்துடன் வாழ்த்துரைத்தாள்
*****
தொலைபேசி அழைப்பு மீண்டும். மதிய இடைவெளி நேரம் வெளியில் வந்து தேவி அழைப்பை இணைத்தாள் .
இம்முறை வாழ்த்து பெற்றது தேவி தான்.
“எப்படி போகுது முதல் வாரம் வேலை”
“போகுது ஸ்வாதி. இப்போ இடைவேளை எனக்கு. நீ எப்படி இருக்க ? பசங்க எப்படி இருக்காங்க ?”
“ஹ்ம்ம் போகுது, இங்க வேலை ரொம்ப hectic ஆ தான் இருக்கு. பொண்ணு கொஞ்சம் சாப்பிட அடம் பிடிக்கிறா . அவங்களை இங்க சாப்பிட வைக்க மாட்டேங்கறாங்க இல்ல. பாதி நாள் அப்படியே திருப்ப வருது.
அது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மீதுக்கு ஸ்கூல் எல்லாம் பிடிச்சிருக்கா?”.
“ஆமாம் 7.30 மணிக்கு போயிட்டு 3 மணிக்கு வரா . நான் அவளோட கிளம்பிட்டு 2.30 க்கு எல்லாம் வந்துடுறேன்”.
“ நீ கொஞ்சம் பொறுமையா இருந்து, என்னை மாதிரியே நல்ல பெரிய வேலையா பார்த்து சேர்ந்திருக்கலாம் தேவி. இந்த ஊர்ல ஸ்கூல் டீச்சர்க்கு வருமானம் குறைச்சல் தான்”
“வருமானத்திற்காக இல்ல , இந்த வேலை அதிக மன அழுத்தம் இருக்காது. மீதுவோட என்னோட நேரம் குறையாது. அவ திரும்பி வரும் போது நானும் வந்துடுவேன். நான் inspiring அம்மாவா ன்னு எனக்கு தெரியாது. ஆனா என்னுடைய முடிவு என் குழந்தைக்கும், வாழ்க்கைக்கும் சரியானதுன்னு எனக்கு நல்லா தெரியும். என்னோட இடைவேளை நேரம் முடிஞ்சது, நான் போகணும் அப்புறமா பேசலாம்”.
– லக்ஷ்மி சுப்பு
வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் மனநிலை/எதிர்பார்ப்பை சரியாகக் காட்டியுள்ளது அருமை! இதுதான் சரியென்று அனைவரும் எடுத்துச் சொல்ல முடியாத அனுபவ விடுகதைகள் நிறைந்த வாழ்க்கை. இங்கு விடுகதை ஒன்று தான் அனுபவம் போல விடைகளும் அதிகம்…
Very nice title and story. You depict life’s episodes as stories. We get good thoughts out of your story