\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கபாலி ஃபீவர்

kabal-fever_620x970

ரஜினிரஞ்சித்சந்தோஷ் நாராயணன் என்று ஒரு புதிய கூட்டணி உருவான போது ரசிகர்களுக்கு எழும்பிய காய்ச்சல் இது. படத்தைப் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகும் போதெல்லாம், இன்னும் பலருக்கு பரவத் தொடங்கியது. முதல் டீசர் வெளியான நேரத்தில்நெருப்புடாஎன்று கொதித்தது, தற்போது பாடல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாகக் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

லிங்கா சர்ச்சைகளுக்குப் பிறகு, ரஜினி தாணுவின் தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து, இயக்குனராக ரஞ்சித்தைத் தேர்வு செய்தார். இயக்குனர் ரஞ்சித் முன்னதாக எடுத்திருந்தமெட்ராஸ்அனைத்துத் தரப்பிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. எப்பொழுதும் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் என்றே சென்று கொண்டிருந்த ரஜினியின் இயக்குனர் தேர்வு, இந்த நூற்றாண்டில் முதன்முறையாக ஒரு புதிய அலை இயக்குனரை நோக்கிச் சென்றதே, பலருக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்தது.

அதனாலேயே, இதற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஷங்கரின் பிரம்மாண்டஎந்திரன் 2.0′ படத்தை விட, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியது.

படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், பெருமளவு மலேசியாவிலும் நடைபெற்றது. அதிலும், மலேசியாவில் வெளியிடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது, ரசிகர்களின் தொடர் பின்தொடர்வு நிகழ்வுகளால், தமிழகத்தில் இருந்து கிளம்பிய புயல், அச்சமயம் மலேசியாவில் மையம் கொண்டது.

படத்தில் ரஜினி வயதான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது தெரிந்ததும், சீரியஸ் விமர்சகர்கள் தங்களின் நெடுநாளைய ஆசை நிறைவேற்றப்பட்ட சந்தோஷத்தில், அவர்களும் நேர்மறை எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தத் துவங்கினர். ரஜினி படத்தில் வரும் செண்டிமெண்டல் ரெகுலர் நடிகர்கள் இல்லாமல், ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்கள் இதில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மொத்தத்தில், இது ரஞ்சித் படமாக உருவாவதில், ரஜினி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

விறுவிறுவெனப் படப்பிடிப்பு நடைப்பெற்று முடிய, படத்தின் எடிட்டிங், டப்பிங் எனப் படத்தின் உருவாக்கம் வேகம் பிடித்தது. ரஜினியும் உடனே அடுத்ததாக, எந்திரன் இரண்டாம் பாகமான 2.0வில் நடிக்கச் சென்றுவிட்டார். புதிய இளம் கூட்டணி மீதான ஆர்வம்,  ரஞ்சித்தின் இயக்கம் மீதான எதிர்பார்ப்பு என்று பாசிட்டிவாக இருந்தாலும், ரஜினி என்ற பளீர் ஸ்டைல் மன்னனை, மண் குடிசையில் குடியிருக்க வைத்து விடுவாரோ என்ற சந்தேகமும் லைட்டாக ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்தது.

அதனாலேயே தயாரிப்பாளர் தாணு, ஏப்ரல் 30 ஆம் தேதி டீசர் வெளியிடப் போவதாக அறிவித்தவுடன், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் திரைப்பட ரசிகர்களும், யூட்யூப்பை ஓபன் செய்து உட்கார்ந்து விட்டனர். ‘நெருப்புடாஎன்று வெளிவந்த அந்த டீசரின் பார்வைக்கணக்கு பற்றிக்கொண்டு எரியத் துவங்க, அதுவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் கவனித்துக் கொண்டிருந்த கபாலியை, இந்திய, உலக திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கவனிக்கத் துவங்கினர். படத்திற்கு கபாலி என்று பெயர் வைத்தவுடன், பலருக்கும் எழும்பிய கேள்விக்கு பதில் சொல்வது போல், ரஜினி டீசரில் தனக்கே உரிய பிரத்யேக உடல் மொழியில் பேசியகபாலிடாவசனம், அனைவரையும் கவர்ந்து இளம் பட்டாளங்களின் மீம் உலகில் முக்கிய வசனமாகியது.

ரசிகர்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் போக்கிய அந்த டீசர், அனைவரையும்நெருப்புடா‘, ‘மகிழ்ச்சிஎன ஸ்டேடஸும், ட்வீட்டும் போட வைத்தது. அதுவரை வயசான கெட்டப்பில் ரஜினியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, டீசரின் முடிவில் ஒரு ஆனந்த அதிர்ச்சியை வைத்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். அது இளம் தோற்றத்தில், தனது வழக்கமான ஸ்டைல் நடையில், பந்தாவாக தலைமுடியைக் கோதியவாறு ரஜினி நடந்து செல்லும் காட்சி. ரஜினியை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் அந்த சில நொடிகளில், 80களுக்குக் கொண்டு சென்று விட்டார். இன்னொரு பெரும் மகிழ்ச்சியை அளித்தவர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவரும் அவர் பங்குக்கு படு மாஸான இசையை டீசரில் அளித்திருந்தார்.

டீசரின் வெற்றியை, யூட்யூபின் ஹிட் கவுண்ட் என்றென்றும் சொல்லும். ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் என்று தொடங்கிய ஹிட் கணக்கு, 22 மணி நேரத்தில் 5 மில்லியனைத் தொட்டது. அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்பட டீசர் என்ற சாதனையையும் தொட்டது. அடுத்தது, ட்ரெய்லர், பாடல்களுக்கான எதிர்பார்ப்பு தொடங்கி விட்டது.

படத்தின் பாடல்கள் எளிமையான நிகழ்வுடன் ஜூன் பனிரெண்டாம் தேதியன்று வெளியிடப்பட்டன. கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக, ரஜினியின் பெரும்பாலான படங்களுக்கு .ஆர்.ரஹ்மானே இசையமைத்து வருகிறார். முத்து படத்தில் தொடங்கிய பயணம், கடைசியாக வந்த லிங்கா வரை தொடர்ந்து வந்திருக்கிறது. அடுத்து வெளிவரும் 2.0லும் ரஹ்மானே. நடு நடுவே, வித்யாசாகரும், ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருக்கிறார்கள். இப்போது, ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ், ரஜினி படத்திற்கு முதன்முதலாக இசையமைத்திருக்கிறார். இது ஒரு புதுவித எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்தது.

தொடர்ந்து, இளையராஜா, பிறகு தேவா என்று வந்த ரஜினி படங்களின் இசை, முத்துவில் ரஹ்மானின் இசையில் வேறுவிதமாக வெளிவந்தபோது, ரசிகர்களால் முதலில் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு, ஒருவழியாக அவை உள்வாங்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரசிக்கப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில், ரஜினிக்கு ரஹ்மான் பின்னணி பாடி, அதுவும் ஹிட்டானது.

கிட்டத்தட்ட, அது போன்ற நிலையே தற்போதும். சந்தோஷ் நாராயணனின் பாடல்கள், ஒருவித தனித்துவம் கொண்டன. அதிக ஆர்பாட்டம் இல்லாதது. பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாதது. வித்தியாசமான புது குரல்கள் கொண்டது. மெலிதான இசையில், மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய பாடல்களை, பின்னணி இசையை பிட்ஸா, அட்டக்கத்தி, மெட்ராஸ், ஜிகர்தண்டா, பதினாறு வயதினிலே, இறுதிச்சுற்று போன்ற படங்களில் வழங்கியிருந்தார். அவர் ரஜினியின் படத்திற்கு எப்படி இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு, இசை ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்தது.

ஆனால், அவர் தனது பாணியிலேயே இசையமைத்திருந்தார். ரஜினி படங்களில் முதல் பாடலைப் பாடும் எஸ்.பி.பி. இல்லை. ரஜினி படங்களில் பலப் பாடல்களை எழுதும் வைரமுத்து இல்லை. வழக்கமான புகழ் மொழியில் எழுதப்பட்ட பாடல்கள் இல்லை. செண்டிமெண்ட்டைப் பொருட்படுத்தாமல், படத்திற்கேற்ற பாடல்களுடன் கபாலி ஆல்பம் வெளியாகியது. இரண்டு விதமான விமர்சனங்களையும் பெற்றது.

சந்தோஷ் நாராயணன் பாணி புரிந்து ரசிப்பவர்களுக்கு, பாடல்கள் பிடித்தது. வழக்கமான ரஜினி படப்பாடல்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அனைத்துத் தரப்பினரையும், ‘நெருப்புடாபாடல் கவர்ந்துவிட்டது. தளபதி படத்தில் போலீஸ் ஸ்டேசனில் ரஜினி கூறும்இது சூர்யா சார், உரசாதீங்க.. தொட்றா பாக்கலாம், தொட்றாஎன்ற பட்டையைக் கிளப்பிய வசனத்தில் இருந்து பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இப்பாடலை உருவாக்கி, வெறியூட்டும் விதத்தில் பாடியும் இருந்தார். கிட்டார் இசை, பாடலில் முக்கியத்துவம் பெற்று, மாஸைக் கூட்டியது.

வீர துறந்தராபாடலை, சந்தோஷ் நாராயணின் ஆஸ்தான பாடகரான, கானா பாலாவுடன் லாரன்ஸ், பிரதீப், ரோஷன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வழக்கமாக கானா பாடல்களைப் பாடும் கானா பாலா, இதில் ஸ்டைலிஷான இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 80களின் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கூறும் பாடல். கானா பாலாவின் வித்தியாசக் குரலும், ராப் இசையும் இந்தப் பாடலைக் கவரச் செய்தது. இப்பாடலையும், “மாய நதிபாடலையும் உமா தேவி அவர்கள் எழுதியுள்ளார். “மாய நதிமெலோடி ரசிகர்களை முதலில் கவரும் பாடல். மெல்லிய இசையில் மனதைத் வருடும் பாடல். நீண்ட நாட்களுக்கு, ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத பாடலாக இது இருக்கும். அனந்து, பிரதீப், ஸ்வேதா மோகன் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

இன்னொரு மெலோடி – “வானம் பார்த்தேன்என்ற பாடல். மிகவும் மெல்லச் செல்லும் பாடல். சந்தோஷ் நாராயணனின் வழக்கமான வரிகளை வாசிக்கும் பாணி பாடல். இணையை இழந்த சோகப்பாடலாகத் தெரிகிறது. படத்துடன் பார்க்கும் போது, என்ன விதமான உணர்வைக் கொடுக்கிறதோ, பார்க்கலாம். இப்பாடலையும் பிரதீப் அவர்களே பாடியுள்ளார். பிரதீப், சந்தோஷ் நாராயணனின் இசைக்குழுவைச் சேர்ந்தவர்.

உலகம் ஒருவனுக்காபாடல், கபாலியின் புரட்சிப்பாடல். இப்பாடலின் சில வரிகள் ஆங்காங்கே சர்ச்சையும் கிளப்பியது. “நாங்க எங்க பொறந்தா உனக்கென்ன போயாதமிழனுக்காக வந்து நின்னவன் தமிழண்டா…” போன்ற ரஜினிக்கான டிபிக்கல் வரிகள் இப்பாடலில் உண்டு. “மேட்டுக்குடியின் கூப்பாடு, இனி நாட்டுக்குள்ளே கேட்காதுபோன்ற ரஞ்சித்தின் டிபிக்கல் வரிகளும் இப்பாடலில் உண்டு.

டீசரிலும், பாடல்களிலும் ரஞ்சித் படங்கள் பேசும் சமூக அரசியலை வம்படியாகக் கண்டவர்கள், ஏற்கனவே சில விவாதங்களைக் கிளப்பியுள்ளனர். படம் வெளியான பிறகு, மேலும் பல விவாதங்களை கபாலி கிளப்புவான் என நம்பலாம். 80களில் ஒரு பிரச்சினைக்காகச் சிறைக்கு சென்று திரும்பிய ஒரு டானின் கதை என்பது தெரிந்தாலும், அதில் ரஞ்சித் சேர்த்திருக்கும் மசாலாவுக்காக ரசிகன் பசியுடன் காத்திருக்கிறான்.

அடுத்ததாக, ஒரு முழு நீள ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே, பல ட்ரெய்லர்கள் ரசிகர்களின் கைவண்ணத்தில் உருவாகி வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதில் சில குறிப்பிட்டுச் சொல்லும் வகையில், உயர் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. கபாலி குழுவின் சவால் இது தான். பல விதத்திலும் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். கபாலி நிறைவேற்றுவானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்சமயம், படம் ஜூலை பதினைந்தாம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. படம் வெளியாகும் அன்று, ஒரு தனியார் விமான சேவை நிறுவனம், கபாலிக்காக ஸ்பெஷல் விமானச் சேவை அளிக்கிறார்களாம். இது எங்கும் இல்லாத சினிமா மார்க்கெட்டிங். ஐரோப்பாவின் பெரிய திரையரங்கமான பாரீஸ் ரெக்ஸ் திரையரங்கில் கபாலியின் ப்ரிமியர் ஷோவுக்கு முன்பதிவு தொடங்கிவிட்டது. தந்தி ஸ்டுடியோவுக்கு வரும் அரசியல்வாதிகளை வாரு வாரு என வாரும் ரங்கராஜ் பாண்டேவே, ரஜினி ரசிகர் போல் பவ்யமாக தாணுவுடன் படத்தைப் பற்றிய செய்திகளைக் கெஞ்சலாகக் கேட்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!! அந்த கபாலிக்கே வெளிச்சம்.

சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad