2௦16 மினசோட்டா மாநிலத் திருக்குறள் போட்டி
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்புகளை இளந்தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளி இணைந்து, மினசோட்டா மாநிலப் போட்டிகளின் ஒரு பகுதியாக திருக்குறள் போட்டியினை நடத்தி வருகின்றன. பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இப்போட்டியில், பலரின் கவனத்தை ஈர்த்துப் பங்கேற்கச் செய்யும் வகையில் பொருளுடன் சொல்லப்படும் ஓவ்வொரு திருக்குறளுக்கும், ஒரு வெள்ளி வழங்கும் புதுமையான திட்டத்தினை இவர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றுகின்றனர். சென்றாண்டின் போட்டியில் அனைத்துக் குறள்களையும் பொருளுடன் ஒப்புவித்து 133௦ வெள்ளிகளைப் பெற்றிருந்தார் ஒரு மாணவி.
இவ்வாண்டுக்கான திருக்குறள் போட்டி, ஜூன் மாதம் 25ம் தேதி, எடைனா நகரில், சவுத் டேல் நூலகத்தில் நடைபெற்றது. நாற்பதுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக எண்ணூறுக்கும் அதிகமான குறள்களைப் பொருளுடன் விளக்கினர். இரண்டரை வயது கூட நிரம்பாத ஒரு பெண் குழந்தை தன் மழலை மாறா குரலில் பத்து குறள்களுக்கு மேல் ஒப்புவித்தது இப்போட்டியின் சிறப்பம்சமாக அமைந்தது.
ஏறத்தாழ ஆறரை மணி நேரம், இளந்தளிர்களின் மழலை குரலில் பல திருக்குறள்களை, எளிய, அழகான பொருளுடன் கேட்டது கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.
பங்கு பெற்ற அனைவருக்கும், இவர்களுக்கு மென்மேலும் ஊக்கமளித்து ஆண்டுதோறும் இப்போட்டியினை நடத்தி வரும் மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளிக்கும், பனிப்பூக்கள் வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.