பூஜ்ய குருதேவ் – கர்ம யோகா விளக்கம்
பூஜ்ய குருதேவ் சின்மயானந்தா, சின்மயா மிஷன் எனும் இயக்கத்தைத் துவங்கி வைத்தார். அவரது சீடர்களாகிய நாங்கள் இந்த ஆண்டை குருதேவின் நூறாவது பிறந்த வருடமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த இயக்கத்தின் குருஜி, மினியாபொலிஸ் மிஷனுக்கு ஜூலை 11 முதல் 15 ஆம் திகதி
வரை வருகைத் தந்திருந்தார். அவர் பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயத்தினைப் பற்றி விளக்கினார் . அவரது உரையைக் கேட்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. இருந்தும், அவர் பகவத் கீதை வார்த்தைகளைப் பிரித்துப் படிக்கும்பொழுது, அர்த்தம் விளங்கியது.
பகவத் கீதையில் ஐந்தாவது அத்தியாயம் கர்ம யோகா பற்றி பேசுகிறது. அவர் தந்த விளக்கத்தை என்னால் முடிந்தவரைச் சுருக்கமாக விலக்க முயல்கிறேன். உங்கள் கருத்துக்களைக் கீழேயுள்ள கமெண்ட் மூலமாக தெரிவிக்கவும் அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ஜுனர் தனது சாரதியான கிருஷ்ண பகவானைச் சந்தேகம் கேட்கிறார். அர்ஜுனர் கேட்கிறார், மோக்க்ஷம் அடைவதற்குச் சன்யாச நெறி சிறந்ததா இல்லை கர்ம நெறி சிறந்ததா?
பகவான் கிருஷ்ணர் இப்படியாக பதில் அளிக்கத் துவங்குகிறார். இரண்டு நெறியும் சிறந்த நெறியே. இருப்பினும் உனக்கு கர்ம நெறியே மிகச் சிறந்த நெறி. இரண்டும் ஒரே இலக்கை அடைய உதவும். குருஜி ஒரு உதாரணத்துடன் விளக்கினார். ஒரு பறவையும், எறும்பும் மரத்தின் உச்சியை அடைய வெவ்வேறு வழியே செல்லும். பறவை பறந்து செல்லும், எறும்பு மெதுவாக ஏறிச் செல்லும். ஆனால் இலக்கு ஒன்று தான். சங்கராச்சாரியார் இரு பாதையும் வேறு இலக்கை அடையும் என்று சொல்பவரை மூடர் என்று அழைக்கிறார்.
ஒரு கடமையைச் செய்கையில் அதன் பலனை நமதாக்காமல் இருந்தால், மனதில் தெளிவு பிறக்கும். நாம் செய்யும் செய்கை மேல் பற்று ஏற்படுத்திப் பந்தத்தில் தள்ளாமல் காப்பாற்றும். கர்ம யோகத்தின் நோக்கம் மனதைத் தூய்மைபடுத்துதல். அதற்கு ஒரே வழி, நாம் செய்யும் செயலின் பலனை எல்லாம் வல்ல இறைவனிடம் சமர்பித்துவிடுவதே. ஒரு கர்ம யோகிக்கு அவர் செய்யும் செயல் அவர் உணர்வாலும் மனதாலும் தான். அவர் அதற்குக் கட்டுப்பட்டவர் அல்ல.
ஒரு யோகி தன் செயல் மேல் கொண்ட பற்றை நீக்கினால் அவருடைய ஆசாபாசங்களை அடக்கமுடியும். அதுவே அவரைச் சித்தாந்தி ஆக்கிவிடும். அவர் இந்த உடலில் இருந்தாலும் ஸ்வர்க வாழ்வை அனுபவிப்பார். கதிரவன் இருளை எப்படி விரட்டுகிறதோ அது போல அவர் மனத்தில் இருக்கும் இருளும் அகன்றுவிடும். குருஜி தேஜோமயானந்த தியான வழிபாட்டு முறையைப் பற்றியும் சிறிது விளக்கினார். பகவத் கீதையில் ஆறாவது அத்தியாயம் இதைப் பற்றி விளக்குகிறது.
Chinmaya
விடைபெறும் முன்னர் அவர் நம்முடன் அமர்ந்து உரையாடினார். அப்பொழுது எங்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.
கேள்வி: “ஆன் தி குவெஸ்ட்” என்ற குருதேவின் படத்தில் நீங்க எழுதி இசையமைத்த பாடல் “குரு தேவ தவ, மஹநீய க்ரிபா” என்னால் மறக்க முடியாத பாடல். அந்தப் பாடலை எப்பொழுது எழுதி இசை அமைத்தீர்கள்?
பதில்: இந்தப் பாடல் தற்செயலாக எனக்கு தோணிற்று. நான் பரோடாவில் காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கையில் இந்தப் பாடல் வரிகள் இசையுடன் எனக்குத் தோணிற்று. இந்தப் பாடல் இப்பொழுது மிகப் பிரபலமான பாடலாகிவிட்டது.
கேள்வி: இன்றைய குழந்தைகள் எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெற்றோராக அல்லது ஆசிரியராக நாம் எப்படி அவர்களுக்கு இதன் தீமைகளை விளக்குவது.
பதில்: இதைப் பற்றி குழந்தைகளிடம் நேற்று பேசினேன். எல்லா கருவிகளுக்கும் உபயோகம், கோட்பாடுகள் மற்றும் நோக்கம் இருக்கும். உதாரணத்திற்குச் சீட்டுக்கட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வைத்து குழந்தைகள் விரும்பும் மாஜிக் ஷோ பண்ணலாம். அல்லது சூது விளையாட்டும் விளையாடலாம். ஆனால், அதை எவ்விதம் பயன் படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அது நன்மையா தீமையை என்பது அமையும். அதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
கேள்வி: நங்கள் சின்மயா கணபதியில் வாரம் ஒருமுறை சத்சங் கூட்டம் கூடி ஆன்மிக உரையாடலில் கலந்துகொள்வோம். அப்பொழுது மனதிற்கு மிக அமைதி கிடைக்கிறது. ஆனால், இங்கிருந்து வெளியில் சென்றவுடன், குடும்பம் குழந்தைகள் என மற்ற கடமைகள் வந்தவுடன் ஆன்மிக நினைவு குறைந்துவிடுகிறது. இங்கு கிடைக்கும் அந்த நினைவை எப்படி பொது வாழ்க்கையில் பயன்படுத்துவது?
பதில்: நாம் இங்கு கற்றுக்கொள்வதை இடைவிடாது பயிற்சி எடுக்கவேண்டும். அதற்கு நாம் முயற்சி நிறைய எடுக்க நேரிடும். கர்ம யோகாவில் சொல்வது போல், எதுவும் தானியங்கி இல்லை. நம் முயற்சியே மிக அவசியம். குருதேவ் சின்மயானந்தவிடம் ஒரு சிஷ்யன் கூறினான், நான் பகவத் கீதையை இருபது தரம் வாசித்துள்ளேன் ஆனாலும் எனக்கு மனதில் நிற்கவில்லை. அதற்கு குருதேவ் பதில் கொடுத்தார். பகவத் கீதையை நீ நுழைந்து படித்தாலும், பகவத் கீதை உன்னுள் நுழையும் வரை நீ படிக்கவேண்டும். அதுபோல் நம்மின் முயற்சி மிக அவசியம்.
-பிரபு ராவ்