ஆட்டிஸம் – பகுதி 8
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற பல கேள்விகளை மனதில் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போக வேண்டியிருக்கும். பல குடும்பங்கள் இது போன்ற காரணங்களால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையே தவிர்த்து விடுகின்றனர். சிலர், அவ்வப்பொழுது கலந்து கொண்டு, அளவோடு வைத்துக் கொள்கின்றனர். வேறு சிலர், இவற்றை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு சாதாரண குழந்தைகள் போல் இருப்பது எப்படி என்று பழக்க முயல்கின்றனர்.
எங்களின் அனுபவங்கள் இவையனைத்தும் சேர்ந்த கலவை என்றுதான் சொல்ல வேண்டும். நம் வீட்டில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இருக்கிறது என்று புரிந்து கொள்வது, அதனை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயம். தொடக்கத்தில், இது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பர் என்ற எண்ணம் ஓங்கி நின்றது. அதிலும் குறிப்பாக மற்ற குழந்தைகள் எங்கள் மகனை எவ்வாறு நடத்துவர் என்பதே பெருங்கவலையாக இருந்தது. பல விதமான யோசனைகள் எங்களை வாட்டி எடுத்தது. மற்றவர்கள் இல்லங்களுக்கு, பொதுவான விழாக்களுக்கு என்று செல்வதைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினோம். தேவையான அளவு கால அவகாசத்தை எங்கள் பிள்ளைக்குக் கொடுப்பது என்றும், அந்தக் கால அவகாசத்தினால் அவன் மாறி சாதாரண நிலைக்கு வந்துவிடக்கூடும் என்றும் நம்பினோம். நாட்கள் உருண்டோட, அவனது வளர்ச்சி நிலை நிதானமாக உயரத் தொடங்கியதைக் காண முடிந்தது. இதனைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தாலும், பலர் கூடும் இடங்களில் எப்படி நடந்து கொள்வான் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டு, ஒதுங்கியேதான் இருந்தோம்.
நாங்கள் இதுபோல் ஒதுங்கி வாழ்வது எங்களின் முதல் மகளின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு தடையாக அமைந்தது. அவள் சாதாரணமாக அவளின் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஒன்று கூடி விளையாடவேண்டுமென்று நினைப்பது இயற்கை தானே? அவளுக்காகவாவது நாங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவசியம் என உணர ஆரம்பித்தோம். எங்களின் மகனின் நிலை குறித்து நண்பர்கள் அனைவருக்கும் விளக்கிக்கூறி, அவனை வித்தியாசமாகப் பார்க்க வேண்டாமென்றும், இரக்கப்பட வேண்டியதுமில்லை என்றும் விளக்கினோம். நண்பர்கள் அனைவரும் மிகவும் புரிதலுடன் நடந்து கொண்டினர், உதவியாகவும் இருந்தனர். எங்களுக்கு இது பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது. எங்கள் மகளுக்குக் கிடைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் கிடைக்கக் துவங்கின. இதனை விளக்கமாகக் கூறுவதற்கான முக்கிய காரணம், எவ்வளவு கடினமான சூழலிலும் அனைவரையும் விட்டு ஒதுங்கி, தனிமையில் வாழ வேண்டிய அவசியல்லை என்பதை வலியுறுத்துவதே.
இந்தச் சூழலில் நம்பிக்கையைத் தளர விடாதிருத்தல் மிக மிக அவசியம். பெற்றோர்கள் மற்றவரை விட்டு ஒதுங்கித் தனிமையில் வாழ்ந்திடலாம் என்ற முடிவெடுத்தலைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும். தொடர்ந்து அளிக்கப்படும் பலவித சிகிச்சைகளுடன் கூட, இது போல நம்பிக்கையாகவும், மற்றவர்களுடன் பழகும் விதமான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல் மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பதைப் பெற்றோர் உணர்தல் அவசியம்.
இவை விடுத்து, பள்ளியிலோ, வீட்டிலோ, சிகிச்சை தரும் இடங்களிலோ மட்டுமே குழந்தையைப் பழக்கினால் போதுமானது என நினைப்பது மிகவும் தவறான, ஆபத்தான அணுகுமுறை. இதுபோன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, பழகித் தெரிந்து கொள்ளக் கொடுக்கும் வாய்ப்பு, குழந்தைக்கு அந்த இடங்களையும், மனிதர்களையும் அறிந்து கொள்ள, நினைவில் வைத்துக் கொள்ள, மறுமுறை வருகையில் நினைவு கூர்ந்து கொள்ள எனப் பல வழிகளில் உதவுகிறது. ஒரு விதமான உரிம உணர்வும் உண்டாகிறது. இதை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாவிட்டாலும், அவர்களைக் கூர்ந்து கவனிக்கையில் உணர முடியும்.
சில குழந்தைகள் விரைவில் விளங்கிக் கொள்வரெனினும், பல விசேஷக் குழந்தைகளுக்கு நிறைய நாட்கள் பிடிக்கும். பல முறை, திரும்பத் திரும்ப இதுபோன்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை மீண்டும் அறுதியிட்டுக் கூறிக் கொள்கிறோம்.
(தொடரும்)
- மூலம்: சுரேஷ் ரங்கமணி.
- மொழியாக்கம்: மதுசூதனன். வெ.