கபாலி திரைப்படத் திறனாய்வு
ஜுலை 21, 2016 – புலி வருது புலி வருது கதை போல ஏமாற்றாமல் ஒரு வழியாக மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் படம் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாள்.
அப்படி ஒரு நாளில் தான் அடியேனுக்கும் மினசோட்டா (MINNESOTA) மாநிலத்தில் ரோஸ்மௌன்ட் (ROSEMOUNT) நகரத்தில் உள்ள கார்மைக் (Carmike) திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. படம் பார்த்ததோடு நில்லாமல் அதனைப் பற்றி ஒரு விமரிசனத்தையும் அடியேனை எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டதன் முயற்சி தான் இந்தச் சிறு கட்டுரை.
6 மணிக் காட்சிக்கு அலுவலகத்தில் 4.30 மணி முதல் பரபரப்பாகி ப்ரொஜக்ட் மேனேஜரிடம் கணக்கில்லா உதார்கள் விட்டு அரக்கப் பரக்க வண்டி ஓட்டி, தியேட்டரை அடைந்தபோது மணி 5.15. என்னே அதிசயம்!!! ஏதோ திருவிழா போலவும், சென்னையிலே சூப்பர் ஸ்டார் படம் பார்க்க வந்துவிட்டோமா என்று வியக்கும் அளவுக்கும் அலை மோதும் மக்கள் கூட்டம்…
கதை: மலேசிய நாட்டில் பிறந்து அந்நாட்டில் இருந்த சர்வாதிகாரத்தால் அல்லல் படும் தமிழ் மக்களுக்காகவும் அவர்கள் குடும்பத்தினருக்காகவும் போராடும் ஒரு தலைவராக (GODFATHER) நம் சூப்பர் ஸ்டார். பாட்ஷா படத்தில் அவர் இதே போல் ஒரு பாத்திரம் ஏற்று நடித்திருப்பதால் இதில் பெரிய சவால் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
படத்தின் நிறைவுகள் (POSITIVES):
- இத்தனை வயதிலும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் (Style) மற்றும் திரை ஆதிக்கம் (Screen presence)
- பலமான திரைக்கதை
- நாயகி உள்பட அனைவருக்கும் வெள்ளித் திரையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு
- மென்மையான பின்னணி இசை (BGM – BACKGROUND MUSIC)
படத்தின் குறைகள் (NEGATIVES):
- ஒரே ஒரு பாடலைத் தவிர (மாய நதி) மற்ற பாடல்களில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சற்றே ஏமாற்றி விட்டார் என்றே கூற வேண்டும்
- பிற பாத்திரங்களின் திரை ஆதிக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உற்சாகத்தில் தமிழக நாயகனான சூப்பர் ஸ்டாரின் கதாநாயகன் பாத்திரத்தில் சிறிதே கோட்டை விட்டுவிட்டார் இளம் இயக்குனர் பா.ரஞ்சித்
- நகைச்சுவையையும் தலைவரின் களை கட்டும் ஸ்டைலையும் குறைத்து (Super Star’s strengths) திரைக்கதையிலும் உணரச்சி கரமான காட்சிகளிலும் (Not so Superstar’s strength) இயக்குனர் அதிக நம்பிக்கை வைத்தாகத் தெரிகிறது.
மொத்தத்தில் என்னதான் சூப்பர் ஸ்டார் சக நடிகர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் அளிக்கத் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தினாலும் மிகுந்த ஆவலுடனும் நிறைந்த எதிர்ப்பார்ப்புகளுடனும் காத்திருந்த ரசிகர்களுக்கு முழுத்தீனி போடப்படவில்லை என்றே கூற வேண்டும்.
முத்தாய்ப்பு: பாட்ஷா படம் வெளி வந்த போது ஆட்டோ ஓட்டுனர்களுக்கெல்லாம் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பம் ஆனது போல கபாலி என்ற பெயருள்ள மனிதர்களுக்கு இனி மரியாதை பெருகலாம் மற்றும் அப்பெயரைப் பதிவு செய்யும் எண்ணிக்கைகள் கூடலாம். அந்த வரையில் அனைவருக்கும் “மகிழ்ச்சி“…
- ஷங்கர்.