பேரவை தமிழ்விழா -29
வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, மரபுக்கலைகள் மற்றும் தொன்மைப் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்வதோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும், மற்றும் இங்கு வசிக்கின்ற தமிழர்களை அமைப்பாக்கிடும் நோக்கத்திலும் ஆங்காங்கே தொடங்கப்பட்டவை தமிழ்ச் சங்கங்கள். வட அமெரிக்கா முழுவதும் வேரூன்றியுள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களை ஒற்றைக் குடையின் கீழ் திரட்டிய கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாள் விடுமுறையில் – ஜூலை மாத முதல் வாரத்தில் – பேரவையின் தமிழ் விழா நடைபெறுவது மரபு. பேரவையின் 29 ஆவது தமிழ் விழா இவ்வாண்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் உறுதுணையோடு “தோட்டங்களின் மாநில”மான நியூ ஜெர்சியில் ஜூலை 1 முதல் 4 வரை ட்ரென்டன் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கவிஞர்கள்,தமிழறிஞர்கள்,பேராசிரியர்கள், இசைக் கலைஞர்கள், மருத்துவர்கள் ,தொழில் முனைவோர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் என்று ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்விழா முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது . பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் விழா , தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்ப் பள்ளி ,தமிழ்க் கல்வி என்று மூன்று மையக் கருத்துடன் இவ்விழா நடைபெற்றது. இவ்விழா வெற்றிபெற பெரும் தொகையைக் கொடையளித்த கொடையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு ‘மாலை விருந்து’ நிகழ்ச்சியுடன் ஜூலை முதல் நாள் ‘தமிழ் விழா’ தொடங்கியது.
ஜூலை -2 திருக்குறள் மறை, தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்கா தேசியப் பண் இடம்பெற அதனைத் தொடர்ந்து நியூ ஜெர்சித் தமிழ்ச் சங்கத்தின் மரபுக் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பேரவை விழாவின் முக்கியக் கூறுகளில் ஒன்று விழாமலர். விழா மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகள், கவிதைகள் மேலும் தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புகள் அடங்கிய உலகத்தமிழர்களுக்கான மலரை, மலர்குழுத் தலைவி திருமதி. ரேணுகா குமாரசாமி மற்றும் பேராசிரியர் திரு. அ.ராமசாமி அவர்கள் விழா மேடையில் வெளியிட, சித்த மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நமது தொன்மைவாய்ந்த இசைக்கருவியான பறையை மீட்டெடுத்துப் பரவலாக்கும் முயற்சிகள் சமீபகாலங்களில் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகக் கனெக்டிகட் தமிழ்ச்சங்கத்தின் ‘மானுடம்’ பறையிசைக் குழுவின் முழுமையான பறையிசை அரங்கை நிறைத்தது. மேலும் பல தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பரவலாகப் பறையிசை இடம்பெற்றது. இம்முயற்சிகள் மேலும் விரிவடைந்து, விரைவில் வட அமெரிக்கா முழுவதும் பறையிசை ஒலிக்கும் என்ற நம்பிக்கை துளிர்கிறது
நாம் மறந்து போன நமது உணவுகள் மற்றும் அதைச் சார்ந்த பழக்க வழக்கங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பரவலாக விவாதிக்கப்படும் இன்றையச் சூழலில் ‘நலவாழ்வுக்குப் பெரிதும் உதவுவது உணவா? மருந்தா?’ என்ற அவசிய மிக்கத் தலைப்பில் நண்பர்களின் கருத்துகளுடன் தனது மெய்யறிவு மற்றும் அனுபவ அறிவையும் சேர்த்துப் பேரவை அரங்கத்தில் களமாடினார் சித்த மருத்துவர் திரு. சிவராமன்.
தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு , பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள் என விழா எடுக்கும் இன்றையச் சூழலிலும் தமிழிற்கு எதிரான அடக்குமுறைகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுவதும் அதைத் தமிழ்ச் சமூகம் எதிர்வினையாற்றி முறியடித்து வருவதும் ஒரு தொடர் நிகழ்வு. இதன் ஒரு பகுதியாக பாவேந்தரின் புகழ்பெற்ற “கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்” எனும் வரிகளைச் சார்ந்து கவிஞர் இலந்தை ராமசாமி அவர்களின் தலைமையில் கவிபாடினர் நம் தமிழ்க்கவிகள். இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் எழுத்தாளர்கள் ‘மாதொரு பாகன்’ பெருமாள் முருகன் மற்றும் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ துரை. குணா அவர்களின் ஆதரவு வரிகளும் அரங்கில் பதிவுசெய்யப்பட்டன.
பேரவையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழையும் அதன் மேன்மைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வது இதை நடைமுறைப்படுத்த விழாக்களில் குழந்தைகளுக்குக் களம் அமைத்துத் தருவது பேரவையின் மரபு. இவ்வாண்டுக் குழந்தைப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகக் குழந்தைகளுக்கான ‘தளிர்’ என்ற மழலை மலர்
முளைத்தது. முனைவர் வேலுச் சரவணன் அவர்களின் குழந்தைகள் நாடகம், தமிழ்த்தேனீ மற்றும் குறள் தேனீ நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இரு மொழி முத்திரை (Bilingual seal ) பெறுவதின் பயன்களையும் , இம்முத்திரையைத் தமிழ் மொழிக்காகப் பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கும் இணையமர்வு ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தனர் விழா அமைப்பினர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் திரு வாசு மற்றும் திருமதி பாரதி இருவரும் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடி, அவர்களது கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தனர். வட அமெரிக்காவில் முதன் முறையாகத் தமிழிற்காக ‘இருமொழி முத்திரை’ பெற்ற மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி மாணவிகள் ஜானிஸ் மற்றும் லக்ஷன்யா அவர்களின் நேர்காணல் காணொளியும் திரையிடப்பட்டது.
2009 முதல் தொடர்ந்து பேரவை அரங்கை அலங்கரிப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பினை அதிகரித்துக் கொண்டிருக்கும் மினசோட்டா த் தமிழ்ச் சங்கத்தினர் இந்த ஆண்டும் பார்வையாளர்களின் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர்.
தமிழ்க்கலைகளுக்கு எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் தரும் இச்சங்கத்தைச் சார்ந்த திரு சுந்தர் மற்றும் திருமதி இராஜி தம்பதியினர், நம்மைவிட்டு மெல்ல மறைந்துவரும் கரகாட்டத்தில் பல வித்தைகளைக் காட்டி அரங்கைச் சிலிர்க்க வைத்தனர்.
கரகத்தைத் ஒட்டாமல், கட்டாமல் தொழில்முறை கலைஞர்களைப் போன்று தலையில் வைத்து இவர்கள் ஆடியது தனித்துவமானது . கான மயிலாடக் காணக் கண்கோடி வேண்டும் என்பார்கள் ஆம் மேடையில் ஜானிஸ் மற்றும் பிரசன்னா அவர்களின் மயிலாட்டத்தைக் காணக் கண்கோடித் தான் வேண்டும். மயிலிற்கும் கரகத்திற்கும் நடுவே ஆதித்யாவின் சிலம்பாட்டத்தின் வேகத்தைப் பதிவுசெய்ய நிழற்படக் கலைஞர்கள் சற்றுத் திணறித்தான் போனார்கள்.
இவர்கள் மேடையில் இருந்த நேரம் முழுவதும் தமிழ்க் கலைகளின் மூலம் மொத்த அரங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பேரவையின் 30 வது தமிழ்விழாவை இவர்கள் நடத்தவிருப்பதற்கான காணொளியும் அரங்கில் திரையிடப்பட்டது. இதில் இவர்கள் தமிழ்மக்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர், மேலும் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மற்ற சங்கங்களின் ஆதரவையும் பெற்று அச்சங்கங்களின் தலைவர்களின் அழைப்புக்களையும் இக்காணொளியில் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டது. சங்கங்களின் சங்கமம் அரங்கிற்கு வெளியே திறந்த வெளியில் சிறப்பாக நடைபெற்றது .பேரவையின் பொதுக்குழுக் கூட்டத்தில் இவ்வாண்டபுதிதாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் புதிய செயற்குழு உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.பத்தாவது ஆண்டாகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி,. தமிழில் புதிய பிறந்தநாள் பாடல் வெளியீடு, பயிற்சிப் பட்டறைகள்,இணை அமர்வுகள், சொற்பொழிவுகள் , இன்னிசை, தமிழிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று ஒரு மாநாட்டைப் போன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜூலை 4 அன்று தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுச் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் “ தனித்தமிழ் இயக்கம் – இப்போதையத் தேவைகள்” என்ற தலைப்பில் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் உரை.
“தனித்தமிழ்க் குழந்தைகளிடம் போய்ச் சேராதிருக்க முக்கியக்காரணம் பெற்றோரா? சமுதாயமா?” என்ற தலைப்பில் பேராசிரியர் ரா.மோகன் அவர்களின் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான பட்டிமன்றம்
மற்றும் தமிழறிஞர்களின் உரைகள் நடைப்பெற்றன . அடுத்த பத்து ஆண்டுகளை(2016 முதல் 2016 வரை ) தனித்தமிழ் இயக்கமறுமலர்ச்சிக் காலம் என்று அறிவித்து அதற்கான தீர்மானங்களும்
நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வுடன் 29 வது தமிழ் விழா முடிவடைந்தது..
நன்றி
விஜய் பக்கிரி !