\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இந்தோனேசியாவில் ஹிந்து மதம்

sun-worship_620x443நான்கு பக்கமும் கடலினால் சூழ்ந்த ஒரு தீவு. உலகில், இஸ்லாமியர்களின் மக்கட்தொகையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு. சமீபத்தில் சுற்றுலாவாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் சுவையான சில மதம் குறித்த கவனிப்புகளை ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலாவதாகவும், அரிதானதாகவும் நமது கண்களுக்குப் புலப்பட்ட காட்சி இங்கு வாழும் மக்களின் மதம் மற்றும் ஆன்மிகம் குறித்த நம்பிக்கை. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் எண்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும், நாம் சென்ற “பாலி” நகரம் எண்பத்து ஐந்து சதவிகிதத்திற்கும் மேல் இந்துக்களால் நிறைந்தது என்பது சற்று வித்தியாசமான புள்ளி விபரம். விமான நிலையம் தொடங்கி, நாம் காரில் சென்ற அனைத்துத் தெருக்களிலும் தவறாமல் கண்ணில் பட்டது பற்பல சிறிய கோவில்கள். வீடுகள்,  வாணிகத் தளங்கள், கட்டிடங்கள் என எங்கு நோக்கினும் அவற்றின் வாயிலருகே ஒரு சிறிய கோயில் போன்ற ஒரு வழிபாட்டுத்  தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர்களின் வசதிக்கேற்ப இவை சிறியதாகவும், பெரியதாகவும்  உள்ளது .

கோயில்களின் அமைப்பு பெருமளவுக்கு இந்திய, ஹிந்துக் கோயில்களை ஒத்து இருபதாகவே நமக்குப் பட்டது. கோபுரங்களும், கோபுரங்களிலிருந்த குடைவரைகளாகப் பொறிக்கப்பட்டிருந்த உருவங்களும் பல ஹிந்துக் கடவுளர்களையும், தொன்று தொட்ட பழக்க வழக்கங்களைக் காட்டும் முகமாவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. அழகு கொஞ்சும் வடிவமைப்புகள் புராதனம் மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது வார்த்தைகளில் விளக்க முடியாத சிறப்பு. நாம் சந்தித்துப் பேசிய அனைவரும், புராணங்களிலும், மதப் பிரச்சாரங்களிலும் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருப்பவர்கள் என்று உணர்த்திற்று.

இராமாயணமும், மகாபாரதமும் இங்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. சாலைகளின் இரு மருங்கிலும், இராமர், சீதை, லக்ஷ்மணன், அனுமன், விபீஷணன் போன்ற இராமயணக் கதாபாத்திரங்களின் சிலைகளை எங்கும் காணலாம். குறிப்பாக, நான்கு பிரதானச்  சாலைகள் சந்திக்கும் ஒரு இடத்தில் பிரம்மாண்டமான இராமயணக் காட்சி ஒன்று சிலைகளால் வடிவமைக்கப் பட்டிருந்தது பார்ப்பவர் அனைவரையும் கவரும் காட்சி. இது, இராமர் சேது வடிவமைக்கும் காட்சியாகும். இராமர் லக்‌ஷ்மணரின் தலைமையில் வானரங்கள் அனைத்தும் கற்களையும், மரங்களையும் எடுத்து வந்து கடலினில் கொட்டிப் பெரிய பாலமைப்பதைத் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர் இந்த இடத்தில். இந்த அமைப்பைச் சுற்றி நடந்து வந்து புகைப்படமெடுக்க வேண்டுமெனில், இவற்றை நடந்து கடப்பதற்கு ஒரு பத்து நிமிடங்களாவது பிடிக்கும் என்பது இதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதாக இருக்கும்.

இராமரின் உருவம் இங்கு பெரும்பாலும், மீசை வைத்துக் கொண்டு, வில்லம்புடன் இருப்பது போலவே காணப்படுகிறது. தசாவதாரத்தில், ஒரு அரிய தத்துவத்தைத் தந்து மனிதனாகவே வாழ்ந்து தெய்வ மாண்பு கொண்டவனா விளங்கியவர் இராமர் என்று இந்தியாவில் புழங்கப்படும் கருத்தாக இருப்பினும், இந்தப் பரிணாம வளர்ச்சி நிலைக்கு ஒருபடி முந்தைய நிலையாக, கீர்த்தி வாய்ந்த ஒரு மன்னனாகவும், வேட்டுவனாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவே நாம் உணர்ந்தோம். அது மட்டுமில்லாமல், இராமரும் சீதையும் சேர்ந்திருப்பதுபோல் இருக்கும் சிலைகளில், அந்நியோன்யம் வெளிப்படுவது போல் – அதாவது, இந்தியாவில் பெரும்பாலும் ராதா-கிருஷ்ணர் சிலைகள் போல – அமைத்திருந்ததும் நமது கண்களுக்குச் சற்று வித்தியாசமாகவே பட்டது. இராமயண முடிவில், இராவணனை வென்று இந்தியா திரும்பிய இராமர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தது இங்குதான் என்று நம்பிக்கை இருப்பதாக ஒருவர் விளக்கினார். அதைச் சித்தரிக்கும் விதமாக ஒருசில சிலைகளையும் காண முடிந்தது.

இவை தவிர, மகாபாரதக் கதாபாத்திரங்களையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஒரு கடற்கரையையே “பாண்டவா கடற்கரை” என்று பெயரிட்டு மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர். ஒருபுறம் வானுயர்ந்த மலைகள், மறுபுறம் சீறிப்பாயும் அலைகள், மத்தியில் இறங்குமுகமாக அமைந்த சாலைகள் என்றுள்ள இந்தக் கடற்கரையில், அந்த மலைகளைக் குடைந்து இருபது அடி உயரத்திற்கு பாண்டவர்கள் ஐவர் மற்றும் குந்தி தேவியின் சிலைகளை வடிவமைத்திருக்கின்றனர். இந்த மலைகளுக்கும், கடலுக்கும் மத்தியில் நின்று இச்சிலைகளை உற்றுப் பார்க்கையில், மனதில் தோன்றும் எண்ணங்கள் விளக்குவதற்கு அப்பாற்பட்டது.

தவிர, பல இடங்களிலும் விநாயகர் சிலைகளையும் காண முடிந்தது. வேழ முகம் முழுவதும் வேழமாகவே காட்சியளிக்கும்படி அமைந்திருப்பது சற்று வித்தியாசம். இந்தியாவில் விநாயகரின் முகம் யானை வடிவாக அமைந்திருப்பினும், கண்களை உற்று நோக்குகையில் ஒரு கனிவும், தீட்சண்யமும், தெய்வீகமும் வெளிப்படுவதாக நம் எண்ணம். அவை குறைந்து, யானை எனும் மிருகத்தைப் பார்ப்பது போலவே இங்கு அமைந்திருப்பது, பரிணாமத்தில் ஒருபடி பின்னுக்கு இருப்பது போலவே நமக்குத் தோன்றியது.

இவை தவிர, சிவன், பிரம்மா, வருணன் மற்றும் விஷ்ணு ஆகிய நான்கு தெய்வங்களும் இங்கு பெருமளவு கொண்டாடப்பட்டு, வணங்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும், கட்டிடங்களின் வாசல்களிலும் ஏன் அவரவர்களின் கார் டேஷ் போர்டுகளிலும் கூட ஒரு தொன்னையில் பூக்கள், மஞ்சள் மற்றும் நவதானியங்களில் சில தானியங்கள் என்று வைத்து, ஒவ்வொன்றும் இந்த நான்கு தெய்வங்களில் ஒன்றைக் குறிப்பிடுவன என்று நம்பி, தினமும் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பாலியில் வசிக்கும் ஹிந்துக்கள்.

அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே வடிவான நுழைவாயில். இந்த நுழைவாயிலின் அமைப்பு, ஒன்றாகச் சேர்ந்திருந்த வடிவமொன்றை இரண்டாகப் பிளந்து, நடுவில் வழி விட்டது போல அமைந்திருப்பதாக நம் கணிப்பு. இது குறித்து விளக்கிய, மத நம்பிக்கையுள்ள ஒருவர், இந்த அமைப்பு பற்றற்ற தன்மையை விளக்குவதாகக் குறிப்பிட்டார். எதனிடத்தும் பற்றற்று இருந்து, கடவுளரை வழிபட்டு மோட்சம் அடைவதே குறிக்கோள் எனும் வகையில் அவர் விளக்கினார். அவரின் விளக்கத்தை, நம்மூரில் வேரூன்றிய “அத்வைதம்” குறித்தது என்று நாம் விளங்கிக் கொண்டோம். வேதம் குறித்தும், நால்வகை வருணங்கள் குறித்தும், அவற்றின் இன்றைய நடைமுறை குறித்தும் அவர் விளக்கியது, நம்மூரில் இன்று நம்மிடம் இருக்கும் மேலோட்டமான மத விளக்கம் போலவே நமக்குப் பட்டது.

சமூகத்தின் பழக்க வழக்கங்கள் பல இந்தியாவுடன் ஒத்துப் போகதாவே அமைகிறது. வாழ்க்கையின் ஐந்து நடப்புக்களை விமரிசையாகக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார். குழந்தைகள் பிறப்பு என்பது முதலாவது, பிறந்த குழந்தைகள் வயதுப் பருவம் எய்துவதைக் கொண்டாடுவது இரண்டாவது, திருமணம் புரிவது மூன்றாவது, சன்னியாசம் கொள்வது நான்காவது மற்றும் இறப்பு என்ற இறுதிக் கட்டம் ஐந்தாவது என்று குறிப்பிடப்பட்டது. இவை குறித்த முன்னர் இருந்த சடங்குகள் பல ஆவணங்களுடன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இவை இன்றும் வழக்கிலிருப்பதை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உணர முடிந்தது. அனைத்துச் சடங்குகளும் கிட்டத்தட்ட இந்திய ஹிந்துக்களின் சடங்குகளை ஒத்திருப்பதை உணர முடிந்தது. மற்ற நாடுகளிலும் இதுபோல் இருக்கக் கூடும், நாமறிந்த ஒரே நாட்டை உதாரணமாகக் குறிப்பிடுகிறோம்.

அனைத்துச் சடங்குகளையும் நம்மூர் அர்ச்சகர்கள் போன்றவர் நடத்தி வைக்கின்றனர். இவரைப் புனித மனிதர் (holy man) என்று அழைக்கின்றனர். பல வகைகளிலும், இவர்களின் நம்பிக்கையும், மந்திரங்களும், சடங்குகளும் இந்திய வழக்கத்தை ஒத்தே காணப்படுகிறது. வேத வியாசர் தொடங்கிப்  பல ரிஷிகளையும் கடவுளுக்கு நிகரானவர்களாகக் கருதும் பழக்கம் இவர்களிடத்தும் உள்ளது.

இவர்களும் இந்திய ஹிந்துக்களைப் போலவே, பல விலங்கினங்களையும் கடவுளர்களாகவோ, கடவுளர்களின் வாகனங்களாகவோ வழிபடுகின்றனர். சிங்கம், புலி, பாம்பு, குரங்கு, நாய், பருந்து, கோழி என அனைத்துக்கும் இறை வழிபாட்டில் ஒரு இடம் ஒதுக்கி உள்ளனர்.

எந்தக் கோயில்களிலும், குறிப்பாக கர்ப்பக் கிரகம் என்று கூறப்படும் மூல சன்னிதானம் திறந்திருக்கவில்லை. இவை சில சிறப்புப் பூஜை தினங்களில் மட்டுமே திறக்கப்படுமாம். ஒரு சில வெளிப்புறச் சடங்குகள் நடப்பதைப் பார்க்க முடிந்தது.

கோயில்கள் என்று குறிப்பிடுகையில் டன்னா லாட் (Tunnah Lot) பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சூரிய அஸ்தமனம் உலகிலேயே மிக அழகானதாகக் காணக் கிடைக்குமிடம் இதுவே. மலையுச்சியில் இருக்கும் இந்தக் கோயில் கடலின் கரையிலேயே அமைந்துள்ளது. கோயிலில் முழுவதுமாய் மேலேறி, சீறிப்பாய்ந்து வரும் அலைகளைக் கீழே பார்க்கும் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாகும். கோயிலைச் சுற்றிய இடங்களில், ஒரு பெரிய பாறை ஒன்று கடலுக்குள்ளேயே அமைந்திருக்கிறது. கணுக்காலளவு நீரில் நடந்து சென்று, மிகவும் புனிதமெனக் கருதப்படும் இந்தப் பாறைக்கு அடியிலிருக்கும் குகைக்குச் செல்லலாம். அங்கிருக்கும் நீரைத் தலையில் தெளித்துக் கொள்வது (கங்கா ஜலம் போல) அனைவரின் வாடிக்கை. இந்தக் குகைக்கருகே இருக்கும் மற்றொரு சிறிய குகையில் நீளமான பாம்பு ஒன்று வசித்து வருகிறது. இது மிகவும் புனிதமான ஒன்று என்பது அவர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. விஷமில்லாத இந்தப் பாம்பைத் தொட்டுத் தூக்கி, கழுத்தில் போட்டுக் கொண்டு படமெடுத்துக் கொள்பவர்களும் உண்டு.

“பாலி”யில் வாழும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தக் கடற்கரைக் கோயில்கள் சக்தி வாய்ந்தது என்பதும், இவையே தங்களை இயற்கையின்  சீற்றத்திலிருந்து முழுவதுமாகக் காத்து வருகின்றன என்பதுமாகும். 2006-ல் ஆழிப்பேரலையான சுனாமி இந்தோனேசியக் கடலோர ஊர்களையெல்லாம் புரட்டிப் போட்டபோதும், பாலி நகருக்கு எந்தச் சேதமும் விளையவில்லையாம், அதற்கு முழுமுதற் காரணம் இந்தக் கோயில்களின் சக்தியே என்பது இந்த ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வெ, மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad