\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வஞ்சனை செய்வோரே …! பைபிள் கதைகள்

biblestory-redsea-divide_620x384

திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்ப்போம்.

ஆதிகாலத்தில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவர் சூசன்னா என்ற பெண்ணை மணந்தார். அவர் ஒரு பேரழகி. அதோடு கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்.

சூசன்னாவின் பெற்றோர்களும் நேர்மையானவர்கள். சூசன்னாவின் கணவர் யோவாக்கிம் பெரும் செல்வந்தர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார்.

அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப்படுவர். ஆனால், அதிகாரத்தில் உள்ள அந்தப் பெரியவர்கள் நடுநிலை தவறுவதும் நெறி தவறுவதும் வழக்கமாக இருந்தது.

இந்தப் பெரியவர்கள் யோவாக்கிம் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தடியில் இருந்துகொண்டு தன்னிடம் வழக்கோடு வருபவர்களுக்குத் தீர்ப்புக் கூறுவது வழக்கம்.

அந்த வழியாகத்தான் நண்பகல் வேளையில் சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று வருவார்.  அதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரை இச்சையோடு பார்க்கத் தொடங்கினர். இதை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை

அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செல்ல விட்டார்கள். கடவுள் பயம் இல்லாது நீதித் தீர்ப்புகளைக் மறந்து அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள்.

 

சூசன்னாவைக் காண ஒவ்வொரு நாளும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஒருநாள், “நண்பகல் உணவு அருந்த நேரம் ஆயிற்று. வீட்டுக்குப் போவோம்” என்று அவர்கள் தனித்தனியாகப்  பிரிந்து சென்றார்கள்.

சற்றுநேரம் கழித்து அதே இடத்திற்குத் தனியாகவே திரும்ப வந்தார்கள். சற்றே வியப்போடு, “ஏன் திரும்ப வந்தாய்” என்று ஒருவரை ஒருவர் கேட்க, இருவரும் சூசன்னா மீது இச்சை கொண்டிருப்பதை ஒப்புக் கொண்டனர். சூசன்னாவைத் தனியே பார்ப்பதற்கு ஏற்ற வாய்ப்பினைப் பற்றிச் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அன்றும்  சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்;  

அவர்களைப் பின் தொடர்ந்து அந்த முதியோர் இருவரும் தோட்டத்தினுள் நுழைந்து  ஒளிந்திருந்து  கவனித்து கொண்டிருந்தார்கள்.

இதை அறியாத சூசன்னா பணிப்பெண்களிடம், “நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருட்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்” என்று சொன்னார்.

 

அவ்வாறே பணிப்பெண்கள் வெளியேறியதும்….. முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் வந்து நின்றனர்.

சூசன்னாவை நோக்கி, “இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கிட வேண்டும்.

இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாய் என்றும் உனக்கு எதிராக ஊரார் கூடியிருக்கும் சபையில் நாங்கள் சாட்சி கூறுவோம்” என்று மிரட்டினார்கள்.

சூசன்னா அதிர்ச்சியடைந்து , “நான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். பாவம் செய்வதைவிட இவர்களுடைய பழியை எதிர்கொள்வோம்” என்று உறுதியாக இருந்தார்..

பின் சூசன்னா உரத்த குரலில் சத்தமிட்டார்.

உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.

அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார்.

தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓடிவந்தனர்.

ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையை அனைவரையும் நம்ப வைக்க முயன்றனர்…. முடியவில்லை.

மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டுவந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர்.

அவர்கள் மக்கள் முன்னிலையில், “சூசன்னாவை இங்கு அழைத்து வரச்சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.

ஆளனுப்பி சூசன்னாவை அழைத்து வந்தார்கள். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர்.

சூசன்னா நற்பண்புடையவர்; பார்ப்பதற்கு அழகானவர்.

அவர் மூடுதிரை அணிந்திருந்தார். எனவே அவரது அழகைக் கண்டுகளிக்கும் பொருட்டு, அந்த மூடுதிரையை அகற்றி விடுமாறு அக்கயவர்கள் கட்டளையிட்டார்கள்.

முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர்.

அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்.

ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது.

அப்பொழுது முதியோர் “நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்தபொழுது, இவள் இருபணிப்பெண்களொடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாள்.

பின்னர் அங்கே ஒளிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்தான்.

நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்.

இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம்.

அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களைவிட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான்.

நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம்,  

இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள்.

இவற்றுக்கு நாங்களே சாட்சி. அவர்கள் மக்களுள் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, “என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும்.

இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். நான் தவறு எதுவும் செய்யவில்லை. ஆயினும், இதோ நான் சாகவேண்டிருக்கிறதே!” என்று சொன்னார்.

ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்ட பொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார்.

தானியேல் உரத்த குரலில், “இவருடைய இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார்.

மக்கள் அனைவரும் திரும்பி, “நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்; “இஸ்ரயேல் மக்களே, ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் ஒரு பெண்ணைத் தீர்ப்பிடத் துணிந்து விட்டீர்களே!

நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள். இந்த இரண்டு பேரும் பொய்ச் சாட்சி  சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள்.

மக்கள் தானியேலிடம், “நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விளக்கமாக இந்த வழக்கை தீர்த்து வையும். ஏனெனில் நீதிமான்களுக்குரிய  சிறப்பை கடவுள் உமக்குக் கொடுத்துள்ளார் என்றனர்.

அப்பொழுது தானியேல், “இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலைவில் வையுங்கள். நான் இவர்களை விசாரிக்க வேண்டும்” என்றார்.

எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, “தீய எண்ணம் கொண்டவர்களே. எளியவர்களையும் மாசற்றவர்களையும் நீதி மான்களையும்  வஞ்சிக்காதே” என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீங்கள் முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, அப்பாவிகளைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய்.

“இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், “விளாமரத்தடியில்” என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு இரண்டாமவரை அழைத்ததார். அவரை நோக்கி, “அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்துவிட்டது.”

“எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்” என்றார். அவரோ, “கருவாலிமரத்தடியில்” என்றார்.

சூது கவ்வும் என்பது நாம் அறிவோம்.

இதைக் கேட்ட உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தன்மேல் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றினர்.

அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்.

ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அந்தப் பெரியர்வர்கள் இருவரும் பிறருக்குச் செய்யவிருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள்.

மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள்.

இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

பெற்றோர் தங்கள் மகள் சூசன்னா பொருட்டுக் கடவுளைப் புகழ்ந்தேத்தினர். அவருடைய கணவர் யோவாக்கியமும் சுற்றத்தார் அனைவரும் அவ்வாறே புகழ்ந்தனர்.

அன்றுமுதல் மக்கள் தானியேலைப் நீதிமானாக பெரிதும் மதிக்கலாயினர்.

  • ம.பெஞ்சமின் ஹனிபால்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. SWAMINATHAN-NAMAKKAL says:

    very nice story. excellent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad