\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆட்டிஸம் – பகுதி 9

autism_2_620x238

(பகுதி 8)

ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை எதிர்பார்த்தபடி பழக்க இயல்கிறது என்று கண்டோம். நாம் எதிர்பார்த்த எதிர்விளைவுகளை அவர்கள் காட்டும்பொழுது, நாம் மென்மேலும் நம்பிக்கையூட்டும் விதமாக நேர்மறையான எண்ணங்களையே விதைத்துக் கொண்டு வரவேண்டும். இதுபோன்று இரண்டு மூன்று முறை நாம் தொடர்கையில், அவர்கள் எதை எதிர்பார்க்க வேண்டுமெனப் புரிந்து கொள்கின்றனர். இதைச் செய்தால் இதனைத் தருவேன் என்று ஒரு லஞ்சம் கொடுப்பது போலச் செயல்படாது, அவர்கள் சரியான செயலைச் செய்கையில் நம்பிக்கையூட்டும் விதம் நடத்துவது, இன்னும் சிறப்பான விளைவுகளைத் தரும் என்று கண்டோம்.

ஏற்கனவே பலமுறை கூறியது போல, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பர். அவரவர்களுக்கு எந்தவிதமான நடைமுறை செயல்படுகிறது என்று கடந்து சென்ற நிகழ்வுகளை வைத்து அதற்கேற்ற முறையில் அவர்களை நடத்துவது மிகவும் நல்ல விளைவுகளைத் தரும். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த நேர்மறை நம்பிக்கையூட்டல் முறை செயல்படவில்லையெனத் தோன்றினால், அதனை மேலும் மேலும் வலியுறுத்தாமல், தள்ளிப்போடுவது நலம். அதுமட்டுமல்ல, நம்பிக்கையூட்டுவதற்காகத் தரப்படும் நேர்மறையான விஷயங்கள், அவர்களுக்குச் சாதாரண நிலையில் கிடைப்பதற்குச் சற்று அரிதாக இருப்பது சிறந்தது. உதாரணமாக, ஐ-பேட் அல்லது ஐ-ஃபோன் விளையாடக் கொடுப்பது ஒரு ஊக்கமூட்டும் முறையாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்குச் சாதாரணமாக எல்லா தினங்களிலும், எல்லா வேளைகளிலும் ஐ-பேட் அல்லது ஐ-ஃபோன் கிடைத்து விடுமாயின், அது ஒரு நேர்மறை விளைவைக் கொடுக்கும் சன்மானமாக இருக்காது. ஒரு பூங்காவிற்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அழைத்துச் செல்வது என்பது ஒரு சன்மானமாக இருக்கக் கூடும். இது எங்கள் மகனுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஏதேனும் நல்ல விஷயத்தைச் செய்தானெனில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம் என்று கூறி, அவன் அந்த விஷயத்தைச் செய்து முடிக்கையில் அழைத்துச் சென்றோமெனில், அது அவனுக்கு மிகவும் ஊக்கமூட்டுவதாக அமைகிறது என்று எங்களால் கண்கூடாகக் காண முடிந்தது. இதுவே திரும்பத் திரும்ப நடத்தப்படுகையில், ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

இது போன்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்து, குழந்தையின் மனதில் இதனை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். அவ்வப்பொழுது, இதனுடன் சற்றுக் கூடுதலான பரிசிலையும் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் நாங்கள் அதனை முப்பது நாற்பது நிமிடங்களாக மாற்றியது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. எங்கள் மகனுக்கு ஒரு சில நொறுக்குத் தீனிகளும், பழரசங்களும் மிகவும் பிடித்தமானவை. சில வருடங்களுக்கு முன்னால், எந்தவித தொந்தரவும் செய்யாமல் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்ததற்குப் பிறகு அவனுக்குப் பிடித்தமான பழரசத்தைக் கொடுத்தோம், அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதன் பிறகு, நாங்கள் கற்றுக் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு செயல்களையும் அவன் செய்து முடிக்கும் பொழுதும் அவனுக்குப் பிடித்த அந்த பழரசத்தையோ அல்லது அவனுக்குப் பிடித்த தின்பண்டங்களையோ கொடுக்கத் தொடங்கினோம். இது மிகவும் சிறப்பான, நேர்மறையான அனுபவமாகத் தொடர்ந்தது. எங்களுக்கு வேண்டுமான விளைவுகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. எங்களது மகனுக்கு இன்னொரு பிடித்தமான விஷயம், எண்களும் எழுத்துக்களும். ஆங்கில விளையாட்டான ஸ்கேரபிள் (Scrabble) விளையாட்டைக் கொடுத்து, அதனை ஒரு நேர்மறை விளைவைத் தரும் கருவியாகவும் உபயோகப்படுத்திக் கொண்டோம். இதுவரை சொல்லப்பட்டவையெல்லாவற்றையும் உதாரணங்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான ஆர்வம் இருக்கும், அவற்றிற்கேற்ப சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை. ஹைஃபை கொடுத்தல், கிச்சு கிச்சு மூட்டுதல் என்ற சிறிய விஷயங்களில் தொடங்கி, ‘லெகோ ப்ளாக்’ குகளுடன் விளையாடுதல், படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், மிதி வண்டி ஓட்டுதல், எனப் பல்வேறு விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வமிருக்கக் கூடும். அது மட்டுமல்லாமல், குழந்தைகள் பெரியவர்களாக வளர வளர, அவர்களின் ஆர்வம் வெவ்வேறு வகையில் மாறுகிறது. இதனை உணர்ந்து, அதற்கேற்றபடி அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊக்கப்படுத்தும் விஷயங்களும் மாறிக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.

ஒரு காலகட்டத்தில், இது போன்ற ஊக்கப்படுத்துதலுக்காகக் கொடுக்கப்படும் சிறு சிறு பரிசுகளைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு அவர்களுக்காகவே இது போன்ற விஷயங்களைச் செய்வதற்குப் பழக்கப்படுத்துவது என்பதே இந்த முறையின் மிகப் பெரிய குறிக்கோளாக இருந்திருக்க முடியும். இது குழந்தைகளின் ஆர்வத்தையும், கிரகித்துக் கொள்ளும் தன்மையையும் ஒட்டி அமைவது. உதாரணமாக, எங்கள் மகன் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பிடித்தன. இதுவும் பழங்கள், பழ ரசம் போன்ற லஞ்சப் போருட்களைக் கொடுத்து பழக்கப்படுத்தியது.  அத்தனை தினங்கள் பிடித்தாலும், அவனுக்கு முழுவதுமாகப் புரிந்து கொள்ளும் நிலைமை குறித்து மிகவுக் சந்தோஷப்பட்டோம்.. .

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள ஒவ்வொரு இல்லத்தினருக்கும்
தெரியும், ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் செய்து முடிப்பது எவ்வளவு பெரிய சாதனை என்று!!

  •        
    மூலம்: சுரேஷ் ரங்கமணி.
  •        
    தமிழாக்கம்: மதுசூதனன். வெ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad