தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் !
சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறித்துத் தலையங்கம் தீட்டலாம் என்பது திட்டம்.
ஒன்று, தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் அகால மரணம். இசையால் முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட வரிகளே, கவிதைகளே தேவையில்லை என்ற நிலையை அடைந்து விட்டத் தமிழ் திரையிசையுலகில், சமீபக் காலத்தில் தரமான, சுவையான கவிதைகளைத் தந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். கருத்துக்கள் செரிந்த பாடல்களாயினும் சரி, காதல் ரசம் சொட்டும் மெல்லிசையாயினும் சரி, சமீபக் காலங்களில் தமிழ் ரசிகர்களை மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்குமளவுக்கு நல்ல பாடல்களைக் கொடுத்த பெருமை அவரைச் சாரும். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி முடித்த அவர் நூற்றி அறுபதுக்கும் மேலான படங்களில் பாடல் எழுதுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த நிலவுலக வாழ்வு நீத்தார்.
அவரின் மரணம் குறித்துப் பலவிதமான செய்திகளும், கருத்துக்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து, அன்னாரின் மறைவால் மாளாத்துயரத்தில் ஆழ்ந்த அவரின் குடும்பத்தாருக்குப் பனிப்பூக்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை உரித்தாக்குகிறது. அதே சமயத்தில், உண்மையோ, பொய்யோ, இறந்தவர் குறித்து இதற்கு மேலும் கருத்துக்களைப் பரப்பாமல் இருக்குமாறு பத்திரிக்கைகளையும் மற்றவர்களையும் பனிப்பூக்கள் வேண்டிக் கொள்கிறது.
இரண்டாவதாக எழுத நினைத்த நிகழ்வு, சமீபத்தில் நடந்து முடிந்த, உலக மக்கள் முழுவதும் பார்த்துக் களித்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகள். இரு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் பல விளையாட்டுக்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோலாகலமான விளையாட்டுத் திருவிழா. 1894 ஆம் ஆண்டு தொடங்கிய ஒலிம்பிக்ஸ், முப்பத்தி ஒன்றாவது முறையாக தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5ஆம் திகதி தொடங்கி, 21 ஆம் திகதி வரை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சைனா பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்தன. அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலப் பதக்கங்கள் பெற்று முதலிடமும், பிரிட்டன் 27 தங்கம், 23 வெள்ளி மற்றும் 17 வெண்கலங்கள் பெற்று இரண்டாவது இடமும், சைனா 26 தங்கம், 18 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடமும் வகிக்கின்றன. இந்தப் பட்டியலை கீழ்நோக்கி உருட்டிக் கொண்டே சென்றால் அதல பாதாளத்தில் உலகின் இரண்டாது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா காணப்படுகிறது. 1 வெள்ளிப் பதக்கமும், 1 வெண்கலப் பதக்கமும் பெற்று எங்கோ ஒரு மூலையில் நிற்கிறது. இந்த நிலைக்குக் காரணமென்ன என அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
நூற்றி இருபது கோடி மக்களில் திறமையானவர்கள் இல்லையென்ற கூற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மூன்று வயது முதல் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து அபகரித்துச் சென்று, மிருகத்தனமான முறையில் பயிற்சியளிக்கும் சைனா போல் நாமாக வேண்டுமென்றும் கூறவில்லை. உலகிலுள்ள அனைத்துத் திறமைசாலிகளையும் காசு கொடுத்து வாங்கித் தன் நாட்டுப் பிரஜையாக மாற்றும் உக்தியைக் கையாளுங்கள் என்றும் சொல்லவில்லை. ஆனால், இயற்கையாக திறமை பல அமையப்பெற்ற சிறுவர்களை, இளைஞர்களைக் கண்டெடுத்து, தேவையான அளவு பயிற்சிகள் கொடுத்து, அவரவர்களின் விளையாட்டில் சிறக்கச் செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது. இதனை முழுவதுமாக உணர்ந்து இனிவரும் ஆண்டுகளிலாவது செயல்படுவார்களா?
இதனைப் பத்திரிக்கை தர்மத்துக்கு உகந்து கூறும் அதே தருணத்தில், பல தடைகளுக்கும் மத்தியில், சிறப்பான முறையில் இரண்டு பதக்கங்களையாவது வென்று திரும்பிய பி.வி. சிந்து (வெள்ளிப் பதக்கம் – பூப்பந்து விளையாட்டு) மற்றும் சாக்ஷி மாலிக் (வெண்கலப் பதக்கம் – மல்யுத்தம்) இருவருக்கும் பனிப்பூக்கள் குழு தங்களின் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. கொண்டாடப்பட வேண்டிய தருணம், நன்றாகக் கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குறிக்கோளையும் இழந்து விடாது மென்மேலும் முயற்சி செய்து, இன்னும் பல பதக்கங்களையும், புகழையும் அடைய வேண்டுமென்று வாழ்த்துகிறது பனிப்பூக்கள்.
- ஆசிரியர்.